
எழுத்தாளர் அன்விதா பாஜ்பாய் ஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்
அன்விதா பாஜ்பாய்... மனித மன ஆராய்ச்சியாளர், வணிகத்தில் தொழில்நுட்பங்களைப் புகுத்தி வெற்றிகண்டவர், தொழிலதிபர், எழுத்தாளர், பேச்சாளர் என நீண்டுகொண்டே போகிறது இவருக்கான அடையாளம். ‘`வாழ்க்கை எனக்குக் கற்றுத்தருவதை வார்த்தைகளாக எழுதுகிறேன்’’ என்கிற அவர், `லைஃப், ஆட்ஸ் அண்ட் எண்ட்ஸ்’ (Life, Odds and Ends), ‘டர்னிங் பாயின்ட்ஸ் ஆஃப் அன்காமன் பியூப்பிள் (Turning Points of Uncommon People), `ஐ ஃபீல்... ஐ திங்க்’ (I Feel... I Think) ஆகிய மூன்று நூல்களின் ஆசிரியர். பெங்களூரில் வசிக்கிற அன்விதாவிடம் பேசினோம்...

‘’உத்தரப்பிரதேசத்தில் பிறந்தேன். சென்னை ஐ.ஐ.டி மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம்மில் உயர்கல்வி பயின்றேன். `ஆரக்கிள்’, `சத்யம்’, `விப்ரோ’ நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் பல ஆண்டுகள் பணிபுரிந்தேன். அப்போதுதான் வணிகம் மற்றும் தொழில்நுட்பம் இரண்டையும் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கும் வித்தையைக் கற்று, அதில் வெற்றியும் பெற்றேன். பின்னர் சொந்தமாக கன்சல்டன்ஸி நிறுவனங்களை ஆரம்பித்தேன். ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுத ஆரம்பித்ததன் மூலம், எழுத்துலகில் அடியெடுத்து வைத்தேன்.

சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் யக்ஞ நாராயணன் தொழில்நுட்பம் குறித்த பாடத்தை நடத்தியவிதம் என்னுள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே, தொழில்நுட்பம் சார்ந்த ஒரு விஷயத்தை அடிப்படையாகக்கொண்டு எழுதிய முதல் புத்தகமான ‘Life, Odds and Ends’ மிகுந்த வரவேற்பைப் பெற்றது’’ என்பவரின் கணவர் மென்பொறியாளர். மகள் பள்ளியில் படிக்கிறார்.
‘`குழந்தை வளர்ப்பில் நான் பெற்ற அனுபவங்கள், பலகாலமாக வழக்கில் இருக்கும் பொதுக் கருத்துகள், தாக்கத்தை ஏற்படுத்திய சினிமா மற்றும் மனிதர்கள் ஆகியவற்றின் மூலம்தான் வாழ்க்கையைக் கொஞ்சம் உணர்ந்துகொண்டேன். அதன் தொகுப்பாகவே என் இரண்டாவது புத்தகமான ‘Turning Points of Uncommon People’ எழுதினேன். சாதாரண மனிதர்களும் சாதனை படைக்க உதவும் உத்திகளைச் சொல்வதாக இந்தப் புத்தகம் பலராலும் பாராட்டப்பட்டது. அன்றாட பிரச்னைகளுக்கான முழுத்தீர்வை அலசும் மூன்றாவது புத்தகம் ‘I Feel... I think’-ஐ இளம் தலைமுறையினரைக் கருத்தில்கொண்டு `மொபைல் ஆப்’பில் (Kindle App) வெளியிட்டேன்’’ என்பவர், இப்போது தொழில்நுட்பம் சார்ந்த பல சர்வதேசக் கருத்தரங்கங்கள் மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம்மில் சிறப்புப் பேச்சாளராகப் பரபரப்பாக இருக்கிறார்.

‘`வாசகர்கள் படிக்கும் வேகத்தைவிட மிகவும் வேகமாக நான் எழுதுவதாக என் தோழி ஒருத்தி பாராட்டினாள். நிகழ்வுகளை சாமானியர்களும் புரிந்துகொள்ளும் வகையில் பிரச்னைகளுக்கான தீர்வுகளைத் தொழில்நுட்பம் சார்ந்து விளக்குவதே என் பலம். சிறிய சிறிய அத்தியாயங்களாக எழுதக் காரணம், மிகவும் பிஸியானவர்களும் படிக்க வேண்டும் என்கிற என் எண்ணமே’’ என்கிறார் அன்விதா.