Published:Updated:

ஆர்வம் திறமை வாய்ப்பு - ‘ஆர்ஜே’ ஆக்கும் மூன்று மந்திரங்கள்!

ஆர்வம் திறமை வாய்ப்பு - ‘ஆர்ஜே’ ஆக்கும் மூன்று மந்திரங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்வம் திறமை வாய்ப்பு - ‘ஆர்ஜே’ ஆக்கும் மூன்று மந்திரங்கள்!

RJ கண்மணி அன்போடு...படங்கள்: வீ.நாகமணி

`ரேடியோ மிர்ச்சி'யில் தனது இனிய குரலில் கலங்கடிக்கிற தேவா, பத்தாண்டுகளுக்கும் மேலாக `வாய்ஸ் ஓவர்' பயணத்தில் தனிமுத்திரை பதித்தவர். சென்னை மெட்ரோ டிரெய்னில் உங்களோடு பயணிப்பதும் தேவாவின் ‘ஜில்’ குரலே! ரேடியோ, விளம்பரம் எனக் காற்றலையில் தனது சாம்ராஜ்யத்தைத் தக்கவைத்திருக்கும் தேவா, `பாகுபலி'க்கு பின் இன்னும் பிரபலம். ஆம், தேவசேனாவின் பெயரில் இருந்து தெறித்து விழுந்த துண்டு நிலவாக தேவா. `ஆர்ஜே' கண்மணியுடனான உரையாடலில் இருந்து இனி உங்களோடு தேவா...  

ஆர்வம் திறமை வாய்ப்பு - ‘ஆர்ஜே’ ஆக்கும் மூன்று மந்திரங்கள்!

தேவா, `ஆர்ஜே' தேவா ஆனது எப்படி?

``ஹெச்.ஆர்., சாஃப்ட்வேர் துறைகள்ல வேலை பார்த்துட்டிருந்தேன். அப்பவே என் வாய்ஸ் நல்லா இருக்குன்னு சிலர் பாராட்டியது உண்டு. அதைப் பற்றி நான் பெரிசா எடுத்துக்கலை. 2002-ல நடந்த ஒரு ரேடியோ வொர்க்‌ஷாப் என்னை இங்க கொண்டுவந்து நிறுத்தியிருக்கு. அந்தக் கால கட்டத்துல பி.சி.ராமகிருஷ்ணன் டி.வி-யில ஒரு பேட்டி கொடுத்திட்டிருந்தார். யதேச்சையாத்தான் பார்த்தேன். `வாய்ஸ் ஓவர்'னு ஒரு துறை இருக்கிறதையே அவரோட பேட்டியிலதான் தெரிஞ்சுக்கிட்டேன்.

சாஃப்ட்வேர் வேலை அவ்வளவா  திருப்தி தரல. வெளிய வந்துடலாமான்னு மனசுக்குள்ள ஒரு கேள்வி. ரேடியோ வொர்க்‌ஷாப் போலா மான்னு இன்னொரு கேள்வியும் எழுந்தது. அந்த நேரத்துல, `நிலாதிரி போஸ்'ங்கிற  ஒரு பெரிய `ஆர்ஜே', ரேடியோவுல வொர்க் பண்ண இன்ட்ரஸ்ட் இருக்கிறவங்களுக்காக வொர்க்‌ஷாப் நடத்திக்கிட்டிருந்தாங்க. அம்மா தன்னோட போஸ்ட் ஆபீஸ் சேமிப்பை என் கையில கொடுத்து அந்த வொர்க்‌ஷாப்புக்கு அனுப்பி வெச்சாங்க. வொர்க்‌ஷாப்பில் பல விஷயங்கள் நடந்தாலும் வாய்ஸ் ஓவர்ல தான் என் மனசு முழுக்க இருந்துச்சு. ஆறு மாதங்களுக்கு அப்புறம் நான் சாஃப்ட்வேர் வேலையை விட்டுடலாம்னு வெளிய வந்தப்ப, `ரேடியோ மிர்ச்சி'யில நேர்காணல். நானே எதிர்பார்க்கல...  ஆனா, வாய்ப்பு கிடைச்சது. தெரியாத புதுத் துறைங்கிறதால நான் பார்ட்டைமாதான் ரேடியோ மிர்ச்சியில நுழைஞ்சேன். இப்படித்தான் என் ரேடியோ பயணம் தொடங்கியது. `வீக் எண்ட் ஷோ' பண்ண ஆரம்பிச்சேன். ஞாயிற்றுக்கிழமைல ‘ஃபில்டர் காபி’ நிகழ்ச்சியிலதான் காற்றலையில் குரல் பதிச்சேன். அப்புறம் அதுவே முழுநேர வேலையாவும் மாறிடுச்சு.''

`ஆர்ஜே'வா 2003 மார்ச்சுல தொடங்கி இப்போ 2017... கிட்டத்தட்ட 14 வருஷங்கள்.  ரேடியோ வுல இத்தனை வருஷம் வேலை பார்க்குறது திருப்தியா இருக்கா?

``கண்டிப்பா இருக்கு... ரேடியோவுல நாம சொல்ற விஷயத்துக்கு உடனடியா ஒரு தீர்வு கிடைக்கிறப்போ உணர்ற சந்தோஷமே தனி. ஆபத்துல இருக்குற ஓர் உயிரை காப்பாத்த ரத்தம் தேவைப்படும். அதை ரேடியோவுல சொல்ற அடுத்த சில நிமிடங்கள்ல யாரோ ஒரு நேயர் உதவ முன்வந்திருப்பார். சில நிமிடங்கள்லகூட ஓர் உயிரைக் காப்பாத்தின சந்தோஷம் கிடைக்கும். சென்னையில்ல வெள்ளம் வந்தப்போ
இது மாதிரியான ரெஸ்பான்ஸ் நிறைய வந்திருக்கு. நாம சொல்ற கருத்தை எத்தனையோ பேர் கேட்டுட்டிருக்காங்க. அவங்களுக்காக சரியான விஷயங்களைச் சொல்லணும்கிற பொறுப்பும் இந்த வேலையில இருக்கு. இதுவும் என்னை இயக்குதுன்னு சொல்லலாம்.

அரை மணி நேரம் நிகழ்ச்சி பண்ணணும்னாக் கூட நிறைய விஷயங்களைத் தேடித் தேடிக் கத்துக்கணும். `ஆர்ஜே'வா இருக்கும்போது ரொம்ப பொறுப்பான மனுஷியா உணர்றேன். அதனால எனக்கு எப்பவும் போரடிச்சதில்ல.''

உற்சாகப்படுத்திய முதல் பாராட்டு..?

``எல்லா இடங்கள்லேயும் ஆண்களோட ஆதிக்கம் அதிகம் இருக்கும். ரேடியோலயும் அது இருக்கு. ஆரம்பக்கட்டத்துல வந்த வாய்ப்புகளில் ஒன்றைக்கூட விடல. எவ்வளவு கஷ்டமான வாய்ப்புகள் வந்தப்பவும் விடாம, ஆர்வத்தோட பண்ணினேன். `பெரிசா எதையோ சாதிச்சுட்டதா நினைக்க வேண்டாம்'னு நம்ம பின்னாடியிருந்து பல குரல்கள் குட்டும். ஒரு விஷயத்தைத் திருப்தியா பண்ணிட்டா என்னை நானே பாராட்டிக்குவேன். அடுத்து வேகமா ஓடற சக்தியை அது கொடுக்கும்.
ஒரு நிகழ்ச்சியில நான் பெட்டரா பண்ணினதா பாராட்டி நேயர்கிட்ட இருந்து வந்த ஒரு மெயில்தான் எனக்குக் கிடைச்ச முதல் பாராட்டு. அப்போ அவ்ளோ சந்தோஷம். கிரியேட்டிவ் மக்களோட வொர்க் பண்றதால ஒவ்வொரு நிகழ்ச்சிக்குமே என்னைப் புதுப்பிச்சுக்கிறேன்.''

வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்டுக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன?

``ரேடியோல பேசலாம், விளம்பரங்கள்ல டப்பிங் மற்றும் வாய்ஸ் ஓவர் கொடுக்கலாம், சினிமாலயும் டப்பிங் பேசலாம்.''

ரேடியோல உங்க தனித்தன்மை என்ன?
 

``வீடியோ ஜாக்கின்னா அவங்க முகம் திரையில தெரியும். பார்த்த உடன் சிரிக்க வைக்கிற நிகில் சின்னப்பா மாதிரி எனக்குன்னு இமேஜ் எதுவும் உருவாகல. என் பேச்சுல ஹியூமர் வராது. என்னோட உரையாடல்கள்ல நிறைய விஷயங்கள் தெரிஞ்சிக்கலாம். கொஞ்சம் எமோஷனலா பேசுவேன்.''

தேவாவின் தேன் குரலை எங்கெல்லாம் கேட்கலாம்?

``ரேடியோ, தொலைக்காட்சி, விளம்பரங்கள், சென்னை மெட்ரோ டிரெயின், செல்போன் நிறுவனங்களோட பிரீபெய்ட், போஸ்ட் பெய்ட் பற்றின தகவல்கள்னு பல மீடியங்கள்ல கேட்கலாம். என்னோட குரலைக் கேட்கறதுக்காக நான் மெட்ரோ டிரெயின்ல ஒரு ட்ரிப் போனேன். பலர் மத்தியில என்னோட குரலில் அறிவிப்பைக் கேட்டது ரொம்ப பரவசமா இருந்தது.''  

தேவாவின் குரலை சினிமாவுல கேட்கலாமா?


``அதுக்கு வாய்ப்பு ரொம்பவே குறைவு தான். கேரக்டருக்காகப் பேசும்போது பேஸ் குறைச்சிப் பேசணும்னாங்க. என்னோடது பேஸ் வாய்ஸ். சினிமாவுக்காக என் குரலை மாத்திக்க முயற்சி பண்ணல. நிறைய அழணும்... சிரிக்கணும். எனக்கு அழறதே வராது, ரொம்பக் கஷ்டம்!''

ரேடியோ ஜாக்கியா வர நினைக்கிறவங்களுக் கான வேலைவாய்ப்பு எப்படியிருக்கு?

`` `நூறு பேர் இன்ஜினீயரிங் படிச்சா எழுபது பேருக்கு நிச்சயம் இன்ஜினீயர் வேலை கிடைக்கும். ஒவ்வொரு வருஷமும் இத்தனை இன்ஜினீயர்ஸ் தேவைப்படறாங்க' என்பது மாதிரியான மார்க்கெட் ரேடியோ ஜாக்கி வேலையில இல்லை. மாஸ் கம்யூனிகேஷன் படிச்சுட்டு, ரேடியோ பயிற்சிப்பட்டறைகள்ல கலந்து கிட்டா, கண்டிப்பா வேலை கிடைச்சுடும்னும் சொல்ல முடியாது. இந்த மாதிரி எதுவும் படிக்காம வேற துறைல இருந்து வர்றவங்களும் ரேடியோ ஜாக்கி ஆகலாம். குரல் வளம், இனிமையா பேசுற ஸ்டைல்கூட ஒருத்தருக்கு வேலைவாய்ப்பை வாங்கிக்கொடுக்கும். ஆர்வம், திறமை, வாய்ப்பு... இந்த மூன்று விஷயங்கள் இந்தத் துறையில கால் பதிக்கிறவங்களைத் தீர்மானிக்குது.''  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆர்வம் திறமை வாய்ப்பு - ‘ஆர்ஜே’ ஆக்கும் மூன்று மந்திரங்கள்!

ரேடியோ ஷோவுக்கும் மற்ற ஷோக்களுக்கும்  என்ன வித்தியாசம்..?

``நிகழ்ச்சிக்காகத் தயாராகறதுலதான் வித்தியாசம் இருக்கு. ஒரு சின்னத்திரை பிரபலத்தைச் சந்திக்கப் போறேன்னா, அவங்களைப் பற்றின தகவல்களைத் திரட்டவே ஒரு வாரம் எடுத்துக்குவேன். அவங்க நடிச்ச சீரியலை அந்த வாரத்துல தொடர்ந்து பார்ப்பேன். அதுல கூடவர்ற கேரக்டர்ஸ்னு எல்லாமே ஸ்டெடி பண்ணிட்டுத்தான் அவங்களோட நிகழ்ச்சிக்கே போவேன். இதனால பகுதி நேரமா வேலை பார்க்கற காலத்துலயும் மற்ற நாள்கள்ல நிகழ்ச்சிக்காகத்தான் வேலை பார்த்திட்டிருப்பேன்!''

`ஆர்ஜே'வா உங்களோட அற்புத தருணங்கள்னு எதைச் சொல்லலாம்..?

``எஸ்.பி.பி. சாரை நேர்காணல் பண்ணது. போகற போக்குல அவ்ளோ ஹியூமரா பேசினார். அவர்கிட்ட நான் அதை எதிர்பார்க்கல. அவர் மாதிரியான பிரபலங்களோட அனுபவங்கள்ல இருந்து நிறைய கத்துக்க முடிஞ்சது. மிர்ச்சி டிராவல்ஸ் நிகழ்ச்சில இயக்குநர் வெங்கட் பிரபுவை நேர்காணல் பண்ணினதும் மறக்க முடியாது. இந்த அனுபவங்கள்தாம் எனக்கு பெஸ்ட் `ஆர்ஜே' விருது வாங்கிக் கொடுத்தது.''

ஒரு ரேடியோ ஜாக்கியா நீங்க பெருமைப்படறது எதற்காக?


``இப்பவும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் புதுசா தயாராகிறேன். ஓர் எதிர்பார்ப்போட நிகழ்ச்சியை நடத்தறேன். என் மனசு முழுக்க நேயர்களோட அன்பு நிறைஞ்சிருக்கு. ஒரு பெஸ்ட் ரேடியோ ஜாக்கியா, வாய்ஸ் ஆர்ட்டிஸ்டா இருக்கிறது எல்லையற்ற சந்தோஷம்!''