Published:Updated:

கனவுகளை ஏன் பூட்டிவைக்க வேண்டும்?

கனவுகளை ஏன் பூட்டிவைக்க வேண்டும்?
பிரீமியம் ஸ்டோரி
News
கனவுகளை ஏன் பூட்டிவைக்க வேண்டும்?

ரோல் மாடல்ர.சீனிவாசன்

ரு பெண் இந்தச் சமூகத்தில் என்ன செய்துவிட முடியும்? பதின்பருவம் வந்தவுடனேயே அவளைச் சுற்றி இரும்புச் சங்கிலிகள் முளைத்துவிடுகின்றன. வெகுசிலர் மட்டுமே அந்த இரும்பையும் வளைத்து உடைத்து சுதந்திரப் பறவையாகி, கூண்டுகளை விட்டு வெளியே வருகின்றனர். அப்படி வந்த ஓர் அச்சமில்லாத பருந்துதான் ஷெரில் சாண்ட்பெர்க்!

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் போன்ற துறைகளில் பெண்களால் சோபிக்க இயலாது என்கிற அரை வேக்காட்டுத்தனத்தை வேருடன் பிடுங்கி எறிய முற்பட்டுக்கொண்டிருக்கும் பெண்களில் முதல் வரிசையில் ஷெரில் சாண்ட்பெர்க் நின்றுகொண்டிருக்கிறார். தொழில்நுட்ப உலகில் மிகவும் சக்தி வாய்ந்த பெண்களை  ஆண்டுதோறும் வரிசைப்படுத்தும் ஃபார்ச்சூன் (Fortune) இதழில் ஷெரில் இதுவரை ஆறுமுறை இடம்பெற்றிருக்கிறார். இணையத்தில் செல்வாக்கு மிகுந்த இருபத்தைந்து பெண்களில் ஒருவர், ஃபோர்ப்ஸ் (Forbes) இதழின் உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவர், 2012-ம் ஆண்டு டைம்ஸ் பத்திரிகை அறிவித்த 100 செல்வாக்கு உடைய மனிதர்கள் பட்டியலில் இடம்பிடித்தவர் என ஷெரில் நிகழ்த்திக் காட்டிய சாதனைகள் ஏட்டிலும் எண்களிலும் அடங்காதவை.

கனவுகளை ஏன் பூட்டிவைக்க வேண்டும்?

“எதிர்காலத்தில் வரப்போகும் கணவனுக் காகவும் பிறக்காத குழந்தைகளுக்காகவும் பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக நம் குறிக்கோள்கள் சிறுவயதிலேயே மாற்றியமைக்கப்படுகின்றன. நாமும் நம் கனவுகளையும் லட்சியங்களையும் பூட்டி வைக்கவே முற்படுகிறோம்...”

Lean In: Women, Work, and the Will to Lead என்ற தன் புத்தகத்தில் இப்படிக் குறிப்பிடும் ஷெரில் சாண்ட்பெர்க், உலகையே ஆண்டு கொண்டிருக்கும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் உயர் மட்டக் குழுவின் முதல் பெண் உறுப்பினர். அதன் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) மார்க் சக்கர்பெர்க்குக்கு அடுத்த இடமான தலைமை இயக்க அதிகாரி (COO) என்னும் மாபெரும் பொறுப்பில் இருப்பவர். ஆனால், இந்த இடம் அவருக்கு எளிதில் கிடைத்துவிடவில்லை.

ஃபிளாஷ்பேக்  1...

அது நியூயார்க் நகரின் புகழ்பெற்ற வர்த்தக நிறுவனங்களில் ஒன்று. மிகப்பெரிய வியாபார ஒப்பந்தத்துக்காகப் பேசவந்திருந்த ஷெரில், தன் திறமையால் அந்த பல கோடி ரூபாய் ஒப்பந்தத்தைப் பெற்றார். இரண்டு மணி நேரச் சந்திப்புக்குப் பிறகு, அனைத்து ஆண்களும் இளைப்பாறச் சென்றனர். அவ்வளவு பெரிய அலுவலகத்தில் கழிவறை எங்கிருக்கிறது என்று தெரியாததால், அங்கிருந்த ஆண் அதிகாரி ஒருவரிடம் ஷெரில் கேட்க, அவரோ திருதிருவென முழிக்க...

``நீங்கள் இங்கே புதிதாகச் சேர்ந்தவரா? பெண்கள் கழிப்பறை எங்கே என்று தெரியவில்லையா?'' என்று கேள்வி எழுப்பினார்.

“இல்லை, எங்கள் அலுவலகத்தில் பெண்களுக்குக் கழிவறை வைப்ப தற்கான தேவை இதுவரை ஏற்பட்ட தில்லை” என்று அவர் பதில் சொல்ல...

அதிர்ச்சியடைந்த ஷெரில், “அதாவது, உங்கள் அலுவலகத்தில் இப்படி ஒரு வர்த்தக ஒப்பந்தத்தைப் பெற எந்தப் பெண்ணும் வெளியி லிருந்து வந்ததே இல்லையா?” எனக் கேட்க,
“வந்திருக்கிறார்கள். ஆனால், கழிப்பறை எங்கே எனக் கேட்ட முதல் பெண் நீங்கள்தான்!” என்று பதில் வந்தது. முழுக்க முழுக்க ஆண்களால் நிரம்பிப்போன துறைகளில் இதுதான் பெண்களின் நிலை. பின்னாளில், புகழ்பெற்ற TED மாநாட்டில் நிகழ்த்திய உரையில் இதை நினைவுகூர்ந்தார் ஷெரில். அங்கு கூடியவர்களின் சிரிப்பொலியிலும் கரவொலியிலும் அந்த அரங்கம் நிரம்பியதே தவிர, அவர்கள் சிந்தித்தார்களா எனத் தெரியவில்லை. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கனவுகளை ஏன் பூட்டிவைக்க வேண்டும்?

ஃபிளாஷ்பேக்  2...

1969-ம் ஆண்டு, வாஷிங்டன் நகரில் ஒரு யூத குடும்பத்தின் மூன்று பிள்ளைகளில் மூத்தவராகப் பிறந்தார் ஷெரில் சாண்ட்பெர்க். அவர் பிறந்த இரண்டே ஆண்டுகளில் ஃபுளோரிடா மாகாணத்துக்கு இடம்பெயர்ந்தது குடும்பம். சிறுவயதிலிருந்தே ஷெரில் படிப்பில் சுட்டி. 1987-ம் ஆண்டு, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் கற்றுத் தேர்ந்தார். வெளியே வந்தவுடன், `பொருளாதாரம் மற்றும் அரசுத் துறைகளில் பெண்கள்' என்கிற அமைப்பை நிறுவ உதவியாக இருந்தார். அதன்பின், உலக வங்கியில் பணி. அங்கு அவர் `இந்தியாவில் தொழுநோய், எய்ட்ஸ், மற்றும் பார்வை குறைபாடுகளைக் குறைக்க உதவும் சுகாதாரத் திட்டம்' போன்ற பணிகளில் ஈடுபட்டார்.  இதைத் தொடர்ந்து, 1995-ம் ஆண்டு ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலில் MBA முடித்தார்.

ஃபிளாஷ்பேக்  3...

2007-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது முதன்முதலாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் மார்க் சக்கர்பெர்க் இவரைச் சந்தித்தார். அதுவரை தன் நிறுவனத்துக்கு ஒரு தலைமை இயக்க அதிகாரி (COO) வேண்டுமென நினைத்திராத மார்க், ஷெரிலை பார்த்தவுடன், அவரால் இப்படி ஒரு பொறுப்பைத் திறம்படச் செய்ய முடியும் என முழுமையாக  நம்பினார். அப்போது ஃபேஸ்புக் ஒரு `ஸ்டார்ட்அப்' நிறுவனம் மட்டுமே. இருந்தாலும், அந்தச் சவால் ஷெரிலுக்குப் பிடித்திருந்தது. கூகுளை விட்டுவிட்டு ஃபேஸ்புக்கில் இணைந்தார்.

புதிதாகத் தொடங்கிய நிறுவனம் என்பதால், லாபத்தைப் பற்றி இப்போது கவலைப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் ஷெரில். முதலில் ஃபேஸ்புக் இணையதளத்தை நவீனத் தொழில்நுட்பரீதியாகவும், பயன்படுத்துபவர்களைக் கவரும் விதமாகவும் அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மார்க்கும் இவருக்கு முழுச்சுதந்திரம் கொடுத்தார். வலைதளத்தில் நிறைய மாற்றங்கள் செய்து மூன்றே ஆண்டுகளில், ஃபேஸ்புக்கை லாபம் பார்க்கும் நிறுவனமாக மாற்றினார். இப்போது அந்த நிறுவனத்தின் விற்பனை, மார்க்கெட்டிங், வணிக வளர்ச்சி, மனிதவள மேம்பாடு, பொதுக்கொள்கை மற்றும் தகவல் தொடர்பு என அனைத்து முக்கிய விஷயங்களுக்கும் இவரே முழுப்பொறுப்பு.

எடுத்துக்காட்டாக ஓர் இல்லற வாழ்க்கை!

தொழில் வாழ்க்கையில் சாதித்த ஷெரில், இல்லற வாழ்க்கையிலும் தன் கொள்கைகளை எப்போதும் விட்டுக்கொடுத்து இல்லை. முதல் மணமுறிவுக்குப் பிறகு, `சர்வே மங்கி' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டேவ் கோல்டுபெர்க்கை 2004-ல் திருமணம் செய்துகொண்டார். இருப்பினும், தன் கனவுகளை நோக்கியே அவரின் ஓட்டம் இருந்தது. இல்லற வாழ்க்கை என்பது அவரின் கனவுகளில் ஒன்று, அவ்வளவே. இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகவும், ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகவும் சாதித்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன்வரையான ஷெரில் சாண்ட்பெர்க்கின் வாழ்க்கை என்பது பொதுவாக எல்லாப் பெண்களுமே வாழ நினைக்கும் ஒரு கனவு. `வருமானத்தையும் செலவுகளையும் குடும்பம் மற்றும் குழந்தைகள் பராமரிப்பையும் பகிர்ந்து செய்தல்' என்கிற கொள்கையின்படி வாழ்ந்து காட்டினர் ஷெரில் மற்றும் டேவ் தம்பதி. அதாவது, குடும்பத்துக்கான பணம் சம்பாதிப்பது, பிள்ளைகளைப் படிக்க வைப்பது, அவர் களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது, தினசரி வீட்டு வேலைகள், குடும்பத்தின் பொழுதுபோக்குக்கு நேரம் ஒதுக்குவது என இருவரிடையே அனைத்தும் சமமாக இருக்க வேண்டும். கணவன் என்றால் இந்த வேலையைச் செய்யத் தேவையில்லை, மனைவி என்றால் இந்த வேலைகளை நிச்சயம் செய்ய வேண்டும் என்கிற வேறுபாடுகள் எதுவும் இல்லாமல், ஆண் பெண் பேதமில்லாமல் இருவரும் வாழ்ந்துகாட்டினார்கள். துரதிர்ஷ்டவசமாக, இதயக்கோளாறு காரணமாக டேவ் 2015-ம் ஆண்டு காலமானார். ஆனால், இப்போதும் தன் குழந்தைகளுக்குத் தாயாக வீட்டிலும், தலைமை அதிகாரியாக வெளியுலகிலும் வீறுநடை போட்டுக்கொண்டு வருகிறார் ஷெரில். 

பெண்ணுலகமும் சம உரிமையும்!

2013-ம் ஆண்டில் முழுக்கமுழுக்கப் பெண்களை மையப்படுத்தி, Lean In: Women, Work, and the Will to Lead என்ற தன்னம்பிக்கை  நூலை எழுதினார் ஷெரில். வணிகத் தலைமை மற்றும் முன்னேற்றம், அரசாங்கத்திலும் வணிகத் துறையிலும் பெண்களின் பற்றாக்குறைக்குக் காரணமான பிரச்னைகள், பெண்ணியம் உள்பட பல்வேறு விஷயங்களை அந்தப் புத்தகம் அலசியது.

“வருங்காலத்தில் பெண் தலைவர்கள், பெண் சாதனை யாளர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். தலைவர்களும் சாதனையாளர்களும் மட்டுமே இருப்பார்கள். பாலின வேற்றுமைகளை நாம் நிச்சயம் கலைந்திருப்போம். நிறையப் பெண்கள் சாதித்திருப்பார்கள்” என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் ஷெரில். இது வசந்த பூமியாக மாறும் வகையில் இந்த நம்பிக்கையை நிறைவேற்றுவது நம் கடமை.