Published:Updated:

நான் ‘டபுள் பேரன்ட்’!

நான் ‘டபுள் பேரன்ட்’!
பிரீமியம் ஸ்டோரி
News
நான் ‘டபுள் பேரன்ட்’!

ஆர்.வைதேகி, படம்: ப.சரவணகுமார்

``என் புருஷன் என்னையும் என் குழந்தைகளையும் வேண்டாம்னு விட்டுட்டுப் போயிட்டார். இந்தச் சமுதாயத்தின் பார்வையில நான் `சிங்கிள் பேரன்ட்'. ஆனா, உண்மையில புருஷன் துணையில்லாம பிள்ளைகளை வளர்க்கிற ஒவ்வொரு பெண்ணும் தன்னை `டபுள் பேரன்ட்'டுனுதான் சொல்லிக்கணும். அம்மாவாகவும் அப்பாவாகவும் இருந்து பிள்ளைகளை வளர்க்கிற போராட்டம் சாதாரணமானதில்லை. அதேநேரம் சிங்கிள் பேரன்ட்டா இருக்கிறது சாபமோ, அவமானமோ இல்லை...'' - போல்ட் அண்ட் பியூட்டிஃபுல் ஸ்டேட்மென்ட்டுடன் பேச ஆரம்பிக்கிறார் ப்ரியா வேணுகோபால்.

சென்னையில் வசிக்கும் ஆசிரியர். வாழ்க்கைத்துணையைப் பிரிந்த ஒற்றைப் பெற்றோருக்காக முகநூல் மூலம் `சென்னை சிங்கிள் பேரன்ட்ஸ்' என்கிற நெட்வொர்க்கை ஆரம்பித்திருப்பவர். சிங்கள் பேரன்ட்டுகளை இணைப்பது, அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் மனத்தடைகளையும் தயக்கங்களையும் களைய கவுன்சலிங் கொடுப்பது, அவர்களின் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியான சுற்றத்தையும் சூழலையும் உருவாக்கித் தருவது போன்றவற்றுக் கானதே `சென்னை சிங்கிள் பேரன்ட்ஸ்' நெட்வொர்க்.

நான் ‘டபுள் பேரன்ட்’!

“பொழுதுபோகாமலோ, புரட்சி எண்ணத் திலோ ஆரம்பிக்கப்பட்ட முயற்சியல்ல இது” என்கிற ப்ரியாவின் கடந்த காலம் கசப்பு நிறைந்தது. ஆனாலும், எல்லாவற்றையும் வெல்லும் அவரின் ஆயுதம்... சிரிப்பு.
``சிரிச்சுக்கிட்டே வாழறது... அழுதுகிட்டே வாழறதுனு வாழ்க்கையில நமக்கு ரெண்டு சாய்ஸ் இருக்கு. நான் என் வாழ்க்கை சந்தோஷமா இருக்கணும்னு முடிவு பண்ணினேன். எனக்கு மட்டுமில்லே, எல்லாருக்குமே அதுதான் பெஸ்ட் சாய்ஸ்னு நம்பறேன்'' என்கிற ப்ரியாவின் சொல்லிலும் சிந்தனையிலும் எல்லோரையும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வதே நோக்கமாக இருக்கிறது.

``ராணுவ அதிகாரியின் மகள் நான். 17 வயசுலயே மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான ஸ்கூல்ல டீச்சர் வேலைக்குப் போயிட்டேன். சென்னையில, `ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆஃப் தமிழ்நாடு'ல ஸ்பெஷல் கோர்ஸ் முடிச்சேன். அப்புறம் அமெரிக்கன் ஸ்கூல்ல வேலை. அது இன்னிக்கு வரைக்கும் தொடர்ந்திட்டிருக்கு.

2001-ல அரேன்ஜ்டு மேரேஜ். கல்யாணமான முதல் நாள்லேருந்தே ஏகப்பட்ட பிரச்னைகள். அதை யெல்லாம் தாண்டி எங்களுக்கு ரெண்டு ஆண் குழந்தைகள் பிறந்தாங்க. 2010-ல அவர் எங்களை விட்டுட்டு வேற ஓர் உறவைத் தேடிப்போயிட்டார். அவருடன் வாழ்ந்த அந்த ஒன்பது வருடங்கள்ல எக்கச்சக்கமான சித்ரவதைகளை அனுபவிச்சிருக்கேன். இருந்தாலும், அந்த உறவைத் தக்கவெச்சுக்க நானும் எவ்வளவோ போராடினேன். ஆனாலும் முடியலை.

நான் அவரைச் சித்ரவதை செய்ததா சொல்லித்தான் விவாகரத்து வழக்கு தாக்கல் பண்ணினார். எங்க டிவோர்ஸ் கேஸ் நடந்துக்கிட்டிருந்தபோதே அவருக்கு மூணு வயசுல குழந்தை இருந்தது. சொல்லப்போனா எங்க விவாகரத்தே சட்டப்படி செல்லாது. அவர் எங்களை விட்டுப்போனபோது என் மூத்த மகன் அஷ்வின் நாராயணனுக்கு ஏழு வயசு. சின்னவன் ஷாம் நந்தாவுக்கு ஒரு வயசு. `நடந்தது நடந்திருச்சு... இதை ஏத்துக்கிறதுதான் வாழ்க்கை'ங்கிற பக்குவத்துக்கு வந்தபோது, வேற பிரச்னைகள் காத்திட்டிருந்தன. வீடு கடன்ல இருந்தது. பேங்க், போலீஸ் ஸ்டேஷன்னு அலையா அலைஞ்சேன். வாரா வாரம் கோர்ட்டுல போய் நிற்பேன். எல்லாத்துலேருந்தும் மீண்டுடலாம்னு நினைச் சிட்டிருந்தபோது மீளவே முடியாத அந்தத் துயரமும் சேர்ந்தது.

சின்னவனுக்கு அப்போ ரெண்டு வயசு. கொஞ்ச நாளா அவன் கண்ல ஒரு லைட் தெரிஞ்சதைக் கவனிச்சேன். டாக்டர் அவனை டெஸ்ட் பண்ணிட்டு, `லேட் பண்ணாம சங்கர நேத்ராலயாவுக்குக் கூட்டிட்டுப் போங்க'னு சொன்னாங்க. அவனுக்கு `ரெட்டினோபிளாஸ்ட்டோமா'ங்கிற கண் புற்றுநோய். உடனடியா ஆபரேஷன் பண்ணி, கேன்சர் பாதிச் சிருந்த கண்ணை எடுத்துட்டாங்க. வாழ்நாள் முழுக்க அவன் ஒரு கண்ணோடுதான் இருக்கணும்கிற அதிர்ச்சி என்னை உலுக்கிடுச்சு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நான் ‘டபுள் பேரன்ட்’!

புருஷனும் விட்டுட்டுப் போயிட்டான்... வீடும் கையை விட்டுப் போகப் போகுது... கன்ஃபார்ம் ஆகாத வேலை... குழந்தைக்குத் தீரா நோய்... இப்படிப் பல விஷயங்களால நான் நொறுங்கிப்போயிருந்த நேரம் அது. எல்லாத்துலேருந்தும் என்னை மீட்டெடுக்க படிப்பு மட்டும்தான் உதவும்னு தோணினது. வெறி பிடிச்ச மாதிரி படிச்சேன். டூரிசம், பி.எட்னு ரெண்டு டிகிரி முடிச்சேன். கேம்ப்ரிட்ஜ் சர்ட்டிஃபிகேட் வாங்கினேன். கூகுள் சர்ட்டிஃபைடு எஜுகேட்டர், காமன்சென்ஸ் மீடியா எஜுகேட்டர், யு.எஸ்ல மாஸ்டர்ஸ் டிகிரினு எல்லாம் சாத்தியமானது. படிப்பு எனக்குள்ள மிகப்பெரிய தன்னம்பிக்கையை உருவாக்குச்சு. அம்மாவும் அப்பாவும் அவங்க வீட்டை விட்டுட்டு என்கூட வந்து வாழ ஆரம்பிச்சாங்க. என் குழந்தைகளை வளர்க்கிறதுல அவங்களோட பங்கு பெரிசு. நான் அவங்களை கோ-பேரன்ட்ஸ்னுதான் சொல்வேன்.

நடிகை கெளதமி, டான்சர் அனிதா ரத்னம்னு எனக்கு நல்ல நண்பர்கள் அமைஞ்சாங்க. அவங்க எனக்கு நிறைய கவுன்சலிங் கொடுத்தாங்க. என் வளர்ப்பும் பெற்றோருடைய அணுகுமுறையும் யதார்த்தத்தை ஈஸியா ஏத்துக்க வெச்சது. என்ன நடந்ததோ... அதை என் பிள்ளைகளுக்கு அப்படியே சொன்னேன். அவங்க அப்பாவை நல்லவராகவோ, வில்லனாகவோ காட்டறது என் நோக்கமில்லை. ரொம்பச் சின்ன வயசுலேயே விட்டுட்டுப் போனதால என் சின்ன பையனுக்கு அப்பாங்கிற உறவே தெரியாது. இப்பவும் எங்கப்பாதான் அவனுக்கு அப்பா. அவனுக்கு ஓரளவுக்கு விவரம் தெரிஞ்ச பிறகு அவனைப் பார்க்க வந்த அவங்கப்பா, `என்னை அவனுக்கு அறிமுகப்படுத்தி வை'னு சொன்னபோது சிரிக்கிறதா... அழறதானு தெரியலை. நான் என் மகன்கிட்ட சொன்னபோது, `காமெடி பண்ணாதீங்க'ன்னான்.

என் கணவர் என்னை விட்டுட்டுப்போன பிறகு நான் என் வாழ்க்கையில `சிங்கிள் மதர்ஸ்' பலரைச் சந்திச்சேன். ஒவ்வொருத்தருமே நிறைய பிரச்னைகளைக் கடந்து வந்திருந்தாங்க.  ஒருத்தருக்கொருத்தர் மனசுவிட்டுப் பேசி வருத்தங்களைப் பகிர்ந்துகிட்டோம். சில மாசங்களுக்கு முன்னாடி ஃபேஸ்புக்ல `ஐ சிங்கிள் பேரன்ட்'னு ஒரு பேஜ் பார்த்தேன். ரிச்சா ஷர்மானு ஒருத்தங்கதான் அதை ஆரம்பிச்சிருந்தாங்க. அதுல இந்தியா முழுவதிலும் உள்ள சிங்கிள் பேரன்ட்ஸ் இருந்தாங்க. சிங்கிள் பேரன்ட்ஸ், அவங்க ஆணோ, பெண்ணோ... சந்திக்கிற சந்தோஷங் களையும் சங்கடங்களையும் பகிர்ந்துக்கிற ஓர் இடமா அது இருந்தது. `சென்னையில ஏன் அப்படியொரு முயற்சியைத் தொடங்கக் கூடாது'னு `சென்னை சிங்கிள் பேரன்ட்ஸ்' என்ற பெயர்ல ஃபேஸ்புக் பேஜ் உருவாக்கினேன். இந்த குரூப், தனித்து வாழறவங்களுக்கானதில்லை... துணையின்றி வாழும் பெற்றோருக்கானது.

நான் ரொம்ப பாசிட்டிவான மனுஷி. ரொம்ப தைரியமானவள். பசங்களையும் அப்படித்தான் வளர்த்திருக்கேன். என்கூட இருக்கிறதை என் ஃப்ரெண்ட்ஸும் அவங்க பசங்களும் ரொம்பவே விரும்புவாங்க. அந்த ஹேப்பினஸை இன்னும் நிறைய பேருக்குப் பரப்பணும்னு நினைச்சு ஆரம்பிச்ச முயற்சி இது.

நான் என்னதான் தைரியமா வளர்த்தாலும், சண்டைபோடும்போது என் பையன் `நான் எப்படி ஃபீல் பண்றேன்னு உங்களுக்குத் தெரியுமா'னு கேட்கும்போது உறுத்தலா இருக்கும். நான் இந்த வயசுலயும் என் அப்பாகூட இருக்கேன். அந்தக் குழந்தைக்கு அது வாய்க்கலையேனு தோணும்.

நிறைய அம்மாக்கள் அவங்களோட பசங்களை சிங்கிள் பேரன்ட்டின் குழந்தைங்கனு சொல்றதை விரும்பறதில்லை. `நாங்க தனியா இருக்கோம்னு தெரிஞ்சாலே எங்களை ஒருமாதிரியா பார்க்கிறாங்க. சமுதாயத்தை எதிர் கொண்டாகணுமே... அதனால அப்பா வெளியூர்லயோ, வெளிநாட்டுலயோ இருக்கார்னு சொல்லச்சொல்லிக் குழந்தைகளையும் பழக்கியிருக்கோம்'னு சொல்வாங்க.

`குழந்தைகளை அப்படிப் பொய் பேசப் பழக்கறதால, அவங்களை பலவீனமானவர்களாக்கறீங்க. அவங்க செய்யாத தவறுகளுக்கு ஏன் அவமானப்பட வைக்கிறீங்க? அப்பா விட்டுட்டுப்போனா குழந்தைங்க என்ன செய்வாங்க'னு கேட்பேன். சிங்கிள் பேரன்ட்டா வாழறதுங்கிறது அவமானத்துக்குரியதில்லைங்கிற விழிப்பு உணர்வை ஏற்படுத்தறதும், சிங்கிள் பேரன்ட்டின் குழந்தைகள் குற்ற உணர்வில்லாம வளர அவங்களை மனசளவுல தயார்படுத்தறதும்தான் இந்த கிளப்பின் நோக்கங்கள்...'' - அழுத்தமான நினைவுகளிலிருந்து மீள்கிற ப்ரியா, அருகிலிருக்கும் மகனை அள்ளிக் கொஞ்சிவிட்டு மீண்டும்  தொடர்கிறார்...

``என் குழந்தையோட கண் பிரச்னைக்காக மாசம் ஒருமுறை ரெவ்யூவுக்குப் போவேன்.  அவனை ஒவ்வொரு முறை டாக்டர்ஸ் ரூமுக்குள்ள கூட்டிட்டுப்போயிட்டு வெளியில வரும் வரைக்கும் நான் தவிக்கிற தவிப்பு எனக்கு மட்டும்தான் தெரியும்.  `கேன்சர் அடுத்த கண்ணுக்கும் பரவிடுச்சுனு சொல்லப் போறாங்களா... மூளைக்குப் பரவிடுச்சுனு சொல்லப் போறாங்களா... எலும்புகளுக்குப் பரவிடுச்சுனு சொல்லப் போறாங்களா'னு மனசு பதறும். வெளியில கூட்டிட்டு வந்து, `ஒண்ணுமில்லைம்மா... அப்படியேதான் இருக்கு'னு சொன்ன பிறகுதான் எனக்கு மூச்சே வரும். இந்த வலியையும் வேதனையையும் யாராலயும் புரிஞ்சுக்க முடியாது.

ஒரு வருஷத்துக்கு முன்னாடி தான் அவனுக்கிருக்கிற பிரச்னையே அவனுக்கு தெரிஞ்சது. `நான் ரொம்ப துரதிர்ஷ்டசாலி.... அதனாலதான் கடவுள் எனக்கு ஒரே ஒரு கண் மட்டும் கொடுத்திருக்கார்'னு சொல்வான்.  `அப்படியில்லை... நீ ரொம்ப லக்கி... எத்தனை பேரால அவங்களுக்கு ஒரு கண்தான் இருக்குனு சொல்ல முடியும்'னு அவனோட எண்ணத்தைப் பாசிட்டிவா மாத்திவிடுவேன். `எத்தனை பேர் உன்னை மாதிரி சிங்கப்பூருக்கும் துபாய்க்கும் டிராவல் பண்ணி யிருக்காங்க? எத்தனை பேரோட அம்மா சிங்கிள் மதரா இருக்காங்க? அந்தவகையில நீ ரொம்ப ஸ்பெஷல்டா'னு சொல்வேன். புரிஞ்ச மாதிரி சிரிப்பான். அவனுக்கு ஒரு கண் இல்லைங்கிறது மட்டும்தான் தெரியும். அதுக்கு கேன்சர்தான் காரணம்னு புரிஞ்சுக்க இன்னும் வயசு வரலை. `எனக்கொரு ரோபோட்டிக் கண் வாங்கித் தாங்கம்மா'னு கேட்பான். `எதிர்காலத்துல சயின்ஸ் முன்னேறி அது சாத்தியமானா, கண்டிப்பா உனக்கு அப்படியொரு கண் வாங்கித் தரேன்டா'னு பிராமிஸ் பண்ணியிருக்கேன். நம்பிக்கையிருக்கு... நடக்கும்!''

- நம்பிக்கை மனுஷியாக நெஞ்சை நிமிர்த்துகிறார்... நெஞ்சம் நிறைக்கிறார் ப்ரியா.