Published:Updated:

10/10 பத்துக்குப் பத்து!

10/10 பத்துக்குப் பத்து!
பிரீமியம் ஸ்டோரி
10/10 பத்துக்குப் பத்து!

கலைடாஸ்கோப்நா.சிபி சக்ரவர்த்தி, படங்கள்: கே.ராஜசேகரன், ஆ.முத்துக்குமார்

10/10 பத்துக்குப் பத்து!

கலைடாஸ்கோப்நா.சிபி சக்ரவர்த்தி, படங்கள்: கே.ராஜசேகரன், ஆ.முத்துக்குமார்

Published:Updated:
10/10 பத்துக்குப் பத்து!
பிரீமியம் ஸ்டோரி
10/10 பத்துக்குப் பத்து!

கேட்ட இசை

சக்திஸ்ரீ கோபாலன், பாடகி

10/10 பத்துக்குப் பத்து!

‘பெல்லி சூப்புலு’ படத்துக்கு இசையமைத்த விவேக் சாகரின் மியூசிக் வேற லெவல். அண்மையில் ‘யுத்தம் சரணம்’ என்கிற தெலுங்கு படத்துக்கு இவர் இசையமைத்திருந்தார். அதிலும் எல்லா பாடல்களுமே ரொம்ப நல்லா வந்திருக்கு. ஒரு படத்தின் அத்தனை பாடல்களும் நம்மைக் கவராது. ஆனால், இந்த ‘யுத்தம் சரணம்’ படத்தின் அத்தனை பாடல்களும் என்னை வசீகரித்தன. அதில் பிரதீப் குமார் ஒரு மெலடி பாடியிருக்கார். நானும் ஒரு பாடல் பாடியிருக்கேன். எல்லாப் பாடல்களையும் இப்போ ரிப்பீட் மோட்ல கேட்டுட்டு இருக்கேன்.

10/10 பத்துக்குப் பத்து!

சந்தித்த நபர்

விநோதினி, நடிகை

‘வேலைக்காரன்’ பட ஷூட்டிங்குக்காக மலேசியா போயிருந்தோம். அங்கதான் ஒய்.ஜி. மகேந்திரன் சாரைப் பார்த்தேன். அவரைப்பற்றி நிறைய நல்ல விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கேன். சிவாஜி, கமல், ரஜினின்னு பல பேரோட வொர்க் பண்ண சீனியரோட, நாம எப்படிப் பேசுறதுனு தயங்கிட்டே இருந்தேன். ஆனா, அவர் சட்டுனு என்கிட்ட வந்து, ‘உங்ககூட நாடகம் நடிச்சவங்க எல்லாரும் நீங்க நல்லா நடிப்பீங்கனு சொன்னாங்க. வாழ்த்துகள்’னு சொன்னார்.

அப்ப என்கூட தம்பி ராமையா, ‘முண்டாசுப்பாட்டி’ ராமதாஸ், காளி வெங்கட்னு நிறைய பேர் இருந்தாங்க. அவ்வளவு பெரிய சீனியர் அவராகவே என்னைப்பற்றி என் நண்பர்கள் முன்னாடி பாராட்டிப் பேசினது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு. நான் அண்மையில் சந்திச்சதுலேயே ரொம்ப ஸ்பெஷலானவர் இவர்தான்.

10/10 பத்துக்குப் பத்து!

கடைப்பிடிக்கும் பழக்கம்

பூஜா தேவரையா, நடிகை 

நடிப்பு மேலதான் எனக்கு ஆர்வம் இருக்குனு தெரிஞ்சபிறகு... அது சம்பந்தமான கட்டுரை, யூடியூப் வீடியோஸ் எல்லாம் பார்ப்பேன். எங்கேயாவது வொர்க் ஷாப் நடந்தால் தவறாமல் கலந்துப்பேன். இந்த டெக்னாலஜி உலகத்துல என்னைத் தொடர்ந்து அப்டேட் பண்ணிட்டே இருக்கணும்னு நினைப்பேன். இதுதான் என் நீண்ட நாள் பழக்கம். நமக்கு ஒரு விஷயம் பிடிக்குதுன்னா அது சம்பந்தமான தொடர் தேடல்தான் நம்மை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோகும். இது என் லைஃப்ல நான் உணர்ந்தது.

10/10 பத்துக்குப் பத்து!

வாங்கிய பரிசு

ஆர்த்தி, நடிகை

‘பிக் பாஸ்’ கிராண்ட் ஃபைனல் முடியும்போது கமல் சார் எல்லாருக்கும் பரிசு கொடுத்தார்.  பரிசாகக் கொடுத்த மூன்று புத்தகங்களிலும் ‘அன்புடன் ஆர்த்தி அவர்களுக்கு' என்று அவர் கை படவே எழுதிக்கொடுத்தார்.  

சில காலமாக வேலைப்பளு காரணமாகப் படிப்பதில் சின்ன பிரேக் விழுந்துடுச்சு. இப்ப மீண்டும் கமல் சார் கொடுத்த புத்தகத்திலிருந்து படிப்பதைத் தொடரப்போகிறேன். இதோ... ஜெயகாந்தன் எழுதிய ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ புத்தகத்தைக் கையில் எடுத்தாச்சு. இந்தப் புத்தகங்கள்தாம் நான் சமீபத்தில் வாங்கிய அன்பு பரிசு. பொக்கிஷப் பரிசும்கூட.

10/10 பத்துக்குப் பத்து!

பிடித்த படம்

விஜயலட்சுமி, நடிகை

 ‘பெர்ஃப்யூம்’ என்கிற ஜெர்மன் படம் என்னை ரொம்பவே வசீகரித்தது. மீண்டும் மீண்டும் அந்தப் படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். 2006-ல் வெளிவந்த அந்தப் படத்தை இன்னமும் உலகம் முழுக்க சிலாகிச்சுப் பேசிட்டேதான் இருக்காங்க.

உலகின் மிகச் சிறந்த வாசனைத் திரவியத்தைக் கண்டுபிடிப்பதற்காக பல சோதனைகளைச் செய்கிறான் ஒருவன்... கொடூரமான கொலைகள் உள்பட. அப்படி ஒரு பெர்ஃப்யூமைக் கண்டுபிடித்தானா? அதனால், ஏற்படும் விளைவுகள் என்ன? இதுதான் பெர்ஃப்யூம் கதை. த்ரில்லாவும் சுவாரஸ்யமாவும் இருக்கும். இது தவிர, ஸ்பானிஷ் மொழியில் வந்த ‘The Invisible Guest’, ஆங்கிலத்தில் வெளியான ‘Lucy’ என்ற சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமும் பார்த்தேன். இந்த மூணு படங்களும் சமீபத்தில் பார்த்ததில் எனக்கு ரொம்பப் பிடித்தவை.

10/10 பத்துக்குப் பத்து!

படித்த புத்தகம்

கெளசல்யா சங்கர், சமூகச் செயற்பாட்டாளர்

‘சாதி தேசத்தின் சாம்பல் பறவை’... எவிடென்ஸ் கதிரின் கள அனுபவங்களின் தொகுப்பு. சாதி என்பது சமூகம் முழுவதும் காற்றுபோல நீக்கமற நிறைந்துள்ளது என்பதை இதைப் படித்து முடிக்கும்போது உணரமுடியும். ‘சாதிதான் சமூகம் என்றால், வீசும் காற்றில் விஷம் பரவட்டும்’ என்றார் ஒருவர். சமூகமே விஷமாகவுள்ளது என்கிற உண்மையை நம் கன்னத்தில் ஓங்கியறைந்து சொல்லியிருக்கிறது இந்த நூல்.
சங்கருக்கும் எனக்கும் நேர்ந்ததையும் அந்த நீதிப் போராட்டம் குறித்தும் நேர்மையோடு இந்த நூலில் பதிவு செய்துள்ளார். சங்கர் சிந்திய ரத்தத்துக்கு மட்டுமல்ல...  ஆயிரமாயிரம் சங்கர்கள், கெளசல்யாகளுக்கும் நீதி செய்ய வேண்டும் என்கிற உறுதியை இந்நூல் ஏற்படுத்தியது. சாதி ஒழிப்புக்காக இன்னும் வேகமாகப் பயணிக்க எனக்கு உத்வேகமளித்த நூல் இது.

10/10 பத்துக்குப் பத்து!

நெகிழ்த்திய நிமிடம்

சுமதி, வழக்கறிஞர்

ராணுவத்தில் உயிர்நீத்த வீரர்களின் தியாகத்தையும் தேசப்பற்றையும், ஒருமைப்பாட்டையும் மாணவர்கள் மனதில் விதைக்க வேண்டும் என்பதற்காக ‘மறத்தல் தகுமோ’ என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியை அண்மையில் நடத்தினோம். டாக்டர் பா.ஸ்ரீகாந்த் எழுதி விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள ‘மறத்தல் தகுமோ?’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக்கொண்டு நடத்திய போட்டிதான் அது.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் கமாண்டன்ட் ராஜன் ரவீந்திரன். ஒவ்வொரு மாணவரும் ராணுவ வீரர்களைப் பற்றிப் பேசியதைக்கேட்டு நெகிழ்ந்து மேடைக்கு வந்தார் அவர். ‘`சாதாரண மனிதனுக்கு எது பயம் என்றால், ‘துப்பாக்கி, ராணுவம்’ என்று சொல்வாங்க. அதுவே ஒரு ராணுவ வீரனிடம் கேட்டால் ‘சென்டிமென்ட்’ என்றே சொல்வார். அதேபோல இந்த மாணவர்கள் பேசிய விஷயங்கள் என்னை ரொம்பவும் நெகிழ்த்திடுச்சு'' என்று சொல்லிக்கொண்டிருக்கையிலேயே அவருக்குக் கண்ணீர் வந்துவிட்டது. உடனே சுதாரித்துக்கொண்டு ‘ஐ எம் ஓகே...  ஐ எம் ஓகே...’ என்றார். முதலில் சொன்ன ‘ஐ எம் ஓகே’ தனக்குத்தானே சொல்லிக்கொண்டது. இரண்டாவதாகச் சொன்னது நமக்காக. அந்த  நிமிடத்தில் நான் நெகிழ்ந்துபோனேன்.

10/10 பத்துக்குப் பத்து!

வாங்கிய பொருள்

சுமையா, தொகுப்பாளர்

சிறுவயசுல இருந்தே கொலுசு வாங்கணும்னு எனக்கு ஆசை. ஸ்கூல், காலேஜ் படிக்கும்போதெல்லாம் வீட்டுல வாங்கித் தரலை. வேலைக்கு வந்தபிறகு, ‘வாங்கணும்.. வாங்கணும்’னு நினைப்பேன். ஆனா, வாங்கவே முடியலை.

ஒருவழியா, போன மாசம் பிறந்த நாள் பரிசாக என் சிஸ்டர் எனக்குக் கொலுசு வாங்கிக்கொடுத்தாங்க. சமீபத்துல ஒரு சில்வர் கம்பெனிக்காக விளம்பரம் பண்ணப் போயிருந்தேன். அங்க போனதிலிருந்தே என் கண்ணு கொலுசு மேலதான் இருந்துச்சு. எப்படா ஷூட்டிங் முடியும்னு காத்துட்டிருந்தேன். முடிஞ்சதும் எனக்குப் பிடிச்ச மாதிரி ரொம்ப மெல்லிசா மூணு கொலுசு வாங்கிட்டேன். செமையா இருக்கு. நீண்ட நாள் ஆசை நிறைவேறிடுச்சு.

10/10 பத்துக்குப் பத்து!

சென்ற இடம்

தீபா ராமாநுஜம், நடிகை

நான் தமிழ்நாட்டுல இருந்தாலும், என் குடும்பத்தினர் அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தில் இருக்காங்க. எனக்குக் கொஞ்சம் டைம் கிடைச்சா குடும்பத்தைப் பார்க்கப் பறந்து போயிடுவேன். அங்க போனதும் ஃபேமிலியோட எங்கேயாவது டூர் கிளம்பிடுவோம்.  அண்மையில் மெண்டொசீனோ (Mendocino) என்ற நகருக்குச் சென்றோம். நார்த் கலிஃபோர்னியாவில்  இருக்கும் அந்த இடம் அவ்வளவு அழகு. ரிலாக்ஸ் பண்றதற்கேற்ற பக்கா டூரிஸ்ட் ஸ்பாட்.

நாங்க தங்கிய ஹோட்டலில் ஆர்கானிக் கார்டன் வெச்சிருந்தாங்க. அங்கே விளையும் காய்கறிகளை மட்டுமே பயன்படுத்திதான் சமைச்சுக் கொடுத்தாங்க. முழுக்க முழுக்க வீகன் (Vegan) உணவு வகைகள் மட்டும்தான் அங்கே கிடைக்கும். பீச் போனப்ப திமிங்கிலங்கள் கூட்டமாக கிராஸ் பண்ணதைப் பார்த்தோம். அந்த இடத்தைவிட்டு வரவே மனசு இல்லை. கண்டிப்பா இன்னொரு முறை அங்கே போகணும்.

10/10 பத்துக்குப் பத்து!

தீராத ஆசை

உஷா கிருஷ்ணன், இயக்குநர்

பெண்கள் பெரும்பாலும் தங்கள் வட்டத்தைச் சுருக்கிக்கொள்கிறார்கள். அப்படியில்லாமல் ஒரு வண்ணத்துப்பூச்சியை ரசிக்கிற மனநிலையோடு நம்மை வைத்துக்கொள்வதுதான் ஆரோக்கியமானது. எப்போதும் கைகளில் ஒட்டியிருக்கும் மொபைல்போனை தூர வைத்துவிட்டு இயற்கையோடு வாழப் பழகினால் இந்த உலகம் வேறோர் கோணத்தை நமக்கு விசாலமாகக் காட்டிக்கொடுக்கும். இந்த பேரனுபவத்தை உணர ஆசைப்பட்டு நிறைய பயணங்கள் செய்கிறேன். பயணங்கள்மீது எனக்குத் தீராத காதல் உண்டு. நண்பர்களோடு சேர்ந்து பயணிப்பதைவிட தனியாகப் பயணிப்பதே என் ஆசை. அதையே இப்போது திகட்டாமல் செய்து வருகிறேன். இந்தப் பயண ஆசை எப்போதும் தீர்ந்து போகாமல் தொடர வேண்டும்.