Published:Updated:

சச்சின் பேசியதும் மயக்கமே வந்திருச்சு!

சச்சின் பேசியதும் மயக்கமே வந்திருச்சு!
பிரீமியம் ஸ்டோரி
சச்சின் பேசியதும் மயக்கமே வந்திருச்சு!

மேஜிக் வாய்ஸ்சாஹா

சச்சின் பேசியதும் மயக்கமே வந்திருச்சு!

மேஜிக் வாய்ஸ்சாஹா

Published:Updated:
சச்சின் பேசியதும் மயக்கமே வந்திருச்சு!
பிரீமியம் ஸ்டோரி
சச்சின் பேசியதும் மயக்கமே வந்திருச்சு!

மாளவிகாவிடம் ஒரு ஹலோ சொன்னால் போதும். அவரது பதில் ஹலோ ‘டங்... டங்... டிக... டிக... டங்... டங்...’ என்கிற பாடல் மைண்டு வாய்ஸில் நிச்சயம் ஒலிக்கும். அப்படியொரு மேஜிக் குரல்.
‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் டாப் 5 போட்டியாளர் களில் ஒருவராக வந்தவர், சோனி டி.வியின் பிரபல ரியாலிட்டி ஷோவான ‘இந்தியன் ஐட'லில் டாப் 4-ல் ஒருவர். தமிழ்நாட்டைவிடவும், வடக்கில் மாளவிகாவுக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். அதைப் பற்றியெல்லாம் எந்த அலட்டலும் இல்லாமல் அமைதியாகவே பேசுகிறார் மாளவிகா.

‘`அம்மா, அப்பா, நான், தங்கைனு சின்னக் குடும்பம். எனக்கு ரெண்டு வயசிருக்கும்போது, எம்.எஸ்.சுப்புலட்சுமியம்மாவோட ‘ஹனுமான் சாலிசா’ கேட்டுக்கிட்டிருந்தேன். எனக்கே தெரியாம நானும் கூட சேர்ந்து பாட ஆரம்பிச்சேன். அதைப் பார்த்துட்டு ரெண்டரை வயசுல என்னைப் பாட்டு கிளாஸ்ல சேர்த்துவிட்டாங்க. லால்குடி ஜெயராமன் சாரோட அக்கா பத்மாவதி அனந்தகோபாலன்தான் என் குரு.

‘இவ்ளோ சின்னக் குழந்தைகளுக்கெல்லாம் நான் கத்துக்கொடுக்க மாட்டேன். அஞ்சு வயசாவது ஆகணும். அப்பதான் நாங்க கத்துக்கொடுக்கிறது புரியும்’னு சொல்லிட்டாங்க. ‘அவளுக்கு ஸ்கூல்ல ஒரு பாட்டு கத்துக்கொடுத்திருக்காங்க. அதைக் கேட்டுட்டுச் சொல்லுங்க...’னு அம்மா சொன்னாங்க. கிருஷ்ணர் பஜனைப் பாடினதும் என் குருவுக்கு ரொம்பப் பிடிச்சுப் போய், கிளாஸ்ல சேர்த்துக்கிட்டாங்க...’’ - மாளவிகா, மழலை மேதை என்கிறது அவரது அறிமுகம்.

சச்சின் பேசியதும் மயக்கமே வந்திருச்சு!

‘`அப்போ எங்கக் குடும்பம் டெல்லிக்கு மாற்றலாகிப்போக வேண்டிய கட்டாயம். எட்டாவது படிச்சிட்டிருந்த நான், என் குருகிட்டயே குருகுலவாசம் இருக்க முடிவு பண்ணினேன். 2010-ல சூப்பர் சிங்கர் வாய்ப்பு வந்தது. அதுல டாப் 5 வரை வந்தேன். இந்த நிகழ்ச்சியில கலந்துக்கிறவரைக்கும் எனக்கு கர்னாடிக் மியூசிக் மட்டும்தான் பரிச்சயம். என் குரு ரொம்ப ஸ்ட்ரிக்ட். சினிமா பாட்டுகளைக் கேட்கக்கூட விட மாட்டாங்க. ‘கண்டதையும் கேட்டா உனக்குனு ஒரு தனித்தன்மை வராது’னு சொல்வாங்க. குருகுல வாசத்துல அவங்க என்ன பாடறாங்க, எப்படிப் பாடறாங்கன்றதை மட்டுமே கவனிச்சிருக்கேன். சூப்பர் சிங்கர்ல கலந்துக்கிட்டதுகூட தற்செயலான நடந்ததுதான். அது எனக்கே ஓர் ஆச்சர்யம்தான்.

கர்னாடிக் மட்டுமே தெரிஞ்சு வெச்சிருந்ததால எனக்கு அந்த நிகழ்ச்சி பெரிய சவாலாகவும் இருந்தது.  எல்லாரும் ‘நீ பாடறது ரொம்ப கர்னாடிக்கா இருக்கு’னு சொல்வாங்க. அப்ப எனக்கு அது புரியலை. ‘ஏன் எப்பப் பார்த்தாலும் ஜட்ஜஸ் என்னைத் திட்டிக்கிட்டே இருக்காங்க’னு யோசிச்சிருக்கேன். அதையெல்லாம் இப்போ பார்க்கிறபோது புரியுது. குத்துப் பாட்டோ, மெலடியோ, கிராமியப் பாட்டோ பாடணும்னா, அதுல கர்னாடிக் டச் இல்லாமப் பாடறது எப்படினு இப்போ நிறைய கத்துக்கிட்டிருக்கேன். ரஹ்மான் சார், இமான் சார்னு எல்லாருக்கும் பின்னணிப் பாடியிருக்கேன். அங்கே நான் கத்துக்கிட்ட அனுபவங்கள் இன்னிக்கு எப்படிப்பட்ட பாடல்களையும் என்னைப் பாடத் தயார்ப்படுத்தியிருக்கு...’’ - குறைகளை நிறையாக்கிக்கொண்டவருக்கு முதல் பாட்டு இன்றுவரை அடையாளம்.

சச்சின் பேசியதும் மயக்கமே வந்திருச்சு!

‘`இமான் சார் மியூசிக் ‘மனம்கொத்திப் பறவை’ படத்துக்காக ‘டங்... டங்...’தான் எனக்கு முதல் வாய்ப்பு. முதல் பாட்டு எப்படியிருக்கப் போகுது, நான் எப்படிப் பாடப்போறேன்னு எந்த ரெஃபரென்ஸும் இல்லை. எனக்குச் சரிப்படுமானு ஏகப்பட்ட கேள்விகள். ஆனா, அப்படி எந்தச் சாயலும் இல்லாத குரல்தான் வேணும்கிறதுல இமான் சார் உறுதியா இருந்தார். ‘இந்தப் பாட்டு உங்க குரல்லதான் வரணும்னு முடிவு பண்ணிட்டேன். தைரியமா பாடுங்க’னு நம்பிக்கை கொடுத்தார். அதுவரை  சூப்பர் சிங்கர் மாளவிகாவா இருந்த நான், அதுக்கப்புறம் ‘டங்... டங்...’ மாளவிகாவா பிரபலமாகிட்டேன்...’’ - மெலடியாகச் சிரிப்பவர், ‘கோச்சடையான்’, ‘கொம்பன்’’, ‘பென்சில்’, ‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘ஈட்டி’, ‘முப்பரிமாணம்’, ‘காதல் கசக்குதய்யா...’ எனப் பல ஹிட் பாடல்கள் பாடியிருக்கிறார்.

‘`முன்னல்லாம் ஒரே ஒரு எஸ்.பி.பி. சார், ஒரே ஒரு சித்ராம்மா, ஒரே ஒரு ஜானகியம்மாதான் இருந்தாங்க. இப்ப நூறு பேர் இருந்தாலும், நூறு பேருமே வித்தியாசமா பாடறாங்க. ஒவ்வொருத்தர்கிட்டயுமே தனித்திறமை இருக்கு. எந்த ஸ்டைல்ல, யார் பெஸ்ட்டுனு சொல்ல முடியாது. ஹார்டு வொர்க்கையும் தாண்டி, அதிர்ஷ்டமும் அவசியம்...’’ - உண்மையைச் சொல்பவருக்கு அந்த அதிர்ஷ்டம் வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.

‘`பின்னணி பாட ஆரம்பிச்சதும் என் பேர் கொஞ்சம் பிரபலமானது. வாழ்க்கையிலயும் சரி, கரியர்லயும் சரி... எனக்குப் புதுப்புது விஷயங்களை முயற்சி செய்யறது ரொம்பப் பிடிக்கும். அப்படித்தான் இந்தி பாடல்கள் கேட்க ஆரம்பிச்சேன். சோனி டி.வியோட ‘இந்தியன் ஐடல்’ ஷோவுல கலந்துக்கிட்டேன். அப்போ எனக்கு இந்தி பேசக்கூடத் தெரியாது. ஆனாலும், ஒரு தைரியத்துல போயிட்டேன். சென்னையிலேருந்து ஒரு பொண்ணு பாலிவுட்ல போய் பாடறாங்கிறது கெத்தான விஷயமில்லையா? பயங்கரமா ஹார்டு வொர்க் பண்ணினேன். பாலிவுட் எப்போதுமே பிரமாண்டமானது. இந்தியன் ஐடல் ஷோ, பாலிவுட்ல மட்டுமில்லாம உலக அளவுல பல மக்களால ரசிக்கப்படற ஒரு நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில கலந்துக்கிட்ட பலரும் இன்னிக்கு பாலிவுட்ல பிரபலமான பாடகர்களா இருக்காங்க....’’ என்கிற மாளவிகா சொல்கிற அந்தப் பலரில் இவரும் ஒருவர்.

‘`அந்தப் படங்கள் வெளியில வரட்டும். அப்புறம் பேசறேனே...’’ என்கிறார் அடக்கமாக.

சச்சின் பேசியதும் மயக்கமே வந்திருச்சு!

‘`அந்த ஷோவுக்காக மாசக்கணக்குல மும்பையில இருந்தேன். தட்டுத்தடுமாறி இந்தியில பேசிப் பழகினேன். தமிழைத் தப்பா பாடற இந்திப் பாடகர்களைக் கிண்டல் பண்றோம். அதே தப்பை நாம பண்ணிடக்கூடாதுங்கிறதுல தெளிவா இருந்தேன். எனக்குப் புரியாத வார்த்தைகளை இந்தி தெரிஞ்சவங்களை உச்சரிக்கச் சொல்லிக் கேட்டுக்கிட்டேன்...’’ - சவால்களைக் கடந்து டாப் 4-ல் ஒருவராக வந்ததைவிடவும் மாளவிகாவுக்கு மற்றுமொரு பெருமையைத் தேடித்தந்திருக்கிறது அந்த நிகழ்ச்சி.
 
அது சச்சின் டெண்டுல்கரின் சந்திப்பு; அவருடனான விருந்தும் பாராட்டும்.

‘`சச்சினை மீட் பண்றோம்னு சொன்னாங்க. அவரைப் பார்க்கிறதே பெரிய விஷயம்னு பிரமிப்போடவே நின்னுக்கிட்டிருந்தேன். ‘யு ஆர் மாளவிகா, ரைட்..? நீதானே அந்தப் பிச்சுவா சாங் பாடினே’னு ஞாபகம் வெச்சுக் கேட்டார். அவர் வாயால என் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டது இல்லாம, என் பாட்டையும் ஞாபகம் வெச்சுக் கேட்டதும் எனக்கு மயக்கமே வந்திருச்சு...’’ - மாளவிகாவின் வார்த்தைகளில் அந்த மயக்கம் இன்னும் மிச்சமிருக்கிறது.

எம்.பி.ஏ பட்டதாரியான மாளவிகா, சமீப காலமாக தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும் பிசியாகி இருக்கிறார். ஹீரோயினாக நடிக்கக் கேட்டு வாய்ப்புகள் வந்தாலும், ‘`நடிக்கிறதைவிட நான் நல்லா பண்றதுக்கான வேலைகள் நிறைய இருக்குங்கிறதால `நோ' சொல்லிட்டேன்’’ என்கிறார்.
 
அப்புறம்?

மார்கழி சீசன் கச்சேரிகளுக் காக மாமி வெயிட்டிங்காம்!