Published:Updated:

“மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வருகிறேன்!”

“மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வருகிறேன்!”
பிரீமியம் ஸ்டோரி
“மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வருகிறேன்!”

நேற்று இன்று நாளைசனா

“மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வருகிறேன்!”

நேற்று இன்று நாளைசனா

Published:Updated:
“மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வருகிறேன்!”
பிரீமியம் ஸ்டோரி
“மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வருகிறேன்!”

“ ‘மகாடு’ என்ற தெலுங்குப் படத்தில் நான் ஹீரோயினாக நடித்திருந்தேன். அந்தப் படத்தை எங்கள் குடும்பத்தினர்தான் தயாரித்திருந்தனர். பின்னாளில்  அந்தப் படம் ‘மீசைக்காரன்’ என்ற பெயரில் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்த நேரம் ரயில்வே பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து கீழே விழுந்ததில் இவருக்குப் பலத்த காயம். அந்த நேரத்தில் நானும் ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் இருந்தேன். அந்த விபத்தைப் பார்த்ததும் அதிர்ச்சியில் அப்படியே உறைந்துவிட்டேன். அவரை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு நானும் மருத்துவமனைக்குப் போனேன். ஒரு மாத காலம் அவர் மருத்துவமனையில் இருந்தபோது நானும் அவருடனே  இருந்தேன். அவரை நான் பார்த்துக்கொண்ட விதம் அவர் குடும்பத்தாருக்குப் பிடித்துவிட அவரை மருத்துவமனையிலிருந்து அழைத்துச்செல்லும்போது என்னையும் சேர்த்தே வீட்டுக்குக் கூட்டிப்போய்விட்டார்கள்” - தன் கணவர் ராஜசேகரைப் பற்றிப் பேசப்பேச அவரையும் அறியாமல் கண்களின் ஓரங்களில் நீர் எட்டிப்பார்க்கிறது. அது தன் பயண இலக்கை எட்டிவிட்ட மகிழ்ச்சியில் வரும் ஆனந்தக் கண்ணீர். அந்தப் பயணத்தை நமக்காக ரீவைண்ட் செய்கிறார் ஜீவிதா ராஜசேகர். ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’, ‘ராஜ மரியாதை’, ‘நானே ராஜா நானே மந்திரி’ உள்பட பல தமிழ்ப் படங்களில் நடித்த ஜீவிதா இப்போது மீண்டும் நடிக்க வருகிறார்.

“தெலுங்குதான் என் பூர்வீகம். ஆனால், படித்ததெல்லாம் சென்னையில்தான். அதனால் எனக்குத் தமிழ், தெலுங்கு இரண்டுமே தெரியும். பதினோறாம் வகுப்பு படிக்கும்போது ஒருமுறை என் தோழி வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போது அங்கு என்னைப் பார்த்த டி.ஆர் சார், அவருடைய ‘உறவைக் காத்த கிளி’ திரைப்படத்தில் என்னை அறிமுகப்படுத்தினார். என் உண்மையான பெயர் பத்மா. சினிமாவுக்காக ‘ஜீவிதா’ என டி.ஆர்.சார்தான் என் பெயரை மாற்றி வைத்தார்’’ என்னும் ஜீவிதா தன் திருமணம் குறித்த நினைவுகளையும் பகிர்கிறார்.

“மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வருகிறேன்!”

`` ‘தாலம்பிரலு’ என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானேன். அதில் என் கணவர்தான் ஹீரோ. அங்கேதான் அவரை முதலில் சந்தித்தேன். அந்தப் படம் பெரிய ஹிட். அடுத்தடுத்து சில படங்களில் சேர்ந்து நடித்தோம். அவற்றில் ஒன்றான ‘ஆகடு’ என்ற தெலுங்கு படத்தின் தமிழ் டப்பிங் வெர்ஷன்தான் ‘இதுதான்டா போலீஸ்’. இப்படி என் முதல் தெலுங்கு படத்திலிருந்து நாங்கள் நல்ல நண்பர்கள். அதனால் எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது. இருந்தாலும்  ஒருமுறைகூட இருவரும் காதலிப்பதாகச் சொல்லிக்கொண்டதே இல்லை. ஒருநாள் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, ‘திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும்’ என்று எங்களுக்குள் முடிவு செய்து கொண்டோம்.

ஆனால், அவருடைய வீட்டில்  முதலில் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை.  அவருடைய அக்கா ஐ.பி.எஸ் அதிகாரி, தம்பி வழக்கறிஞர், இவர் டாக்டர் என சினிமா சம்பந்தப்பட்ட ஆட்கள் யாருமே இல்லாத வீட்டில் சினிமாவுக்கு வந்த முதல் நபர் இவர்தான். அதுவும், அவரை சினிமாவுக்கு அனுப்பும்போது, ‘சினிமா நடிகை யாரையும் திருமணம் செய்யக் கூடாது’ என்று சத்தியம் வாங்கிக்கொண்டுதான் நடிக்க அனுப்பி வைத்தார்கள்.

அதனாலேயே, எங்கள் திருமணம் பற்றி வீட்டில் சொல்லும்போது ஏகப்பட்ட எதிர்ப்புகள். இதற்கிடையில் அவருக்குப் பெண் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அதையெல்லாம் அவர் என்னிடம் நிறைய முறை சொல்லியிருக்கிறார். 

“மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வருகிறேன்!”

அந்த விபத்துக்குப்பிறகுதான் என்னை எல்லோருக்கும் பிடித்துப்போய் முழுமனதாக ஏற்றுக்கொண்டார்கள். அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக என் அப்பா இறந்துவிட ஒரு வருடம் கழித்துத்தான் திருமணம் செய்துகொண்டோம். அவரும் அந்த விபத்திலிருந்து மீண்டு, திரும்பவும் நடிக்க வருவதற்கு அந்த ஒரு வருடம் தேவைப்பட்டது. அதன் பிறகே எங்கள் திருமணம் நடந்தது’’ - தன் நினைவுகளை மீட்டும்போது கண்களில் பரவசம் கூடுகிறது ஜீவிதாவுக்கு.

``திருமணத்துக்குப் பிறகு எங்கள் தயாரிப்பு நிறுவனத்தை கவனித்துக்கொண்டிருக்கிறேன். என் கணவரை வைத்து நான்கு படங்களை இயக்கியும் இருக்கிறேன்.  எங்களுக்கு இரண்டு மகள்கள். முதல் பெண் ஷிவானி. இரண்டாவது மகள் சுவாஸ்திகா. மகள்கள்மீது அவருக்கு அவ்வளவு பிரியம். வெளியூர் ஷூட்டிங் போவதாக இருந்தால் நாங்கள் நான்கு பேரும் சேர்ந்தேதான் போவோம். எங்களை விட்டுவிட்டு அவர் ஒரு நாளும் தனியாகப் போனதே இல்லை.

“மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வருகிறேன்!”

பாடப்புத்தகத்தில் இருக்கும் படிப்பை மட்டுமே சொல்லிக்கொடுக்கும் பள்ளியில் பிள்ளைகளைப் படிக்கவைப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை. அதனால், ‘வால்டார்ப் மெத்தட் ஆஃப் டீச்சிங்’ என்ற இங்கிலாந்தில் பின்பற்றப்படும் கல்விமுறை கொண்ட ஒரு பள்ளிக்கூடத்தை எங்கள் மகள்களுக்காக ஹைதராபாத் நகரத்தில் ஆரம்பித்தோம். இப்போது ஷிவானி மருத்துவம் மூன்றாம் ஆண்டு படிக்கிறாள். சுவாஸ்திகா ப்ளஸ் டூ படிக்கிறாள். இருவரும் நன்றாகப் பாடுவார்கள், டான்ஸ் தெரியும். கீ போர்ட் வாசிப்பார்கள். சண்டைப் பயிற்சிகள்கூட தெரியும். ஷிவானி சீக்கிரமே சினிமாவில் அறிமுகமாகப்போகிறார். அதற்காக நல்ல கதைகளைக் கேட்டு வருகிறோம்.

அன்றைய தமிழ் சினிமா ஞாபகங்கள் எப்போதும் என் மனதில் இருக்கும். ரேவதி, நளினி, அமலா, ரோஜா என அனைவருடனும் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன். எல்லோரையும் அடிக்கடி சந்தித்துப் பேசுவேன். இப்போது மீண்டும் நடிக்க வருகிறேன். அதுவும் என்னை நடிகையாக்கிய தமிழ் சினிமாத்துறையில்தான் மறுபடியும் நுழைகிறேன். பிரபுதேவா தமிழில் நடிக்கும் ஒரு படத்தில் என்னை நடிக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார். நடிக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். திரும்பவும் நடிக்க வருவது எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவுக்கு முக்கியமானது, அதைச் சிறப்பாகச் செய்வதும்!'' அழுத்தம் கொடுத்துப் பேசும் ஜீவிதாவின் எவர்கிரீன் நடிப்பை பார்க்க ஆவல்கூடுகிறது நமக்கும்.

- உறவைக் காத்த கிளிக்கு வரவேற்பு!