பிரீமியம் ஸ்டோரி
சர்வதேச சமையல்

``வெளிநாடுகளுக்குச் சுற்றுப் பயணம் செல்லும்போது நாம் கண்டு ரசிக்கவேண்டிய இடங்களுடன், சுவைத்து மகிழவேண்டிய உணவு வகைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்போம். நம்மூர் சமையலிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இந்த உணவுகளைக்கூட இந்தியச்சுவைக்கேற்ப மாற்றம் செய்து, நம் வீட்டிலேயே செய்யலாம்’’ எனக் கூறும் சமையல் கலைஞர் மலர்விழி (குறிஞ்சி கதம்பம்) தன் கைவண்ணத்தில் அவற்றை நமக்கு அளிக்கிறார்.  

சர்வதேச சமையல்

ஸ்ரீலங்கன் போல் ரொட்டி

தேவையானவை: மைதா மாவு, தேங்காய்த் துருவல் - தலா ஒரு கப், தண்ணீர் - அரை கப், எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு டீஸ்பூன்.  

சர்வதேச சமையல்

செய்முறை: மைதா மாவுடன் தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். அத்துடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். மாவை அப்படியே அரை மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு, மாவை நான்கு சம பாகங்களாகப் பிரிக்கவும். சப்பாத்திக்கல்லின் மீதும் கைகளிலும் எண்ணெய் தடவவும். மாவு உருண்டைகளை மெல்லியதாகத் திரட்டவும். தோசைக்கல்லைச் சூடாக்கி, திரட்டிய ரொட்டிகளைப் போட்டு, எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.  

இதை `சம்போல்’ உடன் பரிமாறவும்.

சர்வதேச சமையல்

ஸ்ரீலங்கன் போல் சம்போல்

தேவையானவை:  தேங்காய்த் துருவல் - ஒரு கப், பூண்டுத் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
கொடுக்கப் பட்டுள்ள பொருள்களை அகலமான பாத்திரத்தில் ஒன்றாகச் சேர்த்துக் கலந்து நன்கு அழுத்திப் பிசையவும்.  இதுவே சம்போல்.

ரொட்டி அல்லது பிரெட் உடன் பரிமாறவும்.

சர்வதேச சமையல்

மெக்ஸிகன் வெள்ளரி சாலட்

தேவையானவை: வெள்ளரிக்காய் - ஒன்று, வெங்காயம் - ஒன்று (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும்), எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெள்ளரிக் காயைத் தோல் சீவி வட்ட வடிவ துண்டுகளாக்கவும். அதனுடன் வெங்காயம், எலுமிச்சைச் சாறு,  உப்பு சேர்த்து காய்கள் உடையாமல் கலக்கவும். மேலே மிளகாய்த்தூள் தூவிப் பரிமாறவும். 

சர்வதேச சமையல்

பெர்சியன் ஷீர் பெரெஞ்சி

தேவையானவை:
பாசுமதி அல்லது சீரகச் சம்பா அல்லது பச்சரிசி - கால் கப், தண்ணீர் - கால் கப், பால் - ஒரு கப், ரோஸ் வாட்டர் - கால் டீஸ்பூன், ஃப்ரூட் ஜாம், நறுக்கிய பாதாம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன்.

செய்முறை:
அரிசியைக் கழுவி  தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும். அரிசியுடன் ஊறவைத்த தண்ணீர், உப்பு, பால் சேர்த்து நன்கு குழைய வேகவிடவும். சாதம் நன்கு ஆறியபின், ரோஸ் வாட்டர் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவை பாயசம் போல இருக்க வேண்டும். கெட்டியாக இருந்தால், மேலும் சிறிதளவு பால் சேர்த்துக் கலக்கி ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைக்கவும். அகலமான பாத்திரத்தில் கலவையை ஊற்றி, நடுவே ஜாம் சேர்க்கவும். மேலே பாதாம் தூவிப் பரிமாறவும்.

இதை ஃப்ரிட்ஜில் வைக்காமலும் பரிமாறலாம்.

சர்வதேச சமையல்

நார்த் ஆப்பிரிக்கன் ஹரிஸ்ஸா

தேவையானவை: காய்ந்த மிளகாய் - ஒரு கப், பூண்டு - 6 பல், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம்,  மல்லி (தனியா), ஓமம் - தலா அரை டீஸ்பூன், கடுகு -  கால் டீஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு -  தேவையான அளவு. 

செய்முறை: காய்ந்த மிளகாயின் காம்பு மற்றும் விதைகளை நீக்கவும். ஒரு கப் தண்ணீரை நன்கு கொதிக்கவைத்து, அதில் காய்ந்த மிளகாய் சேர்த்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். வெறும் வாணலியில் சீரகம், மல்லி (தனியா), ஓமம் சேர்த்தது நன்கு வாசனை வரும்வரை வறுத்து எடுக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் பவுடராகப் பொடிக்கவும். இதனுடன் ஊறவைத்த மிளகாய், உப்பு, பூண்டு, எலுமிச்சைச் சாறு சேர்த்தது நன்கு விழுதாக அரைத்து எடுக்கவும்.  வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து அரைத்த விழுதுடன் கலந்து பரிமாறவும்.

இதைச் சட்னி போல இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ளலாம். 

சர்வதேச சமையல்

ஆப்கான் போரணி காச்சலு

தேவையானவை: உருளைக்கிழங்கு - கால் கிலோ, துருவிய பூண்டு - ஒரு டேபிள்ஸ்பூன், தோல் சீவி, துருவிய இஞ்சி - அரை டேபிள்ஸ்பூன், தக்காளி சாஸ் - கால் கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், தயிர் - கால் கப், புதினா இலைகள் - 10 (பொடியாக நறுக்கவும்), உப்பு - கால் டீஸ்பூன்.

செய்முறை: உருளைக்கிழங்கைத் தோல் சீவி, கால் இஞ்ச் தடிமன்கொண்ட வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கவும். அகலமான வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் தக்காளி சாஸ், மஞ்சள்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு உருளைக்கிழங்கு, சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து மூடிபோட்டு வேகவிடவும். தயிருடன் புதினா, உப்பு சேர்த்துக் கலக்கவும். தட்டில் உருளைக்கிழங்குத் துண்டுகளைத் தனித்தனியாகப் பரப்பவும். இதன் மேலே தயிர் கலவையை ஊற்றிப் பரிமாறவும்.

சர்வதேச சமையல்

மொரோக்கன் கேரட் ஜூஸி சாலட்

தேவையானவை: கேரட் துருவல் - அரை கப், ஆரஞ்சு சாறு - கால் கப்,  சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்,  பட்டைத்தூள் - கால் டீஸ்பூன், ரோஸ் எசன்ஸ் - 2 துளிகள்.

செய்முறை: 
கொடுக்கப் பட்டுள்ள பொருள்களை அகலமான பாத்திரத்தில் ஒன்றாகச் சேர்த்து நன்கு கலக்கவும். 10 நிமிடங்கள் அப்படியே மூடி வைக்கவும்.  பிறகு, மீண்டும் நன்கு கலக்கிப் பரிமாறவும். இதைக் குளிரவைத்தும் சுவைக்கலாம்.

சர்வதேச சமையல்

க்ரீக் ஹனி டோநட்

தேவையானவை: மைதா மாவு - ஒரு கப், வெதுவெதுப்பான நீர் - அரை கப், இன்ஸ்டன்ட் ஈஸ்ட் அல்லது டிரை ஈஸ்ட் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

தேன் கலவை செய்ய: தேன் - கால் கப், வெதுவெதுப்பான நீர் - அரை கப், சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், பட்டைத்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை: மைதா மாவுடன் சர்க்கரை, உப்பு, இன்ஸ்டன்ட் ஈஸ்ட் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் வெதுவெதுப்பான நீர், சிறிதளவு எண்ணெய் சேர்த்து, போண்டா மாவு பதத்துக்குக் கலக்கவும். இதை காற்றுப்புகாமல் மூடி ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு, மாவு இரண்டு மடங்காகப் பொங்கி இருக்கும். கையில் எண்ணெய் தடவிக்கொண்டு மாவை நன்கு கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு மாவைச் சிறு சிறு உருண்டைகளாக எடுத்துப்போட்டு வேகவைத்து எடுக்கவும். தேனுடன் சர்க்கரை, வெதுவெதுப்பான நீர் சேர்த்துக் கலக்கவும். பொரித்த உருண்டைகளைத் தேன் கலவையில் புரட்டி எடுத்து மேலே பட்டைத்தூள் தூவிப் பரிமாறவும்.

குறிப்பு: டிரை ஈஸ்ட் பயன்படுத்தினால் ஈஸ்ட்டுடன் உப்பு, சர்க்கரை, வெதுவெதுப்பான நீர் சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

சர்வதேச சமையல்

இத்தாலியன் க்ரானிட்டா

தேவையானவை:
ஏதாவது ஒரு பழத்தின் துண்டுகள் (நாவல்பழம் அல்லது மாம்பழம் அல்லது அன்னாசிப்பழம்) - கால் கப்,  சர்க்கரை - கால் கப், தண்ணீர் - ஒரு கப்.

செய்முறை:
பழத்துண்டுகளுடன் சர்க்கரை,  தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அடித்து வடிகட்டவும். இந்தச் சாற்றை பாத்திரத்தில் ஊற்றிமூடி 2 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்.   கட்டியாக மாறி இருக்கும் ஜூஸ் கலவையை ஃபோர்க் கொண்டு நன்கு கிளறிவிடவும். மீண்டும் 2 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். கட்டியாக மாறியிருக்கும் ஜூஸ் கலவையை மீண்டும் ஃபோர்க் கொண்டு நன்கு கிளறி விடவும். இதேபோல 3 - 4 முறை செய்ய வேண்டும். பரிமாறும் முன்பும் ஃபோர்க்கால் கிளறிவிட்டு, பின்பு உடனடியாகப் பரிமாறவும்.

குறிப்பு:
பழத்தைக் கொட்டை அல்லது விதை நீக்கவும். தோல் நீக்க வேண்டுமெனில் நீக்கவும்.

சர்வதேச சமையல்

பிரேசிலியன் லெமெனேட்

தேவையானவை: குளிர்ந்த நீர் - 2 கப், சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைத் தோல் துருவல் - கால்  டீஸ்பூன்,  கண்டன்ஸ்டு மில்க் - அரை கப்.

செய்முறை: குளிர்ந்த நீருடன் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். பாதி சர்க்கரைத் தண்ணீருடன் எலுமிச்சைச் சாறு, எலுமிச்சைத் தோல் துருவல் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும். இதனுடன் மீதமுள்ள சர்க்கரைத் தண்ணீர், கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து நுரை வரும்வரை மீண்டும் அடிக்கவும். உயரமான கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி உடனடியாகப் பரிமாறவும்.

சர்வதேச சமையல்

மொரோக்கன் மின்ட் டீ

தேவையானவை: தண்ணீர் - 2 கப், புதினா இலைகள் - 10, க்ரீன் டீத்தூள் அல்லது டீத்தூள் - 2 டீஸ்பூன், சர்க்கரை - 4 டீஸ்பூன்.

செய்முறை: பாத்திரத் தில் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். இதனுடன் டீத்தூளைச் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, புதினா இலைகளைப் போட்டு மூடி வைக்கவும். ஒரு நிமிடத்துக்குப் பிறகு வடிகட்டி, சர்க்கரை சேர்த்துப் பரிமாறவும்.

சர்வதேச சமையல்

சுவீடிஷ் சாக்லேட் போலார்

தேவையானவை:  ஓட்ஸ் - ஒரு கப், சர்க்கரை - கால் கப், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கோகோ பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன்,  இன்ஸ்டன்ட் காபி பவுடர் - 2 டேபிள்ஸ்பூன், வெதுவெதுப்பான நீர் - 2 டேபிள்ஸ்பூன், வெனிலா எசன்ஸ் -  ஒரு டீஸ்பூன், கோகனட் பவுடர் (உலர் தேங்காய்த் துருவல்) - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன்.

செய்முறை: சர்க்கரையுடன் ஓட்ஸ், உப்பு, கோகோ பவுடர் சேர்த்து பவுடராக அரைத்து எடுக்கவும். வெதுவெதுப்பான நீருடன் இன்ஸ்டன்ட் காபி பவுடர் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் வெனிலா எசன்ஸ், வெண்ணெய் சேர்த்துக் கலக்கவும். பிறகு, ஓட்ஸ் கலவை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும்  (தேவைப்பட்டால் சிறிதளவு வெதுவெதுப்பான நீர் சேர்த்துக்கொள்ளலாம்). மாவைச் சிறிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டவும். அகலமான தட்டில் கோகனட் பவுடரைப் பரப்பவும். பிறகு, உருண்டைகளை கோகனட் பவுடரில் புரட்டி எடுத்து ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுத்துப் பரிமாறவும்.

சர்வதேச சமையல்

கொலம்பியன் பட்டிடா தே பப்பாயா

தேவையானவை:
பப்பாளி பழத்துண்டுகள் - அரை கப், காய்ச்சி ஆறவைத்த பால் - ஒரு கப்,  சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன், வெனிலா எசன்ஸ் - அரை டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, ஐஸ்  கட்டிகள் - ஒரு கப்.

செய்முறை: பப்பாளி யுடன் சர்க்கரை, ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும். இதனுடன் பால், வெனிலா எசன்ஸ், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக அடித்து உடனே பரிமாறவும்.

சர்வதேச சமையல்

அமெரிக்கன் பான் கேக்

தேவையானவை: மைதா மாவு, கோதுமை மாவு - தலா அரை கப், காய்ச்சி ஆறவைத்த பால் - ஒரு கப், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - கால் கப், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சர்க்கரையுடன் உப்பு, மைதா மாவு, கோதுமை மாவு, பேக்கிங் பவுடர் சேர்த்து பவுடராக மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். இந்தக் கலவையுடன் பால், வெண்ணெய் சேர்த்துக் கட்டியில்லாமல் நன்கு கலக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் தடவி காயவிட்டு, அடுப்பைச் சிறு தீயில் வைத்து, கால் கப் மாவைச் சிறிய ஊத்தப்பம் போல ஊற்றவும் (மெல்லியதாகத் தேய்க்கக் கூடாது). தோசையின் மேல் பக்கம் சிறு சிறு ஓட்டைகள் தோன்றும். உடனே திருப்பி போட்டு சிவக்க வேகவைத்து எடுக்கவும். வெண்ணெய், தேன் அல்லது நறுக்கிய பழங்களுடன் பரிமாறவும்.

சர்வதேச சமையல்

சைனீஸ் டாங் யுங்

தேவையானவை: அரிசி மாவு, தண்ணீர் - தலா ஒரு கப், கறுப்பு எள் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை- 3 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: வெறும் வாணலியில் எள்ளை வாசனை வரும் வரை வறுத்து ஆறவிடவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். பிறகு, வெண்ணெய் சேர்த்துக் கைகளால் நன்கு பிசையவும். அரிசி மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். மாவை  எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும். ஒவ்வோர் உருண்டையின் நடுவிலும் குழிசெய்து சிறிதளவு எள் கலவையை வைத்து மூடி, மீண்டும் உருண்டையாக உருட்டவும். உருண்டைகள் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும்.  உருண்டைகளைத் தனியாகவோ, வேகவைத்த தண்ணீர் சேர்த்தோ பரிமாறவும்.

சர்வதேச சமையல்

இந்தோனேசியன் கார்ன் பிரிட்டர்

தேவையானவை: உதிர்த்த ஸ்வீட் கார்ன் முத்துகள் - ஒரு கப், பச்சை மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, சின்ன வெங்காயம் - 10 (தோல் உரிக்கவும்), பூண்டு - 5 பல், அரிசி மாவு - அரை கப், மைதா மாவு - கால் கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஸ்வீட் கார்ன் முத்துகள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, சின்ன வெங்காயம், பூண்டு, உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்து எடுக்கவும். அதனுடன் அரிசி மாவு, மைதா மாவு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலக்கவும். பிறகு, தண்ணீர் சிறிதளவு சேர்த்து போண்டா மாவைவிட சற்று தளர்வான பதத்துக்குக் கலக்கவும். தோசைக்கல்லைக் காய வைத்து, சிறிதளவு எண்ணெய்விட்டு, தோசை போல மாவை ஊற்றி, இரண்டு பக்கமும் சிவக்கும்வரை மிதமான தீயில்  சுட்டு எடுக்கவும்.

சர்வதேச சமையல்

டொமினிக்கன் யானியூயூ

தேவையானவை: மைதா மாவு - ஒரு கப், பேக்கிங் சோடா, உப்பு - தலா அரை  டீஸ்பூன், எண்ணெய்  - தேவையான அளவு.

செய்முறை:
மைதா மாவுடன் உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்துச் சலித்து எடுத்துக்கொள்ளவும். இதனுடன் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டுக் கலக்கவும். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து, பூரி மாவு பதத்துக்குப் பிசையவும்.  மாவை நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி சிறிய பூரிகளாகத் திரட்டவும். பூரியின் நடுவில் ஒரு இன்ச் அளவுள்ள இரண்டு கோடுகள் போடவும்.  வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, பூரிகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

சர்வதேச சமையல்

லெபனீஸ் ஃபாலஃபில்

தேவையானவை: வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப், நறுக்கிய வெங்காயம் - கால் கப், நறுக்கிய பூண்டு -  ஒரு டேபிள்ஸ்பூன்,  மிளகு - கால் டீஸ்பூன்,  காய்ந்த மிளகாய் - 4, சீரகம் - ஒரு டீஸ்பூன், பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன், கடலை மாவு - அரை கப்,  நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெள்ளை கொண்டைக்கடலையைக் கழுவி 10 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீர் இல்லாமல் நன்கு வடிகட்டவும். இதனுடன் வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், உப்பு, பேக்கிங் பவுடர், கொத்தமல்லித்தழை சேர்த்து மிக்ஸியில் தண்ணீர்விடாமல் கெட்டியாக வடை மாவு போல அரைத்து எடுக்கவும். பிறகு, கடலை மாவு சேர்த்து நன்கு பிசையவும். மாவு தளர்வாக இருந்தால் மேலும் சிறிதளவு கடலை மாவு சேர்க்கவும். மாவை நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை உருண்டைகளாக்கிப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.  தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.

சர்வதேச சமையல்

மிடில் ஈஸ்டர்ன் ஹம்ஸ்

தேவையானவை: வெள்ளை கொண்டைக்கடலை - அரை கப், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், பூண்டு - 4 பல், இத்தாலியன் சீஸனிங் - அரை டீஸ்பூன், ஆலிவ் ஆயில் அல்லது வாசனையில்லாத ஆயில் - கால் கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெள்ளை கொண்டைக்கடலையை நன்கு கழுவி 10 மணி நேரம் ஊறவைக்கவும்.  பின்பு தண்ணீரில்லாமல் நன்கு வடிகட்டவும்.  இதனுடன் மீதமுள்ள பொருள்களைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர்விட்டு சட்னி பதத்துக்கு அரைத்து எடுக்கவும். அதன் மேலே இத்தாலியன் சீஸனிங் தூவி சிப்ஸ், பிஸ்கட் உடன் பரிமாறவும்.

சர்வதேச சமையல்

வியட்நாம் டோஃபு

தேவையானவை: டோஃபு (சோயா பனீர்) அல்லது பனீர் - 200 கிராம்,  தக்காளிச் சாறு - கால் கப், நறுக்கிய பூண்டு - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்,  மிளகாய்த்தூள், உப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: டோஃபு அல்லது பனீரை ஒரு இஞ்ச் துண்டுகளாக்கவும். எண்ணெயைக் காயவிட்டு, பனீர் துண்டுகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் தக்காளிச் சாறு, மிளகாய்த்தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும். பிறகு, சோயா சாஸ் சேர்த்துச் சிறிதுநேரம் கொதிக்கவிடவும். இறுதியாக, பொரித்த பனீர் துண்டுகளைச் சேர்த்து, கெட்டியாகும்வரை புரட்டி எடுக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

சர்வதேச சமையல்

தாய் ஐஸ்டு காபி

தேவையானவை: காபி டிகாக்‌ஷன் - அரை கப், ஃப்ரெஷ் க்ரீம், கண்டன்ஸ்டு மில்க், காய்ச்சிய பால் - தலா கால் கப், ஏலக்காய் - ஒன்று,  ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு.

செய்முறை: காபி டிகாக்‌ஷனுடன் கண்டன்ஸ்டு மில்க், தட்டிய ஏலக்காய், பால்  சேர்த்து ஒரு கொதி வரும் வரை கலக்கி இறக்கவும். ஆறிய பிறகு ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும். உயரமான கண்ணாடி டம்ளரில் முதலில் 4 ஐஸ்கட்டிகள் போட்டு, மேலே முக்கால் பாகத்துக்கு காபி கலவையை ஊற்றவும். அதன் மேலே ஃப்ரெஷ் க்ரீம் சிறிதளவு ஊற்றிப் பரிமாறவும்.

சர்வதேச சமையல்

ஆஸ்திரேலியன் கிறிஸ்துமஸ் பிரெட்

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ்கள் - 4,  வெண்ணெய்,  கலர் சுகர் பால்ஸ் -  தலா  2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பிரெட்டின் ஒரு பக்கத்தில் வெண்ணெயைத் தடவவும். உடனே வெண்ணெயின்மீது கலர் சுகர் பால்ஸ் தூவி முக்கோண வடிவில் வெட்டி பரிமாறவும்.

சர்வதேச சமையல்

குக்கும்பர் கோல்டு சூப்

தேவையானவை:  வெள்ளரிக்காய் - ஒன்று (தோல் சீவி துருவவும்),  தயிர், தண்ணீர் - தலா ஒரு கப், பூண்டு - 2 பல் (துருவவும்), புதினா இலைகள் - 10  (பொடியாக நறுக்கவும்),  எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தயிருடன் தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.  அதனுடன்  வெள்ளரிக்காய், புதினா, பூண்டு, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைத்து எடுத்துப் பரிமாறவும்.

சர்வதேச சமையல்

பிரான்ஸ் யோகர்ட் பெர்பெய்ட்

தேவையானவை: தயிர் - அரை கப், சர்க்கரை, தேன் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய பழங்கள் - கால் கப் (மாம்பழம், வாழைப்பழம், பப்பாளி),  துருவிய பாதாம் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: தயிருடன் தேன், சர்க்கரை சேர்த்துக் கலந்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைக்கவும். உயரமான கண்ணாடி டம்ளரில் முதலில் சிறிதளவு தயிர் கலவையை ஊற்றவும். ஏதாவது ஒரு பழத்தின் துண்டுகளை 2 டேபிள்ஸ்பூன் போட்டு அதன்மீது மீண்டும் சிறிதளவு தயிர் கலவையை ஊற்றவும். அதன்மீது இரண்டாவது பழத்துண்டுகளை 2 டேபிள் ஸ்பூன் அளவு போடவும். பிறகு மீண்டும் சிறிதளவு தயிர் கலவையை ஊற்றவும். பின்னர் மூன்றாவது பழத்துண்டுகளை 2 டேபிள்ஸ்பூன் அளவு போடவும். மேலே மீண்டும் சிறிதளவு தயிர் கலவையை ஊற்றவும். இறுதியாக பாதாம் துருவல் தூவி உடனடியாகப் பரிமாறவும்.

குறிப்பு: பழங்களைத் துண்டுகளாக்கி தனித்தனியாக வைக்கவும்.

சர்வதேச சமையல்

பிரான்ஸ் சோகிய

தேவையானவை: கடலை மாவு - ஒரு கப், தண்ணீர் - தேவையான அளவு, மிளகுத்தூள் -  அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், நறுமணம் இல்லாத எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் (சுடுவதற்கு) - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன்.

செய்முறை: சுடுவதற்கான எண்ணெய் மற்றும் கொத்தமல்லித்தழை தவிர மற்ற பொருள்களை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கட்டியில்லாமல், சற்று கெட்டியாகக் கலந்து 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். தோசைக்கல்லைச் சூடாக்கி, கடலை மாவு கலவையை ஊத்தப்பம் போல ஊற்றவும். இதன்மீது கொத்தமல்லித்தழை தூவி, சுற்றிலும் எண்ணெய்விட்டு, அடுப்பை மிதமான தீயில்வைத்து, இருபுறமும் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுக்கவும். பிறகு, சிறிய துண்டுகளாக்கிப் பரிமாறவும்.

குறிப்பு: `பிரான்ஸ் சோகிய’வை நார்த் ஆப்பிரிக்கன் ஹரிஸ்ஸா (செய்முறை வேறு பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது) தொட்டுச் சாப்பிடலாம்.

சர்வதேச சமையல்

கத்தார் கரக் டீ

தேவையானவை: தண்ணீர் - 2 கப், டீத்தூள் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,  கண்டன்ஸ்டு மில்க் - கால் கப், சர்க்கரை - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: தண்ணீருடன் டீத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டவும். இதனுடன் கண்டன்ஸ்டு மில்க், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி மீண்டும் கொதிக்க வைத்து இறக்கிப் பருகவும்.

சர்வதேச சமையல்

மியான்மர் மோட் லெட் ஸுங் 

தேவையானவை:  ஜவ்வரிசி - அரை கப், தண்ணீர் - 2 கப், தேங்காய்ப்பால், துருவிய கருப்பட்டி - தலா ஒரு கப், ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு.

செய்முறை: ஜவ்வரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, அலசி 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு குழைவாக வேகவைக்கவும். ஆறியபின் ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும்.  கருப்பட்டியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து ஒரு கொதிவிட்டு கரைத்து வடிகட்டவும். உயரமான டம்ளரில் முதலில் ஜவ்வரிசி கலவை 2 டேபிள்ஸ்பூன் போடவும். அதன் மேலே கருப்பட்டி கரைசல் 2 டேபிள்ஸ்பூன் ஊற்றவும்.  இதன் மேலே தேங்காய்ப்பால் கால் கப் ஊற்றவும். இறுதியாக மேலே 2 அல்லது 3 ஐஸ்கட்டிகள் சேர்த்து உடனடியாகப் பரிமாறவும்.

சர்வதேச சமையல்

பெர்சியன் தால் அடஸ்

தேவையானவை: மைசூர்ப் பருப்பு - அரை கப்,  வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கவும்), உருளைக்கிழங்கு – ஒன்று (தோல் சீவி பொடியாக நறுக்கவும்), தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்), மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் -  ஒரு டேபிள்ஸ்பூன், புளிக்கரைசல் - 2 டேபிள்ஸ்பூன்,  நெய் அல்லது வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:  குக்கரில் நெய் அல்லது வெண்ணெய்  விட்டு உருக்கி வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். அத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து, சில நிமிடங்கள் வதக்கவும். பிறகு உருளைக்கிழங்கு, மைசூர்ப் பருப்பு, உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 2 விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து புளிக்கரைசல் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும். 

இதைச் சாதம், ரொட்டி, சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ளலாம்.

சர்வதேச சமையல்

உக்ரைன் ஒகோனியக்

தேவையானவை: பெரிய சைஸ் கத்திரிக்காய் - 2, எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, பூண்டு - 2 பல், எண்ணெய் – தேவையான அளவு, உப்பு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: கத்திரிக்காயைக் கழுவி ஒரு இஞ்ச் துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு கத்திரிக்காய் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். பச்சை மிளகாயுடன் பூண்டு சேர்த்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து எடுக்கவும். அரைத்த விழுதுடன், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துக் கலக்கவும். பொரித்த கத்திரிக்காயுடன் எலுமிச்சைச் சாறு கலவை சேர்த்து நன்கு கலக்கிப் பரிமாறவும்.

சர்வதேச சமையல்

ஆப்கானிஸ்தான் சர்பத் ராயின்

தேவையானவை: சப்ஜா விதைகள் - ஒரு டீஸ்பூன், வெது வெதுப்பான நீர் - அரை கப்,   சர்க்கரை - கால் கப், குளிர்ந்த நீர் - 2 கப், ரோஸ் எசன்ஸ் அல்லது ரோஸ் மில்க் எசன்ஸ் - அரை டீஸ்பூன், ஐஸ்கட்டிகள் – தேவையான அளவு.

செய்முறை:  சப்ஜா விதைகளைக் கழுவி, வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். குளிர்ந்த நீருடன் சர்க்கரை, ரோஸ் எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் ஊறிய சப்ஜா விதைகளைச் சேர்த்துக் கலக்கவும். பிறகு, உயரமான கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி, மேலே ஐஸ்கட்டிகள் சேர்த்துப் பரிமாறவும்.   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு