Published:Updated:

புஷ்பாக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கறேன்!

புஷ்பாக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கறேன்!
பிரீமியம் ஸ்டோரி
புஷ்பாக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கறேன்!

பாசமலர்கள்ஆர்.வி., படங்கள்: சொ.பாலசுப்ரமணியம்

புஷ்பாக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கறேன்!

பாசமலர்கள்ஆர்.வி., படங்கள்: சொ.பாலசுப்ரமணியம்

Published:Updated:
புஷ்பாக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கறேன்!
பிரீமியம் ஸ்டோரி
புஷ்பாக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கறேன்!

‘`காமெடியன்களோட வேலை சிரிக்க வைக்கிறது மட்டுமில்லை... சிந்திக்கவும் வைக்கணும்னு நான் நம்பறேன்.  சிந்திக்க வைக்கிறது எங்க கடமை. என்.எஸ்.கே, நாகேஷ்னு எல்லாரும் அதைத்தான் பண்ணியிருக்காங்க. எனக்குள்ளேயும் அது இருக்கு. நிறைய படங்கள்ல அதைப் பண்றேன்.

‘ஆபாசமான காமெடி பண்ண வேண்டாம்னுதான் நினைக்கிறேன். ஆனா, காமெடியில ஆபாசம்கிறது `வள்ளித்திருமண' நாடகக் காலத்துலேருந்தே இலைமறை காயா இருந்திருக்கு. அந்த மாதிரி ஒரு நகைச்சுவைங்கிறது ஒருத்தங்களை முகம்சுளிக்க வைக்காம, அதேநேரம் சிரிக்க வைக்கிறதாகவும் இருக்கணும்னு நினைக்கிறேன்.’’

- தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான சூரியின் ஸ்டேட்மென்ட்தான் இது. அவரது அறிக்கையையே அவருக்கான கேள்வியாக அவர் முன்வைத்தோம்.

``இப்படிச் சொல்கிற நீங்க ஒரு படத்தில ‘புஷ்பா புருஷன்'னு ஒரு காமெடி பண்ணீங்க. புஷ்பா என்கிற பெண்ணின் கேரக்டரைக் கொச்சைப்படுத்துவதாக இருந்தது அது. புஷ்பாங்கிற பெயர்கொண்ட எத்தனை பெண்கள் அதனால பாதிக்கப்பட்டாங்க தெரியுமா?''

புஷ்பாக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கறேன்!

‘`அது ஒரு பேருதான். எல்லா கேரக்டர்ஸுமே பேருதான். படத்துக்கு ஒரு கேரக்டருக்கான பேரா மட்டும்தான் நாங்க அதை யோசிச்சோம். அந்த காமெடிக்குப் பின்னால இப்படி ஒரு கோணம் இருக்கும்கிறதையும், `புஷ்பா புருஷன் காமெடி' புஷ்பாக்களின் மனசை இந்தளவுக்குப் புண்படுத்தியிருக்கும் கிறதையும் சத்தியமா நாங்க யோசிச்சுப் பாக்கலை. நெக்ஸ்ட் டைம் இது ஞாபகப்படுத்தும். வருத்தப்பட்டவங்ககிட்டல்லாம்  அண்ணனா, தம்பியா தாழ்மையோட மன்னிப்பு கேட்டுக்கறேன். இன்னொருமுறை இப்படி நடக்காது’’ - இமேஜையும் ஈகோவை யும் மறந்து மனப்பூர்வமான மன்னிப்பு கோருகிறார் சூரி.

சினிமா நடிகர்கள் பலர் தன்னைப் பற்றிப் பேசுகிற அளவுக்கு அவர்களுடைய குடும்பம் பற்றிப் பேசுவதில்லை. குறிப்பாக, மனைவி பற்றி. ‘பத்திரிகையில் போட்டோ வர்றதை என் மனைவி விரும்பமாட்டாங்க’ என்று தட்டிக்கழிக்கிற ஹீரோக்களும் உண்டு.

சூரி கிரேட். அவரின் மனைவியைப் பற்றிக் கேட்டால்... அருவியாகக் கொட்டுகிறது பேச்சு. பேச்சில் மனைவி மீதான அன்பும் வழிந்தோடுவது ஆச்சர்யம்.

‘‘ `வெண்ணிலா கபடி குழு’ படத்துக்கு அப்புறந்தான் கல்யாணப் பேச்சு வந்திச்சு. எங்கம்மா எனக்குப் பொண்ணு பார்க்கணும்னு சொன்னப்பவே, `சொந்தமா இருக்கக் கூடாது, பெரிய வசதியும் இருக்கக் கூடாது, நல்ல குடும்பமா இருக்கணும்... கஷ்டப்படற குடும்பமா இருக்கணும்'னு சொல்லிட்டேன்.

சினிமாக்காரய்ங்களுக்குப் பொண்ணு குடுக்க எத்தனை பேர் இருக்காய்ங்க? எங்கக் குடும்பம் பெருசு. கூட்டுக்குடும்பம். என் அண்ணன், தம்பிங்களுக்கெல்லாம் சொந்தத்துலதான் கல்யாணம் பண்ணி வெச்சிருக்கோம். எனக்கு வேணாம்னுட்டேன். நான் சினிமாவுல இருக்கேன். வெற்றிக்கான அறிகுறி தெரியுது. இது கன்ட்டினியூ பண்ணணும். நான் ஜெயிச்சிட்டேன்னு இன்னிக்கே முடிவு பண்ண முடியாது.  அன்னிக்கு அந்த மேட்ச்சுல வேணா ஜெயிச்சிருக்கலாம்.   நான் 18, 19 வருஷம் கஷ்டப்பட்டிருக்கேன். இன்னிக்குத்தான் கையில காசே பார்க்கறேன். ‘எனக்குக் கல்யாணமே வேண்டாம்... அப்படியே பண்ணி வெக்கிறதா இருந்தா தெரியாத குடும்பத்துல பாருங்க'னு சொல்லிட்டேன்.

புஷ்பாக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கறேன்!

‘எம்புள்ள அசீத் மாதிரி இருப்பான்’, `சாருக்கான் மாதிரி இருப்பான்'னு எங்கம்மா சொல்லும்.

‘வேட்டிக்கட்டிட்டு வந்தா எப்படி இருக்கும் தெரியுமா’ன்னு கேக்கும். காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சுன்னு நெனச்சு நான் கம்முன்னு இருந்துடுவேன். ‘உனக்கு சிவிசிவின்னு ஒரு பொண்ணு பாத்திருக்கேன்’னு சொல்லிச்சு. அம்மா விரும்பின மாதிரியே மகாலட்சுமியைத்தான் கல்யாணம் கட்டிக்கிட்டேன்...’’ - மலர்ந்து சிரிக்கிறார் சூரி. அவரின் மனைவி பெயர் மகாலட்சுமி.

‘`வெண்ணிலா கபடிக்குழு படம் 2009 ஜனவரியில ரிலீசு. அதே வருஷம் செப்டம்பர்ல எனக்கு மேரேஜு. கல்யாணத்துக்கு முந்தியே என் மனைவிகிட்ட என்னைப் பத்தியும் நான் பார்க்குற சினிமா வேலையைப் பத்தியும் சொல்லிட்டேன். ‘இந்தளவுக்கு சொல்றீங்கல்ல... என்னை நல்லா வெச்சுக் காப்பாத்துவீங்க... மாசத்துக்கு வீட்டு வாடகைக்கும் சாப்பாட்டுக்கும் சம்பாதிச்சா போதும். எனக்கு வேற எதுவும் வேண்டாம்னு அந்தப் புள்ளை சொல்லிடுச்சு. ‘ஒரு படம்தான் ஓடியிருக்கு. இது மாதிரி பத்து படங்கள் ஓடி, சம்பாதிச்சுக் கஷ்டப்பட்டவங்களும் இருக்காய்ங்க... என்ன வேணா நடக்கலாம்’னேன்.

‘நீங்க அப்படியெல்லாம் பேச வேணாம். சினிமா இல்லைன்னா ஏதாச்சும் வேலைக்குப் போய் காப்பாத்துவீங்கல்ல... அது போதும்’னு சொல்லிடுச்சு.

தாலி கட்டறதுக்கு முன்னாடியே தன் நகையெல்லாம் கொடுத்துருச்சு. அதை யெல்லாம் அடமானம் வெச்சுத்தான் வீட்டை லீசுக்குப் பிடிச்சேன்.  என் மனைவி என்மேல வெச்ச நம்பிக்கையைவிடவும் பலமடங்கு இன்னிக்கு நல்லாவே இருக்கேன்...’’ - நன்றாக இருப்பதைவிடவும் மனைவியை நன்றாக வைத்திருக்கிற நிறைவு தெரிகிறது அவரது பேச்சில்.

புஷ்பாக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கறேன்!

‘`கல்யாணம் முடிச்சதும் சென்னைக்குக் கூட்டிட்டு வந்துட்டேன். வந்ததும் ரொம்ப சீக்கிரம் சென்னை வாழ்க்கையையும் சினிமா வாழ்க்கையையும் புரிஞ்சுக்கிட்டாங்க. அன்பு காட்டறதுலேருந்து சாப்பாடு வரைக்கும் நான் அம்மாவைத்தான் உதாரணம் காட்டுவேன்.  அதுக்காகவும் ஒருநாள்கூட என் மனைவி கோபப்பட்டதே இல்லை. அதுக்காக எனக்கு மனைவி மேலயோ, குழந்தைகள் மேலயோ பாசமில்லைனு அர்த்தமில்லை. அந்த அன்பும் அக்கறையும் அந்தப் புள்ளைக்கும் வரணும்னு நினைப்பேன். நான் எங்கம்மாகிட்ட எவ்வளவு பாசமா இருக்கேனோ, அதே அளவு என் மனைவி அவங்கம்மாகிட்டயும் பாசமா இருக்கணும்னு நினைப்பேன். அம்மா சென்டிமென்ட் சாங்கு போட்டா அழுதுருவேன்.

என் அம்மாவும் அந்தப் புள்ளையும் நல்லாப் பழகுவாய்ங்க. சின்னச்சின்ன சண்டைகளும் வரும். ஆனாலும், சேர்ந்துப்பாய்ங்க. ஊருக்குப் போனா அம்மாதான் கிச்சனுக்குள்ள நிக்கும்.

ஆறு மருமகள்களையும் உள்ளே விடாது. எத்தனை பேருக்குச் சாப்பாடுன்னாலும் அம்மாதான் சமைக்கும். மருமகள்கள் அத்தனை பேரும் மத்த வேலைகளைப் பகிர்ந்துப்பாய்ங்க. மாமியார் கையால சாப்பிடறதுன்னா அவிங்களுக்கும் அவ்வளவு குஷி. என்னிக்காவது அம்மாவுக்கு முடியலைன்னாதான் பிரச்னையே...’’ - மாமியாரின் புகழ் கேட்கும்போது மருமகளுக்கு முகம் மலருமா?

மகாலட்சுமிக்கு மலர்கிறது. அதை ரசித்த படியே தொடர்கிறார் சூரி.

‘`நாங்க அண்ணந்தம்பிக ஆறு பேரு. உலகத்துல என் குழந்தைகளைவிட, மனைவியை விடவும் என் அம்மாதான் எனக்கு முக்கியம். எங்க ஆறு பேருக்குமே அப்படித்தான். அம்மா இல்லைன்னா நாங்க இல்லை. அப்படிக் கஷ்டப்பட்டு எங்களைக் காப்பாத்திச்சு. கூட்டுக்குடும்பம்தான். அம்மாவைப் போலவே அண்ணந்தம்பிகளையும் நான் விட்டுக் குடுக்கவே மாட்டேன். அத்தனை பேருக்கும் கல்யாணமாயிருச்சு. இப்ப வரைக்கும் நான் ஒரு படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்கறேன்னுகூட என் மனைவிக்குத் தெரியாது. நானும் சொன்னது கிடையாது.  என் அண்ணந்தம்பிகளுக்கு யாருக்கு என்ன நல்லது, கெட்டதுன்னாலும் பணம் தேவைன்னா நான் குடுப்பேன்.  உரிமையா கேட்டு வாங்கிப்பாங்க.  ‘அவிங்க வருவாங்க. நீ செக்குல கையெழுத்துப் போட்டுக் குடுத்துரு’னு என் மனைவிகிட்ட போன் பண்ணிச் சொல்லிடுவேன். ஏன்னு கேட்காமச் செய்வாங்க. ஏன் அவங்களுக்குக் கொடுக்கறீங்கனு ஒரு வார்த்தை கேட்டதில்லை. இந்த ஒரு விஷயம் போதும் அந்தப் புள்ளையைக் காதலிக்கிறதுக்கு...’’

சிரிக்க வைத்தே பழகியவர் முதன்முறையாக சென்டிமென்ட்டில் கரைகிறார். மகாவின் மனதிலும் மக்கள் மனதிலும் நிறைகிறார்.