Published:Updated:

“ரியல் கரகாட்டக்காரங்களையே மிஞ்சிட்டோம்!” - கோவை சரளா லகலக

“ரியல் கரகாட்டக்காரங்களையே மிஞ்சிட்டோம்!” - கோவை சரளா லகலக
பிரீமியம் ஸ்டோரி
“ரியல் கரகாட்டக்காரங்களையே மிஞ்சிட்டோம்!” - கோவை சரளா லகலக

கலகல கலக்கல் நாயகிகு.ஆனந்தராஜ், படம்: ரா.வருண் பிரசாத், படங்கள் உதவி: ஞானம்

“ரியல் கரகாட்டக்காரங்களையே மிஞ்சிட்டோம்!” - கோவை சரளா லகலக

கலகல கலக்கல் நாயகிகு.ஆனந்தராஜ், படம்: ரா.வருண் பிரசாத், படங்கள் உதவி: ஞானம்

Published:Updated:
“ரியல் கரகாட்டக்காரங்களையே மிஞ்சிட்டோம்!” - கோவை சரளா லகலக
பிரீமியம் ஸ்டோரி
“ரியல் கரகாட்டக்காரங்களையே மிஞ்சிட்டோம்!” - கோவை சரளா லகலக

‘காஞ்சனா 3’ ஷூட்டிங் இடைவேளையில் கேரவனில் இருந்தபடியே பேசத்தொடங்குகிறார் கோவை சரளா. ``ஷாட் ரெடினு கூப்பிடுறதுக்குள்ள பேட்டியை முடிச்சுடலாம்ல?’’ என்று கேட்டவாறே தண்ணீர் குடித்துக்கொள்கிறார். தமிழ் சினிமாவில் மனோரமாவுக்கு அடுத்தபடியாக நகைச்சுவையில் தனக்கென ஓர் இடம் ஏற்படுத்திக்கொண்ட சீனியர் நடிகை. கொஞ்சம் சினிமா, கொஞ்சம் பர்சனல் என ரிலாக்ஸ்டாகப் பேசினார்...

“ரியல் கரகாட்டக்காரங்களையே மிஞ்சிட்டோம்!” - கோவை சரளா லகலக

அஞ்சு வயசுலேயே சினிமா ஆசை!

“கோயம்புத்தூர்ல பிறந்து வளர்ந்த எனக்கு, அஞ்சு வயசுலயே சினிமாவுல நடிக்கணும்னு ஆசை வந்துடுச்சுனு சொன்னா நம்புவீங்களா? ஊர்க்காரவங்க மூலமா ஒன்பது வயசுல ‘வெள்ளி ரதம்’ படத்திலும், அடுத்து ‘பருவத்து வாசலிலே’ படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. பன்னிரண்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திட்டு, மேடை நாடகங்கள்ல நடிச்சிட்டிருந்தேன்.

குடும்ப நண்பரான பாக்யராஜ் சார் என் சினிமா ஆர்வத்தைத் தெரிஞ்சுகிட்டு, ‘முந்தானை முடிச்சு’ படத்தில் ஒரு சின்ன ரோல் கொடுத்தார். ‘உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு, சென்னைக்குக் கிளம்பிவந்து வாய்ப்புத்தேடு’னு சொன்னார்.

1984-ம் வருஷம் அப்பாவும் நானும் சென்னைக்கு வந்து ஆழ்வார்பேட்டையில 300 ரூபாய் வாடகைக்கு வீடு பிடிச்சோம். ‘ஆத்தோர ஆத்தா’, ‘ஜப்பானில் கல்யாணராமன்’, ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘உதயகீதம்’னு அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள் கிடைத்தன.

“ரியல் கரகாட்டக்காரங்களையே மிஞ்சிட்டோம்!” - கோவை சரளா லகலக

18 வயதில் 65 வயது வேஷம்!

ஒருநாள் பாக்யராஜ் சார் கூப்பிட்டு, ‘என்னோட அடுத்த படத்துல நீதான் எனக்கு அம்மா கேரக்டர்ல நடிக்கிற’னு சொன்னார். அப்போ எனக்கு 18 வயசு. ‘அய்யய்யோ... எனக்கு அம்மா கேரக்டர் வேண்டாம்’னு அடம் பிடிக்க, என்னைச் சமாதானப்படுத்திச் சம்மதிக்க வெச்சார். அப்படி ‘சின்னவீடு’ படத்துல அவருக்கு அம்மாவா 65 வயசுப் பெண்மணியா நடிச்சதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களிலும் எனக்கு வயசான கேரக்டர்களே கிடைத்தன. நான் உண்மையில் 60 வயதுப் பெண்மணினு வர்ற பத்திரிகைச் செய்திகளையெல்லாம் பார்த்துச் சிரிச்சுட்டு விட்டுடுவேன்.

“ரியல் கரகாட்டக்காரங்களையே மிஞ்சிட்டோம்!” - கோவை சரளா லகலக

கவுண்டமணி - செந்தில் - சரளா கூட்டணி!

ஒருவழியா அம்மா கேரக்டர்களில் இருந்து நான் வெளிவந்த நேரம், பொன்னான வாய்ப்பு உருவாச்சு. கவுண்டமணி - செந்தில் கூட்டணியுடன் நானும் இணைய, எங்க மூவர் கூட்டணியில் வெளியான படங்கள் ஹிட் ஆகி, தமிழ்நாடே எங்களைக் கொண்டாடுடிச்சு.

அப்போவெல்லாம் மேக்கப் போடுறது, ரெஸ்ட் எடுக்கிறது எல்லாம் மரத்தடியிலதான். அதனால எல்லோரும் ஒரே இடத்தில் உட்கார்ந்து நிறைய பேசிச் சிரிச்சுக்குவோம். ‘கரகாட்டக்காரன்’ படத்தில் ‘மாங்குயிலே’ பாடல் ஷூட்டிங் நேரத்தில், நான் என் கன்னத்தில் ரோஸ் கலர் ஜிகினாவைப் பூசிக்கிட்டேன். அதைப் பார்த்துட்டு, ‘நல்லாயிருக்கே’னு ராமராஜன் சார் உட்பட பலரும் எங்கிட்ட ஜிகினாவை வாங்கிப் பூசிக்கிட்டாங்க. ரியல் கரகாட்டங்காரங்களையே மிஞ்சுற அளவுக்கு அந்தப் பாட்டும் எங்க மேக்கப்பும் செம ஹிட்.

“ரியல் கரகாட்டக்காரங்களையே மிஞ்சிட்டோம்!” - கோவை சரளா லகலக

`சதி லீலாவதி’ - மைல்கல் வாய்ப்பு!

அப்பெல்லாம் ஒரு நாளைக்கு ஏழு படங்கள்னு பரபரப்பா நடிச்சிட்டிருந்தேன். அதில் நிறைய படங்கள் வெள்ளிவிழா காணும். சினிமா துறையில் எல்லா தரப்பினரும் மகிழ்ச்சியில் இருந்த ஆரோக்கியமான காலமும் அதுதான். ஆனா, ‘சரளா நடிச்சா அந்தப் படத்தில் நாங்க நடிக்க மாட்டோம்’னு சில ஆர்ட்டிஸ்ட்கள் சொல்லிட்டதால, 90-களில் என் வாய்ப்புகளெல்லாம் குறைஞ்சுப் போச்சு. ‘நாம யாருக்குமே எந்தக் கெடுதலும் நினைச்சதில்லையே, நம்மை ஏன் ஒதுக்க நினைச்சாங்க’னு வருந்தினப்ப, தெலுங்கு திரையுலகில் எனக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. அங்கே நூறு படங்களுக்கும் மேல நடிச்சு பிஸியானேன். பல மொழி சேனல்கள்லயும் நிகழ்ச்சிகள் செய்ய ஆரம்பிச்சேன்.

‘சதி லீலாவதி’ படம், ரிலீஸ் ஆகிறவரைக்கும் நான்தான் அதில் ஹீரோயின்னு நம்பவேயில்லை. கமல் சார் என்மேல நம்பிக்கை வெச்சு, எனக்குக் கொடுத்த மைல்கல் வாய்ப்பை மறக்க முடியாதது.
பத்து வருட தமிழ் சினிமா இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்து, ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, ‘காலம் மாறிப்போச்சு’, ‘விரலுக்கேத்த வீக்கம்’ உள்ளிட்ட பல படங்கள்ல நடிச்சேன். எஸ்.எஸ்.சந்திரன், மணிவண்ணன், வடிவேலு, விவேக்னு என்கூட புதிய காமெடி கூட்டணிகள் அந்த நேரத்தில்தான் அமைந்தன.

“ரியல் கரகாட்டக்காரங்களையே மிஞ்சிட்டோம்!” - கோவை சரளா லகலக

`ஓங்குற கையைப் பிடிக்கவும் அடிக்கவும் செய்றோம்!’

‘விரலுக்கேத்த வீக்கம்’ படத்தில், குடிச்சுட்டு வந்து கொடுமைப்படுத்துற கணவனை மனைவி அடிக்கிற சீன்ல, நான் வடிவேலுவை அடிச்சு துவம்சம் பண்றது பயங்கர ஹிட். அதுவரை தங்களோட குடிகார கணவர்கள்கிட்ட அடிவாங்கி துன்பப்பட்டிருந்த மனைவிகள் பலர் எங்கிட்ட, ‘முன்னாடியெல்லாம் அவரு குடிச்சிட்டு வந்து என்ன சொன்னாலும், அடிச்சாலும் எதிர்த்துப் பேசாம மூக்கைச் சிந்திட்டு இருப்போம்மா. நீங்க அந்தப் படத்துல வடிவேலு சாரை அடிக்கிறதைப் பார்த்தபிறகு நாங்களும் எதிர்த்துப் பேசுறோம்... ரொம்ப ஓவரா போனா ஓங்குற கையைப் பிடிக்கவும் அடிக்கவும் செய்றோம்’னு சொன்னப்போ, ஒரு நகைச்சுவைக் காட்சி, வாழ்க்கையின் துன்பமான சூழலுக்கும் மக்களிடம் எப்படி விளைவுகளை ஏற்படுத்துதுனு நெகிழ்ச்சியா இருந்தது.

“ரியல் கரகாட்டக்காரங்களையே மிஞ்சிட்டோம்!” - கோவை சரளா லகலக

திருமணம் தவிர்த்தது ஏன்?

‘ஏன் திருமணமே செய்துக்கலை? ஏதாச்சும் காதல் தோல்வியா?'னு பலர் கேட்டிருக்காங்க. நான் என் சினிமா கனவுகளைத் துரத்திட்டிருந்ததால, காதல் பற்றிய எண்ணமே அப்போ வரலை. அதுக்கு எனக்கு நேரமும் இல்லாத ஒரு பரபரப்பான வாழ்க்கையை வாழ்ந்துட்டிருந்தேன். தவிர, தனிமையை எனக்குச் சிறந்த துணையா உணர்ந்தேன். பெற்று வளர்த்த குழந்தைகள் இன்னிக்கு வேலைக்காக வெளிநாடு, வெளியூர்னு செட்டிலாகி அம்மா அப்பாவை ஒப்புக்கு போன் பண்ணி விசாரிக்கிறதைப் பார்க்கிறேன். இப்படி சொந்தங்கள் விலகிச் செல்றதையும் பட்டும்படாமல் வாழறதையும் பாா்க்கும்போது, அதுக்கு இந்தத் தனிமையே பெட்டர்னு தோணுது. நான் சந்தோஷமா, அமைதியா இருக்கேன்.

34 வருடங்கள்... 800 படங்கள்!

நடிப்பில் ஆச்சி மனோரமாதான் எனக்கு குரு. நிறைய கஷ்டங்களைத் தாண்டி, திரையுலகில் எனக்குனு ஒரு பெயரை எடுத்திருக்கேன். நான் சினிமாவுக்கு வந்து 34 வருஷங்களாகுது. தென்னிந்திய மொழிகளில் 800 படங்களுக்கும் மேல் நடிச்சிருக்கேன். ‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து ‘காஞ்சனா 3’, ‘இட்லி’, `செம’, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஒரு படம்னு நான் நடிச்ச பல படங்கள் ரிலீஸாகவிருக்கு. நடிகைகள் தங்களை சினிமாவில் தக்கவெச்சுக்கிறது மிகவும் சிரமமாகிவிட்ட திரைச்சூழலில் நான், சந்தானம், சூரினு இன்றைய காமெடி ஸ்டார்களுடனும் தொடர்ந்து நடிச்சுக்கிட்டிருப்பதில் மகிழ்ச்சி. 18 வயசுல அம்மா கேரக்டரில் நடிச்சுட்டு, இப்போ மாடர்ன் டிரெஸ் போட்டு கலக்குற காமெடி சீன்களில் நடிக்கிறதை நினைக்கும்போது சிரிப்புதான் வருது” என்று சரளா சத்தமாகச் சிரிக்க, ‘ஷாட் ரெடி’ எனக் குரல் கேட்டதும் நம்மிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறார் நம் தலைமுறையின் ஆகச்சிறந்த நகைச்சுவை நடிகை!

“ரியல் கரகாட்டக்காரங்களையே மிஞ்சிட்டோம்!” - கோவை சரளா லகலக

காமெடி நடிகர்கள் பற்றி சரளா...

கவுண்டமணி: பிரதர் எப்பவும் கலாய்ச்சுட்டே யிருப்பார். நானும் கவுண்டருக்குப் பதில் கவுன்ட்டர் கொடுப்பேன். நான் ஜீன்ஸ் போட்டா, ‘இன்னும் எத்தனை வயசுக்கு இதைப் போடுவே’னு ஏதோ அவர் 16 வயசுப் பையன் மாதிரி கேட்பார். ‘நீங்க ஜீன்ஸ் போடுறவரைக்கும் நானும் போடுவேன்’னு சொல்வேன்.

செந்தில்: நான் அதிகமா ஜோடி சேர்ந்து நடிச்சது இவர்கூடத்தான். ரொம்ப மென்மையான மனிதர். குழந்தை முகத்துடனே பல குறும்புகள் செய்வார்.

வடிவேலு: எல்லாத் தரப்பு ரசிகர்களையும் கவரும் யுக்தி தெரிஞ்ச டைமிங் காமெடியன், வடிவேலு. இவர்கூட வேலைபார்க்கிறது சுவாரஸ்யமா இருக்கும்.

விவேக்: தன்னோட நகைச்சுவைகளில் மூடநம்பிக்கைகள் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துறவர்... நேர்லயும் அதைப் பற்றியே அதிக விஷயங்கள் பேசுவார்.

மணிவண்ணன்: நல்ல மனிதர். ஜாலியாவும் இருப்பார். அமைதியாவும் இருப்பார். பயங்கரமா கிண்டல் பண்ணுவார்.

எஸ்.எஸ்.சந்திரன்: காமெடி கேரக்டரில் நடிக்கிறதுக்கான பாடி லேங்குவேஜ் உள்பட எனக்குப் பல விஷயங்களைக் கற்றுத்தந்தவர். அன்பான சீனியர்.