Published:Updated:

மனதுக்கு மகிழ்ச்சி... உடலுக்கு ஆரோக்கியம்!

மனதுக்கு மகிழ்ச்சி... உடலுக்கு ஆரோக்கியம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மனதுக்கு மகிழ்ச்சி... உடலுக்கு ஆரோக்கியம்!

மாடித்தோட்ட மகிமை கு.ஆனந்தராஜ், படங்கள்: க.விக்னேஸ்வரன்

“நம்ம வீட்டுத் தோட்டத்தில் விளைந்த ரசாயனம் இல்லாத காய்கறிகளைச் சமைச்சுச் சாப்பிடுறப்ப கிடைக்கும் ருசிக்கும் திருப்திக்கும் பாதுகாப்பு உணர்வுக்கும் இணையே இல்லை’’ எனத் தன் அனுபவத்தை ரசித்துப் பேசுகிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த சரஸ் தங்கம். பலவகை காய்கறிகள் மற்றும் பூக்களுடன் பச்சைப்பசேலென பிரமாண்டமாக விரிந்து கிடக்கிறது அவரின் மாடித்தோட்டம். அதை உருவாக்கியெடுத்திருக்கும் கதையைச் சொல்லும்போது அவர் முகத்தில் உற்சாகம் பெருகுகிறது.

மனதுக்கு மகிழ்ச்சி... உடலுக்கு ஆரோக்கியம்!

“என் பூர்வீகம் கரூர். சின்ன வயசுலயிருந்தே எங்க வீட்டு விவசாய வேலைகளைச் செய்ய ஆரம்பிச்சுட்டேன். பி.எஸ்ஸி முடிச்சதும் முழுநேரமா விவசாய வேலைகளைப் பார்த்தேன். கல்யாணத்துக்குப் பிறகு, பேங்க் மேனேஜரான என் கணவருக்கு அடிக்கடி பணிமாறுதல் ஏற்பட்டதால நாங்க பல மாநிலங்கள்லயும் வசிச்சோம். அதனால, எனக்கும் விவசாயத்துக்கும் நீண்ட இடைவெளி ஏற்பட்டுடுச்சு. 1986-ல் மீண்டும் கரூருக்கே வந்த நிலையில், 1992-ல் என் கணவர் வேலையை ரிசைன் பண்ணிட்டார். ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் முடிச்ச பிறகு, என் கணவர் டிரேடிங் பிசினஸ் செய்ய ஆரம்பிச்சார். நான், பல ஏக்கர்களில் தரிசு நிலங்களை வாங்கி, பல சிரமங்களைத் தாண்டி, அதில் பணப்பயிர்கள், பழ மரங்கள்னு விவசாயம் செய்தேன். அதன் மூலமா 10 சதவிகிதம் வருமானம்தான் கிடைக்கும் என்றாலும், லாபத்துக்காக மட்டுமே அதை நான் செய்யலை. விவசாயக் குடும்பங்களின் அடுத்த தலைமுறை பிள்ளைகளெல்லாம் அதைக் கைவிட்டு வேற வேற வேலைகளுக்கும் ஊர்களுக்கும் போயிட்டதால, நம்ம பாரம்பர்யமான விவசாயத்தை நம்மால் முடிஞ்சளவு செய்வோம்னு எனக்கு ஒரு வைராக்கியம். கூடவே வார்த்தைகளில் சொல்லமுடியாத மன அமைதியையும் மகிழ்ச்சியையும் விவசாயம் கொடுத்துச்சு’’ என்பவருக்கு, அந்த சந்தோஷம் நீடிக்கவில்லை. தன் கணவரின் தொழில் காரணமாகக் கோயம்புத்தூருக்கு வசிப்பிடத்தை மாற்ற வேண்டிய சூழ்நிலை. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மனதுக்கு மகிழ்ச்சி... உடலுக்கு ஆரோக்கியம்!

‘`அதனால கரூர்ல இருந்த விவசாய நிலங்களைக் குத்தகைக்கு விட்டுட்டு, கோயம்புத்தூர் வந்துசேர்ந்தோம். ஏக்கர் கணக்குல விவசாயம் பார்த்தவளால, செடி, கொடிகூட இல்லாத வீட்டுல இருக்க முடியுமா? அதனால, வீட்டுக் காம்பவுண்ட்டுக்குள் இருந்த 15 சென்ட் இடத்தில் பழ வகை மரங்களையும், கீரை மற்றும் காய்கறிச் செடிகளையும் வளர்க்க ஆரம்பிச்சேன். அவற்றின் விளைச்சலையெல்லாம் ருசிச்சப்போ, என் பச்சை ஆசை இன்னும் அதிகமாச்சு. தொடர்ந்து நிறைய தாவரங்களை வளர்க்க ஆசைப்பட்டாலும், அதுக்கு இடப்பற்றாக்குறை தடையா இருந்துச்சு. அந்த 2014-ம் வருஷம், மாடித்தோட்டம் பற்றிய பேச்சும் விழிப்பு உணர்வும் அதிகமாக ஆரம்பிச்சது. இயற்கை விவசாய ஆர்வமுள்ளவர்களின் ‘ஆல் இண்டியா கார்டனிங் சொசைட்டி’ அமைப்பில் உறுப்பினராகி, மாடித்தோட்டம் அமைக்கும் முறைகளைக் கத்துகிட்டேன்’’ என்பவர், தன் வீட்டு மொட்டைமாடியைக் காய்கள் காய்த்துக் குலுங்கும் தோட்டமாக்கிய தன் ஆர்வத்தையும் உழைப்பையும்  பகிர்ந்தார்...

மனதுக்கு மகிழ்ச்சி... உடலுக்கு ஆரோக்கியம்!
மனதுக்கு மகிழ்ச்சி... உடலுக்கு ஆரோக்கியம்!

``இந்த மொட்டைமாடியின் பரப்பளவு மூவாயிரம் சதுர அடி. அதில் பாதியளவுக்கு மட்டும் சோதனை முறையில் 250 பைகளில் மாடித்தோட்டம் அமைச்சேன். பல வகைக் கீரைகள், காய்கறிகள், மூலிகைச் செடிகளை வளர்க்க ஆரம்பிச்சேன். நான் எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பான விளைச்சல் கிடைச்சது. என் தொடர்ச்சியான கவனிப்பால எவ்வித நோய்த்தாக்குதலும் இல்லாமல் எல்லா செடிகளும் செழிப்பாக வளரவே, அடுத்த ஒரு வருடத்துக்குள் மாடியில் மீதமிருந்த 1,500 சதுர அடியிலும் தோட்டத்தை விரிவுபடுத்தினேன். ஆரம்பத்தில் செடிகள் வளர்க்கப் பயன்படுத்தின பைகளை மாத்திட்டு, பிளாஸ்டிக் டிரம்களில் செடிகளை வளர்க்க ஆரம்பிச்சேன். இப்போ 750 டிரம்களில், பல வகை செடி மற்றும் கொடி வகை காய்கறிகள், கீரைகள், பூச்செடிகள், மூலிகைச் செடிகள்னு எங்க மாடித்தோட்டமே சோலையா ஆகிடுச்சு. குறிப்பாக, கேரட், பீட்ரூட், முள்ளங்கி, முட்டைகோஸ், காலிஃப்ளவர் உள்ளிட்ட மலைப்பகுதி காய்கறிகளும் நல்ல விளைச்சலைக் கொடுக்குது. எங்க காம்பவுண்ட்டுக்குள் மா, கொய்யா, சப்போட்டா, மாதுளை, வாட்டர் ஆப்பிள், சீதாப்பழம், எலுமிச்சை, முருங்கை, மலைவேம்புனு ஐம்பதுக்கும் மேற்பட்ட மரங்களிலும் விளைச்சல் அமோகம்தான்’’ என்பவர், தன் மாடித்தோட்டக் காய்கறிகளின் நாட்டு விதைகளைச் சேகரித்து, மற்றவர்களுக்கும் கொடுத்து மாடித்தோட்டம் அமைக்க ஊக்கப்படுத்துவதுடன் ஆலோசனையும் பயிற்சியும் வழங்குகிறார்.

மனதுக்கு மகிழ்ச்சி... உடலுக்கு ஆரோக்கியம்!

“நான், என் கணவர், மூத்த பொண்ணு, மாப்பிள்ளை, ரெண்டு பேரக் குழந்தைகள் மற்றும் மூணு வேலையாட்கள்னு எங்க வீட்டுல மொத்தம் ஒன்பது பேர் வசிக்கிறோம். காம்பவுண்டுக்குள் எங்க நிறுவன ஊழியர்கள் ஆறு பேர் குடும்பத்துடன் வசிக்கிறாங்க. எங்க எட்டுக் குடும்பத்துச் சமையலுக்கும் 80 சதவிகிதக் காய்கறிகளை எங்க மாடித்தோட்டம்தான் தருது. மாடித்தோட்டம் அமைக்க, இதுவரை 40 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகத்தான் செலவு செய்திருப்பேன். ஆனா, அதைவிட பல மடங்கு அதிகமா விளைச்சல் எடுத்திருக்கேன். இது தொடரும். தண்ணீரை டிரிப் மூலமா விடுறதால அதுவும் அதிகம் செலவாகிறதில்லை. தினமும் ஒன்றரை மணி நேரம் இந்த வேலைகளைச் செய்றேன்.

தோட்ட வேலைகள், நமக்கு உடற்பயிற்சியா அமையும். நம் வீட்டில் நம் உழைப்பில் காய்க்கிற காய்களைப் பார்க்கும்போது, அது தியானத்துக்கு இணையான புத்துணர்வையும் சந்தோஷத்தையும் தரும். காய்கறிக்குச் செலவு செய்கிற பணம் மிச்சமாகும். எல்லாத்துக்கும் மேல, ரசாயன விஷமில்லாத காய்கறிகள் நம்ம குடும்பத்துக்குக் கிடைக்குது என்பதும், நம்ம குழந்தைங்களை ரசாயன பாதிப்பு நோய்கள்ல இருந்து காக்கிறோம் என்பதும் எவ்வளவு பெரிய சந்தோஷம், நிம்மதி. இடவசதி இருப்பவர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு மாடித்தோட்டம் அமைச்சுப் பயன்பெறணும்” என மாடித்தோட்டக் காய்களைப் பறித்துக் கையில் வைத்தபடி சொல்லும் சரஸ் தங்கத்தின் முகம் புன்னகையில் மலர்கிறது!

15 நாள்களுக்கு ஒருமுறை இயற்கை உரக்கரைசல்!

“ஒரு டிரம்மில் மாட்டுச் சாணத்துடன் கோமியம், தேய்ங்காய்ப் பிண்ணாக்கு, கடலைப் பிண்ணாக்கு, தண்ணீர் சேர்த்து கலக்கி வெச்சுடுவேன். இக்கரைசலை 15 நாள்களுக்கு ஒருமுறை செடிகள் வெச்சிருக்கிற டிரம்களுக்கு, ஒரு டிரம்முக்கு ஒரு லிட்டர் விகிதம் விடுவேன். வீட்டுச் சமையலறைக் கழிவுகளோடு, ஹோட்டல்காரங்ககிட்ட கேட்டு தினமும் 100 முட்டை ஓடு, நான் வளர்க்கிற 30 நாட்டுக்கோழிகளின் கழிவுகளையும் கலந்து சேகரிப்பேன். இக்கலவையை, காய்ப்பு முடிஞ்ச செடியை நீக்கிட்டுப் புதுசா அடுத்த செடியை நடவு செய்றப்போ, அந்த மண்ணுடன் சேர்த்துடுவேன். இதனால், வளர்ச்சியும் விளைச்சலும் அமோகமா இருக்கு. கத்திரிக்காய், அவரைக்காய் செடிகளில் காய்ப்பு நேரத்தில் அதன் இலைகளில் அசுவினி மற்றும் இதரப் பூச்சித் தாக்குதல்கள் வரும். அப்போ அந்த இலைகளைத் தண்ணீரில் அலசிட்டு, அதன்மீது சாம்பலைத் தூவிடுவேன்... சரியாகிடும்’’ என்கிறார் சரஸ் தங்கம்.