Published:Updated:

கலைக் கனவுகள் கனியட்டும்!

கலைக் கனவுகள் கனியட்டும்!
பிரீமியம் ஸ்டோரி
News
கலைக் கனவுகள் கனியட்டும்!

வாய்ப்புகள் ஆயிரம் வெ.வித்யா காயத்ரி, படங்கள்: ப.பிரியங்கா

டனம், இசை, தியேட்டர் ப்ளே… நம்மில் பலருக்கும் இவற்றில் ஏதோவொன்று பிடிக்கும். அந்த ஆர்வத்தில் இவற்றை சர்டிஃபிகேட் கோர்ஸ்களாகப் படித்தவர்கள் உண்டு. ஆனால், இந்த மூன்று கலைகளும் ஒன்றிணைந்த பாடப்பிரிவுகளைக்கொண்டு அதை பி.ஏ நாட்டியா, எம்.ஏ நாட்டியா என ரெகுலர் டிகிரிகளாக வழங்குகிறது சென்னை, டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரி. இது இந்தத் துறைகளில் ஆர்வமுள்ள பெண்களுக்குத் தித்திப்புச் செய்தி.

``பி.ஏ-வில் சேரும் மாணவிகள், எம்.ஏ முடித்து விட்டுதான் வெளியேறுவார்கள். அந்தளவுக்கு இதன் பாடத்திட்டங்கள் சுவாரஸ்யமாக வடிவமைக்கப்பட்டுள்ளன’’ என்கிறார்கள் இந்தக் கல்லூரியின் ‘நாட்டியா’ துறையின் பேராசிரியர்கள். இந்த விஜயதசமியில் இந்தக் கலைகளில் ஆறு மாத சர்டிஃபிகேட் கோர்ஸையும் தொடங்கியிருப்பதைப் பற்றிக் குறிப்பிட்டு, தொடர்ந்து பேசினார்கள் பேராசிரியர்கள்.

``எங்கள் துறையில் இப்போது 35 மாணவர்கள் படிக்கிறார்கள். இதில் நடனப் பாடப்பிரிவில் பரதம், குச்சிப்பிடி, தப்பாட்டம் முதல் மோகினி ஆட்டம் வரையிலும் இசை பாடப்பிரிவில் வயலின் உள்ளிட்ட கலைகளும் திருப்பாவை, திருவெம்பாவை முதல் பாகவதம் வரையிலான பாடல்களும், `தியேட்டர் ப்ளே' பாடப் பிரிவில் ஸ்கிரிப்ட் முதல் தெருக்கூத்து வரையிலும் பிராக்டிகல் மற்றும் தியரி வகுப்புகள் கற்பிக்கப்படுகின்றன. ஒவ்வொரு கலைக்கும் துறை சார்ந்த நிபுணர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். கலை வல்லுநர்களை அழைத்துவந்து செமினார்களும் நடத்துகிறோம்.

கலைக் கனவுகள் கனியட்டும்!

14 வயது முதல் வயது உச்சவரம்பின்றி, இந்தப் பாடப்பிரிவுக்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். அதனால், குடும்ப நிர்வாகிகள், மூத்த பெண்மணிகள் என அனைவருக்கும் வார்ம் வெல்கம்.
சர்டிஃபிகேட் கோர்ஸ்களைப் பொறுத்தவரை அவை வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாள்களில் மாலை நேரத்தில் நடைபெறுகின்றன. அதற்கும் வயது வரம்பில்லை. எங்கள் துறையில் பயிலும் மாணவிகளுக்கு சபா, கோயில் கச்சேரிகள், அரசாங்க விழாக்களில் பாடுவது மற்றும் கலை ஆசிரியர் பணிகள் என வாய்ப்புகள் விரிந்துள்ளன. படிக்கும் போதே எங்கள் துறை மாணவர்கள் வெளியில் பார்ட் டைமாக கலை சார்ந்த வேலைகள் பார்ப்பதற்கும் ஏற்பாடு செய்து தருகிறோம்’’ என்கிறார்கள் பேராசிரியர்கள்.

‘நாட்டியா’ துறை மாணவிகளிடம் பேசியபோது, தாங்கள் விரும்பும் கலை ஒன்றையே பட்டப்படிப்பாகப் படித்துக் கொண்டிருக்கும் களிப்பை அவர்களின் வார்த்தைகளில் உணரமுடிந்தது. எம்.ஏ நாட்டியா முதலாமாண்டு மாணவி ஸ்வர்ணா, ‘`எனக்குப் பரதம் மிகவும் பிடிக்கும் என்பதால் இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்தேன். ‘ஷ்ரவண்’ நவரச பாட்டுக் குழுவில் இப்போது இணைந்திருக்கிறேன். தூர்தர்ஷனில் நான் பி கிரேடு ஆர்ட்டிஸ்ட் என்பதால் அந்தச் சேனலில் கலை நிகழ்ச்சிகள் செய்யும் வாய்ப்புகளும் கிடைக்கும். தவிர, வீட்டில் பரத வகுப்புகள் எடுக்கிறேன். படித்துக்கொண்டே மாதம் குறைந்தது ஏழாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன். வருங்காலத்தில் நடனத்தில் பிஹெச்.டி முடிக்க வேண்டும் என்பது என் ஆசை’’ என்றார்.

எம்.ஏ நாட்டியா இறுதியாண்டு மாணவி ஷர்மிளா, ‘`என் தாய்நாடு இலங்கை. அங்கு மேல்நிலை வகுப்புகளில் ஆர்ட்ஸ் குரூப்பில் நடனம் பயின்றேன். `ஐசிசிஆர்’-ல் (Indian Council for Cultural Relation) எனக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. டெல்லியில் உள்ள அந்த அமைப்பு எனக்கு இந்தக் கல்லூரியைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தது. இப்போது ஒரு நடனப்பள்ளியில் ஆசிரியராக இருக்கிறேன். மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன். படிப்பை முடித்தவுடன் எங்கள் நாட்டில் டான்ஸ் ஸ்கூல் ஆரம்பிக்க வேண்டும் என்பதே ஆசை’’ என்கிறார் உற்சாகத்துடன்.

கனவுகள் மெய்ப்பட வாழ்த்துகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz