Published:Updated:

“அம்மாவுக்கும் மனைவிக்கும் தோசை சுட்டுக்கொடுக்கிறேன்” - ‘மகளிர் மட்டும்’ இயக்குநர் பிரம்மா

“அம்மாவுக்கும் மனைவிக்கும் தோசை சுட்டுக்கொடுக்கிறேன்” - ‘மகளிர் மட்டும்’ இயக்குநர் பிரம்மா
பிரீமியம் ஸ்டோரி
News
“அம்மாவுக்கும் மனைவிக்கும் தோசை சுட்டுக்கொடுக்கிறேன்” - ‘மகளிர் மட்டும்’ இயக்குநர் பிரம்மா

நேற்று இல்லாத மாற்றம்கு.ஆனந்தராஜ், படங்கள்: ரா.வருண் பிரசாத்

“  ‘சினிமாக் குடும்பம்’ என்ற பிம்பம் எங்க வீட்டுல யார்கிட்டயும் இருக்காது. அதனால, இது ஸ்டார் வேல்யூ பேட்டியா இருக்குமானு தெரியலை’’ என எளிமையாகவும் யதார்த்தமாகவும் ஆரம்பிக்கிறார் ஐஸ்வர்யா. பெண்களின் உலகத்தைத் திரையில் பேசிய ‘குற்றம் கடிதல்’, ‘மகளிர் மட்டும்’ திரைப்படங்களின் இயக்குநரான பிரம்மாவின் மனைவி. ஓர் இனிய மாலைப்பொழுதில் பிரம்மா குடும்பத்தினருடன் உரையாடிய மகிழ்ச்சித் தருணத்திலிருந்து...

‘`பள்ளிப் பருவத்திலிருந்தே சினிமா ஆர்வம் உண்டு. எம்.பி.ஏ முடிச்சுட்டு, கார்ப்பரேட் கம்பெனிகள், என்.ஜி.ஓ நிறுவனங்கள், சொந்த நிறுவனம், அரசு வேலைன்னு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பணியில் இருந்தேன். இடையிடையே நிறைய நாடகங்கள் இயக்கினதைத்தொடர்ந்து, நண்பர் உதய பிரகாஷுடன் சேர்ந்து ‘ப்ரொசீனியம்’ (Proscenium) என்ற டிராமா கம்பெனியை ஆரம்பிச்சு மேடை மற்றும் வீதி நாடகங்களை நடத்த ஆரம்பிச்சேன். அதன்மூலமா விழிப்பு உணர்வு கருத்துகளை மக்கள்கிட்ட கொண்டுபோய்ச் சேர்க்க முடிஞ்சது.

“அம்மாவுக்கும் மனைவிக்கும் தோசை சுட்டுக்கொடுக்கிறேன்” - ‘மகளிர் மட்டும்’ இயக்குநர் பிரம்மா

என் நாடகங்களை நேரடியா சில நூறு பேர் பார்ப்பாங்க. அதுவே சினிமா என்கிற மீடியமா இருந்தால், இந்தக் கருத்துகள் பல லட்சம் பேரை அடையுமேனு நினைச்சேன். ஆனா, வாய்ப்புகள் சுலபமா கிடைக்கலை. என்னோட நண்பரும் தயாரிப்பாளருமான கிறிஸ்டி சிலுவப்பனுக்கு என் கதை பிடிச்சுப் போக, ஒரு லட்சம் ரூபாய் பட்ஜெட்ல முடிக்கணும் என்ற முடிவோட எடுக்கப்பட்ட படம்தான் ‘குற்றம் கடிதல்’. அப்போ நான் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு இயக்கத்தின் ஜாயின்ட் டைரக்டராக இருந்தேன். அந்த வேலையை ராஜினாமா செய்துட்டு என் நண்பர்கள், தெரிந்தவர்கள்னு என் உலகத்து மனிதர்களையே அந்தப் படத்தில் நடிக்க வெச்சேன்’’ என்று பிரம்மா சொல்ல, நிரந்தர வருமானமில்லாமல்போன அந்தச் சூழலைச் சமாளித்தது பற்றிச் சொல்கிறார் அவர் மனைவி ஐஸ்வர்யா, குழந்தைகள் அகில் பார்த்திபன் மற்றும் ஆதவனை அணைத்தபடி.

‘`என்னைப் பொண்ணு பார்க்கவந்தப்போ ஒரு வேலை, எங்க நிச்சயதார்த்தத்தப்போ ஒரு வேலை, திருமணம் நடந்தப்போ ஒரு வேலைன்னு இவர் எப்பவுமே இப்படித்தான் இருப்பார். கல்யாணத்துக்கு அப்புறம் நான் ரெகுலர்ல எம்.இ., படிச்சுட்டு இருந்ததால பொருளாதாரரீதியா பிரச்னை இருந்துச்சு. ‘நீ படிம்மா, நாங்க பார்த்துக்கிறோம்’னு என் அத்தையும் மாமாவும்தான் பக்கபலமா இருந்தாங்க. அப்போ, சமூக விழிப்பு உணர்வுப் படம் எடுக்கப்போறதா இவர் சொன்னப்போ, ‘சினிமா பத்தியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. ஆனா, உங்க திறமைமேல நம்பிக்கை யிருக்கு’னு அவர் போக்குல அவரை விட்டேன்.

அப்போ இவர் அறிமுக இயக்குநர் என்பதோடு, அது மிகக்குறைந்த பட்ஜெட் படம் என்பதால் அட்வான்ஸ் தொகைகூட கிடைக் கலை. தினசரி வாழ்க்கையே சிரமமாகிருச்சு. அதனால காலையில் சினிமா வேலையை முடிச்சுட்டு வர்றவர், டாக்குமென்டரி படங்கள் எடுக்கிறது, மொழிப்பெயர்ப்பு வேலைகள், வொர்க்‌ஷாப்கள் நடத்துறதுனு நடுராத்திரி வரைக்கும் பல பார்ட் டைம் வேலைகளை மாறி மாறிச் செய்தார். இவற்றிலெல்லாம் என்னோட பங்களிப்பும் இருக்கும். படத்தைச் சீக்கிரமே முடிச்சுட்டாலும் விநியோகஸ்தர் கிடைக்காததால ரிலீஸ் பண்ண முடியலை.  இடைப்பட்ட நாள்களில் தேர்வில் கலந்துகொண்டு மீண்டும் முழுநேர கவர்ன்மென்ட் ரூரல் டெவலப்மென்ட் ஆபீஸர் வேலைக்குப் போக ஆரம்பிச்சார். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கடந்த நிலையில், எங்க ரெண்டாவது பையன் ஆதவன் பிறந்த ஒரு வாரத்தில், ‘படம் விநியோகமாகிருச்சு’னு நல்ல செய்தியோட வந்து நின்னார்’’ என்று சொல்லும்போது ஐஸ்வர்யா பூரிக்க, ‘`ரிலீஸ் தேதி முடிவானதுக்கு அப்புறம்தான் எங்கப்பா, அம்மாகிட்ட நான் ஒரு படம் எடுத்து முடிச்சிருக்கிற விஷயத்தையே சொன்னேன்’’ என்று தன் பெற்றோரைப் பார்த்தபடி சிரிக்கிறார் பிரம்மா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“அம்மாவுக்கும் மனைவிக்கும் தோசை சுட்டுக்கொடுக்கிறேன்” - ‘மகளிர் மட்டும்’ இயக்குநர் பிரம்மா

“ஆனா, படம் ரிலீஸ் ஆகிறதுக்கு முன்னாடியே எனக்கும் படத்துக்கும் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விருதுகள் மற்றும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. படம் ரிலீஸானதும் தற்கால சமூகத்தில் குழந்தைகளுக்குப் பாலியல் கல்வி சொல்லிக்கொடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அழுத்தமாகச் சொன்னதுக்காக நிறைய பாராட்டுகள் கிடைத்தன. மீண்டும் அரசு வேலையை ராஜினாமா செய்துட்டு, முழு நேரமா சினிமாவுக்கு வந்தேன். பணம் சம்பாதிக்கணும்கிறதைத் தாண்டி, சமூகத்தில் பாசிட்டிவான அதிர்வுகளை ஏற்படுத்தும் படமா எடுக்கணும் என்பதுதான் அப்போதும் என் முடிவா இருந்தது” என்பவர், ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்துக்கான கரு, தன் அம்மாவிடமிருந்து கிடைத்தது என்கிறார். 

“நாலு வருஷத்துக்கு முன்னாடி எங்கம்மாவுக்கு ஒரு டேப் வாங்கிக்கொடுத்தேன். அதில், ஐஸ்வர்யா முகநூல் அக்கவுன்ட் ஆரம்பிச்சுக் கொடுத்தாங்க. 36 வருடங்களுக்கு முன் அம்மாவின் வாழ்க்கையிலிருந்து தொலைந்துபோன அவங்களோட உயிர்த் தோழிகளை அதன் மூலமா அவங்களுக்குக் கண்டுபிடிச்சுக் கொடுத்து, அவங்களுக்காக ஒரு சந்திப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தேன். அப்போ அவங்க எல்லோரும் பரிமாறிக்கிட்ட நினைவுகளும் பூரிப்புகளும், ரொம்ப ஸ்பெஷல்னு புரிஞ்சது. அதையே கருவா வெச்சு ஸ்கிரிப்டை எழுதினேன். நம் வீட்டுப் பெண்களின் திரை பிரதிபலிப்பா அமைந்த அந்தக் கதை சூர்யா, ஜோதிகாவுக்குப் பிடிச்சுப் போக... ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா பொன்வண்ணன், ஜோதிகா எல்லோரும் கைகோக்க ‘மகளிர் மட்டும்’ குட் ஹிட். பெண்களுக்கு மரியாதை செய்கிற தரமான படங்களா நான் இயக்கியிருப்பதில் என் அம்மாவுக்கும் மனைவிக்கும் ரொம்ப சந்தோஷம். ஒண்ணு தெரியுமா... அதில் என் மனைவியும் நடிச்சிருக்காங்க’’ என்று ஐஸ்வர்யாவை கைநீட்டிச் சிரிக்கிறார் பிரம்மா.

‘` ‘குற்றம் கடிதல்’ படத்தில், ‘படத்துக்குப் போகணும். அதனால என்னோட க்ளாஸை நீங்க பார்த்துக்கோங்க’னு ராதிகா பிரசித்தாகிட்டச் சொல்லிட்டு போற அந்த டீச்சர், நான்தான். அந்தப் படத்தில் எல்லோருமே புதுமுகங்கள் என்பதால, ‘நீயும் ஒரு சீன் நடி’னு என்னை நடிக்கவெச்சார். ‘சிங் எ சாங்’ பாடலையும் பாடவெச்சார். அதேபோல ‘மகளிர் மட்டும்’ படத்தில் ஃப்ளாஷ்பேக் சீன்ல மூணு தோழிகளும் படம் பார்க்க தியேட்டருக்குப் போனதுக்காக அவங்களை அடிக்கிற அந்த டீச்சர், நான்தான். ஆனா, சினிமா ஆர்வமெல்லாம் எனக்கு இல்லை. ஒன்றரை வருஷம் பேராசிரியையா வேலை பார்த்தேன். இப்போ பிஹெச்.டி பண்ணிக்கிட்டு இருக்கேன்’’ என்ற ஐஸ்வர்யா,  ‘`இவர் படங்களில்தான் பெண்களைக் கொண்டாடுறார். ஆனா, வீட்டு வேலைகளில் எனக்கும் அத்தைக்கும் உதவியே செய்ய மாட்டார். குழந்தைகளையும் என்னையும் மாசத்துல ஒருநாள்கூட அவுட்டிங் கூட்டிட்டுப் போறதில்லை. நான், என் படிப்பையும் பார்த்துக்கிட்டு, குழந்தைகளையும் பார்த்துட்டு, வீட்டையும் பார்த்துக்கிட்டு, சாரையும் பார்த்துக்கணும். குடும்பத்தோட நேரம் செலவழிக்க மாட்டேங்கிறார் என்பதுதான் இவர்மேல எனக்கிருக்கிற ஒரே புகார்’’ என்ற ஐஸ்வர்யா, “எப்படி நேரம் பார்த்து உங்களை மாட்டிவிட்டேன் பார்த்தீங்களா?!” எனக் கணவரின் கரம்பற்றிச் சிரிக்கிறார்.

“தினமும் வேலைமுடிஞ்சு வீட்டுக்கு வர நடுராத்திரி ஆகிடுது. வேலைபளுதான், குடும்பத்துக்கான நேரத்தை என்னைக் கொடுக்கவிடாமச் செய்யுது. என் தவறை உணர்ந்ததாலதான், ‘மகளிர் மட்டும்’ படத்தை எடுத்து முடிச்சதிலிருந்து நேரம் கிடைக்கிறபோதெல்லாம் அம்மாவுக்கும் மனைவிக்கும் தோசை சுட்டுக்கொடுக்கிறேன். இனிமே குடும்பத்துக்குனு நிச்சயமா நேரம் ஒதுக்குவேன்’’ என்று தன் குழந்தைகளை அணைத்துக்கொள்கிறார் பிரம்மா.

ஆம்... எல்லா மாற்றங்களும் வீட்டிலிருந்தே தொடங்கப்பட வேண்டும்.

அம்மா... ஆனந்தக் கண்ணீர்!

பிரம்மாவின் அம்மா பார்வதி, “என் பையன் ஒரு வேலையில் நிரந்தரமா இல்லைன்னாலும், அவன் திறமையானவன் என்பதால அவனுக்கு நிச்சயம் ஒரு பெரிய வெற்றி கிடைக்கும்னு காத்துட்டு இருந்தேன். ‘அம்மா, நான் ‘குற்றம் கடிதல்’னு ஒரு படம் எடுத்திருக்கேன், அது ரிலீஸாகப்போகுது’னு அவன் சொன்னப்போ, அது இன்ப அதிர்ச்சியா இருந்தது. அந்தப் படத்துக்காகத் தொடர்ந்து பல விருதுகள் வாங்கி, முத்தாய்ப்பா தேசிய விருதையும் வாங்கிட்டு வந்து என் கையில கொடுத்தப்போ, ஆனந்தத்தில் அழுதுட்டேன். ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியரான என் கணவர் கோமதிநாயகம், மாநில மற்றும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர். அவர் ஜனாதிபதி கையால விருது வாங்கினபோதும் இப்படித்தான் ஆனந்தக் கண்ணீர்விட்டேன்” என்று நெகிழ்கிறார்.