Published:Updated:

``வேலையில ஆம்பளை வேலை, பொம்பளை வேலைன்னு எதுவும் இல்லை!''

``வேலையில  ஆம்பளை வேலை,  பொம்பளை வேலைன்னு  எதுவும் இல்லை!''
பிரீமியம் ஸ்டோரி
News
``வேலையில ஆம்பளை வேலை, பொம்பளை வேலைன்னு எதுவும் இல்லை!''

தனித்துவம் வெ.நீலகண்டன், படங்கள்: ம.அரவிந்த்

கும்பகோணம் மகாமகக் குளக்கரையின் தென்பகுதியில் ஒற்றை அறை. வெளியில் ஏழெட்டு பைக்குகள் நிற்கின்றன. நடுவில் ஒரு புல்லட் என்ஜினைப் பிரித்து மேய்ந்துகொண்டிருக்கிறார்  ரோகிணி. போவோர் வருவோரெல்லாம் ஒருகணம் நின்று பார்த்து வியந்து செல்கிறார்கள்.

ரோகிணி, டூவீலர் மெக்கானிக். டிவிஎஸ்-50 தொடங்கி கேடிஎம் டியூக் 390 வரை எல்லா பைக்குகளும் ரோகிணிக்கு அத்துப்படி. ரிப்பேர் செய்வதாகட்டும், ரிப்பேர் செய்த பைக்கை, லாகவமாக உதைத்து ஸ்டார்ட் செய்து ஓட்டி டிரையல் பார்ப்பதாகட்டும் ரோகிணி வியக்க வைக்கிறார்.

ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடெல்லாம் தகர்ந்து வருகிற காலக்கட்டம் இது. ஆண்கள் மட்டுமே செய்ய முடியும் என்று கருதப்பட்ட, ஏன் ஆண்களே செய்யத் தயங்குகிற வேலைகளைக்கூட பெண்கள் சர்வசாதாரணமாக செய்து முடிக்கிறார்கள். ரோகிணி அந்த வரிசையில் வரக்கூடியவர்தான். பொழுதுபோக்காகத் தொடங்கிய ஒரு செயல், இன்று அவருக்குத் தனித்த அடையாளமாகவும் வாழ்வாதாரமாகவும் மாறிப்போனது வியப்பு.

``வேலையில  ஆம்பளை வேலை,  பொம்பளை வேலைன்னு  எதுவும் இல்லை!''

“எங்க அப்பா ரவியும் டூவீலர் மெக்கானிக் தான். இந்த வட்டாரத்துல புல்லட் ரிப்பேர் பண்ணணுன்னா, அவரைவிட்டா ஆளில்லை. அந்த அளவுக்குப் பெயர்பெற்றவர். அவரு பொண்ணு நான்...  கத்துக்கிட்டேன். அவ்வளவுதானே. இதுல ஆச்சர்யம் என்ன இருக்கு...” - வெட்கப்பட்டுச் சிரிக்கிறார் ரோகிணி.

“நாங்க அக்கா தங்கச்சிங்க நாலு பேரு. நான்தான் கடைசி. ஆம்பளைப்புள்ள இல்லேன்னு எங்க அப்பாவோ, அம்மாவோ கவலைப்பட்டதே இல்லை. சுதந்திரமா வளர்ந்தோம். நான் ஸ்கூல் போயிட்டு வந்த பின்னாடி அப்பாவுக்கு ஸ்பேனர் எடுத்துக் கொடுக்கிறது, பொருள்கள் வாங்கிட்டு வந்து கொடுக்கிறதுன்னு ஹெல்ப் பண்ணுவேன்.

நல்லாப் படிக்கவும் செய்வேன். பத்தாம் வகுப்பு படிக்கும்போது பெரிய ஆக்சிடென்ட். காலு முறிஞ்சு மாதக்கணக்குல பெட்ல கிடக்க வேண்டியதாகிடுச்சு. எக்ஸாமும் எழுத முடியலே. அதுக்குப் பிறகு படிப்புல கவனம் போகலே.

வீட்டிலேயே உட்கார்ந்திருக்கப் போரடிக்கும். கொஞ்சநேரம் அம்மாவுக்கு சமையல்ல ஹெல்ப் பண்ணுவேன். அதுக்குப்பிறகு ஒர்க் ஷாப்புக்கு வந்திடுவேன். தொடக்கத்துல அப்பா திட்டுவார். ‘இங்கெல்லாம் உனக்கு என்ன வேலை... ஒழுக்கா வீட்டுக்குப் போ’ன்னு சொல்வார். அதை நான் காதுலயே வாங்கிக்க மாட்டேன். ஒருகட்டத்துல அப்பா கூடவே கிளம்பி வந்துட்டு, அவர் வீட்டுக்குப் போகும்போது போக ஆரம்பிச்சேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

விடாப்பிடியா நான் நிக்குறதைப் பாத்துட்டு, சின்னச்சின்னதா வேலை கொடுக்க ஆரம்பிச்சார். ஆயில் போடுறது, வண்டி துடைக்கிறதுன்னு ஆரம்பிச்சு, நட்டு, போல்டு கழட்டுற வேலைன்னு கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டேன். நான் வண்டி துடைக்கிறதைப் பாத்துட்டு எல்லாரும் அப்பாவைத் திட்டுவாங்க... ‘நான் சொல்றதைக் கேக்க மாட்டேங்குது கழுதை... எவ்வளவோ பேரு கத்துக்கிட்டு ஓடியிருக்கான்... இதுவும் கத்துக்கிடட்டுமே... எதிர்காலத்துக்கு உதவியா இருக்கும்’னு அப்பா சொல்வார்.

டூவீலர் மெக்கானிக்குங்கறது சாதாரணமா பார்க்க, எந்திர வேலை மாதிரி இருக்கும். என்னைப் பொறுத்தவரை அது சிற்பத்தைச் செதுக்கிற மாதிரியான வேலை. ரொம்ப பொறுமையா, கவனமா செய்யணும். சில பாகங்களைச் சின்னப் புள்ளிகூட மாறாம கழட்டிச் சுத்தம் பண்ணி மாத்த வேண்டியிருக்கும். 

``வேலையில  ஆம்பளை வேலை,  பொம்பளை வேலைன்னு  எதுவும் இல்லை!''

ஒரு கட்டத்துக்கு மேல, இதுதான் நமக்கு எதிர்காலம்னு முடிவு செஞ்சுட்டேன். சீரியஸா கத்துக்க ஆரம்பிச்சேன். மெக்கானிக் ஆகுறதுக்கு முதல் தகுதி, வாகனங்களை ஓட்டிப்பழகுறது. டிவிஎஸ் 50-ல ஆரம்பிச்சு, புல்லட் வரைக்கும் படிப்படியாக் கத்துக்க ஆரம்பிச்சேன். பலமுறை விழுந்து அடிபட்டிருக்கு. ரத்தம் சொட்டச் சொட்ட வருவேன். அப்பா பதற்றமே படமாட்டார். `வண்டி ஓட்டுனா கீழே விழ நிறைய வாய்ப்பிருக்கு. ஒரு மெக்கானிக், இதுக்கெல்லாம் பயப்படக் கூடாது. எவ்வளவு அடிபட்டிருந்தாலும் எழுந்து வண்டியைச் சரி பண்ணி ஓட்டிக்கிட்டு வரணும்'பார்.

புல்லட் ஓட்டிக்கிட்டுப் போகும்போது எல்லாரும் ஆச்சர்யமா பார்ப்பாங்க. சில பேர் கேலி பண்ணுவாங்க. நான் எதையும் கண்டுக்கிறதில்லை. ரோட்டை மட்டும்தான் பார்ப்பேன். மனசெல்லாம் வண்டியோட சத்தத்துல இருக்கும். சத்தத்தை வெச்சே வண்டியோட பிரச்னையைக் கண்டுபிடிச்சிட முடியும். மூணு வருஷத்தில வேலையைக் கத்துக்கிட்டேன்.  அப்பா, தைரியமா என்னை விட்டுட்டு வெளியில போயிடுவார். 

ஒரு பெண், மெக்கானிக்கா இருக்கிறதுல சில வசதிகள் இருக்கு. இன்னிக்கு கிராமப்புறங்கள்ல கூட பெண்கள் டூவீலர் ஓட்ட ஆரம்பிச்சுட்டாங்க. மெக்கானிக் எல்லாருமே ஆண்களா இருக்கிறதால பெண்கள் வாகனங்களை சர்வீஸ் விடுறதுல சில சங்கடங்கள் இருக்கு. ஒரு பெண்ணே மெக்கானிக்கா இருக்கிறது அவங்களுக்கெல்லாம் வசதி. எதையும் ஃப்ரீயா பேச முடியும். நிறைகுறைகளைச் சொல்ல முடியும். நிறைய பெண்கள் என்கிட்டதான் டூவீலரை விடுவாங்க. பட்டுக்கோட்டை, தஞ்சாவூர்ல இருந்தெல்லாம் எனக்கு வண்டிகள் வரும்...” - பெருமிதமாகச் சொல்கிறார்  ரோகிணி. 

அதிகாலை 6 மணிக்கெல்லாம் ஒர்க் ஷாப்புக்கு வந்துவிடுகிறார் ரோகிணி. யூனிஃபார்ம் மாட்டி அமர்ந்துவிட்டால் பொழுதுபோவதே தெரியாது. அப்பா வந்து மாற்றிவிட்டால்தான் மதிய சாப்பாடு. அப்பா இப்போது பெரும்பாலும் ஷாப்புக்கு வருவதில்லை. ரோகிணிக்கு உதவ ஓர் உதவியாளர் இருக்கிறார். 

“வேலையைப் பொறுத்தவரை, ஆம்பளை வேலை, பொம்பளை வேலைன்னு எதுவும் இல்லை. எல்லாத்துக்கும் மனசுதான் காரணம். இது நம்மால முடியும்னு நினைச்சோம்னா, நிச்சயம் முடியும். ‘ஒன்னாலெல்லாம் புல்லட்டைத் தள்ளவே முடியாது... நீயெல்லாம் மெக்கானிக் வேலை பார்க்கப்போறீயா’ன்னு என்னைக் கிண்டல் பண்ணினவங்கள்லாம் இப்போ `உன்னால முடியும்னு எங்களுக்கெல்லாம் அப்பவே தெரியும்'னு சின்ன வெட்கத்தோட பேசுறாங்க. நம்ம பார்வை நேரா இருக்கணும். பாராட்டுறவங்களையும் சரி, திட்டுறவங்களையும் சரி திரும்பியே பார்க்கக் கூடாது. யாருக்கும் காது கொடுக்கக் கூடாது” - சிரிக்கிறார் ரோகிணி.

``இந்தத் தொழில்ல சில கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யுது. கையெல்லாம் கல்லாட்டம் ஆயிடுச்சு. ராத்திரியானா உடம்புவலி வரும். நாளாக நாளாக எல்லாம் பழகிடுச்சு. எலெக்ட்ரிக் வேலையும் தெரியும்.

பஞ்சரும் ஒட்டுவேன். பொண்ணுன்னா, செல்போன் கடையிலயும், துணிக்கடையிலயும் தான் வேலை செய்யணும்னு சிலபேர் நினைக்கிறாங்க. ஏன், ஸ்பேனர் பிடிக்கக் கூடாது? சில பேர் விமானமே ஓட்டுறாங்க...” - விழி விரியப் பேசுகிற ரோகிணி பெண்களுக்கு ஓர் ஆலோசனையையும் முன் வைக்கிறார்.

“நிறைய பெண்கள் டூவீலர் ஓட்ட தொடங்கிட்டாங்க. ஆனா, அவங்க ஓட்டுற வாகனத்தைப் பத்தி எதுவுமே அவங்களுக்குத் தெரியமாட்டேங்குது. அது நல்லதில்லை. ஒரு திருப்புளி, ஒரு கட்டிங் பிளேயர்... எப்பவும் வண்டியில இருக்கணும். நடுவழியில வண்டி நின்னு போச்சுன்னா சில பேர் பரிதவிச்சுப் போறாங்க. அதுக்கு அவசியமே இல்லை. சின்னதா ஒரு பயிற்சி எடுத்துக்கிட்டா, அவங்களாவே வண்டியை ஸ்டார்ட் பண்ணிக்கொண்டுவந்திடலாம்... நான் அந்தப் பயிற்சியைக் கொடுக்கத் தயாரா இருக்கேன்...”

இதுதான் பெண் உள்ளம்... பிறரின் மீதான இந்த அக்கறைதான் பெண்மையின் தனித்துவம்!