Published:Updated:

‘நீ சாப்பிட்டியா’னு மனைவிகிட்டயும் கேட்டுப் பழகுங்க!

‘நீ சாப்பிட்டியா’னு மனைவிகிட்டயும் கேட்டுப் பழகுங்க!
பிரீமியம் ஸ்டோரி
News
‘நீ சாப்பிட்டியா’னு மனைவிகிட்டயும் கேட்டுப் பழகுங்க!

மாற்றம் வே.கிருஷ்ணவேணி, படங்கள்: ப.பிரியங்கா

``திருநங்கைகளுக்கு இப்போ சமூக அங்கீகாரம் கிடைப்பதுபோலத் தோன்றினாலும், உண்மை அதுக்கு ரொம்ப தொலைவில் இருக்கு. எனக்கு 45 வயசு தாண்டிருச்சு. இன்னும் அடிப்படை உரிமைகளுக்குக்கூட போராட வேண்டிய நிலையில்தான் இருக்கேன்’’ என்று சொல்லும் திருநங்கை ஓல்கா ஆரோன், சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர். தனக்கான உரிமைகள் கிடைக்காத சூழலிலும், கடந்த 22 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளின் நலன், ஏழைப் பெண்களுக்கான வாழ்வாதாரம், குழந்தைகளுக்கான உரிமைகள் எனத் தொடர்ந்து போராடிவரும் சமூக ஆர்வலர்.  பெண்களுக்கான தொழிற்பயிற்சி மற்றும் கவுன்சலிங் அளித்துவருபவர்.

‘`என் சொந்த ஊர் திருச்சி. 18 வயசுல அம்மாவின் சம்மதத்தோடு அறுவை சிகிச்சை செய்துகிட்டு முழுமையான பெண்ணா மாறினேன். பள்ளிப்படிப்பை முடித்த கையோடு கல்லூரியில் படிக்க ஆசைப்பட்டேன். கெஜட்டில் என் பெயரை மாற்றியும்கூட, ‘திருநங்கைக்கு அட்மிஷன் கொடுக்க முடியாது’னு சொல்லிட்டாங்க. பிறகு, தொலைதூரக் கல்வியில் பி.ஏ ஆங்கில இலக்கியம்,  எம்.ஏ பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் படிச்சேன். நாகர்கோவில் முதல் மகாராஷ்டிரா வரை அலைந்து சில டிப்ளோமா படிப்புகளும் படிச்சேன். ஆங்கிலம், இந்தி, மராத்தி, மலையாளம்னு நிறைய மொழிகளையும் கத்துக்கிட்டேன்’’ என்கிற  ஓல்கா, உரிமைகள் மறுக்கப்பட்டபோதெல்லாம் போராடியபடியே அடுத்தகட்டத்துக்கு முன்னேறியிருக்கிறார்.

‘நீ சாப்பிட்டியா’னு மனைவிகிட்டயும் கேட்டுப் பழகுங்க!

``சென்னை எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கர்ப்பிணிகளுக்கான நோய்த்தடுப்பு புராஜெக்ட் பணியில் அஞ்சு வருஷம் வேலை பார்த்தேன். அதுக்காக தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் போயிருக்கேன். அப்போதான் கிராமப்புறப் பெண்கள், திருமணம், குழந்தைப்பேறு உள்ளிட்ட விஷயங்களில் எந்தளவுக்கு விழிப்பு உணர்வு இல்லாம இருக்காங்கங்கிறதைப்  புரிஞ்சிக்கிட்டேன். ஊட்டச்சத்து உணவு அவசியம்னு கர்ப்பிணிகளுக்கு அறிவுறுத்துறதோட, சத்துமாவுக்கஞ்சி, மாதாந்திர செக்அப் மற்றும் மாத்திரைகளின் முக்கியத்துவத்தைப் பேசி புரியவைப்பேன். இப்படி வாரத்துக்கு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள்னு, கிட்டத்தட்ட ஆறு லட்சத்துக்கும் அதிகமான பெண்கள்கிட்ட பேசியிருப்பேன். அதில் 80 சதவிகிதப் பெண்கள் குடும்ப வன்முறையைச் சகிச்சிக்கிட்டு வாழ்றவங்களா இருந்தாங்க. `வீட்டுக்கு வந்ததும் சோறு போடுனு சொல்றதோட ஒரு கணவனோட கடமை முடிஞ்சிடாது. நீ சாப்பிட்டியானு மனைவிகிட்டயும் கேட்டுப் பழகுங்க'ன்னு கர்ப்பிணிகளோட கணவர்களை அழைத்துப் பேசுவேன். ஒரு திருநங்கை மீதான கேலி, புறக்கணிப்பு எல்லாத்தையும் தாண்டி என்னோட வார்த்தைகளை அந்த மக்கள் ஏத்துக்கக் காரணம், அவங்க என் மேல கொண்டிருந்த உண்மையான அக்கறைதான்’’ என்று சொல்லும் ஓல்கா, நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் பெண்களுக்குக் கவுன்சலிங் கொடுத்திருக்கிறார். குழந்தைத் திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை எதிர்த்து, சமூக அமைப்புகளோடு இணைந்து பணியாற்றி வருகிறார். பெண்கள், குழந்தைகள் மற்றும் திருநங்கைகளுக்கு உதவுவதற்காக ‘BRAVOH’ என்கிற அமைப்பை நடத்திவருகிறார்.

``2015-ம் வருடம் சென்னை வெள்ளத்தில் வீடு, உடைமைகள்னு எல்லாத்தையும் இழந்து நின்ன பல பெண்களுக்கு எம்ப்ராய்டரி, வயர் கூடை பின்னுவது, டெய்லரிங்னு பல கைத்தொழில்களைக் கற்றுக்கொடுத்தேன்.  அதைத் தொடர்ந்து இட்லிக்கடை, தையல் கடை ஆரம்பித்துக் கொடுப்பதென ஏழைப் பெண்களின் தொழிலுக்குத் தேவையான மூலப்பொருள்களைத் தொண்டு நிறுவனங் களின் உதவியோடு பெற்றுத் தர்றேன்’’ என்பவர், திருநங்கைகள் எதிர்கொள்ளும் சவால்களையும் பகிர்கிறார்.

``சிறுவயதிலேயே வீட்டைவிட்டுத் துரத்தப் படும் திருநங்கைகள் பரிதாபத்துக்குரியவர்கள்.மாற்றுத்திறனாளிகள் போல, மூன்றாம் பாலின குழந்தைகளுக்கும் ஐ.நா சபை, ஒரு வரையறையைக் கொண்டு வந்து, இவர்களையும் சிறப்புக் குழந்தைகள் வரிசையில் சேர்க்கணும். அப்போதான் சமூகத்துக்கு அந்த மொட்டுகளை ஏற்றுக்கொள்ளும் விழிப்பு உணர்வு வரும். வீட்டில் பெற்றோர் முதல் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் பிற மாணவர்கள் வரை அனைவரின் கேலி, கிண்டல்களால் பள்ளிப்படிப்பையே பாதியில் நிறுத்திவிடும் குழந்தைகளின் நிலைமை மாறும். அவங்க மீதான வன்முறையும் தடுக்கப்படும்’’ என்பவர், இப்போது தன் சுயசரிதையுடன் திருநங்கை களுக்கான வழிகாட்டி விஷயங் களையும் சேர்த்து எழுதி வருகிறார்.

``இந்தச் சமூகம் எங்களைப் புரிந்துகொள்வதுதான் சிறந்த மாற்றமாக இருக்கும். அது நம்மில் இருந்தே தொடங்கட்டுமே!’’ என்று கைகள் கூப்பும் ஓல்கா, தன் மொபைலில் நேரம் பார்த்தபடியே, மாற்றுத்திறனாளிகளுக்கான கவுன்சலிங்குக்குக் கிளம்புகிறார்.

சேவைக்கு ஓய்வேது! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz