Published:Updated:

இந்த உலகைக் காக்கும் இயற்கைப் போராளிகள்!

இந்த உலகைக் காக்கும் இயற்கைப் போராளிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
இந்த உலகைக் காக்கும் இயற்கைப் போராளிகள்!

முகங்கள் இரா.கலைச்செல்வன்

நாளைய தலைமுறைக்குப் பத்திரமாகத் திருப்பித்தர வேண்டிய ஜென்மக்கடனல்லவா இந்த பூமி? ஆனால், இங்கு சுற்றுச்சூழலுக்கு எதிரான அச்சுறுத்தல்  ஒவ்வொரு நொடியும் வலுவடைந்துகொண்டே வருகிறது. இந்த யுத்தக்களத்தில் மனம் தளராது நின்று, இயற்கையைக் காப்பதற்காகவே போராடிக்கொண்டிருக்கிறார்கள் நம் பெண்கள். அப்படிப்பட்ட ஆகச்சிறந்த இயற்கைப் போராளிகளைச் சந்திப்போம், வாருங்கள்...

அரசைப் பணிய வைத்த அகிம்சைப் போராட்டம்

அலிட்டா பெளன் (Aleta Baun) - இந்தோனேசியா 

பல லட்சம் விலை நிர்ணயித்திருக்கிறார்கள் இவர் தலைக்கு. கைகளில் கால்களில்... ஏன் முகத்தில்கூட  இவருக்கு வெட்டுகள் விழுந்திருக்கின்றன. ஆனாலும், எதற்கும் பயந்ததில்லை. அன்றும் அப்படித்தான்... பயமற்றவராகவே தன் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் அவரைக் கொல்ல வந்தது. சாவைக்கண்டு பயமில்லைதான். இருப்பினும், செய்ய வேண்டிய முக்கியமான பணி ஒன்று இருக்கிறதே... அதற்காகவே உயிர் பிழைக்க வேண்டுமென்று நினைத்தார். ரத்தம் சொட்டச் சொட்ட குத்துயிரும் கொலைவுயிருமாகத் தப்பித்தார். அவரை முற்றிலுமாக அழித்தொழிக்க வேறொரு கும்பலும் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தது. அவர்களிடமிருந்து தப்பிக்கத் தன் இரண்டு வயதுப் பெண் குழந்தையோடு வனப்பகுதிக்குள் பதுங்கினார். கிட்டத்தட்ட இரண்டாண்டு காலம் வனவாசம். பிறகு, காட்டிலிருந்து வெளியேறி போராட்டத்தைத் தீவிரப்படுத்தினார். இந்தப் பெண்மணிதான் அலிட்டா  பெளன்.

இந்தோனேசியாவின் மேற்கு தைமூரின் முடீஸ் மலைப்பகுதி புகழ்பெற்று விளங்குவதற்குக் காரணம் பசுமை வனம் மட்டுமல்ல,  இங்கிருக்கும் மோலோ (Mollo) எனும் பழங்குடியின மக்களும்தான். இந்த மலையோடு அத்தனை அன்போடு வாழ்ந்துவந்தவர்கள் அவர்கள்.

இந்த உலகைக் காக்கும் இயற்கைப் போராளிகள்!

1980-களில், இந்தோனேசிய அரசாங்கம் இந்த மலையில் மார்பிள் சுரண்டியெடுக்க சுரங்க முதலாளிகளுக்கு அனுமதியளித்தது. பெருநிறுவனங்கள் மலைவனத்தில் காலடியெடுத்து வைத்தன. அழிவு தொடங்கியது.
அலிட்டா பெளன் சிறுவயதிலேயே தாயை இழந்தவர். அவரை வளர்த்தெடுத்ததே மலைக் கிராமத்துப் பெண்கள்தான். அதனாலேயே இம்மக்கள்மீதும் மலைகள்மீதும் அத்தனை காதல் இவருக்கு. அழிக்கப்படும் மலைகளைக் காக்க, பலவித போராட்டங்களை முன்னின்று நடத்துகிறார் அலிட்டா. ஆனால், சுரங்க நிறுவனங்களும் அவற்றுக்்கு அனுமதியளித்த அரசு அமைப்புகளும் மக்களின் குரலுக்குச் செவிசாய்க்க மறுக்கின்றன.

முடீஸ் மலைகளைச் சுற்றியிருக்கும் 24 கிராமங்களுக்கும் நடைப்பயணம் மேற்கொண்டார் அலிட்டா. ஒவ்வொரு கிராமத்தினரிடம் பிரச்னைகளை விவாதித்து, போராட்ட வழிமுறைகளுக்கான திட்டங்கள் தீட்டிச் செயல்படுத்தினார்.

200-க்கும் அதிகமான பெண்களைத் திரட்டி, சுரங்கங்களைச் சுற்றி மலைகளை ஆக்கிரமித்தார்.

அங்கு இவர்கள் கோஷம் எழுப்ப வில்லை, யாரையும் திட்டவில்லை, சண்டையிடவில்லை, வாக்குவாதம் செய்யவில்லை. மாறாக, பறித்து வரப்பட்ட பஞ்சுகளிலிருந்து நூலை உருவாக்கத் தொடங்கினார்கள். அந்த நூலையும் ஊசியையும் கொண்டு கைகளை மட்டும் பயன்படுத்தி, துணி நெய்தார்கள்.
 
மோலோ மக்கள் அந்த மலையின் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். ஒட்டுமொத்த வாழ்விலும் இயற்கை சார்ந்தே இயங்குபவர்கள். உடைகளைக்கூட இயற்கை முறையிலேயே தயாரித்துக் கொள்ளும் வழக்கமுடையவர்கள். இவர்களின் இந்த வித்தியாசமான அகிம்சைப் போராட்டம் பெரும் கவனத்தை ஈர்த்தது.

பெண்களின் போராட்டம் ஓராண்டைக் கடந்தும் தொடர, வீட்டையும் சமையலையும் குழந்தை களையும் ஆண்கள் பார்த்துக் கொண்டார்கள். `எதிர்த்தால்  விரட்டியடிக்கலாம்' என்கிற எண்ணத்திலிருந்த எதிரிகளுக்கு, புன்னகை முகத்தோடு, அமைதியாக அமர்ந்து துணி நெய்யும் இவர்களை என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒருகட்டத்துக்கு மேல், இந்தப் போராட்டம் உலகின் கவனத்தைத் தன் பக்கம் திரும்ப வைப்பதைக் கண்ட அரசாங்கம், சுரங்க அனுமதிகளைத் திரும்பப்பெற்று, நிறுவனங்களை மலையிலிருந்து வெளியேற்றின.

2013-ம் ஆண்டு அலிட்டாவுக்கு உலகின் மிக முக்கிய சூழலியல் அங்கீகாரமான `கோல்டுமேன் சூழலியல்’ விருது வழங்கப்பட்டது. உலகின் மிக முக்கிய ஊடகங்கள் அவர் முன்னே மைக் நீட்டின. அப்போது இப்படிச் சொன்னார்...

“நாங்கள் இந்தப் பூமியை ஒரு மனித உயிராகவே பார்க்கிறோம். இந்தக் கற்கள் எங்கள் எலும்புகள், இந்தத் தண்ணீர் எங்களின் ரத்தம், இந்த நிலம் எங்களின் சதை, இந்தக் காடுகள் எங்களின் கூந்தல். இதில் ஏதேனும் ஒன்று எங்களிடமிருந்து பிடுங்கப்பட்டாலும் நாங்கள் முடங்கிப்போவோம். இயற்கை எங்கள் கடவுள்...”

தன் இனம் முழுமையான தற்சார்பு வாழ்வை வாழ்வதற்காகவே, இன்றும் தொடர்ந்து இயங்கிவருகிறார் அலிட்டா.

ரத்தத்தின் நடுவே கேட்கும் இயற்கையின் சத்தம்

பெர்தா ஜுனிகா (Berta zunika) - ஹண்டோரஸ்

“ஜுனிகா... தவறில்லையென்றால் உங்கள் வயதை நான் தெரிந்துகொள்ளலாமா?”

“என் வயது 26.''

“இந்த வயதில் எப்படி, இப்படி ஒரு தைரியம்?”

“சுயமரியாதையும் சுயசிந்தனையும் தைரியமும் கொண்ட பெண்ணுக்குப் பிறந்தவள் நான். `எம் உரிமைகளுக்காகவும், சுயமரியாதைக்காகவும், மக்களின் சுதந்திரத்துக்காகவும் போராட வேண்டும்' என்று என் அம்மா சொல்லிக்கொடுத்திருக்கிறார். அவர் கண்ட கனவை உறுதியோடும் தைரியத்தோடும் களம் கண்டு நிறைவேற்றுவேன்.”

தன் தாய் பெர்தா காசெரஸ் கொல்லப்பட்ட சில நாள்களிலேயே அவருடைய பணியைத் தொடர அந்த இடத்துக்கு வந்துவிட்டார் ஜுனிகா. உடனே அவர் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. அதிலிருந்து மீண்ட பொழுதில்தான், மேற்கூறிய விஷயங்களைத் தெரிவித்தார் ஜுனிகா.

ஹண்டோரஸ் ஓர் அழகிய தேசம். அமெரிக்கக் காலடியின்கீழ் கிடக்கும்  சிறிய நாடு. அரசியல் சிக்கல்கள் கொண்டது. உறுதியான அரசாங்கம் இல்லாத நிலை. பசியும், பட்டினியும், கொலையும், கொள்ளையும், இயற்கை வளச் சுரண்டல்களும் மிகுந்திருக்கும் பூமி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இந்த உலகைக் காக்கும் இயற்கைப் போராளிகள்!

ஹண்டோரஸின் பூர்வகுடிகள் `லென்கா’.  இவர்களின் பூர்வீக நிலப்பகுதிகளில் ஆர்ப்பரித்துப் பாயும் குவர்கார்க் நதியின் மடியில் ஒரு மிகப்பெரிய அணையைக் கட்டி, மின்சாரம் எடுக்கப்போகிறோம் என்று சொன்னது அரசாங்கம். இதற்கான குத்தகையை ஒரு சீன நிறுவனமும், உலக வங்கியின் ஒரு கிளையும், உள்நாட்டின் ஒரு தனியார் நிறுவனமும் பிரித்துக்கொண்டு வேலைகளைத் தொடங்கின. லென்கா மக்களின் மொத்த வாழ்வையும் சூறையாடும் இந்தத் திட்டத்தை எதிர்த்து, மக்களைத் திரட்டி மிகக் கடுமையாகப் போராடி வந்தார் பெர்தா  காசெரஸ். அவரின் தொடர் போராட்டம்  சர்வதேச கவனத்தை ஈர்த்தது. திட்டம் முடக்கப்பட்டது. பெர்தாவுக்கு வலிமையான எதிரிகள் உருவானார்கள்.

இரவு 11.30 மணி. மறுநாள் நடக்கவிருக்கும் ஒரு வழக்குக்காக நண்பரோடு சேர்ந்து குறிப்பு எடுத்துக்கொண்டிருந்தார் பெர்தா. கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்ததும் அந்தக் குண்டு அவரின் நெற்றியைத் துளைத்தது. கதவில் ரத்தம் தெறித்தது. இது நடந்தது மார்ச் 2016-ல். ஹண்டோரஸின் மொத்த குடிகளும் பெர்தாவின் மரணத்துக்குக் கண்ணீர் சிந்தினர். அரசாங்கம் மட்டும் வன்மத்தைக் காட்டியது.

`கொள்ளை சம்பவத்தின்போது கொலை செய்யப்பட்டார்’ என்று பெர்தாவின் கொலையை முதலில் பூசி மெழுகியது ஹண்டோரஸ் காவல்துறை. கடும் எதிர்ப்பு  கிளம்பவே, பின்னர் அதை மறுத்தது. உலகப்புகழ்பெற்ற `தி கார்டியன்’ பத்திரிகை பெர்தாவின் கொலை குறித்துச் சில ஆதாரங்களை வெளியிட்டது. கொலையில் கைது செய்யப்பட்ட எட்டு  பேரில் மூன்று பேர் அமெரிக்க ராணுவத்திடம் பயிற்சி பெற்றவர்கள்; இந்தக் கொலைகளுக்கும் அமெரிக்காவுக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது ஆகிய அதிர்ச்சி உண்மைகளுக்கான ஆதாரங்கள் இதன்மூலம் கிடைத்தன.

தன் தாய் இறந்த சில நாள்களிலேயே, அவர் முன்னெடுத்திருந்த `COPINH’ எனும் சூழலியல் அமைப்பின் பொறுப்பை ஏற்றார் 26 வயதான ஜுனிகா. முதல் போராட்டத்தை முடித்த அன்றே அவரைக் கொல்லும் முயற்சியும் நடந்தது.  ஒருவழியாகப் போராடி அவர்களிடமிருந்து உயிர் பிழைத்து வந்தார் ஜுனிகா.

எந்நேரம் வேண்டுமானாலும் தான் கொல்லப்படலாம் என்கிற சூழலிலும் நதியையும் மலைகளையும் மக்களையும் காத்திடும் வகையில் ஜுனிகாவின் குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது.  

ஒரு பட்டாம்பூச்சியின் போராட்டம்

ஜூலியா பட்டர்ஃபிளை ஹில் (Julia Butterfly Hill) - அமெரிக்கா

அப்பாவின் பணி காரணமாக அடிக்கடி வெவ்வேறு ஊர்களுக்கு மாற வேண்டும். இப்படி, இயல்பிலேயே பயணம் இவருக்குப் பிடித்த விஷயமாகிவிட்டது. ஒரு தடவை காட்டுக்குள் ட்ரெக்கிங் செய்யத் தொடங்கியபோது ஒரு பட்டாம்பூச்சி இவரின் கைமீது அமர்ந்தது. அது அன்று முழுவதும் இவர் கையிலேயே இருந்தது. அந்த நாள் முதல் இயற்கையோடு ஏதோ ஒரு நெருங்கிய உறவு இவருக்கு ஏற்பட்டு விடுகிறது. தன் பெயரோடு, பட்டாம்பூச்சியை இணைத்துக்கொள்கிறார்.

1997-ல் கலிஃபோர்னியாவில் ஒரு சூழலியல் அமைப்பின் போராட்டத்தில் பங்கெடுக்கச் சென்றார் ஜூலியா. ஒரு பெரிய ரெட்வுட் (Redwood) மரத்தை வெட்ட `பசிபிக் லம்பர்’ எனும் நிறுவனம் தயாராக இருக்கிறது. அதை எதிர்த்து அனைவரும் மரத்தின் அடியில் நின்று போராடுகின்றனர். அப்போது அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர், `இந்தப் போராட்டத்தை இன்னும் வீரியப்படுத்த யாரேனும் ஒருவர் மரத்தின்மீது ஒருவார காலம் தங்க வேண்டும்' என்று சொல்கிறார்.

இந்த உலகைக் காக்கும் இயற்கைப் போராளிகள்!

அங்கிருந்த களப்போராளிகள் அனைவரும் அந்த மரத்தைப் பார்க்கிறார்கள். அது 1500 வருடப் பழைமையான மரம். உயரம் 180 அடி. அதன்மீது ஏறி ஒரு வாரம் தங்குவதா என எல்லோருமே அமைதி காக்கிறார்கள். யாரும் முன்வராத சூழலில் முதன்முறையாகச் சூழலியல் போராட்டத்தில் பங்கெடுத்திருக்கும் ஹில் அந்தப் பொறுப்பை ஏற்கிறார்.

1997 டிசம்பர் 10 அன்று அந்த மரத்தில் ஏறுகிறார். சூழலோ அவரை ஒரு வாரத்தில் இறங்கவிடவில்லை. அவர் அங்கு மொத்தம் 738 நாள்கள் இருந்தார். அந்த மரத்துக்குச் செல்லமாக `லூனா’ என்று பெயரிட்டார். வெயிலிலும் மழையிலும் குளிரிலும் அந்த மரத்தின் மீதே இருந்தார். 738 நாள்கள் கழித்து அந்த நிறுவனம் அந்த மரத்தை வெட்ட மாட்டோம் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்தான் ஜூலியா கீழே இறங்கினார்.

மரத்தைவிட்டு நிலத்தில் கால் வைத்த தருணம் தன் ஒட்டுமொத்த வாழ்வும் மாறியிருக்கும் என்று ஜூலியா நினைக்கவில்லை. வீட்டுக்குத் திரும்பி இயல்பு வாழ்வைக் கவனிக்கலாம் என்றே நினைத்திருந்தார். உலகமோ அவரைப் பெரும் போராளியாகப் பார்த்தது. தன் மீது மக்களுக்கு இருக்கும் அபிமானத்தைப் புரிந்துகொண்ட ஹில், `இனி இதுதான் வாழ்க்கை' என்று சூழலியலுக்கான பணிகளைத் தொடங்கினார். 
ஏழு வருட தொடர் ஓட்டத்துக்குப் பின் சற்று நிற்க வேண்டியிருந்தது. அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருந்தது. தொடர்ந்து இருமுறை மிகப்பெரிய விபத்துகளில் சிக்கித் தேறினார். அதற்குள் அடுத்த அடி. ஒருவித பூச்சிக்கடி காரணமாக `லைம்’ (LYME) எனும் நோய் அவருக்குப் பரவியிருந்தது. அதுவும் கடைசி நிலையில்தான் அறியப்பட்டது. இப்போது, உடல் மொத்தமும் தளர்ந்துபோயிருந்தாலும், மனவலிமையோடு மீண்டும் எழுந்து நடக்க ஆரம்பித்துள்ளார், இந்தப் பூமிக்காக.

களம் காணும் ‘தனி’ ஒருத்தி!

ஜோசஃபின் பகலன் (Josephine Pagalan) - பிலிப்பைன்ஸ்

தெற்கு பிலிப்பைன்ஸ் காடுகளில் வசிக்கும் `மனோபோ' (Manobo) பூர்வகுடிகளின் காடுகளைச் சுரங்கங்களுக்கும் மரம் வெட்டும் நிறுவனங்களுக்கும் அரசாங்கம் தாரைவார்க்கத் தொடங்கியது. அதை எதிர்த்து தனியொருவராகக் களம் கண்டவர் ஜோசஃபின் பகலன். தன் கிராமத்தில் ஒரு சிறிய மளிகைக்கடையை நடத்தியபடி தன் குடும்பத்தையும், தன் மக்களுக்கான போராட்டத்தையும் ஒருசேர நடத்தி வந்தவர். இவரை மிரட்டும்விதமாக, இவர் நண்பரைச் சுட்டு வீழ்த்தியது அதிகாரக் கும்பல். அந்தக் கொலை இவரைப் பெரிதும் பாதித்தது. மரணத்துக்கான  நீதி கிடைக்காததும் பெரும் வலியைக் கொடுத்தது. தன்னால் தன்னைச் சார்ந்தவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்று குடும்பத்தையும் கிராமத்தையும் விட்டுவிட்டு நகரத்துக்குக் குடிபெயர்ந்தார் ஜோசஃபின்.

இந்த உலகைக் காக்கும் இயற்கைப் போராளிகள்!

இன்று நகரில் வாழ்ந்தபடியே மக்களுக்கான தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

மழைக்காடுகளின் போராட்டக் குரல்!

மரினா சில்வா (Marina Silva) - பிரேசில்

பதினாறு வயதில் தாய் தந்தையை இழந்து ஆதரவற்றுப் போனவர். பிரேசிலின் ரப்பர் தோட்டத்தில் பிறந்தவர். ஆசிரமத்தில் வளர்ந்தவர். பின்னர் வீடுகளில் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்து வந்தார். 1980-களில் உலகப்புகழ்பெற்ற சூழலியல் போராளி சிக்கோ மெண்டீஸுடன் இணைந்து போராட்டங்களை நடத்தி வந்தார். 1988-ல் சிக்கோ மெண்டீஸ் கொலை செய்யப்பட, அவரின் இடத்தை நிரப்பினார் மரினா. அமேசான் மழைக்காடுகளைக் காப்பதற்காகக் களத்தில் போராடினார்.

இந்த உலகைக் காக்கும் இயற்கைப் போராளிகள்!

அதிகாரம் கையிலிருந்தால்தான் இன்னும் நிறைய நல்ல விஷயங்களை மக்களுக்குச் செய்ய முடியும் என்கிற நம்பிக்கையில் தேர்தலில் கால் பதித்தார். செனெட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியல் களத்தில் சூழலியல் பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து போராடி வருகிறார். சமீபத்தில் பிரேசில் நாட்டின் குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு 20 சதவிகித ஓட்டுகளைப் பெற்றார். பெரும் நிறுவனங்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவதால் அரசியலில் பலமுறை வீழ்த்தப்பட்டுள்ளார். இருப்பினும் தளராமல் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கிறார்.

பூமியைக் காக்கும் ‘கேப்டன்’ தேவதை!

நிக்கி சில்வெஸ்ட்ரி (Nikki Silvestri) - அமெரிக்கா

`மண் மற்றும் நிழல்’ (Soil - Shadow) எனும் அமைப்பின் தலைவர் நிக்கி சில்வெஸ்ட்ரி. `மண், மலைகளில் உட்கார்ந்து அழுக்கு உடைகளோடு போராடுபவர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள், யதார்த்தம் புரியாதவர்கள், நவீன வாழ்க்கை புரிபடாதவர்கள்' எனச் சூழலியல் போராளிகளுக்கான அனைத்துப் பிம்பங்களையும் உடைத்தெறிந்து, உலகின் பல மேடைகளில் சூழலியல் பிரச்னைகளை விவாதிக்கும் நவீன உலக யுவதி.

உலகின் மிகச்சிறந்த தன்னம்பிக்கைப் பேச்சாளர்களில் ஒருவர், பேராசிரியர், மாணவி, போராளி என பல முகங்களைக் கொண்டவர் இவர். அமெரிக்காவின் ஆக்லேண்ட் பகுதியில் வசித்து வருகிறார். எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிரான தொடர் போராட்டங்களைக் களத்திலும்,  நீதிமன்றங்களிலும், பல உலக அரங்குகளிலும் நடத்தி வருகிறார்.

இந்த உலகைக் காக்கும் இயற்கைப் போராளிகள்!

``நீங்கள் சூழலியல் போராளியாக மாற காரணம்..?''

``கேப்டன் பிளானெட் எனும் கார்ட்டூன்.''

``என்ன?!''

``அதில் அந்த ஹீரோ இந்தப் பூமியைப் பல்வேறு பிரச்னைகளிலிருந்து காப்பாற்றுவார். சிறுவயதில் அந்த கார்ட்டூனைப் பார்த்த பிறகு, இந்தப் பூமியை நான் காப்பாற்றிவிட வேண்டுமென்று முடிவு செய்தேன். அதற்காகத்தான் இப்போது போராடிக் கொண்டிருக்கிறேன்.''

சமீபத்தில் `டெட்எக்ஸ்' (TedX) நிகழ்ச்சியில் நிக்கி சொன்ன பதில்தான் இது.