Published:Updated:

விஜய், அஜித், தனுஷுக்கு அம்மா!

விஜய், அஜித், தனுஷுக்கு அம்மா!
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய், அஜித், தனுஷுக்கு அம்மா!

ஆசை ஆர்.வைதேகி

மிழ் சினிமாவில் ஹீரோயின்களுக்கு இடையில் போட்டி இருக்கிறதோ இல்லையோ...அம்மா கேரக்டர்களில் நடிப்பவர்களிடம் அநியாயப் போட்டி. முன்னாள் ஹீரோயின் களின் செகண்டு இன்னிங்ஸ் மட்டுமல்ல, முன்னாள் மாடல்களின் அடுத்த ரவுண்டும் அம்மா கேரக்டரில் இருந்தே தொடங்குகிறது.

ஒரு காலத்தில் அம்மா கேரக்டர் என்றால் தெறித்து ஓடிய நடிகைகள்கூட இன்று வாலண்டரியாக வண்டியில் ஏற தயாராக இருக்கிறார்கள். அம்மா கேரக்டருக்கான அவார்டு எங்கே கொடுக்கப்பட்டாலும் நாமினேஷனில் தவறாமல் இடம்பெறுகிற பெயர் ரேணுகா குமரன்.

கே.பாலசந்தரின் ஆஸ்தான நடிகையாக அறியப்பட்டவர், அதே வசீகரத்துடன் இப்போது பெரிய திரைக்கு பிரமோஷன் வாங்கியிருக்கிறார். ‘கருப்பன்’ படத்தில் விஜய் சேதுபதியின் அம்மா, அடுத்து ‘ஓடி ஓடி உழைக்கணும்’ படத்தில் சந்தானத்துக்கு மம்மி.

அம்மா கேரக்டருக்கு அவ்வளவு அவசரமா மேடம்?

‘`என்னைப் பார்க்கிற எல்லாரும் என்கிட்ட கேட்கற முதல் கேள்வி இதுதான். ‘இளமையாதானே இருக்கீங்க... அப்புறம் ஏன் அம்மாவா நடிக்கிறீங்க?’னு கேட்கறாங்க. அம்மா வாகவும் அழுமூஞ்சியாகவும் நடிக்கணும்னு எனக்கு மட்டும் வேண்டுதலா என்ன? கதை சொல்ல வரும்போதே ‘இந்த ஹீரோவுக்கு அம்மா... கஷ்டப்பட்டுப் பிள்ளையை வளர்த்து ஆளாக்கறீங்க'னுதான் வராங்க.

விஜய், அஜித், தனுஷுக்கு அம்மா!

முதன்முதல்ல என்னை அம்மா கேரக்டருக்குக் கேட்டபோது நானும் வருத்தப்பட்டிருக்கேன். ‘நான் எதுக்கு அம்மாவா நடிக்கணும்’னு நிறைய படங்களை மறுத்திருக்கேன். இப்ப என் எண்ணம் மாறியிருக்கு. இன்னிக்குத் தமிழ் சினிமாவுல ஹீரோயின்களோட ட்ரெண்டு மாறியிருக்கு. நாமும் மாற வேண்டிய கட்டாயத்துல இருக்கோம்.

நான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போகும்போது, நான்தான் அம்மா கேரக்டர்ல நடிக்கப் போறேன்னு பலருக்கும் தெரியாது. அம்மா கேரக்டர்ல நடிக்கிற வயசில்லை எனக்கு. தவிர, மாடர்ன் டிரஸ்லயும் மேக்கப்லயும் என்னைப் பார்க்கிறவங்களுக்கு என்னை அம்மா கேரக்டர்ல கற்பனை பண்ணிக்கூடப் பார்க்கத் தோணாது. ஆனா, இது நான் பிடிச்சு பண்ற வேலை. அதனால, அதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை. எனக்குக் கொடுக்கப்படற வேலையை நான் எவ்வளவு பர்ஃபெக்டா பண்றேங்கிறதுதான் எனக்கு முக்கியம்...’’ - படபடப்பவர், சூர்யா தொடங்கி மிர்ச்சி சிவா வரை அநேக நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்துவிட்டவர்.

‘அயன்’ படத்தில் நடித்தது போல ஜாலியான மம்மியாகவும் மகிழ்விப்பார். ‘கருப்பன்’ பட அம்மா மாதிரி கனமான கேரக்டரிலும் கண்ணீரை வரவழைப்பார். ``எல்லா புகழும் கே.பி சாருக்கே'' என்கிற ரேணுகா, தூர்தர்ஷன் நாடக காலத்திலிருந்தே நடிகையாகத் தொடர்பவர்.

‘`தூர்தர்ஷன் மட்டும் இருந்த காலம் அது. டி.வி-யில நடிச்சா மதிப்பு கம்மியாகிடும்... சினிமாவுல வாய்ப்பு கிடைக்காதுனு நினைச்ச காலம் அது. அப்பவே நான் டி.வி, சினிமானு ரெண்டுலயும் பிசியா இருந்திருக்கேன். அப்புறம் தமிழ்ல எனக்கேத்த வாய்ப்புகள் இல்லைன்னு மலையாளப் படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். ஹீரோயின், கேரக்டர்ஸ்னு எல்லாமே பண்ணிட்டிருந்தேன். மம்மூட்டியுடன் நான் நடிச்ச ‘வாத்சல்யம்’ படத்தைப் பார்த்துட்டுதான் கே.பாலசந்தர் என்னை அவருடைய சீரியல்ல அறிமுகப்படுத்தினார். ‘ஏர் பஸ்’ சீரியல்ல ஆரம்பிச்ச அந்தப் பயணம் 23 வருஷங்கள் கே.பி சார்கூட தொடர்ந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கே.பி சாரைப் பார்த்தாலே எங்களுக்கெல்லாம் உதறும். நல்லா ஞாபகமிருக்கிற டயலாக்கூட அவரைப் பார்த்ததும் மறந்துடும். நிறைய திட்டும் வாங்கியிருக்கேன். அவர் வாயால நல்ல நடிகைன்னு பாராட்டும் வாங்கியிருக்கேன். அந்தத் திட்டும் பாராட்டும்தான் இப்போதும் எனக்குக் கை கொடுக்குது. கரெக்ட் டைமுக்கு ஷூட்டிங் போகணும்; டைரக்டர் சொல்லிக் கொடுக்கிறதை மனசுல வாங்கிட்டு நடிக்கணும்.

இந்த ரெண்டும் கே.பி சார் எனக்குக் கத்துக்கொடுத்த பாடங்கள். இது எனக்கு மட்டுமில்லை, எல்லா ஆர்ட்டிஸ்ட்டுக்கும் பொருந்தும்...’’ - நாஸ்டால்ஜியாவிலிருந்து நிகழ்காலம் திரும்புகிறவர், அம்மா கேரக்டரில் சைன் செய்வதற்கு முன் கண்டிஷன்ஸ் அப்ளையைக் கவனிக்கச் சொல்கிறார்.

‘`ஹீரோக்களுக்கு மட்டும்தான் அம்மாவா நடிக்கிறதுங்கிறது என் கொள்கை. இப்போ வரும் படங்களில் ஹீரோயின்களுக்கே முக்கியத்துவம் இருக்கிறதில்லை. அப்படியிருக்கும்போது அவங்களுக்கு அம்மாவா நடிக்கிறவங்களுக்கு என்ன முக்கியத்துவம் இருந்துடப் போகுது? ஒரு புராஜெக்ட்டுல நான் இருக்கேன்னா அந்த இடத்துல எனக்கான முக்கியத்துவத்தை உணர்த்திட்டுப் போகணும். அழகான ஹீரோயினுக்கு, அழகான அம்மாவா வந்து நின்னுட்டுப் போறதுல எனக்கு உடன்பாடில்லை.  நான் யாரையும் எனக்குப் போட்டியா நினைக்கிறதில்லை. ரேணுகாதான் இந்த கேரக்டர்ல நடிக்கணும். அவங்களுக்கு மாற்று இல்லைங்கிற நம்பிக்கையில் என்கிட்ட கதை சொல்ல வர்றவங்களுக்கு ஓகே சொல்றேன்...’’

சினிமாவுக்கு வந்ததும் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டார் ரேணுகா.

 ‘`கதை சொல்ல வரும்போது ‘உங்களைச் சுத்திதான் கதையே வருது’னு சொல்லி கமிட் பண்ணுவாங்க. திடீர்னு ஒரு வில்லி  என்ட்ரி ஆவாங்க. அப்புறம் நம்ம கேரக்டர் இருக்கிற இடமே தெரியாம போயிடும். கேட்டா, ‘டி.ஆர்.பி ரேட்டிங்'னு ஒரு காரணத்தைச் சொல்வாங்க. இந்த ட்ரெண்டுல எனக்கு உடன்பாடில்லை. கடைசியா நான் நடிச்சது கே.பி சாரோட ‘அமுதா ஓர் ஆச்சர்யக்குறி’ சீரியல். அவர் போனதும் சீரியல் பண்றதையே நிறுத்திட்டேன். அம்மாங்கிறதைத் தாண்டி, அக்கா, போலீஸ்னு நிறைய கேரக்டர்ஸ் பண்ணணும்...’’ - காரணம் சொல்பவரின் அடுத்த இலக்கு விஜய், அஜித், தனுஷுக்கு அம்மாவாக நடிப்பது!