Published:Updated:

கலப்படங்களைக் கண்டறிவது எப்படி?

கலப்படங்களைக் கண்டறிவது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
News
கலப்படங்களைக் கண்டறிவது எப்படி?

அறிவோம் துரை.நாகராஜன்

நாம் உண்ணும் உணவு தரமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருப்பதே நோயற்ற வாழ்வுக்கு முதன்மையானது. கலப்படப் பொருள்களை உணவாக எடுத்துக்கொள்ளும்போது உடல் உறுப்புகள் செயலிழக்கும் நிலைக்குக்கூட ஆளாகலாம். அதனால், நாம் உண்ணும் உணவிலுள்ள கலப்படங்களைக் கண்டறிய எளிய வழிமுறைகளைத் தெரிந்துகொள்வோம்.

டீத்தூள்

கடைகளில் முதன்முறையாகப் பயன்படுத்தும் டீத்தூள் கசடை வெயிலில் உலரவைத்து, அதற்குச் சிவப்பு நிறம் சேர்த்து விற்பனை செய்கின்றனர். சாதாரண ஃபில்டர் பேப்பரில் டீத்தூளைக் கொட்டி நான்கு துளி நீர்விட்டால், பேப்பரில் சிவப்பு நிறம் தனியாகப் பிரிவது தெரிந்தால் தரமான டீத்தூள் என அறியலாம்.

கலப்படங்களைக் கண்டறிவது எப்படி?

பச்சை நிறக் காய்கறிகள்

பச்சை நிறக் காய்கறிகளில் செயற்கையாகச் சில நிறமிகள் சேர்க்கப்படுகின்றன. பஞ்சைத் தண்ணீரில் நனைத்து, காய்கறி களின் மேற்பரப்பில் தேய்க்க வேண்டும். பஞ்சில் பச்சை நிறம் படிந்திருந்தால் அதில் செயற்கையான நிறமிகள் கலக்கப்பட்டிருப்பதாக அர்த்தம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கலப்படங்களைக் கண்டறிவது எப்படி?

மிளகு

பப்பாளி விதைகளை உலரவைத்து மிளகுடன் கலப்படம் செய்கிறார்கள். மிளகை நீருக்குள் போட, மூழ்கினால் அது தரமான மிளகு. நீரின் மேற்பரப்பில் மிதந்தால் அது பப்பாளி விதை. அதேபோல மிளகைப் பார்க்கும்போது பளபளப்புடன் மின்னக் கூடாது.

பால்

சிறிதளவு பாலுடன் அதே அளவு தண்ணீரை ஒரு பாட்டிலில் ஊற்றிக் கலக்க வேண்டும். பின்பு பாட்டிலை நன்றாகக் குலுக்க, பாலின் மேற்பரப்பில் அதிக அளவில் நுரை தேங்கியிருந்தால், அது சோப்புத்தூள் கலப் படப் பால் எனத் தெரிந்து கொள்ளலாம்.

கலப்படங்களைக் கண்டறிவது எப்படி?

மிளகாய்

மிளகாயில் புற்றுநோயை ஏற்படுத்தும் `சூடான் டை’ என்ற சிவப்பு ரசாயனம் கலக்கப்படுகிறது. ஒரு டம்ளர் தண்ணீரில், ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூளைக் கலக்கும்போது, அதில் பளீர் சிவப்பு நிறம் வெளிவந்தால், மிளகாயில் ரசாயனம் கலந்திருப்பதாக அறியலாம்.

கலப்படங்களைக் கண்டறிவது எப்படி?

தேன்

பஞ்சைத் தேனில் நனைத்து, நெருப்பில் காட்டினால் பஞ்சு எரிய ஆரம்பிக்கும். சீராக எரிந்தால் அது நல்ல தேன். எரியும்போது சடசடவென சத்தம் வந்தால், அது கலப்படத் தேன். அதேபோல, நீரில் சிறிதளவு தேன் சேர்க்கும்போது, அது கரையாமல் நீரின் அடியில் தங்கினால் அது நல்ல தேன்.

கலப்படங்களைக் கண்டறிவது எப்படி?

மஞ்சள் கிழங்கு

ஒரு கண்ணாடி டம்ளரில் சிறிதளவு நீர் ஊற்றி, அதில் மஞ்சள் கிழங்கைப் போட வேண்டும். செயற்கை நிறமிகள் கலக்காத மஞ்சள் எனில், நீரின் அடியில் தங்கி விடும். செயற்கை நிறமிகள் இருந்தாலோ நீரில் பரவும்.

கலப்படங்களைக் கண்டறிவது எப்படி?

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயைக் கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். எண்ணெய் உறைந்தால், அது தூய தேங்காய் எண்ணெய். நீர்ம நிலையில் அப்படியே இருந்தால், அதில் மலிவான எண்ணெய்கள் கலக்கப்பட்டிருக்கின்றன என்று அர்த்தம்.

நெய்

நெய் பாக்கெட்டுகளில் வனஸ்பதி அல்லது வேகவைத்து உருக்கிய உருளைக்கிழங்கு கலக்கப்பட்டிருக்கும். இதைப் பரிசோதனை மையங்களில் மட்டும்தான் கண்டுபிடிக்க முடியும். நெய்க்குப் பதிலாக வெண்ணெய் வாங்கிக் காய்ச்சிக்கொள்வதே நல்லது.

மசாலாத்தூள்

மசாலாத்தூளில் மரத்தூள் கலப்படம் செய்யப்படுகிறது. உண்மையான மசாலாத்தூள் என்றால் தண்ணீரில் கரைந்துவிடும். மரத் தூள் எனில் நீரின் மேற்பரப்பில் மிதக்கும்.

தோசை மாவு

கடைகளில் விற்கப்படும் மாவு புளித்துப் போகாமல் இருக்க கால்சியம் சிலிகேட் கலக்கப்படுகிறது. இதில் சுகாதாரமற்ற தண்ணீர் சேர்ப்பதால் இ-கோலை பாக்டீரியா (மலக்கழிவில் இருக்கும் கிருமி) இருக்கும். பல நோய்களை உருவாக்கக்கூடிய கிருமி இது. எனவே, தோசை மாவை வீட்டிலேயே அரைத்துச் சாப்பிடுவது நல்லது.

உணவு தானியங்கள்

உணவு தானியங்களில் செயற்கையான நிறமிகள் கலக்கப்படுகின்றன. நிறமி களைக் கண்டுபிடிக்க சிறிதளவு தானியத்தை எடுத்து ஒரு டம்ளர் நீரில் கலக்கவும். நிறமிகள் கலக்கப்பட்டிருந்தால் நீரின் மேற்பரப்பில் வந்து நின்றுவிடும். இதனால் தண்ணீரின் நிறம் மாற ஆரம்பிக்கும்.

ஜவ்வரிசி

ஜவ்வரிசி பொதுவாக லேசான மஞ்சள் நிறமாக இருக்கும். ஜவ்வரிசி வெண்மையாக இருக்க டினோ பால் என்ற பளீர் வெள்ளை நிறத்தைத் தரும் ரசாயனங்கள் தீட்டப்படுகின்றன. சிறிது மஞ்சளாக இருக்கும் ஜவ்வரிசியைப் பயன் படுத்துவதே நல்லது.

சீரகம்

சீரகத்தில், குதிரைச் சாணமும் அடுப்புக் கரியும் சேர்க்கப்படுகின்றன. சீரகத்தைத் தண்ணீரில் போட்டால், சாணம் கரைந்து விடும். சீரகத்தைக் கையில் வைத்துத் தேய்க்கும்போது, கருப்பாக மாறினால், அதில் அடுப்புக்கரி சேர்க்கப் பட்டிருக்கிறது எனத் தெரிந்து கொள்ளலாம்.

கோதுமை மாவு

கண்ணாடி டம்ளரில் தண்ணீரை ஊற்றிவிட்டு அதில் ஒரு டீஸ்பூன் கோதுமை மாவைப் போட வேண்டும். மாவு தூய்மையாக இருக்கிறது என்றால், அடிப்பரப்புக்குச் சென்றுவிடும். குப்பைகள் இருந்தால் நீரின் மேற்பரப்பில் மிதக்கும்.

கலப்படம் இருந்தால் புகார் கொடுப்பது எப்படி?

தமிழகத்தில் சென்னை, தஞ்சாவூர், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் பரிசோதனை மையங்கள் உள்ளன. வாங்கும் பொருள்களால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், அந்த ஊரில் உள்ள உணவுப் பாதுகாப்பு அலுவலரிடம் புகார் கொடுக்கலாம். எந்தப் பொருளால் உடல்நலக் கேடு ஏற்பட்டதோ, அந்த இடத்துக்குச் சென்று, அந்த உணவின் சாம்பிளைப் பரிசோதனை செய்வர். ரிப்போர்ட்டில் கலப்படம் எனத் தெரிந்தால், விற்றவர் மற்றும் தயாரித்தவர்மீது வழக்குப் போடப்படும். பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணமும் பரிசோதனைக்குச் செலவான பணமும் திரும்ப வழங்கப்படும். நுகர்வோருக்கு உண்டான அலைச்சல், மன உளைச்சலுக்குத் தகுந்த தொகை தரப்படும்.

கலப்படங்கள் குறித்துப் பொதுமக்கள் வாட்ஸ்அப் மூலமாக 94440-42322 என்ற எண்ணிலும் புகார் அளிக்கலாம். இதற்காகத் தனி எண், உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையரால் ஏற்படுத்தப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. நீங்கள் வாங்கும் பொருள்களில் கலப்படம் இருக்கிறது என உங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டால் தகுந்த ஆதாரங்களுடனோ, செய்தியையோ வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம். உடனே அந்தந்த மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு 24 மணி நேரத்துக்குள்ளாக நடவடிக்கை எடுக்கப்படும். அந்தந்த மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடமும் நேரில் புகார் அளிக்கலாம்.