Published:Updated:

“கதைகள் என்னைக் கைபிடித்து 24 நாடுகளுக்கு அழைத்துச் சென்றன!” - கதைசொல்லி ஜீவா ரகுநாத்

“கதைகள் என்னைக் கைபிடித்து 24 நாடுகளுக்கு அழைத்துச் சென்றன!” - கதைசொல்லி ஜீவா ரகுநாத்
பிரீமியம் ஸ்டோரி
News
“கதைகள் என்னைக் கைபிடித்து 24 நாடுகளுக்கு அழைத்துச் சென்றன!” - கதைசொல்லி ஜீவா ரகுநாத்

வெற்றிப் பயணம் வி.எஸ்.சரவணன், படம்: மீ.நிவேதன்

“எல்லோரையும்போலத்தான் என் பால்ய பருவமும் கதைக்கேட்டுக் கழிந்தது. ஆனால், அந்தக் கதைகளெல்லாம் என் வாழ்வில் மிகப் பெரிய மேஜிக் செய்யும் என்பது எனக்கு அப்போது தெரியாது” - புன்னகைத் ததும்ப கூறுகிறார் ஜீவா ரகுநாத். குழந்தைகளுக்கான `கதைசொல்லி’களில் முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருப்பவர். தனிப்பட்ட ஆர்வத்தினால் ஆரம்பித்த கதை சொல்லல், தன் வாழ்க்கைக்கான தன்னம்பிக்கையையும் பொருளாதாரப் பலத்தையும் அளித்ததைப் பற்றி நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

“நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது எல்லாமே சென்னைதான். என் அப்பா டி.ஆர்.ரகுநாத் சினிமாவில் பிரபலமாக இருந்தவர். ‘கண்ணகி’ படத்தில் மாதவியாக நடித்தவர் என் அம்மா
எம்.எஸ்.சரோஜா. இந்தக் கலை பின்னணி இருந்ததால், ஒரு கதையைக் கேட்பவர்களுக்குப் போரடிக்காமல் சொல்வது இயல்பாக எனக்குக் கைவந்தது என நினைக்கிறேன். ஸ்கூலில் படிக்கும்போதே நான் சொல்லும் கதைகளைக் கேட்க ஒரு கூட்டம் இருக்கும்.

“கதைகள் என்னைக் கைபிடித்து 24 நாடுகளுக்கு அழைத்துச் சென்றன!” - கதைசொல்லி ஜீவா ரகுநாத்

நான் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் படித்தபோது, அந்த வளாகத்துக்குள் செயல்பட்ட பள்ளி மாணவர்களுக்குக் கதை சொல்லி மகிழ்வேன். அதைக் கவனித்த அப்பள்ளி நிர்வாகத்தினர், என் படிப்பு முடிந்ததும் அங்கேயே எனக்கு ஆசிரியர் வேலை கொடுத்தனர். இடையில் பிரெஞ்சு மொழியும் கற்றுக்கொண்டேன். ‘தூளிகா’ பதிப்பகத்தை நிர்வகித்த ராதிகா அப்போது என்னிடம், ‘மார்க்கெட்டிங் வேலைக்கு வருகிறாயா?’ எனக் கேட்டார். அது குழந்தைகள் புத்தக விற்பனை வேலை என்பதால், சம்மதித்தேன். ‘ஆசிரியர் வேலையை விட்டுவிட்டா போகிறாய்?’ எனப் பலர் பயமுறுத்தினார்கள். ஆனால், அசட்டுத் துணிச்சல் எனக்கு எப்போதும் உண்டு’’ என்பவருக்கு அதைத் தொடர்ந்தே கதைக்கான மேடைகள் கிடைக்கும் காலம் கனிந்திருக்கிறது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“கதைகள் என்னைக் கைபிடித்து 24 நாடுகளுக்கு அழைத்துச் சென்றன!” - கதைசொல்லி ஜீவா ரகுநாத்
“கதைகள் என்னைக் கைபிடித்து 24 நாடுகளுக்கு அழைத்துச் சென்றன!” - கதைசொல்லி ஜீவா ரகுநாத்

``சென்னை, அபிராமபுரம் புத்தகக் கடையில் உட்கார்ந்தபோது ‘புத்தகம் வாங்குபவர்களுக்குக் கதை சொன்னால் என்ன?’ என்றொரு யோசனை வந்தது. ஒரு சில நாள்கள் கதை சொன்னதும், அதைக் கேட்பதற்கென்றே சிலர் வர ஆரம்பித்தார்கள். அதனால் சனிக்கிழமை மதியம் கதைசொல்லல் என்பதாக மாறிவிட்டது. இந்த நேரத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த கேத்தி என்பவரின் கதை புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்க்கும் புதிய அனுபவமும் கிடைக்கப்பெற்றேன்.

99-ம் ஆண்டில் சிங்கப்பூரைச் சேர்ந்த சிலர், ‘ஏஷியன் ஸ்டோரி டெல்லிங் ஃபெஸ்டிவல்’லுக்காகத் தமிழில் கதைசொல்லிகளைத் தேடி வந்தார்கள். ராதிகா என்னைக் கை காட்ட, என் கதைகள் என்னைக் கைபிடித்து முதன்முதலாக வெளி நாட்டுக்கு அழைத்துச் சென்றன. அங்கே பல நாடுகளிலிருந்தும் வந்திருந்த கதைசொல்லிகள் விதம் விதமான கதைகளைச் சொன்னார்கள். நானும் ஆட்டம்பாட்டத்துடன் என் கதைகளுக்கு ஒரு குதூகலச் சூழலை உருவாக்கினேன். அது அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது. அப்போது ஆரம்பித்த பயணம்... அமெரிக்கா, சிங்கப்பூர், கென்யா உள்பட இதுவரை 23 நாடுகளில் கதை சொல்லி திரும்பிவிட்டேன். சிங்கப்பூர் எனக்கு இன்னொரு தாய்வீடு போல மாறிவிட்டது’’ என்பவர் அனிமேஷன், மரபு கலைகள், மழலைத் திருவிழாக்கள் எனக் குழந்தைகளின் உலகுக்கான தன் மற்ற பங்களிப்பு பற்றிப் பகிர்ந்தார்.

`` ‘எப்போதும் சந்தோஷமாக இருக் கிறீர்களே!’ என பலர் என்னிடம் கேட்ப துண்டு.  குழந்தைகளோடு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் சந்தோஷம் பெருகக்கூடியதுதானே? அதனாலேயே குழந்தைகள் உலகின் பிற வேலைகளிலும் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். குழந்தைகளுக்கான அனிமேஷன் வீடியோக்கள் உருவாக்கினேன். சிங்கப்பூரில் அனந்தகண்ணன் என்பவர் தமிழர் மரபுக் கலைகளை இன்றைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்திவருகிறார். அவரோடு இணைந்து பல வேலைகளைச் செய்து வருகிறேன். கதைகள் எனக்குத் தொடர்ச்சியான பயணங்களைத் தந்தவண்ணமிருக்கின்றன; என்னுடைய பொருளாதாரத் தேவையையும் தீர்த்துவைக்கின்றன.

நான், என் நண்பர்கள் கௌசல்யா பத்மநாபன், காஞ்சனா மணவாளன் ஆகியோர் இணைந்து ‘கதை கலாட்டா’ எனும் நிறுவனத்தை 2013-ம் ஆண்டு தொடங்கினோம். ‘அண்டர் த ஆலமரம்’ (Under the Alamaram) எனும் தலைப்பில் உலகில் உள்ள புகழ்பெற்ற கதைசொல்லிகளை அழைத்துவந்து சென்னையில் திருவிழாக்களை நடத்திவருகிறோம். அப்படி இதுவரை நாங்கள் நடத்திய நான்கு திருவிழாக்களில்
32 வெளிநாட்டு கதைசொல்லிகள் கலந்து கொண்டு வெவ்வேறு வடிவங்களில் கதை சொல்லி அசத்தினார்கள்’’ என்பவர், இதுவரை ஏழு புத்தகங்களை எழுதியிருக்கிறார், 65 புத்தகங்களை மொழிபெயர்த்திருக்கிறார்.

கதைகள், குழந்தைகள் மனதில் பதியம் போடுவதைப் பற்றிப் பேசும்போது இன்னும் மலர்கிறார் ஜீவா...

``குழந்தைகளுக்குக் கதை சொல்வதன் முக்கியத்துவம் என்ன தெரியுமா? கதை கேட்பது, சொல்வது என்பது கலை மட்டுமல்ல; அறிவியலும்கூட. நாம் கேட்கிற, படிக்கிற எந்த ஒரு விஷயத்தையும் கதைகளாகத்தான் மூளையில் பதியவைத்துக்கொள்கிறோம். கதைகள் உறவுகளுக்குள் நல்ல அன்பை விளைவித்து, பிரிக்கமுடியாத பந்தத்தை உருவாக்குகிறது. அதனால்தான், கூட்டுக்குடும்பத்தில் கதைகள் கேட்டு வளர்கிற குழந்தைகள் அனைவரிடமும் சகஜமாகப் பேசக்கூடியவர்களாகவும், நல்ல மொழிவளத்துடனும் இருக்கிறார்கள். அப்பா அம்மா இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் டி.வி-யிலிருந்து வரும் ஒலிகளைக் கேட்டபடி மட்டும் இருக்கும் குழந்தைகள் பலருக்கு அது வாய்க்கப்பெறுவதில்லை. 

கதை என்பது என்ன? சில கதாபாத்திரங்கள், அவர்களுக்குச் சிக்கல்கள் வருகின்றன, அவை எப்படித் தீர்க்கப்படுகின்றன என்பதுதானே? இதுதானே நம் வாழ்க்கையிலும் நடக்கிறது? நிறைய கதைகள் கேட்டு வளரும் குழந்தை களுக்கு, எதிர்காலத்தில் அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை அவிழ்க்கும் சாவி அவர்கள் கேட்ட கதைகளில் ஒளித்துவைக்கப்பட்டிருக்கிறது.  தேவைப்படும்போது அது நினைவுக்கு வந்து விடும்’’ என்கிறார், தேர்ந்த தன் அனுபவத்துடன்.

``குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு பெரும்பாலும் அம்மாக்களிடமே விடப்படுகிறது. அதனால், கதை சொல்வதையும் அம்மாவுடைய வேலையாக நினைத்துவிட வேண்டாம். அம்பாசமுத்திரத்தில் ஒரு பள்ளியில் கதைகளைச் சொல்லிக்கொண்டிருந்தபோது ஒரு குழந்தையின் அப்பா கண்கள் கலங்க, ‘இதுவரைக்கும் என் மகளுக்கு நான் ஒரு கதை கூடச் சொன்னதில்லை மேடம். இனிமே ஒரு நாள்கூட கதை சொல்லாம இருக்க மாட்டேன்’ என்றார். இதுபோல நெகிழவைக்கும் பல சம்பவங்களை, மனிதர்களை வழியெங்கும் கடந்துகொண்டிருக்கிறேன். அதனால்தான், ஆசிரியர், மார்க்கெட்டிங் வேலையில் கிடைக்காத ஆத்ம திருப்தி கதைசொல்லியாக எனக்குக் கிடைக்கிறது!”
 
- ஒரு கதைபோல முடிகிறது அவருடனான சந்திப்பு!

மறக்க முடியாத கதை!

``எனக்கு மிகவும் பிடித்த கதைசொல்லி, அமெரிக்காவைச் சேர்ந்த டயானே ஃபெரல்ட் (Diane Ferlatte). கலிஃபோர்னியாவில் வசிக்கும் கறுப்பினத்தவர். இவருடைய குரல் நிமிடத்துக்கு நிமிடம் மாறி, கதைக்கு உயிரூட்டும். எந்த அளவுக்குச் சிரிக்க வைக்கிறாரோ, அந்தளவுக்கு அழவும் வைத்துவிடுவார். ஒருமுறை அவர் சொன்ன கதை மறக்க முடியாதது.

“கதைகள் என்னைக் கைபிடித்து 24 நாடுகளுக்கு அழைத்துச் சென்றன!” - கதைசொல்லி ஜீவா ரகுநாத்

‘ஒரு ஊர்ல அடிமையாக்கப்பட்டவங்க இருந்தாங்க. வேற ஊருக்குப் போயிட்டிருந்தப்போ, அவங்க புள்ளைங்களுக்குப் பசி தாங்க முடியல. ஒரு ஹோட்டலைப் பார்த்துட்டு அங்கே போறாங்க. அடிமைங்கிறதால ஹோட்டலோட பின் பக்கமாகத்தான் போக முடியும். அந்தப் பக்கமாகப் போய் நிற்கிறாங்க. ஆனா, வெள்ளைக்காரங்களுக்குச் சாப்பாடு கொடுத்திட்டே இருக்காங்களே தவிர, ஹோட்டல்காரங்க இவங்கள திரும்பிக்கூடப் பார்க்கல. கண்ணுக்கு எதிர்ல சாப்பாட்டைப் பார்த்துட்டு, பசியை எப்படி தாங்கிக்க முடியும்? புள்ளைங்களுக்கு மயக்கமே வந்துடுச்சு. அப்ப, அந்த ஹோட்டல் சர்வர் ஒருவர், யாருக்கோ பரிமாற எடுத்துட்டுப்போன சாப்பாட்டை இவங்களுக்குக்  கொடுத்தார். இவங்களும் அதை வாங்கி அவசரம் அவசரமாச் சாப்பிட்டாங்க. அதைப் பார்த்த ஹோட்டல் முதலாளி, அந்த சர்வரைக் கடுமையாகத் திட்ட ஆரம்பிச்சுட்டார். சர்வர் அமைதியாக, ‘சாப்பாடுங்கிறது பசிக்காகத்தான் சார். அதுக்கு வெள்ளைக்காரங்க, அடிமையா இருக்கிறவங்கனு வித்தியாசம் தெரியாது’னு சொன்னார். முதலாளி ஒரு நிமிஷம் ஷாக்காகி யோசிக்கிறார். அன்றிலிருந்து அந்த ஹோட்டல்ல எல்லோரையும் ஒரே மாதிரி நடத்த ஆரம்பிச்சாங்க!’

“கதைகள் என்னைக் கைபிடித்து 24 நாடுகளுக்கு அழைத்துச் சென்றன!” - கதைசொல்லி ஜீவா ரகுநாத்

கதை முடிந்தபோது எழுந்த கைதட்டல், குழந்தைகள் மனதில் டயானே விதைத்த சமூகநீதிக்கான சாட்சி!”