Published:Updated:

மகிழ்ச்சியின் விலை பத்து ரூபாய்க்குள்தான்!

மகிழ்ச்சியின் விலை பத்து ரூபாய்க்குள்தான்!
பிரீமியம் ஸ்டோரி
News
மகிழ்ச்சியின் விலை பத்து ரூபாய்க்குள்தான்!

அன்பு பள்ளி ஐஷ்வர்யா, படங்கள்: க.சதீஷ்குமார்

புத்தன் இருக்கும் இடத்தில் அமைதி இருக்கும்... கொண்டாட்டம் இருக்குமா? எழுத்தாளர் பிரேமா ரேவதியின் `வானவில்’ பள்ளிச் சிறுவர்கள் அதைச் சாத்தியமாக்கி வருகிறார்கள்.

தீபாவளி, பொங்கல் எனப் பண்டிகை காலத்தில் மட்டுமே பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் தேடிக்கொண்டிருக்கும்போது, நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கலைச் சேர்ந்த இந்தச் சிறுவர்களுக்குப் பள்ளிப்பருவம் முழுவதுமே வானவில் வருகிற கொண்டாட்டக் காலம்தான்.

‘சிக்கல்’ என்றதும், சிங்காரவேலரும் ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தின் சண்முகசுந்தரமும் நினைவுக்கு வரலாம்.  ஆனால், 2004-ம் ஆண்டு தமிழகத்தைத் தாக்கிய சுனாமி, அந்த ஊருக்கு வேறோர் அடையாளத்தை வழங்கியது.

மகிழ்ச்சியின் விலை பத்து ரூபாய்க்குள்தான்!

``சுனாமி காரணமாக ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட பிள்ளைகளுக்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த ‘வானவில்’ பள்ளி. சுனாமி பாதிப்பு ஏற்பட்டு 13 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அந்தப் பிள்ளைகள் ஆசிரியர், பொறியாளர் எனப் பல்வேறு துறைகளில் பணியாற்ற காத்திருக்கிறார்கள்’’ என்கிறார் பள்ளி ஆசிரியர்களில் ஒருவரான காயத்ரி.

இப்போது, குப்பத்துக் குழந்தைகளின் புகலிடமாகியிருக்கிறது அந்தப் பள்ளி. சுற்றியிருக்கும் செல்லூர், எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், சென்னையின் நொச்சிக்குப்பம், ஊரூர் குப்பம் போன்ற பகுதிகளிலிருந்தும் வந்த பிள்ளைகள் அங்கே படித்துக்கொண்டிருக்கிறார்கள்.

பள்ளிக்குள் நுழைந்ததும் சூரிய வெளிச்சம் படர்ந்த புத்தர் சிலை நம்மை வரவேற்கிறது. புத்தரைச் சுற்றியிருந்த அமைதி, ஆனந்தத்தில் கரைந்துபோகும்படி சிரிப்புடன் ஓடிவந்து நம்மைச் சூழ்ந்துகொண்டார்கள் சிறுவர்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மகிழ்ச்சியின் விலை பத்து ரூபாய்க்குள்தான்!

`மகளிர் மட்டும்’ படத்தில் வரும் அந்தப் பாவாடை - தாவணிப் பெண்களின் மினியேச்சர் வெர்ஷன்கள்போல இருக்கிறார்கள்... சுப்புலட்சுமி, சுமதி மற்றும் பாண்டியம்மா. சென்னையிலிருந்து வந்திருக்கிறோம் என்றதும், “மெட்ராஸ் எப்படியிருக்கும்?” என்பதுதான் அவர்களின் முதல் கேள்வி.

பள்ளியின் வரவேற்பு அறை முழுக்க பிள்ளைகள் செய்த பேப்பர் பட்டாம்பூச்சிகள், பறவைகள், களிமண் பொம்மைகள், ஓவியங்களால் நிரம்பிக்கிடக்கின்றன. தாங்கள் செய்த நட்சத்திரங்களையும் ஆமைகளையும் காண்பிக்கிறார்கள் சுமதியும் சுப்புலட்சுமியும். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே பள்ளி ஆசிரியர்களில் ஒருவரான யோகபிரகாஷ் வருகிறார். ‘`ஹேய்... `கேபிள்’ பிரகாஷ் சார் வர்றாருடீ’' என்று கூறிவிட்டு, சட்டென நாக்கைக் கடித்துக்கொள்கிறார்கள். ``ஓஹோ... பட்டப்பெயர் வைக்கறீங்களா? இதோ வர்றேன்!” என்று அவர் பொய்யாக மிரட்டியதும் ஓட்ட மெடுக்கிறார்கள்.

விடுமுறைக் காலம் என்றாலும் பள்ளி இயங்குகிறது. கைவினைப் பொருள்கள் செய்வது, ஓவியங்கள் வரைவது எனச் சொல்லிக் கொடுக்கிறார்கள். ‘ஏன் விடுமுறையிலும் பள்ளி?’ என்ற கேள்விக்கு ஆசிரியர் அளித்த பதில் அதிர்ச்சி அளிக்கிறது.

“நாம குழந்தைகளுக்கு கல்வி அவசியம்னு வீடு வீடாகப் போய் அழைச்சுட்டு வர்றோம். விடுமுறைன்னுவிட்டால், பெத்தவங்களே அவங்க பிள்ளைகளைப் பிச்சை எடுக்க அனுப்பிடறாங்க. சுற்றியிருக்கும் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதா கோயில் பகுதிகளில் தீபாவளி, பொங்கல் மாதிரியான பண்டிகைக் காலங்களில் கூட்டம் நிறைய வரும். கலெக்‌ஷன் அதிகம் கிடைக்கும்னு கூட்டிட்டுப் போய் விட்டுருவாங்க. அதனால், பிள்ளைகளை அந்தக் கொடுமையிலிருந்து காப்பாற்ற இப்படி இங்கேயே வெச்சுக்கிறோம்’’ என்கிற குரலில் தாய்மையின் அக்கறை.

மகிழ்ச்சியின் விலை பத்து ரூபாய்க்குள்தான்!

அங்கே அமர்ந்து திராட்சையும் ஆப்பிளும் வரைந்துகொண்டிருந்த வெண்ணிலா மற்றும் அவள் தம்பி மனோஜ், சென்ற வருடம்வரை திருவிழாக்களில் பிச்சை எடுத்தவர்கள்தான். திடீரென தம்பி அழுது அடம்பிடிக்க, அவனைச் சமாதானம் செய்து வரைய உதவி செய்கிறாள் வெண்ணிலா. “நானும் தம்பியும் அம்மாகூட இருக்கோம். அப்பா, திருத்துறைப்பூண்டியில் இருக்காரு. ஏதாவது திருவிழா வந்தால், அப்பாவைப் பார்க்க ஊருக்குப் போவோம். அங்கே ஜாலியா சுத்தி் பார்ப்போம்” என்கிறாள். அடுத்த ஊருக்குச் செல்வதே பெரும் கொண்டாட்டமாக இருக்கிறது. தான் அங்கே பிச்சை எடுக்கவே அழைத்துச் செல்லப்படுகிறோம் என்பதுகூட புரியாத வயது அவளுக்கு.

மகிழ்ச்சியின் விலை பத்து ரூபாய்க்குள்தான்!

நாம் சென்ற தினத்தில், ஓலைக் கூடை முடைவது பற்றிய பயிற்சி நடந்து கொண்டிருந்தது. நான்காம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்பு அது. தளிர், துளிர் என்றே அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். பேச்சு சுவாரஸ்யத்தில் பிள்ளைகளிடம் சலசலப்பு ஏற்பட்டது. ஆசிரியர்களில் ஒருவர், “ஹாய்!” என்று சிரிப்புடன் அழைத்ததும், அனைவரும் “ஹாய்!” என்கிறார்கள்.

அப்படியே அவர்களிடம் வேறு சில வார்த்தைகள் பேசி, அமைதிக்குக் கொண்டு வருகிறார். பின்னர், கூடை முடைவதற்கான அடிப்படைப் பயிற்சிகள் தொடங்கியதும், தாங்களே குழுவாக அமர்ந்துகொண்டு கவனிக்க ஆரம்பிக்கிறார்கள்.

இதற்கிடையே எல்.கே.ஜி வகுப்பிலிருந்து, ‘வா... வா... சின்னதம்பி; கூ... கூ... ரயிலு வண்டி’ எனப் பாடல் சத்தம் கேட்கிறது. அங்கே, ஓலைக்கதவின் அருகே நின்றபடி பாடிக்கொண்டிருந்தான் சின்னராசு.
எல்.கே.ஜி வகுப்புகளின் கொண்டாட்டம் வேறு மாதிரியான அலாதி. ஒரு பெட்டி நிறைய விளையாட்டுப் பொருள்களை ஆசிரியர்கள் எடுத்துவைக்க அத்தனையையும் வெளியே கொட்டிவிட்டுப் பெட்டிக்குள் புகுந்துகொண்டு சிரிப்புடன் லூட்டி அடிக்கிறார்கள்.

மகிழ்ச்சியின் விலை பத்து ரூபாய்க்குள்தான்!

சில பிள்ளைகளின் கையில் வீட்டிலிருந்து அம்மா கொடுத்துவிட்ட ரூபாய் இருக்கிறது. அது ரூபாய் நோட்டு எனப் பெரிய அக்கறை எடுத்துக்கொள்ளாமலே அதனுடன் விளையாடுகிறார்கள். எதற்கு ரூபாய் நோட்டுகள் என்று நாம் யோசித்துக்கொண்டிருக்கும்போதே, புளிப்பு மிட்டாய், தேன்மிட்டாய் டப்பாக்கள் சகிதம் ஒரு பாட்டி அங்கே வருகிறார். பிள்ளைகள் விளையாட்டைவிட்டு, பாட்டியை நோக்கிப் படையெடுக்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் ரூபாய்க்கு இனிப்புகளும் மிட்டாய்களும் தருகிறார் பாட்டி. காசு இல்லாத குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகள் பகிர்ந்து அளிக்கிறார்கள். அங்கே ஆனந்த அலை எழுகிறது. பெரும் மகிழ்ச்சியின் விலை பத்து ரூபாய்க்குள்தான்.

கூடை முடையும் சில பிள்ளைகள், “ஏய்! அப்படி முடையாதடா... இந்தப் பக்கம் திருப்பு” என்று தவறாகச் செய்யும் குழந்தைக்கு வழிகாட்டுகின்றனர். மதிய உணவுவேளை நெருங்கியதும், தங்களது தட்டுகளை எடுத்துக்கொண்டு விரைகிறார்கள். மரத்தைச் சுற்றி அதகளம் செய்கிறார்கள். சிலர் தண்ணீர் தொட்டிக்குள் இறங்குகிறார்கள். எல்லோரையும் சின்ன அதட்டல், நிறைய அன்பால் ஒருங்கிணைத்துச் சாப்பிட வைக்கிறார்கள் ஆசிரியர்கள்.

மகிழ்ச்சியின் விலை பத்து ரூபாய்க்குள்தான்!

எத்தகையச் சூழலிலும் ஆசிரியர்களிடம் புன்னகை நிரம்பி வழிகிறது. ஒரே தட்டில் இரண்டு, மூன்று பேர் சாப்பிடும் அழகையும் பார்க்க முடிகிறது. இரட்டை ஜடையுடன் மேஜை மேல் ஏறி இறங்கி விளையாடும் சீதாவைக் காண்பித்து, ``அவள் என் தங்கச்சி மாதிரி...” என்கிறான் மனோஜ்.

ஒரு கவளம் சாப்பாட்டை எடுத்து அவளுக்கு அவன் ஊட்டிவிடுகிறான். அதுவரை போக்குக் காட்டிக்கொண்டிருந்தவள், சமர்த்தாக அருகில் அமர்ந்து சாப்பிடத் தொடங்குகிறாள். அன்புக்குள் அத்தனையும் அடங்கிவிடுகிறது என்பது எத்தனை பெரிய உண்மை.

சாப்பிட்டு முடித்ததும் வகுப்பறைகளுக்குச் செல்கிறார்கள். நமக்கான விடைபெறும் நேரம் வந்தது. ``அண்ணே... அண்ணே... எங்களை இந்தப் புத்தரோடு ஒரு போட்டோ எடுங்க'' என்று புகைப்படக்காரரைச் சூழ்ந்து கொள்கிறார்கள். ஒரு சிறுவன் புத்தர்மீது உப்பு மூட்டை ஏறுகிறான். அமைதியாக இருக்கும் புத்தரிடமும் குறும்புத்தனம் தொற்றிக்கொண்டது போன்ற உணர்வு.