Published:Updated:

வாழ்வை மாற்றிய புத்தகம் - இந்த உலகத்தின் மிகப்பெரிய சக்தி எது? - சின்னத்திரை பிரபலம் அர்ச்சனா

வாழ்வை மாற்றிய புத்தகம் - இந்த உலகத்தின் மிகப்பெரிய சக்தி எது? - சின்னத்திரை பிரபலம் அர்ச்சனா
பிரீமியம் ஸ்டோரி
News
வாழ்வை மாற்றிய புத்தகம் - இந்த உலகத்தின் மிகப்பெரிய சக்தி எது? - சின்னத்திரை பிரபலம் அர்ச்சனா

சாஹா, படம்: க.பாலாஜி

``நிறைய வாசிக்கிற பழக்கம் உள்ளவள் நான். இன்ஸ்பிரேஷனல் புத்தகங்களைத் தேடிப் படிப்பேன். பெரும்பாலும் பயணங்களின்போதுதான் நிறைய வாசிப்பேன். பல மணி நேரப் பயணத்தில் வாசிப்புதான் எனக்கு கம்பானியன்.

தாலிபான் தீவிரவாதிகளால் துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளான 15 வயது பாகிஸ்தான் பெண் மலாலாவின் சுயசரிதை இது.  மலாலாவின் பேச்சு ஒன்றை யூடியூபில் பார்த்தேன். ஒருமுறை சிங்கப்பூர் பயணத்தின்போது ‘ஐ'ம் மலாலா’ புத்தகம் கண்ணில்பட்டு வாங்கிப் படித்தேன்.

உலக பயங்கரவாதச் சூழலிலிருந்து வந்த பெண், கல்விக்குக் குரல் கொடுத்ததைப் பற்றிப் பேசியிருக்கும் இந்தப் புத்தகம் முதன்முறை படித்தபோதே என்னை மனம் கனக்க வைத்தது. இந்தப் புத்தகத்தை இதுவரை மூன்று முறை படித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை படிக்கிறபோதும் அதே உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் உணர்கிறேன்.

வாழ்வை மாற்றிய புத்தகம் - இந்த உலகத்தின் மிகப்பெரிய சக்தி எது? - சின்னத்திரை பிரபலம் அர்ச்சனா

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கல்வி என்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் புத்தகம் இது. சுதந்திரமில்லாத இடத்திலிருந்து வந்த ஒரு பெண்ணுக்கு இவ்வளவுதான் எனச் சுற்றிலும் சுவர் கட்டிவிடும் இடத்தில் அந்தத் தடைகள் எல்லாவற்றையும் உடைத்து வெளியில் வந்த வீராங்கனையின் கதை.

நடுராத்திரியில் ஒரு பெண் தனியே செல்கிறபோது கிடைக்கிற பாதுகாப்பை, பெண் சுதந்திரம் என நாமெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோம். அமைதியான வாழ்க்கை, பிடித்த ஆணுடனான வாழ்க்கை என்பதையெல்லாம் தாண்டி, உண்மையான பெண் சுதந்திரம் என்பது அவளுக்குக் கிடைக்கிற கல்வி என்பதை மிக அழகாகச் சொல்கிறார் மலாலா.

மலாலாவுக்கு அவரின் அப்பா மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கிறார். ‘எதற்கும் பயப்படாமல் என்னுடனேயே நின்ற என் அப்பா’ என மலாலா குறிப்பிடுவார். மலாலாவின் பெற்றோருக்கு இருந்த ஒரே வருத்தம் தங்கள் மகள் மீண்டும் உயிருடன் வருவாளா என்பது மட்டுமே. வேறு எதற்கும் அவர்கள் பயப்படவில்லை. மலாலா இந்தப் புத்தகத்தில் தன் அப்பாவைப் பற்றிப் பேசியிருக்கும் இடங்களிலெல்லாம் நான், என் அப்பாவைப் பொருத்திப் பார்த்திருக்கிறேன். என்னுடைய 17 வயதில் அப்பாவை இழந்துவிட்டேன். மலாலாவின் மிகப்பெரிய அடையாளம் அவரின் பெயருக்குப் பின்னால் உள்ள அப்பாவின் பெயரான ஜியாவுதீன் யூசுப்சாய். திருமணத்துக்குப் பிறகு அப்பாவின் பெயரை நீக்கிவிட்டுக் கணவரின் பெயரைச் சேர்த்துக்கொள்கிற பாரம்பர்யம் இன்னும் நம் சமூகத்தில் இருக்கிறது. நான் இன்னும் என் அப்பாவின் பெயரை மாற்றிக் கொள்ளாமல் இருப்பதைப் பெருமையாக நினைக்கிறேன்.

மலாலாவுக்குக் காதணிகள் அணிகிற பழக்கமில்லை. ‘நான் ஏன் காதணிகள் அணிவதில்லை’ என் பதைப் பற்றியே ஓர் அத்தியாயத்தில் பேசியிருப்பார் மலாலா.

மலாலா நன்றாகப் படிக்கக் கூடியவர். தவிர இசை, நடனம் எனப் பிற ஆர்வங்களிலும் தீவிரமாக இருப்பவர். எப்போதும் வகுப்பில் எல்லோர் கவனத்தையும் கவர்கிற பெண்ணாக இருப்பவர். திடீரென அவரது வகுப்பில் சேர்கிற மால்கா இ நூர் என்கிற மாணவி, மலாலாவைவிடவும் அதிக மதிப்பெண் வாங்கி வகுப்பில் எல்லோர் கவனத்தையும் ஈர்க்கிறார். அதை மலாலாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அந்த நேரம் மலாலாவின் குடும்பம் வேறு பகுதிக்கு வீடு மாற்றிச் செல்கிறது. பக்கத்து வீட்டில் சஃபினா என்கிற பெண்ணுடன் மலாலா நட்பாகிறார். ஒருநாள் தன்னுடைய பொம்மை போன் காணாமல் போக, சஃபினாதான் அதைத் திருடியிருப்பார் என மலாலா சந்தேகப் படுகிறார். அதற்குப் பதிலாக சஃபினாவின் கம்மல்களை மலாலா திருடுகிறார். அதைத் தொடர்ந்து மலாலாவுக்குக் களவுப் பழக்கம் ஒட்டிக்கொள்கிறது. ஒருநாள் தன் உறவினரிடம் மாட்டிக்கொள்கிறார் மலாலா. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு மலாலா பொய் சொல்வதையும் திருடுவதையும் விட்டுவிட்டார். குழந்தையாக இருந்தபோது செய்த தவறுக்காக இன்றும் வருத்தப்படுவதாகச் சொல்கிறார்.  அதன்பிறகு பொருள்சார் வாழ்க்கையின் மீது அவருக்கு விருப்பமற்றுப் போகிறது. இதுபோன்ற அற்பப் பொருள்களுக்காக நான் ஏன் என் கேரக்டரைக் கெடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற தெளிவைப் பெற்றதாகச் சொல்கிறார்.

என் மகள் ஸாராவுக்குப் பத்து வயதாகிறது. கதைப் புத்தகங்கள் படிப்பதில் அவளுக்கும் ஆர்வம் அதிகம். நானும் அவளும் இந்தப் புத்தகத்தைச் சேர்ந்து படித்திருக்கிறோம். ஸாராவின் வயதுக்கு இந்தப் புத்தகம் கொஞ்சம் அதிகம்தான். அவள் அதிகம் பார்ப்பதும் மலாலா வீடியோதான்.

புத்தகத்தின் மொழியைப் புரிந்துகொள்வது அவளுக்குக் கொஞ்சம் சிரமம் என்பதால் அவளுக்குப் புரிகிற நடையில் எடுத்துச் சொல்லி புத்தகத்தின் சாராம்சத்தை விளக்கி யிருக்கிறேன்.

மலாலாவுக்குச் சிறுவயதில் தன் உயரம் குறித்த கவலை இருந்திருக்கிறது. வகுப்பில் மற்ற மாணவிகளைவிட தான் உயரம் குறைவாக இருந்ததை நினைத்து வருத்தப்பட்ட மலாலா, தன்னை உயரமாக்கச் சொல்லிக் கடவுளிடம் தினமும் வேண்டிக்கொள்வாராம். தினமும் தன் உயரம் கூடியிருக்கிறதா என்று பார்ப்பதும் ஏமாந்து போவதுமாக இருந்ததைக் குறிப்பிட்டிருக்கிறார். ‘ஒருசில அங்குலம் உயரமாக்கக் கடவுளை வேண்டியிருக்கிறேன். ஆனால், இன்று அவர் என்னை வான் அளவுக்கு உயர்த்தியிருக்கிறார். அந்த உயரம் என்னால் அளக்க முடியாதது...’ என்றும் தன் புத்தகத்தில் சொல்லியிருக்கிறார் மலாலா.

‘தாலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட பெண்ணாக அடையாளம் காணப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. மாறாக, பெண் கல்விக்காகப் போராடியவள் என்பதையே பெருமையாக நினைக்கிறேன்’ என்கிறார் மலாலா.

‘இந்த உலகத்தின் மிகப்பெரிய சக்திகள் வாளும் பேனாவும். இவை இரண்டையும்விட சிறப்பான இன்னொரு சக்தி பெண்’ என்றும் சொல்கிறார் மலாலா. அதை நானும் வழி மொழிகிறேன். சக்தியாகிய பெண்கள் அனைவரும் தம் ஆற்றல் அறிய ஒருமுறையாவது இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்றும் அன்புக் கோரிக்கை வைக்கிறேன்.’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz