Published:Updated:

தன்னைக் கண்டெடுத்தவளின் கதை!

தன்னைக் கண்டெடுத்தவளின் கதை!
பிரீமியம் ஸ்டோரி
News
தன்னைக் கண்டெடுத்தவளின் கதை!

`திக் திக்’ நாள்கள் ஆர்.வைதேகி, படம்: ப.சரவணகுமார்

‘பயணங்களில் உங்களைத் தொலையுங்கள். அந்தப் பயணங்களிலேயே உங்களைக் கண்டடைவீர்கள்’ என்றொரு பொன்மொழி உண்டு. ராக்கி கபூர் அப்படித்தான் தன்னைத் தொலைத்த பயணத்திலேயே தன் பலம் உணர்ந்திருக்கிறார். சென்னையைச் சேர்ந்த `சைல்ட்பர்த் எஜுகேஷனிஸ்ட்'டும் பிசியோதெரபிஸ்ட்டுமான ராக்கி கபூர், பயணங்களின் காதலி. அப்படியொரு பயணம்தான் அவரைப் பண்பட்ட மனுஷியாகவும் மாற்றியிருக்கிறது. பயணங்களில் தொலைந்து மீண்டுவந்த தன் அனுபவங்களை ‘தி கேர்ள் ஹூ வாஸ் லெஃப்ட் பிஹைண்டு’ என்ற பெயரில் புத்தகமாக எழுதியிருக்கிறார் ராக்கி. ஒவ்வொரு முறை அனுபவம் பகிரும்போதும் அந்தப் பயணம் தந்த அதிர்ச்சி வைத்தியத்துக்குள் சென்றுதான் மீண்டு வருகிறார்.

‘`2014 செப்டம்பரை என் வாழ்க்கையில மறக்க முடியாது. என்னுடைய ஃப்ரெண்ட் ஒருத்தங்க ட்ரெக்கிங் போகிற பழக்கம் உள்ளவங்க. எப்போ பேசினாலும் அவங்க சமீபத்துல போயிட்டு வந்த ட்ரெக்கிங் ட்ரிப்பைப் பத்தி ஏதாவது சொல்வாங்க. `அடுத்த முறையாவது என் கூட ட்ரெக்கிங் வாங்க’னு கூப்பிடுவாங்க. நானும் என் கணவரும் பெரும்பாலும் ஒண்ணாவே ட்ராவல் பண்ணுவோம். `ட்ரெக்கிங்கையும் அப்படி சேர்ந்து ட்ரை பண்ணுவோமே'னு நினைச்சுத் தயாரானோம்.

தன்னைக் கண்டெடுத்தவளின் கதை!

நேபாளத்துல உள்ள லுக்லா என்ற  இடத்துலேருந்து ரென்ஜோ கணவாய் வழியா கோக்யோ ஏரியை நோக்கிய பாதை... மொத்தம் 17,500 அடி உயரம். ட்ரெக்கிங் போகறதுக்கு முன்னாடி சில பயிற்சிகள் எடுத்துக்கிட்டேன். ஆனாலும், நிஜமான ட்ரெக்கிங் என்பது பலரும் நினைக்கிற மாதிரி அவ்வளவு சாதாரணமானதில்லைங்கிறது பிறகுதான் புரிஞ்சது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எனக்கு ஹெர்னியா பிரச்னை இருந்த விஷயமே ட்ரெக்கிங் போனபோது எனக்குத் தெரியாது. அசிடிட்டி, மைக்ரேன் தலைவலினு இன்னும் ஏகப்பட்ட பிரச்னைகள். வழக்கமா ட்ரெக்கிங் போகறதுக்கு முன்னாடி ரத்தப் பரிசோதனை, ஹார்ட் செக்கப்னு பொதுவான சில பரிசோதனைகள் மட்டும்தான் செய்வாங்க. ஹெர்னியா இருக்காங்கிறதெல்லாம் யாருக்குமே வராத சந்தேகம். அது தெரியாமலேயே ஆசை ஆசையா ஆயிரம் கனவுகளுடன் ட்ரெக்கிங் கிளம்பியாச்சு.

தன்னைக் கண்டெடுத்தவளின் கதை!
தன்னைக் கண்டெடுத்தவளின் கதை!

ட்ரெக்கிங் போகிற இடங்கள்ல சாலைகள் இருக்காது. மலைகளையும் பாறைகளையும் கரடுமுரடான பாதைகளையும் தாண்டித்தான் போகணும். அந்த மொத்த குரூப்ல நான்தான் ரொம்ப மெதுவா ட்ரெக்கிங் பண்ற ஒரே ஆள். கூட வந்த அத்தனை பேரும் வேகவேகமா ஏறிப் போய், ஓரிடத்துல ரிலாக்ஸ் பண்ணி, அடுத்த ஷிஃப்ட்டைக்கூட ஆரம்பிச்சிடுவாங்க. யாராவது `ராக்கி எங்கே’னு கேட்டா, ‘வந்துகிட்டிருக்காங்க’னு பதில் வரும்.

ட்ரெக்கிங் போகிற பாதைகளில் எலெக்ட்ரிசிட்டி இருக்காது. தலையில மாட்டிக்கிற `ஹெட்லேம்ப்’போடுதான் நடக்கணும். ஒரு குறிப்பிட்ட தூரத்தை அடைஞ்சதும், அங்கேயே கொஞ்ச நேரம் இருந்துட்டு ட்ரெக்கிங்கைத் தொடர்வாங்க. 12 ஆயிரம் அடியை அடைஞ்சதும் அத்தனை பேரும் அடுத்து 14 ஆயிரம், 16 ஆயிரம் அடி நோக்கி நகர ஆரம்பிப்பாங்க. அங்கேதான் எனக்குச் சவால் ஆரம்பமானது. அடுத்தடுத்து போகப்போற பாதைகள்ல பிரேக் எடுத்து இளைப்பாற இடங்களே கிடையாது. 9 முதல் 13 மணி நேரத்துக்குத் தொடர்ச்சியா ட்ரெக்கிங் பண்ணணும். என்கூட வந்தவங்க எல்லாரும் என்னைவிடப் பல ஆயிரம் அடி தூரம் தாண்டிப் போயிருந்தாங்க. ரொம்ப மெதுவா ட்ரெக் பண்ணிட்டிருந்ததால, நான் மட்டும் தனியா நடந்துகிட்டிருந்தேன். அன்னிக்கு ராத்திரி என்னோட உடல்நிலை ரொம்ப மோசமானது. கடுமையான வயிற்றுப்போக்கு. அது எனக்குப் பீரியட்ஸுக்கான நாளே இல்லை. ஆனாலும் வந்தது. கடுமையான காய்ச்சல், உடல் நடுக்கம்... உடலளவுல நான் ரொம்பவே தளர்ந்து போயிட்டேன். மனசளவுலயும் எனக்கு ட்ரெக்கிங்கைத் தொடர முடியும்கிற நம்பிக்கை இல்லை. நான் பின்னாடி வந்துகிட்டிருக்கிறதா நினைச்சுக்கிட்டு, என் கணவரும் அந்த குரூப்போடு போயிட்டார். துணைக்கு அவர் இல்லையேங்கிற வருத்தம், பயம், பதற்றம், குழப்பம்னு அது ஒருவித பயங்கரமான மனநிலை...’’ -  கண்ணில் எட்டிப்பார்க்கிற நீர் கன்னங்களில் உருண்டு விடாதபடிக்குக் கட்டுப்படுத்திக்கொண்டு தொடர்கிறார் ராக்கி...

தன்னைக் கண்டெடுத்தவளின் கதை!

‘`அதுக்கு மேலே என்னால தொடர முடியாதுங்கிற நிலைமையில நான் அங்கேயே உள்ள டீ ஹவுஸ்கள்ல தங்க முடிவு பண்ணினேன். துணைக்கு யாரும் இருக்க மாட்டாங்க. வெறும் ஆறு வீடுகள் மட்டுமே இருக்கும். சதா சர்வகாலமும் கோயில் மணி ஒலிச்சுக்கிட்டே இருக்கும்.

அப்படியோர் அமைதியான சூழல்ல நடுராத்திரியில அந்தச் சத்தத்துக்கு இடையில பயந்து நடுங்கின நிமிஷங்கள் எக்கச்சக்கம். ஒருபக்கம் `நான் தோத்துட்டேன்'கிற விரக்தி, இன்னொருபக்கம் தனிமை என்கிற அந்த நாள்கள் நரக வேதனைக்குச் சமம். அடுத்தடுத்த நாள்களில் கிளம்பின இடத்துக்கே திரும்பி வந்து சேர்ந்தேன். என்கூட ட்ரெக்கிங் போனவங்க எல்லாரும் வெற்றிகரமா ட்ரிப்பை முடிச்சுட்டு அங்கே வந்து சேர்ந்தாங்க. எல்லாரும் அவங்கவங்க அனுபவங்களைச் சந்தோஷத்தோடு பகிர்ந்துகிட்டிருந்தாங்க. நானோ கடுமையான மன அழுத்தத்துக் குள்ளே இருந்தேன்.

என் மேலயே எனக்கு நம்பிக்கை போச்சு. அதுக்கு முன்னாடி நான் ஒருபோதும் அப்படி இருந்ததில்லை. அப்பதான் ஒருநாள் திடீர்னு யோசிச்சேன். `இப்படியே வருத்தத்தோடயே வாழப்போறேனா' அல்லது `வேற ஏதாவது செய்யப் போறேனா'னு என்னையே நான் கேட்டுக்கிட்டேன். இந்த வாழ்க்கையில எந்த அனுபவமும் வீணாகிறதில்லை. என் அனுபவங்களை வெச்சுப் புத்தகம் எழுதினா என்னன்னு யோசிச்சேன். ஆனா, ட்ரெக்கிங் போனபோது நான் எடுத்து வெச்ச குறிப்புகள் எல்லாம் தொலைஞ்சு போயிடுச்சு.  என்கூட ட்ரெக்கிங் வந்த ஒருத்தங்க ஹேண்டிகேம்ல எல்லாத்தையும் ஷூட் பண்ணினது ஞாபகத்துக்கு வந்தது. அவங்ககிட்ட கேட்டுக் கொஞ்சம் தகவல்கள் சேகரிச்சேன். என் ஞாபகங்கள்லேருந்து கொஞ்சம் தகவல்களைச் சேகரிச்சேன்.

தன்னைக் கண்டெடுத்தவளின் கதை!

இந்தப் புத்தகத்தை எழுதி முடிக்க ஒரு வருஷமாச்சு. எழுதி முடிக்கிற வரைக்கும் ஒவ்வொரு நாளும் நான் பழைய நினைவுகளுக்குள்ளே போய் அதே அனுபவங்களை மறுபடி அனுபவிச்சேன். அழுகை, பயம், தனிமைனு எல்லா உணர்வுகளையும் திரும்பவும் உணர்ந்தேன். படிக்கிற எல்லோரும் தன்னை இந்த விஷயங்களோடு பொருத்திப் பார்க்கணும்கிறதுக்காக நான் ‘தமாரா’ என்கிற கற்பனை கேரக்டரை உருவாக்கி, அவள் சந்திக்கிற பிரச்னைகளா இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கேன். நான் ட்ரெக்கிங் பண்ணினபோது மிஸ் பண்ணினது அன்பை. என் கதை நாயகி அதை மிஸ் பண்ண வேணாம்னு அவளுடைய மனதுக்குப் பிடிச்ச ஒருத்தரைச் சந்திக்கிறதா எழுதியிருக்கேன். நாம நம்மளை நேசிக்காத வரைக்கும் நம்மால இன்னொருவரை நேசிக்க முடியாதுங்கிற மெசேஜையும் இதன் மூலமா சொல்லியிருக்கேன்.

`இந்த அனுபவங்கள் உங்களுக்கு என்ன கத்துக்கொடுத்தது'னு இப்போ என்னைக் கேட்டா நிறைய சொல்வேன். நான் எழுத்தாளராகியிருக்கேன். என்னை நான் உணர்ந்திருக்கேன். என் பலம் என்னன்னு இப்போ எனக்குத் தெரியும். இந்த ட்ரெக்கிங் அனுபவத்துக்குப் பிறகுதான் எனக்கு ஹெர்னியா ஆபரேஷன் நடந்தது. அதன் பிறகு மாரத்தான்ல ஓட ஆரம்பிச்சிருக்கேன்.

ட்ரெக்கிங் என்பது வித்தியாசமான ஓர் அனுபவம். அடுத்த அடி எங்கே, எப்படி வைக்கப்போறோம்னு தெரியாது. அடுத்த அடிக்கு நீங்கதான் ஒரு பாறையைக் கண்டுபிடிக்கணும். எப்போதும் அப்படி உங்களுக்குப் பாறை கிடைக்கும்னு சொல்றதுக்கில்லை. அதுக்கும் நீங்க தயாரா இருக்கணும். கிட்டத்தட்ட நம்ம வாழ்க்கையும் அப்படித்தானே... அடுத்து என்னங்கிற சஸ்பென்ஸ் தெரியாம, அந்தச் சவாலை எதிர்கொண்டு வாழ்ந்துகிட்டிருக் கோம்!’’ - நீண்ட நெடும் கதை சொல்லி நிறுத்துகிற ராக்கி, பயண அனுபவம் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவசியம் என்பதையும் வலியுறுத்துகிறார்.

‘`பயணத்தையும், முடிஞ்சா தனியே பயணம் செய்யற அனுபவத்தையும் ஒவ்வொரு பெண்ணும் நிச்சயம் அனுபவிக்கணும். தனியே பயணம் செய்யறபோ நீங்க உங்களைப் பத்தி மட்டுமே யோசிப்பீங்க. உங்களைக் கவனிப்பீங்க. பயணம்தான் எனக்கு வாழ்க்கைப் பாடங்களைக் கத்துக்கொடுத்திருக்கு. முதன்முறை ட்ரெக்கிங்ல தோல்வியைச் சந்திச்ச நான், அதை என் வாழ்க்கையின் மிகப்பெரிய தோல்வியா நினைச்சேன். உடலளவுலயும் மனசளவுலயும் பலவீனமானவளா நினைச்சிருக்கேன். `என் கணவர் என்கூட இல்லையே'னு கோபப்பட்டிருக்கேன். ஆனா, என்னுடைய அத்தனை நெகட்டிவ் எண்ணங்களை மாற்றியதும் அந்தப் பயணம்தான்; என்னைப் பக்குவப்படுத்தினதும் அதுதான். வாழ்க்கையில் எதை மிஸ் பண்ணினாலும் பயணங்களைத் தவறவிடாதீங்க...’’ - அடுத்த ட்ரெக்கிங்குக்குத் தயாராகிக்கொண்டே விடை கொடுக்கிறார் ராக்கி... தன்னுடைய அடுத்த புத்தகம் நிச்சயம் அழுகாச்சி காவியமாக இருக்காது என்கிற உத்தரவாதத்துடன்!