Published:Updated:

“என் பொண்ணோட புன்னகை எல்லோருக்கும் நம்பிக்கையைக் கொடுக்கணும்” - இது கேன்சரை வென்ற மன உறுதி!

“என் பொண்ணோட புன்னகை எல்லோருக்கும் நம்பிக்கையைக் கொடுக்கணும்” - இது கேன்சரை வென்ற மன உறுதி!
பிரீமியம் ஸ்டோரி
News
“என் பொண்ணோட புன்னகை எல்லோருக்கும் நம்பிக்கையைக் கொடுக்கணும்” - இது கேன்சரை வென்ற மன உறுதி!

நம்மால் முடியும் வே.கிருஷ்ணவேணி, படங்கள்: ஜெரோம்.கே

‘`வணக்கம், வாங்க!” - புன்னகையுடன் கூடிய வரவேற்பிலேயே தன் எளிமையான இயல்பைச் சொல்கிறார் நடிகை கஸ்தூரி. திரைத்துறை, சின்னத்திரை தவிர, நிகழ்ச்சித் தொகுப்பாளர், சமூக ஆர்வலர் மற்றும் விமர்சகர், சமூக வலைதளப் பங்கேற்பாளர் எனத் தமிழ் மக்களுடன் தொடர்பிலேயே இருக்கிறார் கஸ்தூரி. இந்த அடையாளங்களையெல்லாம்விட, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன் மகளை அதிலிருந்து மீட்டுக்கொண்டுவந்திருக்கும் ஓர் அம்மாவாக அவரின் போராட்டங்களைப் பற்றி அறிய வருகிறபோது, நம் மனதில் இன்னும் நெருக்கமாக, உருக்கமாகப் பதிந்துவிடுகிறார். அமெரிக்காவில் வசிப்பவர் சமீபத்தில் விடுமுறைக்காக சென்னை வந்திருந்தபோது நிகழ்ந்த நம் சந்திப்பில், வாழ்க்கை பற்றிய சிந்தனைகளைத் தூண்டுகிறார் கஸ்தூரி...

``டாக்டரான என் கணவரின் வேலை காரணமாகக் கல்யாணத்துக்கு அப்புறம் அமெரிக்காவில் செட்டில் ஆகிட்டேன். 2013-ம் வருஷம்... காலையில் நான் கண்விழிக்கும்போது என் இடதுதோளில் மகளும், வலதுதோளில் மகனும் தூங்கிட்டிருக்கிற தாய்மையின் பூரிப்பில் இருந்த காலம். அப்போ என் மகளுக்கு ஆறு வயசு, மகன் கைக்குழந்தை (குழந்தைகளின் பெயர்களைக் குறிப்பிட வேண்டாமென்று தவிர்க்கிறார்). என் அப்பா, அம்மாவோட இழப்பு, கையில் பெருசா பணம் இல்லாத நிலைனு, இதையெல்லாம் மீறி இந்த வாழ்வின் சந்தோஷங்களை என் குழந்தைகள் எனக்குத் தந்துட்டு இருந்தாங்க.

“என் பொண்ணோட புன்னகை எல்லோருக்கும் நம்பிக்கையைக் கொடுக்கணும்” - இது கேன்சரை வென்ற மன உறுதி!

என் பொண்ணுக்குக் கொஞ்சம் கண்டிப்போட ஊட்டினா, சாப்பிட்டதை யெல்லாம் வாந்தி எடுத்துடுவா. அடிக்கடி காய்ச்சல் வரும். ‘நான் சிவப்பு மனிதன்’ படத்தில் வருவதுபோல திடீர்னு தூங்கிடுவா. ஒருமுறை அவளுக்குத் தொண்டையில் இன்ஃபெக்‌ஷன் ஏற்பட்டிருந்தப்போ டாக்டர்கிட்ட போனோம். ‘ஒழுங்கா சாப்பிட்டாதானே டாக்டர் ஹெல்த்தியா இருக்கலாம்? நீங்களே அவகிட்ட சொல்லுங்க’னு எல்லா அம்மாக்கள் மாதிரியும் டாக்டர்கிட்ட என் பொண்ணு சாப்பிடாததைப் பற்றிப் புலம்பினேன்.

டாக்டர், ‘இது சத்துக்குறைபாடோ, சரியா சாப்பிடாததால் ஏற்பட்ட பிரச்னையோ இல்லை’னு சொல்லி, அட்வான்ஸ்டு டெஸ்ட் செய்தாங்க. பதற்றம், தவிப்புனு இருந்த என்னை, என் கணவர் சமாதானப்படுத்தினார். ஆனா, ‘உங்க பொண்ணு லுக்கேமியா (Leukemia) என்கிற ரத்தப் புற்றுநோயின் ஓர் அரிய வகையால் பாதிக்கப்பட்டிருக்காங்க’னு டாக்டர் சொன்னப்போ, என் உயிர் எங்கிட்ட இல்லை’’ - வார்த்தைகளில் வேகம் கூடி கஸ்தூரியின் பதைபதைப்பைச் சொல்கிறது.

‘`டாக்டர் சொன்னதை என்னால ஏத்துக்க முடியலை. `ஹாஸ்பிடல் சரியில்ல, டெஸ்ட் ரிசல்ட் பொய்யா இருக்கலாம்'னு தவிச்சேன். ஆத்திரமும் அழுகையுமா வந்தது. இப்படியெல்லாம் மனசு ஓடுறவரை ஓடி முடிச்சதுக்கு அப்புறம், ‘இப்போ என் பொண்ணை நான் எப்படிக் காப்பாத்துறது?’ என்ற நிதானத்தில் வந்து நின்றேன்.

புற்றுநோய்க்கான சிகிச்சையை என் பொண்ணுக்கு ஆரம்பிச்சோம். மரண அவஸ்தை அது. என் பொண்ணு தடுக்கிக் கீழே விழுந்தாக்கூட பதறிப்போற நான், தினமும் அவ துடிதுடிச்சுப் போறதைப் பார்த்தபடி, கைநடுங்காம நானே அவளுக்கு ஊசி போடுறதை நினைச்சு என்னை நானே வெறுத்தேன். ஒரு தட்டு நிறைய மாத்திரைகளை அவ சாப்பிடணும்.

என் பொண்ணு பாதிக்கப்பட்டிருந்தது, அரிய வகை புற்றுநோயால். உலகத்திலேயே 200 பேருக்குதான் இந்தப் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வகைப் புற்றுநோயைக் கண்டுபிடிச்சவங்க, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த இரண்டு மருத்துவர்கள். நிறைய முயற்சிகளுக்குப் பிறகு அவங்ககிட்டயே நேரடியா பேசினேன். மருத்துவரான என் கணவரும், அவர் நண்பர்களும் அவரோட ஆலோசனையோட சிகிச்சையைத் தொடர்ந்தாங்க. ஒரு மாதம் சிகிச்சை முடிந்த நிலையில், ஸ்டெம்செல் மாற்றணும்னு சொன்னாங்க. அப்படி மாற்றினாலும் சிகிச்சையப்போ உயிரிழப்புக்கு
50 சதவிகித வாய்ப்பிருக்கு, உயிர் பிழைக்கும்போது நிரந்தரக் குறைபாடுகள் ஏற்படலாம்னு டாக்டர்கள் என் மகளுக்குச் சொன்ன ஆயுள் கணக்குகளையெல்லாம் கேட்கும்போது, என் உயிர்போற மாதிரி இருக்கும். என் கணவர் நிதானமா யோசிச்சு, ‘இந்த அட்வான்ஸ்டு ட்ரீட்மென்ட் வேண்டாம். கேன்சருக்கான சிகிச்சையுடன் ஆயுர்வேத சிகிச்சையும் எடுத்துக்குவோம்’னு முடிவு பண்ணினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“என் பொண்ணோட புன்னகை எல்லோருக்கும் நம்பிக்கையைக் கொடுக்கணும்” - இது கேன்சரை வென்ற மன உறுதி!

நாம் மனசளவில் ரொம்ப நடுக்கத்தில் இருந்தேன். ஆனா, என் பொண்ணு சிகிச்சைக் காகத் தன்னை முழுசா தந்தா. தனக்கு வந்திருக்கிறது என்ன நோய் என்பது பற்றி முழுமையாகத் தெரியாத, குழந்தைக்கே உரிய அறியாமையோட, காய்ச்சல் மருந்து சாப்பிடற மாதிரி சிகிச்சையை எடுத்துக்கிட்டா. நாளாக ஆக, துடிக்காம ஊசிபோட்டுக்கிட்டா. கீமோ சிகிச்சையால் தலையில் முடியெல்லாம் கொட்டி எலும்பும் தோலுமா ஆன அவளைப் பார்த்தப்போ அவளுக்குத் தெரியாம நான் தனிமையில் அழுவேன்.

அமெரிக்காவில் என் பொண்ணு படிச்ச ஸ்கூலில் அவளை அக்கறையோட அணுகினாங்க. தீவிர சிகிச்சையிலிருந்த நாள்களில் அவளோட க்ளாஸ் டீச்சர் வீட்டுக்கும் மருத்துவமனைக்கும் வந்து பாடம் சொல்லிக்கொடுத்து, அவளை இயல்பான சூழலுக்குக் கொண்டுவர முயற்சி செய்தாங்க.

அந்த ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகள் முதல் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு நோயுடன் போராடி சிகிச்சையெடுத்து வந்ததைப் பார்த்தப்போ, ‘என் பொண்ணுக்கு மட்டும் ஏன்?’ என்ற கேள்வி என்னைவிட்டுக் கொஞ்சம் விடைபெற்றது. வாழ்க்கையின் ஆழம் புரிஞ்சது. உலகில் இப்படியெல்லாம் மக்கள் கஷ்டப்பட்டுட்டு இருக்கும்போது, இன்னொரு பக்கம் நடக்கிற அநியாயங் களைப் பார்த்துட்டு மௌனமா கடந்து போயிட முடியலை. சமூகரீதியான கருத்துகளை நான் சொல்லக் காரணம் இந்த அனுபவம்தான்’’ என்பவர், அந்தப் போராட்டங்கள் முடிவுக்கு வந்த காலத்தைப் பேசும்போது சற்று ஆசுவாசமாகிறார்.
‘`ஸ்டீராய்டு கொடுத்ததால், அர்த்த ராத்திரியில்கூட அவளுக்குப் பசியெடுத்துட்டே இருக்கும். இப்படி சாப்பாடு, மருந்து, சிகிச்சைனு நாள் முழுக்க என் பொண்ணைக் கவனிச்சுக்கிற பொறுப்பில் எனக்குத் தூக்கமின்மை பிரச்னை ஏற்பட்டுடுச்சு. ரெண்டரை வருஷம் சிகிச்சைக் காலம் முடிஞ்சு, அடுத்த அஞ்சு வருஷம் மருத்துவக் கண்காணிப்புக் காலம் முடிஞ்சு, ‘உங்க பொண்ணு இப்போ ஓகே’னு டாக்டர் சொன்ன அந்த நொடி, எங்க குடும்பத்துக்கே மறுபிறப்பு. அவளோட எலும்புகளெல்லாம் சிகிச்சையின் பக்க விளைவுகளால் பலவீனமாகியிருந்த போதும், ‘என்னால முடியும், என்னை டான்ஸ் க்ளாஸ்ல சேர்த்துவிடுங்க’னு கேட்டா. நாங்க இந்தியா வரும்போதெல்லாம் டான்ஸ் க்ளாஸ் போயிட்டிருக்கா. ‘நெவர் எவர் கிவ் அப்’ என்பதை எனக்குக் கத்துக்கொடுக்கிற குரு அவ. சிகிச்சையின்போது அழுதாலும், மற்ற நேரங்களிலெல்லாம் சிரிப்பு அவளைவிட்டுப் பிரியாது. ‘எது வந்தாலும் சமாளிச்சுடலாம்’னு அவளோட ஆட்டிட்யூடை செதுக்கியிருக்கு வாழ்க்கை. இப்போ என் பொண்ணு ஏழாம் வகுப்பு படிக்கிறா. அவளுக்கு விவரம் தெரியுற வயசு வந்ததுக்கு அப்புறம், ‘அம்மா, என் ஸ்கூல்ல, ஃப்ரெண்ட்ஸ்கிட்டயெல்லாம் நான் ட்ரீட்மென்ட் எடுத்ததைப் பற்றிச் சொல்ல வேண்டாம். என்னை யாரும் பாவமா, வித்தியாசமா பார்க்க வேண்டாம்’னு சொல்லியிருக்கா.

பெற்றோருக்கு, தங்கள் பிள்ளைகள் எதிர் காலத்தில் என்னவாகவெல்லாம் ஆகணும்னு ஆசைகள் இருக்கும். என்னைக் கேட்டா... அவங்க ஆரோக்கியமான, சந்தோஷமான மனிதர்களா வளர்ந்து வரணும்னு சொல்வேன். இங்கே என் மகளின் சிகிச்சைப் போராட்டங்கள் பற்றிச் சொன்னவையெல்லாம் பயமுறுத்துறதுக்காக இல்லை. எவ்வளவு பெரிய துன்பங்களும் கடந்துபோகும் என்பதைச் சொல்லத்தான். நோய்க்கான சிறந்த மருந்து, அதை எதிர்கொள்ளும் மன உறுதி என்பதைச் சொல்லத்தான். என் பொண்ணோட இன்றைய புன்னகை எல்லோருக்கும் நம்பிக்கை கொடுக்கணும் என்பதற்காகத்தான்’’ என்பவரை, வாழ்க்கை ஓர் ஆக்கபூர்வமான முயற்சியெடுக்கச் செய்திருக்கிறது.

‘`குழந்தை நோயாளிகளுக்கு நிதி உதவி, மனநல ஆலோசனை கொடுக்கும் வகையில் சென்ற வருடம் ஓர் அறக்கட்டளையை நிறுவினேன். இன்னும் பலருக்கு உதவும் முயற்சிகளில் இருக்கேன்’’ என்பவர் இறுதியாகச் சொல்கிறார்...

``ஹேப்பி, ஹெல்த்தி லைஃப்!”