Published:Updated:

‘`அறிவு மாதிரி ஒரு புள்ள இனியும் சிறையிலிருக்கக் கூடாது!”

‘`அறிவு மாதிரி ஒரு புள்ள இனியும் சிறையிலிருக்கக் கூடாது!”
பிரீமியம் ஸ்டோரி
News
‘`அறிவு மாதிரி ஒரு புள்ள இனியும் சிறையிலிருக்கக் கூடாது!”

நெகிழ்ச்சி ரமணி மோகனகிருஷ்ணன், படங்கள்: ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்

‘` ‘மாமா, என்கூட ஒழுங்கா விளையாட வா. நான் ட்வென்டி கவுன்ட் பண்றதுக்குள்ள நீ வரலைன்னா உன்கூட இனி நான் பேசவே மாட்டேன்’னு தாயம் விளையாட என் பேத்தி கூப்பிடுவா. ‘என்னம்மா இவ என்னை இப்படி மிரட்டுறா’னு அறிவு சிரிச்சுட்டே கேட்பான். ‘மாமன், மருமக பாடு, என்னைக் கூப்பிடாதீங்கப்பா’ன்னு சொல்லுவேன் நான்.”

ஜோலார்பேட்டையில் இருக்கும் அந்த வீட்டில், 26 ஆண்டுகளுக்குப் பிறகு தன் மகன் பேரறிவாளனுடன் வாழ கிடைத்த இரண்டு மாத நினைவுகளைச் சொல்லும்போது மகிழ்ச்சியும் கண்ணீரும் மாறி மாறிப் பூக்கின்றன அற்புதம்மாளுக்கு. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விசாரணைக் கைதியாக அழைத்துச் செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு முதன்முறையாகக் கிடைத்த பரோல் இது. இதற்குப் பின்னிருப்பது, அவருடைய தாயின் தளராத பல வருடப் போராட்டம்.

‘`அறிவு மாதிரி ஒரு புள்ள இனியும் சிறையிலிருக்கக் கூடாது!”

‘`ரெண்டு மாசம் போனதே தெரியலை. ‘எம்புள்ள எங்க வீட்டு வாசலுக்கு வர்றவரைக்கும் அவன் வீட்டுக்கு வர்றான்னு நான் நம்ப மாட்டேன்’னு சொல்லிட்டேயிருந்தேன். ஏன்னா, ஒவ்வொரு முறையும் விடுதலைன்னு அறிவிப்பு வர்றதும், அது தள்ளிப்போறதும்னு நடந்த விஷயங்களால நான் அவ்வளவு நம்பிக்கையிழந்து போயிருந்தேன். ஒருவழியா அவன் அன்னிக்கு பரோலில் வீடுவந்து சேர்ந்ததும், அவனைப் பார்த்ததுல எனக்குக் கையும் ஓடலை, காலும் ஓடலை. கிருஷ்ணகிரியிலயிருந்து அவனுக்காக மாவாட்டி எடுத்துட்டு வந்திருந்த அவங்கக்கா அவன்கிட்ட, ‘இட்லி சாப்பிடுறியா, தோசை ஊத்தட்டுமாடா’னு கேட்டா. தோசைனு சொன்னான். நிமிஷங்கள்ல தேங்கா சட்னி அரைச்சு அவதான் அவனுக்குத் தோசை ஊத்திக்கொடுத்தா” - பரோலில் பேரறிவாளன் வந்த நாளை நினைவுகூரும்போது, சமையலறையில் கவிழ்ந்துகிடக்கும் பேரறிவாளனின் தட்டை நோக்கிவிட்டு, சோர்வுடன் திரும்புகிறது அவர் பார்வை.

‘`இந்த ரெண்டு மாசமும் வீடே கலகலனு இருந்துச்சு. எங்க மகள்கள், பேத்திகள், பேரன்னு எல்லாருமே அவங்கவங்க அலுவலகங்கள், பள்ளிகளுக்கு விடுப்பு எடுத்துட்டு வந்துட்டாங்க. அதுவும் என்னோட சின்னப் பேத்தி, ‘மாமாவைவிட்டு எங்கேயும் வரமாட்டேன்’னு ஒரே அடம். என் மருமகன்களுக்கும் அறிவு மேல ரொம்ப அன்பு. சிறையிலிருந்து பரோலில் வந்திருக்கும் வீடு மாதிரியே இல்லை.  ஏதோ கொண்டாட்டம் நடக்குற வீடு மாதிரி அவ்வளவு மகிழ்ச்சியாயிருந்தோம். திருமாவளவன் பார்க்க வந்தப்போ, அவனுக்கு ரொம்ப பிடிக்குமேன்னு கிடார் வாங்கிவந்து கொடுத்தார். கிடார், கீ போர்டு, பாட்டு, ஆட்டம்னு ஒவ்வொரு நாளும் நிமிஷமும் பொன்னா போச்சு. அறிவைப் பார்க்க அத்தனை பேர் வந்தாங்க. அவங்க வாங்கி வந்த பலகாரம், புத்தாடைகள்னு வீடே திருவிழாக்கோலமா இருந்தது. யார் வாங்கிட்டு வந்த சட்டையை அறிவு போடுவான்னு, போட்டி வேற. குழந்தை பிறந்த வீடு எப்படியிருக்கும்... அப்படியிருந்தது எங்க வீடு’’ - அந்த மகிழ்வையும் நெகிழ்வையும் வார்த்தைகளில் சொல்ல முடியாமல் திணறி, உவமைகளால் நிறைக்கிறார் அந்த உதாரணத் தாய்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
‘`அறிவு மாதிரி ஒரு புள்ள இனியும் சிறையிலிருக்கக் கூடாது!”

‘`அட, இவ்வளவு ஏன்... அறிவு சிறையில உடம்பு முடியாமயிருந்தப்போ அவனுக்கு சிகிச்சையளிச்ச டாக்டர்  தியாகராஜன், இப்போ பணி ஓய்வு பெற்றுவிட்டாலும், விழுப்புரத்திலிருந்து அறிவைப் பார்க்க வந்திருந்தார். அவங்க அக்காக்களோட கல்யாண கேசட்டை அறிவுக்குப் போட்டுக்காட்ட இத்தனை வருஷமா காத்திருந்தோம். ஆனா, இப்போ டெக்கெல்லாம் கிடைக்காதாமே? அதையெல்லாம் `சிடி’யா மாத்தணுமாமே? ‘சரி விடும்மா, அப்புறம் பார்த்துக்கிறேன்’னு சொல்லிட்டான்’' என்றவர், பேரறிவாளன் விடைபெற்ற தருணத்தைச் சொல்லும்போது மெலிந்துபோகிறது அவர் குரலின் வேகம்.

“கிளம்பும்போது, எப்பவும் அவனை விளையாடக் கூப்பிட்டு மல்லுக்கு நிக்கிற என் சின்னப் பேத்திகிட்ட சொல்லிக்கிட்டப்போ தான் அறிவு கொஞ்சம் கலங்கிட்டான். ஒருவழியா சுதாரிச்சு கட்டுப்படுத்திக்கிட்டான். ஊர்க்காரவங்க எல்லோரும், ‘இப்படிப்பட்ட ஒரு தங்கமான புள்ளைக்கு இந்த நிலைமையா’னு ஆச்சர்யமும் வேதனையுமா பேசினாங்க. ‘நாங்க செய்தியில படிச்சுட்டு என்னவோன்னு நெனச்சோம். எங்களை மன்னிச்சிரு அறிவு’னு சொன்னாங்க. ‘இனி அறிவைப் பார்க்கப்போகும்போது, எங்களையும் கூட்டிட்டுப்போங்க’னு மனசு கனத்துச் சொல்றாங்க. பரோல் முடிஞ்சு கிளம்பினப்போ அவன் அழலை, ஆனா, எங்க ஏரியாவே அழுதுச்சு. இந்த ரெண்டு மாசத்துல அவன் அம்புட்டு அன்பைச் சம்பாதிச்சிருக்கான். அவன் அப்ப இருந்த மாதிரியே இருக்கான். அதே சிரிப்போடவே இருக்கான். ஆனா, எனக்குதான்...’’ - குரல் தழுதழுத்து அவர் நிறுத்தும்போது, அந்த வீட்டின் தவிப்பு நமக்குள்ளும் இறங்குகிறது.

தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், பேரறிவாளனின் பரோலை நீட்டிக்கக் கேட்டு மனு அளித்திருந்தார் அற்புதம்மாள். ஆனால், அது நிராகரிக்கப் பட்டது. இரண்டு மாத பரோல் முடிந்து கையசைத்தபடியே பேரறிவாளன் வீட்டிலிருந்து விடைபெற, அற்புதம்மாள் அழுதபடியே கையசைத்த காட்சி, காலத்தின் கண்ணீர் சித்திரமாக பலரின் மனதில் உறைந்தது.

‘`அறிவு மாதிரி ஒரு புள்ள இனியும் சிறையிலிருக்கக் கூடாது!”

“வழக்கு விசாரிக்கப்பட்ட விதம் குறித்து பேரறிவாளன் தொடர்ந்துள்ள வழக்கும், எழுவர் விடுதலை குறித்த வழக்கும் நீதிமன்றத்துக்கு வரவிருக்கு. இனி நாங்க பரோல் கேட்கப்போறதில்லை. எங்களுக்கு அறிவோட விடுதலைதான் வேண்டும். ஏதேதோ தப்பு செஞ்சவங்களெல்லாம் வெளியில் இருக்கும்போது, அறிவு மாதிரி ஒரு புள்ள இதுக்கு மேலயும் சிறையிலிருக்கக் கூடாது. இந்த வழக்கை விசாரித்த ஓய்வுபெற்ற சி.பி.ஐ அதிகாரி ஒருவரே அறிவு குற்றவாளி இல்லைனு சொல்லியிருக்கார். அவன் உள்ளே இருக்கிறது நீதிக்குதான் இழுக்கு” என்று குரலில் உறுதியேற்றிச் சொல்லும் அற்புதம்மாள், “இந்த வழக்கில் சோனியா காந்தி இதுக்கு மேலும் மௌனம் காக்கக் கூடாது. அவங்களோட இழப்பின் வலி புரியுது. ஆனா, நிரபராதிகள் தண்டிக்கப்படக் கூடாது.

26 வருஷங்களா தன் மகனுக்காகக் காத்திட்டிருக் கிற இந்தத் தாயோட ரணத்தை அந்தத் தாய் புரிஞ்சுக்கணும்’’ என்றவரிடம், ‘மகனுக்காக நிறைய ஆசைகள் வெச்சிருந்தீங்களேம்மா...’ என்றதும் கருவளையங்கள் பாய்ந்திருக்கும் தன் கண்களைச் சில நொடிகள் மூடி, திறக்கிறார். “பொண்ணு பார்க்குறேன்னு சொன்னதுக்கு, ‘அதெல்லாம் விடுதலை ஆனதுக்கு அப்புறம் பார்த்துக்கலாம்மா. நான் கஷ்டப்படுறது மட்டுமல்லாம, ஏன் இன்னொரு பொண்ணையும் வருத்தணும்’னு கேட்கறான்” எனும்போது அந்த ஏக்கத்தின் கனம் தாளாமல் அற்புதம்மாளின் கண்களில் ததும்புகின்றன நீர்த் துளிகள்.

‘`அப்புறம் ஒருநாள் அறிவு என்ன செஞ்சான்னா...’’ என்று ஆரம்பித்து, பரோல் நாளொன்றின் நிகழ்வைச் சொல்லி ஆனந்தமாகிறார் அற்புதம்மாள். ஆம், இந்த இரண்டு மாதங்களிலேயேதான் மீண்டும் மீண்டும் வாழப்போகிறார் அந்தத் தாய்... பேரறிவாளன் நிரந்தரமாக வீடு திரும்பும்வரை!