Published:Updated:

“மகனைவிட ஒரு மணி நேரம் கூடுதலா உயிர் வாழணும்!”

“மகனைவிட ஒரு மணி நேரம் கூடுதலா உயிர் வாழணும்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“மகனைவிட ஒரு மணி நேரம் கூடுதலா உயிர் வாழணும்!”

ஒரு தாயின் சபதம்கு.ஆனந்தராஜ்

“அண்ணாவுக்கு ஹாய் சொல்லு... நம்மகிட்ட பேச சென்னையிலேருந்து கால் பண்ணியிருக்காங்க” - வீடியோகாலில் அழைத்த நம்மைக் காட்டி மீனா சொல்ல, கையசைத்துப் புன்னகைக்கும் அதிஷின் முகத்தில் விரிகிறது புன்னகை. பிறந்தபோதே, ‘படுக்கைதான் வாழ்க்கையாக இருக்கும்’ என்று டாக்டர்களால் கைவிரிக்கப்பட்ட சிறப்புக் குழந்தை. ஆனால், மீனாவின் தாயுள்ளம், அதிஷை முடக்கிய குறைபாடுகளில் இருந்தெல்லாம் அவனை மீட்டுவந்துகொண்டிருக்கிறது. தான் ஒருமுறை சாவின் விளிம்புக்குச்சென்று திரும்பியது, தன் குழந்தைக்கும் அதேபோல நேர்ந்த துயரம் என அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் மீனா, போராட்டமான தங்களின் வாழ்க்கைக் குறித்துப் பேசுகிறார்.

“மகனைவிட ஒரு மணி நேரம் கூடுதலா உயிர் வாழணும்!”

“நான்  சென்னைப்  பெண். எம்.காம்  முடிச்சுட்டு பேங்க்ல வேலை பார்த்துட்டிருந்தேன்.ஜெர்மன் லாங்குவேஜ் கோர்ஸ் முடிச்சு, 1994-ம் வருஷம் ஜெர்மனியில் ஒரு பேங்க்ல அசிஸ்டென்ட் வைஸ் பிரெசிடென்ட்டா வேலையில் சேர்ந்தேன். அங்கே  அதிகமான வேலைப்பளு, கடுமையான குளிர், தனிமைனு ரொம்பச் சிரமப்பட்டேன். ஒருமுறை கடுமையான காய்ச்சலோடு முதுகில் அக்கி வர, ஹாஸ்பிட்டல்ல அட்மிட்டானேன்’’ என்பவருக்கு, அது செத்துப் பிழைத்த கதையாக இருந்திருக்கிறது.

`` ‘வைரல் இன்ஃபெக்‌ஷன்தான்’னு டாக்டர் சொன்னாங்க. ஆனா, காய்ச்சல் ரொம்பக் கடுமையாகி, என்னை அறியாம உளறும் நிலைக்குப் போயிட்டேன். அடுத்த நாள், என் உடல் முழுக்கத் தீக்காயத்துல கருகின மாதிரி ஆனதோடு, கையும் காலும் அசைக்க முடியாத நிலை. அப்போ அந்த நகரத்துல ஃபெஸ்டிவல் டைம் என்பதால, ஆஸ்பத்திரியில சில நர்ஸ்களைத் தவிர யாருமே இல்ல. அடுத்தநாள் வந்த டாக்டர்ஸ், ‘கொஞ்சம் கொஞ்சமா உயிர் போயிட்டு இருக்கு. பிழைக்க வாய்ப்பில்லை’னு சொல்லி, கடைசி முயற்சியா 300 கிலோமீட்டர் தொலைவில் இருந்த மற்றொரு ஹாஸ்பிட்டலுக்கு என்னை ஹெலிகாப்டர்ல கொண்டுபோய் சேர்த்தாங்க. பெரிய போராட்டத்துக்குப் பிறகு உயிர்பிழைச்சேன். நான் கண் முழிச்சுப் பார்த்தப்போ, என் பெற்றோர் வந்திருந்தாங்க. உயிரோட மதிப்பு என்னன்னு அதை இழக்கும் நொடிக்குப்போய் திரும்பி வந்திருந்தப்போ அழுத்தமா புரிஞ்சிருந்தது’’ என்கிறவருக்கு அதற்குப் பின்னான நாள்களும் இன்னும் வலி மிகுந்தவையாகவே அமைந்திருக்கின்றன.

``சருமத்தின் மேல் பகுதியை நீக்கினா பிங்க் கலர்ல ஒரு லேயர் தெரியுமே... அதுபோலதான் என் உடம்பு முழுக்க இருந்தது. என்னோட அந்தத் தோற்றத்தைப் பார்க்கிறதும், என்னோடு தங்குறதும் மத்தவங்களுக்கு மிகச் சவாலான விஷயம்.  அவங்களுக்கே அப்படீன்னா, எனக்கு? இன்னொரு பக்கம், நான் வேலை பார்த்த பேங்க்ல, ஒரு மாசத்தில் என்னை வேலையில் சேரச் சொல்லிட்டாங்க.  உடம்பு முழுக்க ஆயின்மென்ட் போடவே ஒருமணி நேரமாகும். என்னைப் பார்த்து யாரும் மனசு வருத்தப்படக் கூடாதுனு கண்ணைத் தவிர உடம்பு முழுக்கத் துணியால் கவர் செய்துட்டு ஆபீஸ் போனேன். எனக்கு ஏற்பட்ட பிரச்னைகளின் விளைவா, ஒரு கண்ணில் பார்வைத்திறன் பாதிப்பு ஏற்பட்டுச்சு. அந்தச் சூழலை எல்லாம் அம்மா சாவித்ரியின் துணையோடு கடந்தேன். இந்த  நிலையில், உடல்நலப் பிரச்னையால் எனக்கு நிச்சயமாகியிருந்த கல்யாணமும் நின்று போக, அதையும் கடந்து வந்தேன்’’ என மீனா சொல்லும்போது, அருகிலிருந்த ஃபேமிலி போட்டோவை எடுத்து வருகிறார் அதிஷ். அதிலிருக்கும் தன் கணவர் சோமசுந்தரத்தை நமக்குக் காட்டும்போது மீனா முகத்தில் அழகானதொரு புன்னகை.

‘` ‘காய்ச்சல்னுதானே ஆஸ்பத்திரியில அட்மிட் ஆனோம்... ஏன் இவ்வளவு பிரச்னை’னு காரணம் தேடினப்போதான், நர்ஸ் எனக்குத் தவறுதலான மருந்தை, அதிகளவில் கொடுத்ததனால ‘ஸ்டீவன் ஜான்சன் சிண்ட்ரோம்’ என்ற பிரச்னை ஏற்பட்டது தெரிய வந்தது. இந்த நோய் தாக்கினவங்கள்ல சிலர்தான் உயிர் பிழைப்பாங்களாம். அப்படி ஓர் அதிர்ஷ்டசாலியாதான் நான் பிழைச்சிருக்கேன். சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரி மேல கேஸ் போடச் சொன்னாங்க நண்பர்கள். பிழைப்புக்காக வந்த நாட்டில், இந்த உடல்நிலையில் வழக்கை எதிர்கொள்ள வேண்டாமேன்னு விட்டுட்டேன். அந்த நேரம்தான் ஜெர்மனியில ஐ.டி வேலையில் இருந்த, சென்னைக்காரரான சோமசுந்தரம் எனக்கு நண்பரா அறிமுகமானார். என் காயங்களுக்கெல்லாம் அவரோட நட்பு ஆறுதலா இருந்துச்சு. ஒருகட்டத்துல நாங்க கல்யாணம் செய்துக்க முடிவெடுத்தோம். அப்போ, விசா பீரியட் முடிஞ்சு சென்னைக்கு வந்து வொர்க் பண்ணிட்டிருந்தேன். அந்த நிலையில எங்களுக்கு ரெண்டு வீட்டுச் சம்மதத்தோடு சென்னையில கல்யாணம் நடந்துச்சு. அப்புறம் அவருக்கு அமெரிக்காவில் வேலை கிடைச்சு இங்கே வந்துட்டோம்’’ என்றவர், தன் வாழ்வின் அடுத்த போராட்ட அத்தியாயத்தைப் பேசத்  தொடங்குகிறார்...  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“மகனைவிட ஒரு மணி நேரம் கூடுதலா உயிர் வாழணும்!”

``அமெரிக்கா வந்த சில மாதங்களில் நான் கர்ப்பமானேன். டெலிவரிக்காக ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனேன். காய்ச்சல் உள்ளிட்ட சிக்கலான நிலையில நார்மல் டெலிவரியாச்சு. சந்தோஷத்துல பூரிச்ச அடுத்தடுத்த நொடிகளில்தான் கவனிச்சோம், தொப்புள்கொடி அஞ்சு சுத்து சுற்றின நிலையில பிறந்த குழந்தையின் உடல்ல எந்த அசைவும் இல்லை; அழுகையும் இல்லை. ஒரு பொம்மை மாதிரி இருந்தான். அவனை வென்டிலேட்டர்ல வெச்சாங்க. எங்க சந்தோஷமெல்லாம் அழுகையா மாறிடுச்சு. இந்த அதிர்ச்சியில எங்கப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வர, அவரை கார்டியோ வார்டில் அட்மிட் செய்தோம். போர்க்களத்தையும் மீறிய பதற்றத்திலும் துயரத்திலும் இருந்தோம்.

‘குழந்தையின் மூளை பாதிக்கப்பட்டுடுச்சு... ஐ.சி.யூ-ல வெச்சிருக்கோம், உயிர் பிழைக்கிறது கஷ்டம்’னு டாக்டர் சொன்னதும், எல்லோரும் அழுதாங்க. `என் பையன் பிழைச்சுடுவான்' என்ற பிடிவாத நம்பிக்கையில் நான் மட்டும் அழலை. ஆனா, ‘குழந்தையைப் பராமரிக்க ஒரு நாளைக்கு 20 ஆயிரம் டாலர் செலவாகுது. இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் பண்றது சிரமம். இன்னிக்கு ஒருநாள் மட்டும் பார்த்துட்டு ட்ரீட்மென்டை நிறுத்திட்டு குழந்தையை உங்ககிட்ட கொடுத்திடுறோம்... சில நிமிடங்களில் உயிர் போயிடலாம்’னு சொன்னப்போ, கதறி அழுதுட்டேன்.

வென்டிலேட்டர் சப்போர்ட்ல இருந்த குழந்தையை எடுத்து எங்க கையில் கொடுத்ததும், அவன் உடல் நீல நிறமா மாறத் தொடங்கிச்சு. அவனுக்கு இறுதிச்சடங்கு மாதிரியான மந்திரங்களையெல்லாம் குடும்பத்தார் உச்சரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா, திடீர்னு என் பையனோட உடல் பழையபடி பிங்க் கலர்ல மாற ஆரம்பிக்க, டாக்டர்கிட்ட ஓடினோம். மறுபடியும் ட்ரீட்மென்ட்டை ஆரம்பிச்சாங்க. ரெண்டு வாரம் கழிச்சு, ‘பையன் உயிர் பிழைச்சுட்டான். ஆனா, நார்மல் குழந்தை மாதிரி நடக்க, பேச, சாப்பிட எதுவும் செய்ய முடியாது. மூளை முடக்குவாதப் பிரச்னையும் (cerebral palsy), வலிப்புப் பிரச்னையும் இருக்கறதால, படுக்கையிலேயேதான் வாழணும். இந்தப் பிரச்னையுள்ள குழந்தைங்க 40 வயசு வரைக்கும்தான் உயிர் வாழ்வாங்க’னு டாக்டர் சொன்னார். சாவு வரை போயிட்டு வந்த நான், உயிரின் மதிப்பை முழுமையா உணர்ந்திருந்ததால, ‘படுக்கையிலேயே இருந்தாலும் பரவாயில்லை; உயிரோடிருந்தா போதும். நான் என் பையனைப் பார்த்துக்குவேன்’னு என் மனசெல்லாம் தீயா ஓர் உணர்வு பரவுச்சு. இனி நான் அழுதா, என் பையனைக் கவனிக்க முடியாதுனு என்னை நானே தயார்படுத்திக்கிட்டேன். அவனுக்கான தெரபிகளை ஆரம்பிச்சேன். ஆனா, அதற்கான செலவுகளைச் சமாளிக்கிறது கஷ்டமா இருந்தது” என்கிற மீனாவின் முகத்தைச் சிரித்தபடியே பார்த்துக்கொண்டிருக்கிறான் அதிஷ்.

“ ‘கர்ப்பக்காலத்துல ஆரோக்கியமா இருந்த சிசு, எதனால இப்படிப் பிறந்தான்’னு காரணம் தேடி எல்லா மெடிக்கல் ரிப்போர்ட்டுகளையும் செக் செய்தேன். நான் பிரசவத்துக்கு அட்மிட் ஆனப்பவே, பிரசவத்தில் குழந்தைக்கும் பிரச்னைன்னு மானிட்டர் காட்டியிருக்கு. அதைக் கவனிக்காம விட்டுட்டாங்க. உடனடியா ட்ரீட்மென்ட் கொடுத்திருந்தா குழந்தைக்குப் பிரச்னை ஏற்பட்டிருக்காதுன்னு தெரியவர, அந்த மருத்துவமனை மேல வழக்குத் தொடர்ந்தேன். ஒன்றரை வருஷப் போராட்டத்துக்குப் பிறகு, ‘மருத்துவமனை நிர்வாகத்தின் தவறுதான் இது. அதற்கு ஈடாக, குழந்தை உயிர்வாழும் காலம்வரை அவனுக்குக் கொடுக்கக்கூடிய முக்கியமான சில தெரபிகளுக்கான செலவுகளை ஏற்றுக்கொள்வதோடு, பெற்றோர்/பாதுகாவலர் இறந்தபிறகு குழந்தையின் பராமரிப்புக்கும் மருத்துவமனை நிர்வாகம் உதவணும்’னு கோர்ட் தீர்ப்பு வழங்கிச்சு’’ என்கிறவர், தொடர்ந்து அதிஷுக்காகத் தன்னை ஒவ்வொரு விஷயத்திலும் மாற்றிக்கொண்டிருக்கிறார்.    

“மகனைவிட ஒரு மணி நேரம் கூடுதலா உயிர் வாழணும்!”

``குழந்தையை வெளியிடங்களுக்கு எடுத்துட்டுப்போக முடியாத அந்தச் சூழல்ல என் உலகமா இருந்த அப்பா கல்யாணசுந்தரம் சென்னையில ஹார்ட் அட்டாக்ல இறந்துபோனார். அவருக்கு அஞ்சலி செலுத்தக்கூடப் போக முடியல. தொடர்ந்து என் குழந்தையை தெரபிக்காக ஒவ்வொரு இடத்துக்கும் கூட்டிட்டுப் போக கார் ஓட்டக் கத்துக்கிட்டேன். வெளியூர், வெளிநாடுனு அவன் சிகிச்சைக்காக அலைந்தேன். அவனுக்கு நிபுணர்கள் கொடுக்கிற தெரபியையெல்லாம் நானே கத்துக்க ஆரம்பிச்சேன். ஒரு வயசுக்குப் பிறகுதான் கை கால் அசைவு ஏற்பட்டுச்சு. ரெண்டு வயசுக்குப் பிறகுதான் தவழ ஆரம்பிச்சான். மூணு வயசுலதான் தடுமாறியே நடக்க ஆரம்பிச்சான். இதுக்காக நான் மெனக்கெட்டதையெல்லாம் விவரிக்கவே முடியாது. அவனுக்குக் காது கேட்கும். ஆனா, பேச முடியாது. அழத் தெரியாது. சிரிக்க மட்டும்தான் தெரியும்.

இப்போ அவனுக்கு 19 வயசாகுது. ரெண்டுவயசுக் குழந்தைக்கான மூளை வளர்ச்சியில்தான் இருக்கான். தடுமாறித்தான் நடப்பான். ஆனாலும், அவனுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுப்பேன். இப்போ ஸ்கூலுக்கு அனுப்புற அளவுக்குக் கொண்டுவந்திருக்கேன். சாப்பிட, நடக்க, விளையாட, தன் தேவைகளைப் பூர்த்தி செய்துக்க ஸ்கூல்ல சொல்லித் தர்றாங்க’’ என்கிற மீனா, இந்தப் பொறுப்புகளுக்கு இடையில் சமூக சேவைக்கும் தன்னை வார்த்துக்கொண்டது ஆச்சர்யம்.

``படுக்கையிலதான் இருப்பான்னு சொன்ன என் பையனை என்னோட முயற்சியால இவ்வளவு மேல கொண்டுவந்திருக்கேன்னா, அப்போ ஒவ்வொரு சிறப்புக் குழந்தையோட அம்மாவுக்கும் உரிய வழிகாட்டுதல்கள் கிடைச்சா, அவங்க குழந்தையையும் மேம்படுத்தலாமேன்னு உதவ நினைச்சேன். அதுக்காக `எம்.எஸ் இன் ஸ்பெஷல் எஜுகேஷன்’ கோர்ஸும், ஆட்டிஸம் ஸ்பெஷலிஸ்ட் கோர்ஸும் முடிச்சேன். தோழிகள் நாலு பேரோட சேர்ந்து 2000-ம் வருஷம் ‘ஜீனா’ (Jeena) என்ற அமைப்பைத் தொடங்கி, எங்களுக்குத் தெரிஞ்ச சிறப்புக் குழந்தைகளுக்கான தெரபி மற்றும் வளர்ப்புமுறைகளை ஆலோசனைகளாகச் சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சோம். இப்போ இந்த அமைப்புல 650 குடும்பங்கள் உறுப்பினர்களா இருக்காங்க. விசேஷ தினங்களில் குழந்தைகளும் அம்மாக்களும் மேடையில் ஆடல் பாடல்னு அசத்துற மகிழ்வுத் தருணங்களும் இங்கு உண்டு’’ என்று சொல்லும் மீனா, சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளிகளில் இலவசமாக கவுன்சலிங் கொடுக்கிறார், டான்ஸ் வகுப்புகள் எடுக்கிறார்.  

``சிறப்புக் குழந்தைகளை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை வலியுறுத்தி ‘அக்ஸப்ட்’ (Accept) என்ற அமைப்பை ஆரம்பிச்சேன். அதில் நாற்பது குடும்பங்கள் உறுப்பினர்களா இருக்காங்க. இதில் சிறப்புக் குழந்தைகள் வாலன்டியர் சேவைகள் செய்து மக்களுடன் இணைந்து செயல்படுறாங்க. இதன் மூலம் தங்கள் குறைகளைக் கடந்துவந்து சமூகத்துடன் ஒன்றிப் பழகுறாங்க’’ என்கிறவர், மீண்டும் அதிஷ் வளையத்துக்குள் வருகிறார்.

“எல்லா உணவுகளையும் மசிச்சுதான் ஊட்டிவிடணும். அவனைச் சரியா கவனிக்க முடியாம போயிடக் கூடாதுன்னு, நாங்க இன்னொரு குழந்தை பெத்துக்கலை. என் கண் பிரச்னை தீவிரமாகி, இப்போ இடதுகண்ணில் பார்வைத்திறனை இழந்துட்டேன். கணவருக்கும் மூட்டுமாற்று ஆபரேஷன் நடந்திருக்கு. ஆனாலும், எங்க பையன் முன்னாடி நாங்க ஒருநாளும் அழ மாட்டோம். நேற்றைவிட இன்னிக்கு நல்லா இருக்கோம்னு நினைச்சுதான் வாழ்ந்துட்டிருக்கோம். எனக்கு ஒரே ஒரு பிரார்த்தனை இருக்கு... என் பையன் வாழும் காலத்தைவிட ஒருமணி நேரம் நான் அதிகமா வாழணும். அவன் இருக்கிற வரை துணையா இருந்து, சந்தோஷமா பார்த்துக்கணும்’’ - வார்த்தைகள் தீர்ந்துபோக, அதிஷைக் கட்டியணைத்து முத்தமிடுகிறார் மீனா.

தன்னிகரில்லாதது தாயுள்ளம்!

“பெற்றோர் உடல்நலன் முக்கியம்!”

“கர்ப்பக்காலத்திலும், குழந்தையை வளர்க்கிற ஆரம்பகால வருடங்கள்லயும் அம்மாவின் மனநிலைதான் குழந்தைக்கும் இருக்கும். அதனால குழந்தை எப்படி இருந்தாலும், நாம தைரியமா இருந்து அவர்கள் வயதுக்கு இறங்கி, பாசம் காட்டி வளர்த்தால் குழந்தையின் வளர்ச்சியை நல்லபடியா மாத்தலாம். குறிப்பா, என் கணவர் எங்களுக்காகப் பணம் சம்பாதிக்க ஒருநாளில் 18 மணி நேரம் வரை ஓட, நான்  அதிஷுக்கான சிகிச்சைகளுக்கு அலைய... இப்படி எதிரெதிர் திசைகளில் பரபரப்பா இயங்கினதுல, நாங்க ரெண்டு பேரும் தம்பதியா எங்களுக்கான நேரத்தை நிறையவே இழந்திருக்கோம். ஆனா, கணவர் சோமசுந்தரம் என் வாழ்க்கையின் வரம். எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தாரு. எங்களை மாதிரியான தம்பதியர், தங்களின் அந்நியோன்யத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கணும். இல்லைன்னா, அதுவே சில தருணங்கள்ல பெரிய சிக்கலையும் இடைவெளியையும் ஏற்படுத்திடக்கூடும். நிறைய வெளியூர் டிராவல் பண்ணினதால, என் உடல்நிலையைச் சரியா கவனிக்காம விட்டுட்டேன். என்னைப்போல இல்லாம, உங்க உடல்நிலைக்கும் முக்கியத்துவம் கொடுங்க. பெற்றோர் ஆரோக்கியமா இருந்தால்தான், குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க முடியும்” எனத் தன் அனுபவத்திலிருந்து ஆலோசனை கூறுகிறார் மீனா.

‘`அதிஷ் இப்போ வேறு வீட்டில் இருக்கான்!”

‘`நா
ளைக்கு நாங்க இல்லைன்னாலும் அதிஷ் வாழப் பழகிக்கணும் இல்லையா..? அதனால எங்க வீட்டுக்குப் பக்கத்துலயே இன்னொரு வீட்டில் ஒரு பராமரிப்பாளரை நியமிச்சு, அங்க அதிஷைப் பார்த்துட்டு இருக்கோம். ரெண்டு வீட்டிலும் நானும் கணவரும் மாறிமாறி வசிக்கிறோம். இப்போ பல வேலைகளை அவனே சுயமா செஞ்சுக்கிறான். இந்தப் பாசப் போராட்டத்தில் என் மாமியார் சந்திராவும், அம்மா சாவித்ரியும் கொடுத்த ஊக்கம் ரொம்பப் பெரியது’’ என்கிறார் மீனா, நன்றியுடன்!