Published:Updated:

கண்ணீருக்கோ கவலைகளுக்கோ இடமில்லை!

கண்ணீருக்கோ கவலைகளுக்கோ இடமில்லை!
பிரீமியம் ஸ்டோரி
News
கண்ணீருக்கோ கவலைகளுக்கோ இடமில்லை!

தடைகளைத் தகர்த்தெறியும் தாரகைஆர்.வைதேகி - படம் : விநாயக் ராம்

பிரத்திமா ராவ் மாற்றுத்திறனாளி மட்டுமல்ல... மாற்றங்களை விதைத்திருக்கிற திறனாளி. போலியோ பாதிப்பு, சிங்கிள் பேரன்ட், பொருளாதாரச் சுமை எனத் தன் முன் நின்ற அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்து வெற்றியைத் தொட்டவர். மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர் டென்னிஸ் விளையாட்டில் தனி முத்திரையைப் பதித்துவரும் பிரத்திமா ராவின் உலகில் கண்ணீருக்கோ, கவலைகளுக்கோ இடமில்லை. எப்போதும் மாறாத புன்னகையே அவரின் அடையாளம். 

கண்ணீருக்கோ கவலைகளுக்கோ இடமில்லை!

``மங்களூருல பிறந்து அங்கேயே படிச்சு வளர்ந்தேன். மூணு வயசிருக்கும்போது என் வலது கால் போலியோ அட்டாக்ல செயலிழந்து போச்சு. கேலிப்பர் (செயற்கைக் கால்) உபயோகிக்கச் சொல்லி என்னைப் பழக்கினாங்க. அந்தப் பழக்கம் இன்னிக்கு வரைக்கும் தொடருது.

செயலிழந்த காலுடன் வாழறதுல நான் எந்தச் சிரமத்தையும் உணரலை. நான் எதிர்பார்க்காத நேரத்துல என் கல்யாணமும் நடந்து முடிஞ்சது. அம்மா அப்பா பார்த்துப் பண்ணின கல்யாணம்தான். ஆனாலும், எங்களுக்குள்ள நிறைய பிரச்னைகள். அதுக்கு மேல அந்த உறவைத் தொடர்வதில் அர்த்தமில்லைனு தோணிச்சு. டைவர்ஸ் வாங்கிட்டேன். நானும் என் குழந்தையும் அவரிடமிருந்து விலகி வந்துட்டோம்.

அது, நான் எதிர்பார்க்காத பிரிவு. அத்தனை சீக்கிரம் அந்த அதிர்ச்சியிலிருந்து என்னால வெளியில வர முடியலை. என்னை விடுவிச்சுக்கவும், என் குழந்தையை நல்லபடியா வளர்த்து ஆளாக்கவும் எனக்கொரு வடிகால் தேவைப்பட்டது. அப்போ நிறைய விஷயங்களைப் பத்தி யோசிச்சேன்...’’ - வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்ட பிரத்திமாவுக்கு வடிகால் தேடுவதும் பிரச்னையாக இருக்கவில்லை.

``முதல்ல வாள்வீச்சு பண்ணலாமானு யோசிச்சேன். அப்புறம் டென்னிஸ் விளையாடிப் பார்த்தேன். மத்த எல்லாத்தையும்விட  எனக்கு டென்னிஸ் பிடிச்சிருந்தது. சின்ன வயசுலேருந்தே லியாண்டர் பயஸ், சானியா மிர்சாவோட ஸ்டைல்களை ரசிச்சுப் பார்ப்பேன். நான் டென்னிஸைத் தேர்ந்தெடுத்தபோதும் அவங்களே எனக்கு இன்ஸ்பிரேஷனா இருந்தாங்க. முதலில் வார இறுதி நாள்கள்ல மட்டும் விளையாடிட்டு இருந்தேன். மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர் டென்னிஸ்னு ஒண்ணு இருக்கிறது தெரியவந்ததும் அந்த விளையாட்டின் மீதான என் ஆர்வம் பலமடங்கு அதிகமானது...’’ - படபடவெனப் பேசுகிற பிரத்திமா, இப்போதெல்லாம் வார நாள்களில் காலை 6 முதல் 8 மணி வரை டென்னிஸ் பிராக்டீஸ் செய்கிறார். அது முடிந்ததும் மாலை 5.30 மணி வரை ஃப்ரன்ட் ஆபீஸ் வேலை. வார இறுதி நாள்களில் சாப்பாடு, உறக்கம், குழந்தையுடனான கொஞ்சல் என எல்லாமே அவருக்கு டென்னிஸ் கோர்ட்டில்தான்.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கண்ணீருக்கோ கவலைகளுக்கோ இடமில்லை!

``கர்நாடகா ஸ்டேட் லான் டென்னிஸ் அசோஸியேஷன்ல பல மணி நேரம் பயிற்சி செய்வேன். முறைப்படி டென்னிஸ் பயிற்சி எடுக்கணும்னா நிறைய செலவாகும். எனக்கு அந்தளவுக்கு வசதியில்லை. நான் அங்கே பயிற்சியெடுக்கறதைப் பார்த்துட்டுதான் அங்கே உள்ள சீஃப் ட்ரெயினர் ரமேஷ் எனக்கு இலவசமா கோச்சிங் கொடுக்க முன்வந்தார். அதன் பலனா கர்நாடகாவுல நடந்த ஸ்டேட் லெவல் லான் டென்னிஸ் சாம்பியன்ஷிப்ல சிங்கிள்ஸ் அண்டு டபுள்ஸ்ல மெடல் வாங்கினேன்.

2013-ல் நேஷனல் பாராலிம்பிக் வீல்சேர் டென்னிஸ்ல கர்நாடகா சார்பா கலந்துகிட் டேன். செமி ஃபைனல்ஸ் வரைக்கும் வந்தேன். அப்புறம் நேஷனல் வீல்சேர் சாம்பியன்ஷிப்ல ஃபைனல்ஸ் வரைக்கும் வந்தேன். இந்த வருஷம் `மரினா ஓப்பன்ஸ்’  சிங்கிள்ஸ்ல `ரன்னர்-அப்'பா வந்தேன். மலேசியா கப்ல என்னால ஜெயிக்க முடியாததுக்குக் காரணம் என் வீல்சேர்.

வீல்சேர் டென்னிஸ் விளையாடறதுங்கிறது ரொம்பவே சிரமமானது. உடம்போட பக்கவாட்டுப் பகுதிகளுக்குப் பயங்கர வேலை கொடுக்கிற விளையாட்டு இது. வீல்சேரோட கனத்தையும் அசைவையும் பொறுத்துதான் அதுல உட்கார்ந்து விளையாடறவங்களோட வெற்றி தீர்மானிக்கப்படும். கனமான, மெதுவா நகரக்கூடிய வீல்சேர் சரிவராது. நேரமும் எனர்ஜியும்தான் வேஸ்ட்.

நான் சம்பாதிக்கிறது எனக்கும் என் மகனுக்குமான வாழ்வாதாரத்துக்குப் போதுமானது. ஆனா, அதை வெச்சு சர்வதேசத் தரத்துல வீல்சேர் வாங்க முடியாது. நிறைய போட்டிகள்ல கலந்துக்கவும் ஜெயிக்கவும் எனக்குப் புது வீல்சேர் தேவைப்பட்டது. எடை குறைவான, வேகமா இயங்கக்கூடிய வீல்சேர் இருந்தால் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கிற அளவுக்கு என்னால பல போட்டிகள்ல கலந்துக்கிட்டு ஜெயிக்க முடியும். டாப் 100-ல ஒருத்தியா இடம்பெறவும் உதவியா இருக்கும். தவிர, 2020-ல் டோக்கியோவுல நடக்கவிருக்கிற பாராலிம்பிக்ஸ்ல நிச்சயம் பதக்கம் வாங்கிட்டு வர முடியும்னு நம்பறேன்...’’ - நடைமுறைச் சிக்கலைச் சொல்கிற பிரத்திமாவுக்கு, இப்போது கிரவுட் ஃபண்டிங் முறையில் வீல்சேர் உதவி கிடைத்திருக்கிறது.   

கண்ணீருக்கோ கவலைகளுக்கோ இடமில்லை!

``மலேசியாவுக்கும் பாங்காக்குக்கும் விளையாடப்போயிருந்தபோது நான் கவனித்த ஒரு விஷயம் என்னைப் பிரமிக்க வெச்சது. அங்கெல்லாம் சர்வதேச அளவிலான மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு இருக்கிற வசதிகள் மிரள வைக்குது. ஒவ்வொரு மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனையோடவும் கோச் உள்பட ஒரு டீமே ஆதரவா இருக்காங்க. சம்பந்தப்பட்ட அந்த நபர் விளையாடுவதைக் கவனிப்பதோடு, எதிராளியோட பலம், பலவீனத்தையும் கவனிக்கிறாங்க. தவிர, அவங்களுக்கான பொருளாதார உதவிகளை அந்தந்த அரசு சார்ந்த விளையாட்டு அமைப்புகளே ஏத்துக்கிறாங்க.  டென்னிஸை முழுநேர வேலையா எடுத்துக்க ஊக்கப்படுத்தற வகையில, அவங்களுக்கு தினசரி ஊக்கத்தொகையும் கொடுக்கிறாங்க. அதனாலயே அவங்க தினமும் பல மணி நேரம் பயிற்சி பண்ண முடியுது.   

கண்ணீருக்கோ கவலைகளுக்கோ இடமில்லை!


ஆனா, இந்தியாவுல மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு ஸ்பான்சர்ஸ் கிடையாது. யாராவது ஒருவர் தேசிய அளவுல பிரபலமானால் மட்டும்தான் அந்த விளையாட்டின்மீது கவனமே திரும்பும். ஸ்பான்சர்ஸ் கிடைச்சு, விளையாடறவங்களோட வாழ்க்கைத்தரம் உயர்த்தப்பட்டாலே நிறைய பேர் இந்த விளையாட்டை நோக்கி வருவாங்க...’’ - மாற்றுத்திறனாளிகளின் மனசாட்சியாக ஒலிக்கிறது பிரத்திமாவின் குரல்.   

கண்ணீருக்கோ கவலைகளுக்கோ இடமில்லை!

``மன அழுத்தத்துலயும் விரக்தியிலயும் தொலைஞ்சுப் போயிருக்க வேண்டிய என் வாழ்க்கைக்கு இன்னிக்கு ஒரு முகவரி கிடைச்சிருக்கு. அதுக்கு என் நண்பர்கள், என் குடும்பத்தார் எல்லாருக்கும் நான் கடமைப்பட்டிருக்கேன். குறிப்பா, என் 11 வயசு மகன் ப்ரித்வி. தன் வேலைகளைத் தானே பார்த்துக்கிற சமத்துக்குழந்தை. காலையில ஸ்கூலுக்குக் கிளம்பும்போதுகூட என்னை எந்த விஷயத்துக்கும் தொந்தரவு பண்ண மாட்டான். `அம்மா, நீங்க பிராக்டீஸுக் குப் போங்க. சீக்கிரமே நான் உங்களை   டி.வி-யில பார்க்கணும்’னு சொல்லுவான்.

டென்னிஸ் என்பதும் கிட்டத்தட்ட மூளைக்கு வேலை கொடுக்கிற ஒரு விளையாட்டுதான். ஆனால், என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் மூளைக்கு வேலை கொடுக்கிறதோடு  உடம்புக்கும் வேலை கொடுத்துதான் இதை விளையாடணும். நான் பலசாலின்னு நம்பறேன்... உடலளவுல மட்டுமில்லை... மனசளவுலயும்!’’ என்கிற இந்த நன்னம்பிக்கை மனுஷியின்  கனவுகளில் ஒன்று விம்பிள்டனில் விளையாடுவது.

நனவாகட்டும்!