Published:Updated:

கடலோரக் கதைகள்

நம் ஊர் நம் கதைகள்நிவேதிதா லூயிஸ் - படங்கள்: லெய்னா

பிரீமியம் ஸ்டோரி

ச்சில்  வெளிவந்த முதல் தமிழ்ப் புத்தகம் எது? அதை அச்சிட்டவர் யார்? அவருக்கும் பேம்பாறு என்று முன்பு சொல்லப்பட்ட வேம்பாறு என்ற சிற்றூருக்கும் என்ன தொடர்பு? 

கடலோரக் கதைகள்

வேம்பாற்றில் `அசனம்' என்று கேள்விப் பட்டதும், பையைக் கட்டிக்கொண்டு கிளம்பியாகிவிட்டது. ஒரு கடை வீதி, நான்கு தேவாலயங்கள், கடற்கரை, நிறைய வேப்பமரங்கள். வேம்பாற்றின் முகத்துவாரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் கடைக்கோடியில், பெரும்பாலும் பரிதாபமான கட்டமைப்பு வசதிகளுடன்கூடிய சிற்றூர்.மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தோமையார் கோயில் அசனத் திருவிழா மிகப் பிரசித்தம். இது முதலில் ஓலைக் கோயிலாக இருந்திருக்க வேண்டும். இந்தக் கோயிலின் கட்டுமானப் பணி, 1891-ல் 30 ஆயிரம் ரூபாய் செலவில்   தொடங்கப்பட்டதாக, அவ்வாண்டு கௌசானல் அடிகள் எழுதிய கடிதம் தெரிவிக்கிறது. `1916-ல், எஸ்.எஸ்.பாக்கியம் நேமித்த இந்த நிலை குமாரர் தொம்மை யுவானியால் கட்டிமுடிக்கப்பட்ட'தாக ஆலய நிலையில் உள்ள கல்வெட்டு குறிக்கிறது.

`தென்தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் தோமையாரின் காலமான கி.பி 52-ம் ஆண்டு முதலே கிறித்துவம் காணப்பட்டிருக்கிறது என்கிறார் வரலாற்று ஆய்வாளர் டி.கே.ஜோசப். 1604-ம் ஆண்டு, சேசு சபையைச் சார்ந்த தந்தை ரோஸ் எழுதிய `ரெலக்கோ சொப்ரெ அ செர்ரா’ நூலில், தூத்துக்குடியில் இருந்து 6 லீக்குகள் மற்றும் 4 லீக்குகள் தொலைவில் உள்ள பேம்பாறு (வேம்பாறு) மற்றும் வைப்பாறு பகுதிகளில், மலபார் கிறித்துவர்களின் வழித்தோன்றல்கள் என்று தம்மைச் சொல்லிக்கொள்ளும் கிறித்துவர் அல்லாத `தரிசுக்கல் நாயக்கர் (தரிசா)’ என்ற இன மக்கள் வாழ்கிறார்கள்’ என்று குறிப்பிடுகிறார். இந்தத் தரிசா கிறித்துவர்கள், கொல்லத்தின் `தரிசப்பள்ளி’ என்று கி.பி 880-ம் ஆண்டின் தரிசப்பள்ளி செப்பேடுகளில் சொல்லப்படும் தரிசா கிறித்துவப் பிரிவினராக இருக்கக்கூடும். தரிசா என்பதற்குச் சிரிய மொழியில், ‘வைதீகமான’ என்று பொருள். 1644-ல் எல்.பெஸ்ஸி எனும் பாதிரியார் எழுதியுள்ள கடிதத்தில், வைப்பாற்றில் 850 கிறித்துவர்களும், வேம்பாற்றில் 1,300 கிறித்துவர்களும் இருந்ததாகத் தெரிவிக்கிறார்.

கடலோரக் கதைகள்

பூஜை முடிந்து பங்குத்தந்தை கையில் கொழுத்த கிடா ஒன்றுடன் முன்செல்ல, கையில் விளக்கு ஒன்றுடன் உபதேசியார் மற்றும் வரிசையாக மாலையும் பூவும் அணிந்த கிடாக்கள், பளபளக்கும் புதிய பாத்திரங்கள், அரிசி மூட்டைகள், வெங்காயம், தக்காளி, ஓலைப் பெட்டிகளில் இன்னும் சில பொருள்கள், வாழை இலைக் கட்டுகள், அகப்பைகளுடன் மக்கள் கூட்டம் விறுவிறுவென நடந்தது, கல்லறைத் தோட்டம் நோக்கி.

தென் தமிழகத்துக் கிறித்துவத் தேவாலயங் களில் இந்த அசனங்கள் அடிக்கடி நடப்பதுண்டு. வேண்டுதல்கள் நிறைவேறினால்,  குடும்பங்களாக அசனம் கொடுப்பதுண்டு. மெய்ஞானபுரம், புளியம்பட்டி, மறவன்குடியிருப்பு தேவாலயங் களில் ‘பொது அசனம்’ நடப்பது வாடிக்கை. ராபர்ட்டோ நொபிலி, கான்ஸ்டன்டைன் பெஸ்கி போன்ற பிற மத/இனத் தமிழக மக்களின் வாழ்வியல் பழக்க வழக்கங்களைக் கிறித்துவத்தோடு இணைத்த ஐரோப்பியரின் தாக்கம் இதுவாக இருக்கலாம். அசனம் என்பது தூய தமிழ்ச்சொல்.

மாதவர்க்கு எள், எண்ணெய், பருத்தித் துணியை `அசனம்’ கொடுப்பவன் துணையோடு இன்பமாக வாழ்வான் என்கிறது பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான ஏலாதி.  `பிங்கள நிகண்டு' நூலிலும் ‘அசனம்’ எனும் சொல் உணவைக் குறிக்கவே பயன்படுகிறது.அசனம்/அயனம் என்பது நெய்தல் பகுதியின் அன்னதானமாகக் கொள்ளலாம். சமுதாய உணவு - ஒன்றாகச் சமைத்து உண்பது சரி, அது ஏன் கல்லறையில்?அதற்கும் ஊர்க்காரர்கள் ஒரு வரலாற்றைச் சொல்கிறார்கள். 

கடலோரக் கதைகள்

19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், காலராவின் தாக்கத்தால் இப்பகுதிகளில் கொத்துக் கொத்தாக மக்கள் மரித்தனர்.தொடர் மரணங்களைத் தடுக்க, கல்லறைத் தோட்டத்தில், ஊர் மக்கள் ஒன்றுகூடிப் பொது விருந்து சமைத்து உண்பதாக நேர்ந்து கொண்டபின், காலராவும் அதனால் நிகழ்ந்த மரணங்களும் மட்டுப்பட்டன. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, புரட்டாசி மாதம் முதல் திங்களில் அசன விருந்து தொடர்கிறது. கல்லறைச் சிலுவைகள் அனைத்தும் அகற்றப்பட்டு ஓர் ஓரமாக வைக்கப்பட, பெரும் மைதானமாகக் காட்சியளிக்கிறது கல்லறை. அதன் நடுவில் பொது அடுப்பைப் பெண்கள் சூழ்ந்து ஒருபுறம் மூட்ட, மறுபுறம் ஆண்கள் ஆடுகளை வெட்டி, சுத்தம் செய்யத் தொடங்குகிறார்கள். தேங்காய் அரைக்க மிக்ஸி தேவை என்று மைக்கில் ஒருவர் கேட்டுக்கொண்டிருக்க, நா2ங்கள் மெள்ள ஊரைச் சுற்றிவரக் கிளம்பினோம்.

முதலில் சென்றது ஊரின் முகப்பில் உள்ள சர்ப்ப மடத்துக்கு. திருச்செந்தூருக்கு நடைப் பயணம் செய்யும் பயணிகளுக்காகப் பிற்காலப் பாண்டியர் அல்லது நாயக்கர் காலத்தில் ஆறு தளங்களாகக் கட்டப்பட்டது இந்தச் சத்திரம் என்கிறார்கள். இப்போது இரண்டு தளங்கள் மட்டுமே தெரிகின்றன. பாம்புகள் புகலிடமாக மாறியதால் சர்ப்ப மடம்/மண்டபம் என்ற பெயர் மாற்றம் வந்திருக்கலாம். அழகிய தூண்கள், அவற்றில் சிவலிங்கம், மயிலுடன் முருகர், பிள்ளையார், தாமரையுடன் அன்னங்கள் என அத்தனையும் மணல் மெள்ள மெள்ள மூழ்கடித்துக்கொண்டிருக்கிறது.

அடுத்து சென்றது வேம்பாறு வீரிய பெருமாள் ஐயனார் கோயில். வழக்கமான ஐயனார் போல் இல்லாமல் இந்த ஐயனாருடன், சுமார் 200 ஆண்டுகளுக்குமுன் மணலிலிருந்து எடுத்து பூஜை செய்த மூதாதையர்களின் சிலைகள் துணைநிற்கின்றன. 1850-களில் பஞ்சம் பிழைக்க விருதுநகர் மற்றும் சிவகாசி பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த வேம்பாறு மக்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை, மாசி மாத சிவராத்திரியை ஒட்டிய சனி, ஞாயிறு, திங்களில் மாமிச விருந்து படைத்து உண்கிறார்கள். ஐயனாருக்கு முன்பு தளபதியான பெரிய கருப்பசாமி, அவருடைய பரிவார தெய்வங்கள் - சங்கிலிகருப்பன், இருளப்பன், ஐயனாரின் பரிவார தெய்வங்கள் - லாடசன்னாசி, வன்னியராசன், ராக்காச்சி, பேச்சி, பிணந்திண்ணி, பிள்ளைத்தூக்கி என்ற பெண் தெய்வங்களும் வரிசையாக அணிவகுக்கின்றன.

கோயிலில் எக்கச்சக்கமான மணிகளும், மாவுத்தன் (தாடி, தலைக்கட்டுடன் ராவுத்தர்/பட்டாணி) அமர்ந்திருக்கும் யானை சிலைகளும் உள்ளன. அத்தனையும் நேர்த்திக்கடன். இந்தக் கோயிலுக்குச் செல்லும் பாதையை 1900-களில் இனாமாக வழங்கியிருக்கிறார் வேம்பாற்றைச் சார்ந்த பெருவணிகர் டி’மெல். மத நல்லிணக்கம் அப்போதே இவர்களுக்குள் அழகாகப் பரிணமித்திருக்கிறது.

அருகிலேயே இருக்கிறது வீரியக்காரியம்மன் கோயில். நாட்டார் தெய்வங்களுக்கு உண்டான தனிக்கதை வீரியக்காரிக்கும் உண்டு. கூத்தன் சகோதரர்களின் ஒரே தங்கையான வீரியக்காரி, சிறுவயதிலேயே வெற்றிக்கு மணம் முடிக்கப்பட்டாள். காலரா கண்டு வெற்றி இறந்துவிட, அது தெரியாமலேயே வளர்க்கப்படும் வீரியக்காரி, சில ஆண்டுகளுக்குப் பின் விவரம் தெரிந்ததும், ஒருநாள் உடன்கட்டை ஏறிவிடுகிறாள்.முந்தானையில் எலுமிச்சையும் பூவும் கட்டிக் கொண்டு தீயில் அவள் குதித்துவிட, அவை கருகாமல் அப்படியே இருந்ததாம்.வீரியக்காரிக்கும் வெற்றிக்கும் ஒரே கல்லில் சிலை இருக்கிறது. கருப்பட்டி பணியாரம் படைக்கப்படுகிறது. 

கடலோரக் கதைகள்

வரும்வழியில் பிரமாண்டமாக நிற்கிறது வேம்பாறு பரிசுத்த ஆவிக் கோயில். 1536-ம் ஆண்டு வேம்பாற்றில் மீனவ மக்கள் மொத்தமாக மதம் மாறியதாகத் தந்தை ஃபெர்ரோலி எழுதிய `மலபாரின் ஜெசுட்டுகள்’ புத்தகம் தெரிவிக்கிறது. முத்துக் குளித்தலில் இசுலாமியரோடு உள்ள பிரச்னைகள் நீங்க, போர்த்துகீசியர்களுடன் உடன்படிக்கை செய்துகொண்டு மதம் மாறிய இவர்கள், 1544-ம் ஆண்டு மண்ணால் ஆன கோயில் ஒன்றை நிறுவி வழிபட்டு வந்துள்ளனர். 1658-ம் ஆண்டு போர்த்துகீசியர்களை தோற்கடித்த டச்சுப் படைகள், இந்தத் தேவாலயத்தை இடித்து, தங்கள் தளவாடக் கிடங்காக மாற்றிவிட்டனர். 1720-ல் மீண்டும் கட்டப்பட்ட ஆலயம் சேதம் அடைந்து, 1915-ல் புதுப்பிக்கப்பட்டது. மிகப்பெரிய அழகிய தேவாலயமான இதில் இப்போது மராமத்துப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. கோயிலினுள், இலங்கையில் வியாபாரம் செய்துவந்த டி’மெல் என்ற இந்த ஊரைச் சேர்ந்த பெரு வணிகருக்கு 1919-ம் ஆண்டு தேதியிட்ட லத்தீன் மொழிக் கல்வெட்டு ஒன்றுள்ளது. இந்தக் கோயிலைக் கட்டப் பொருளுதவி அளித்த டி’மெல்லைப் புகழ்கிறது இப்படி... `வேம்பாற்றில் தலைசிறந்த கொடையாளரான இவருக்கும், இவர் குடும்பத்தாருக்கும் திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த பிஷப் ஆணைப்படி ஒரு பூஜை செய்ய' பணிக்கிறது. இவை தவிர, 1929-ல் கட்டப்பட்ட எஸ்பிஜி மிஷனின் பரி.தோமா தேவாலயமும் இவ்வூரில் உள்ளது.

மாலை கல்லறையிலேயே பூஜையைக் கண்டுவிட்டு, பத்தாயிரம் பேர் ஆனந்தமாக இரவு உணவு உண்டுசென்றனர். 1.25 டன் அரிசி, 1.5 டன் ஆட்டுக்கறி. யார், என்ன என்கிற  கேள்விகள் இல்லை. வந்தவர் அனைவருக்கும் உணவு.

சரி, தமிழில் அச்சிடப்பட்ட முதல் நூலுக்கும் இந்த ஊருக்கும் என்ன சம்பந்தம்? அந்த நூல் தமிழின் அச்சுத் தந்தையான ஹென்றிக் ஹென்றிக்ஸ் என்ற பாதிரியார் கொல்லத்தில் 1578-ல் அச்சிட்ட `தம்பிரான் வணக்கம்’ என்ற சிறு கிறித்துவ ஜெப நூல். ஐரோப்பிய மொழியல்லாத வேற்றுமொழியில் வெளிவந்த முதல் நூலும் இதுவே. போர்த்துகீசியரான ஹென்றிக் ஹென்றிக்ஸ் தமிழ்க் கற்றுத் தேர்ந்தது வேம்பாற்றில் உள்ள மக்களிடம். 1548-ல் ஹென்றிக்ஸ், இவ்வூரில் பணி செய்யும்போது, இங்குள்ள ‘துப்பாசியார்’ (மொழிபெயர்ப்பாளர்)வேறு பணியைப் பார்க்கச் சென்றுவிட்டதால், தாமே மக்களிடம் தமிழ்க் கற்றுத் தேர்ந்துவிட்டதாக இக்னேஷியஸ் லொயோலாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார். முதல் தமிழ் அச்சு நூல் படைப்பாளருக்கே தமிழ் புகட்டிய ஊர் வேம்பாறு!

தகவல் உதவி: கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பாறு, PAM சுந்தரவேல், விருதுநகர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு