Published:Updated:

உலகையே நீங்கள் வலம் வரலாம்!

உலகையே நீங்கள் வலம் வரலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
உலகையே நீங்கள் வலம் வரலாம்!

வாழ்வை மாற்றிய புத்தகங்கள்சாஹா

``சாப்பாடு, தூக்கம் போல என் அன்றாடக் கடமைகளில் ஒன்று வாசிப்பு. நேரமின்மை, வாசிக்கிற மனநிலை இல்லை என எந்தக் காரணத்துக்காகவும் அந்தப் பழக்கத்தை நான் ஒருநாளும் விட்டுக் கொடுத்ததில்லை. அந்தளவுக்குத் தீவிர வாசிப்பாளர் நான். 

உலகையே நீங்கள் வலம் வரலாம்!

புத்தக வாசிப்பைத் தவிர்க்க நேரமின்மையைக் காரணம் காட்டுவதை நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன். அரசியல், நடனம் என இரண்டு துறைகளிலும் பரபரப்பாகவே இருக்கிறேன். ஆனாலும், எப்படியாவது வாசிப்புக்கென தினம் ஒரு மணி நேரத்தை ஒதுக்க என்னால் நிச்சயம் முடியும். எனக்கு டி.வி பார்க்கிற பழக்கம் கிடையாது. கிடைக்கிற உபரி நிமிடங்களை வாசிப்புக்கு மட்டுமே பயன்படுத்துவேன். தீவிர வாசிப்புக்குள் நான் மூழ்கிப் போனதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் முன்னாள் குடியரசுத் தலைவரான என் அப்பா பிரணாப் முகர்ஜிதான்.சிறுவயதிலிருந்தே நான் எந்த விஷயம் குறித்து அவரிடம் சந்தேகம் கேட்டாலும் அதுதொடர்பாகக் குறைந்தது ஐந்து புத்தகங்களையாவது குறிப்பிட்டுப் படித்துப் பார்க்கச் சொல்வார். அவரும் நானும் புத்தகங்களைப் பற்றி நிறைய பேசுவோம். இன்றுவரை அந்தப் பழக்கம் தொடர்கிறது.

ரவீந்திரநாத் தாகூர் புத்தகங்களிலிருந்து அமிதாவ் கோஷ், மிலன் குந்தேரா புத்தகங்கள் வரை அனைத்தும் எனக்குப் பிடிக்கும். பெங்காலி மற்றும் ஆங்கில மொழிப் புத்தகங்களே என் சாய்ஸ்.

என்னைப் போன்ற தீவிர வாசிப்பாளர்களுக்கு வாழ்வை மாற்றிய புத்தகம் என்றோ, விருப்பமான புத்தகம் என்றோ ஒன்றிரண்டை மட்டும் சுட்டிக் காட்டுவது இயலாதது. அந்தப் பட்டியல் மிக மிக நீளமானது. வாசிக்கிற ஒவ்வொரு புத்தகமும் ஏதோ ஒருவகையில் நம் வாழ்வில் மாற்றத்தைத் தூவி விட்டுத்தானே போகிறது? அப்படி எல்லாவற்றையும் பற்றிப் பேச இங்கே இடமும் போதாது.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் பிரபல எழுத்தாளர் மார்க்வெஸ் எழுதி, நோபல் பரிசு வென்ற ‘100 இயர்ஸ் ஆஃப் சாலிட்யூட்’. சர்ரியலிஸ்ட் ரைட்டர் அவர். மனிதக் கற்பனைகளை இவரை மாதிரி அழகாகச் சொல்ல வேறு யாராலும் முடியாது. இந்தப் புத்தகத்தை நான் நூறு முறைக்கும் மேல் வாசித்திருக்கிறேன்.

என்னுடைய ஆல்டைம் ஃபேவரைட் எழுத்தாளர் அமிதாவ் கோஷ். புனைவு மற்றும் அபுனைவு என இரண்டிலும் அவரின் எழுத்துகள் பிரமாதமாக இருக்கும். நிகழ்வுகளைப் பற்றி எழுதும்போது நிறைய ஆய்வு
கள் செய்து எழுதுவது அவரது தனித்திறமை.

வரலாறு, அரசியல், அறிவியல் என எல்லா வகையான புத்தகங்களையும் படிப்பேன் என்றாலும், என்னுடைய விருப்பம் புனைகதைகள்தான். என் விருப்பப் புத்தகங்களின் பட்டியலில் ஹாரி பாட்டர் கலெக் ஷனும் உண்டு. அனைத்துத்  தொகுதிகளையும் வாசித்து முடித்துவிட்டேன். சிலவற்றை மீண்டும் மீண்டும் வாசித்திருக்கிறேன். ஜே.கே.ரௌலிங்கின் எழுத்து நடை, வாசகருடன் நேரடியாகப் பேசக்கூடியது.

இணையதளத்தில் வாசிப்பது, செல்போனில் வாசிப்பது, கிண்டிலில் வாசிப்பது என வாசிக்கிற பழக்கம் இன்று எவ்வளவோ நவீனமாகி இருக்கலாம். ஆனாலும், எனக்குப் புத்தகங்களைக் கையில் வைத்துக்கொண்டு வாசிப்பதில்தான் மனநிறைவு கிடைக்கும். அந்த வகையில் நான் இன்னும் பழைமைவாதியே.   

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
உலகையே நீங்கள் வலம் வரலாம்!

ஒரே புத்தகத்தைத் திரும்பத் திரும்ப வாசிப்பதும் என் வழக்கம். தாகூரின் கவிதைகளையும் அமிதாவ் கோஷின் புனைகதைகளையும் பலமுறை வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் அந்தப் புத்தகம் புதிது புதிதான அனுபவத்தைக் கொடுப்பதை உணர முடியும். அதேபோல ஒரே நேரத்தில் நான்கைந்து புத்தகங்களை வாசிப்பதும் எனக்குப் பிடிக்கும். அருந்ததி ராயின் புத்தகத்தையும், துருக்கிய எழுத்தாளர் எலிஃப் சஃபாக்கின் புத்தகத்தையும் சமீபத்தில்தான் வாசித்து முடித்தேன். இப்போது நான் வாசித்துக்கொண்டிருப்பது என் அப்பா பிரணாப் முகர்ஜி எழுதிய The Coalition Years: 1996 to 2012. அவரின் அனுபவங்களையும் எழுத்து நடையையும் ரசித்துச் சிலிர்த்தபடி வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

கூடவே பரஷுராம் என்கிற புனைபெயரில் எழுதும் ராஜசேகர் பாசுவின் சிறுகதைத் தொகுப்பையும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். திடீரென கவிதைப் புத்தகங்கள் வாசிக்கத் தோன்றும். திடீரென கதைகள் பிடிக்கும். எந்தப் புத்தகத்தை வாசிக்கிறேன் என்பது அந்த நேரத்து மனநிலையைப் பொறுத்தது.

என் நண்பர்கள், என்னை அறிந்தவர்கள் அனைவருக்கும் என்னுடைய தீவிர வாசிப்புப் பழக்கம் தெரியும். அதனால், அவர்களிடமிருந்து எனக்குவரும் பரிசுகள் புத்தகங்களாகவே இருக்கும். எழுத்துக்கூட்டி வாசிக்கப் பழகிய நாள்களிலேயே எனக்கு புத்தகங்கள் அறிமுக மாகிவிட்டன. ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்க்கையில் வாசிப்பு மிக அவசியம். உட்கார்ந்த இடத்திலிருந்தே, உங்கள் கைகளில் உள்ள புத்தகத்தின் மூலம் உலகையே நீங்கள் வலம் வரலாம். பலதரப்பட்ட மனிதர்களைப் பற்றி, கலாசாரத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம். வாசிப்பு உங்கள் உலகத்தை விசாலப்படுத்துகிறது. உங்கள் மனதைத் திறக்கிறது. வேறு எந்த விஷயத்தாலும் பெற முடியாத ஓர் அனுபவத்தைத் தருகிறது. உங்களுக்கே உங்களுக்கான ஓர் உலகத்தில் சஞ்சரிக்கச் செய்ய ஒரு புத்தகத்தால் மட்டுமே முடியும்!