Published:Updated:

தடைகளை உடைத்த டென்னிஸ் தாரகை!

தடைகளை உடைத்த டென்னிஸ் தாரகை!
பிரீமியம் ஸ்டோரி
News
தடைகளை உடைத்த டென்னிஸ் தாரகை!

வாவ் லேடிமு.பிரதீப் கிருஷ்ணா

பிப்ரவரி 22, 2003… டென்னிஸ் அரங்கிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவிக்கிறார் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற இந்தப் பெண். டென்னிஸ் உலகமே ஆச்சர்யமடைந்தது. காரணம், அப்போது இவருக்கு வயது 22 தான். எண்ணில் அடங்கா காயங்கள், ஏராளமான அறுவைசிகிச்சைகள்... அதனால் யாரும் எதிர்பாரா வகையில் இளம்வயதிலேயே ஓய்வு முடிவை அறிவித்தார் ஸ்விட்சர்லாந்தின் டென்னிஸ் ராணி மார்டினா ஹிங்கிஸ்.

இச்சம்பவத்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன்புதான் ஹைதராபாத் ஓப்பன் டென்னிஸ் தொடரில் தன் முதல் சர்வதேச சீனியர் போட்டியில் பங்கேற்கிறார் சானியா மிர்சா. அப்போது சானியா யார் என்பதை இந்திய மக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், 12 ஆண்டுகள் கழித்து சானியாவை உலகின் `நம்பர் ஒன்’ அரியணையில் அமர்த்தினார் ஸ்விஸ் ஜாம்பவான் மார்டினா. பயிற்சியாளராக அல்ல, சக வீராங்கனையாக.

தடைகளை உடைத்த டென்னிஸ் தாரகை!

ஆம், அத்தனை காயங்களையும் கடந்து, இரண்டுமுறை ஓய்வை அறிவித்து, மீண்டும் களத்துக்குத் திரும்பி, 37 வயதிலும்கூட டென்னிஸ் அரங்கைத் தன் அசத்தல் ஆட்டத்தால் அசரடித்த மார்டினா ஹிங்கிஸ், தான் உயிராக நேசித்த விளையாட்டுக்கு இப்போது பிரியாவிடை கொடுத்துள்ளார். 

ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என மொத்தம் 25 கிராண்ட்ஸ்லாம்கள்;  மொத்தம் 107 பட்டங்கள்; 1,308 போட்டிகளில் 1,131 வெற்றிகள்; தொடர்ந்து 209 வாரம் பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் முதலிடம்; ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் என நீள்கின்றன இவரின் சாதனைகள். மார்டினா ஹிங்கிஸ் எனும் பெயர் டென்னிஸ் வரலாற்றில் முக்கிய அங்கம் வகிக்கக் காரணம் இவருடைய சாதனைகள் மட்டுமல்ல, இவர் எதிர்கொண்ட சோதனைகளும்தான். விளையாட்டின் மீதான காதல், வெற்றியின் மீதான பசி, ஒரு பெண்ணை எத்தனை முறை தடைகளைத் தாண்ட வைக்கும் என்பதுதான் டென்னிஸ் உலகின் இந்த கம்பேக் குயினிடம் நாம் கற்றுக்கொள்ள ேவண்டிய பாடம்.

சர்வதேச டென்னிஸ் அரங்கில் அடியெடுத்து வைத்தபோது ஹிங்கிஸுக்கு வயது 14. தன் வயதையே அனுபவமாகக்கொண்ட சீனியர் வீராங்கனைகளுக்கு டஃப் கொடுத்தார். 15 வயதிலேயே தன் முதல் இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று டென்னிஸ் உலகை உறையவைத்தார். ஒற்றையர் பிரிவில் ஒரு கிராண்ட்ஸ்லாம் வெல்வதே மாபெரும் சாதனை. இவரோ, 1996-ம் ஆண்டு அனைத்து கிராண்ட்ஸ்லாம் தொடர்களின் இறுதிப் போட்டிகளுக்கும் முன்னேறினார். அதில், மூன்று வெற்றிகள். 17 வயதுக்குள் ஒற்றையர் பிரிவில் `நம்பர் ஒன்’ இடத்தைப் பிடித்தார். 

டென்னிஸ் பரிணாமம் அடைந்து கொண்டிருந்த அந்தக் காலத்தில் ஃபிட்னெஸ் மிக முக்கியமானதாக இருந்தது. மார்ட்டினாவுக்கு மற்ற வீராங்கனைகள்போல திடமான உடல்வாகு இல்லை. எனினும், இவருடைய வேகமான கைகள் அனைவரையும் சமாளித்தன. ஒரே ஃபார்மட்டில் தொடர்ந்து விளையாடுவதே சிரமம் என்ற நிலையிலும், ஒற்றையர், இரட்டையர் என இரண்டிலும் தொடர்ந்து பங்கெடுத்தார்.

2001-ம் ஆண்டு அக்டோபரில் கணுக்காலில் காயம் ஏற்பட, அதற்கு அறுவைசிகிச்சை செய்துகொண்டார். ஏழு மாதங்கள் கழித்து மீண்டும் கணுக்காலில் எலும்பு முறிவு... மீண்டும் அறுவைசிகிச்சை. ஓய்வுக்குப் பிறகு ஆட வந்தவருக்கு, காயத்தின் அவதி தொடர்ந்தது. ஒருகட்டத்தில் விளையாடவே முடியவில்லை. 22 வயதில் ஓய்வை அறிவித்தார். அப்போதே தன் டென்னிஸ் வாழ்க்கையில் 76 பட்டங்கள் வென்றிருந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தடைகளை உடைத்த டென்னிஸ் தாரகை!

மார்ட்டினாவை ஊக்கமருந்து பயன் பாட்டுக்காக இரண்டாண்டுகள் தடைசெய்தது சர்வதேச டென்னிஸ் சங்கம். சோதனை நடந்தபோதே, மீடியாவை அழைத்து அதுபற்றிப் பேசிய தைரியசாலி இவர். ஆனால், இரண்டாண்டுகள் தடையை ரத்து செய்ய மறுத்துவிட்டனர். `மார்ட்டினா குற்றமற்றவர்’ என மொத்த டென்னிஸ் உலகமும் ரசிகர்களும் ஆதரவாக நின்றனர். இந்தப் பிரச்னைக்குப் பிறகுதான், விதிமுறைகளை மாற்றி அமைத்தது சர்வதேச டென்னிஸ் சங்கம். அதிலிருந்தும் மீண்டு, `நான் குற்றமற்றவள்’ என்பதை நிரூபித்தார் இந்தப் போராளி.

தடை விதிக்கப்பட்டதால் மீண்டும் ஓய்வை அறிவித்தார். அவ்வப்போது காட்சிப் போட்டிகளில் மட்டும் விளையாடியவரால், வெறுமனே நேரத்தைக் கழிக்க முடியவில்லை. `என் வயதுக்காரர்கள் எல்லோரும் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். நான் மட்டும் ஏன் விளையாடக் கூடாது?' என்று 2013-ம் ஆண்டில் இரண்டாவது முறையாக கம்பேக் கொடுத்தார். அப்போது மார்ட்டினாவுக்கு வயது 33. ஓய்வு அறிவிக்க வேண்டிய வயதுதான். ஆனாலும், ஆடுகளத்துக்குள் தைரியமாக நுழைந்தார். `இவரால் ஒரு பதக்கம்கூட வெல்ல முடியாது' என்று ஆருடம் சொன்னார்கள். அவற்றையெல்லாம் பொய்யாக்கினார் மார்ட்டினா. இந்த கம்பேக் வேறு லெவலில் இருந்தது.

இந்தக் காலகட்டத்தில் இரட்டையர் போட்டிகளில் மட்டுமே பங்கேற்ற மார்ட்டினா, பொறுமையாகத் தனது ஆட்டத்தை மீட்டெடுத்தார். 2015-ம் ஆண்டு இவருக்கு ஸ்பெஷலாக அமைந்தது. அதில் இந்தியர்களின் பங்கு பெரும் அங்கம் வகித்தது. கலப்பு இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸுடன் இணைந்து நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றார். இரட்டையரில் சானியாவுடன் இவர் அமைத்த கூட்டணி, அனைத்து வீராங்கனைகளையும் ஆச்சர்யப்படுத்தியது. பல சாதனைகளை உடைத்தெறிந்து, 40 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிபெற்ற இந்த இரட்டையரை ‘சான்டினா’ என்று டென்னிஸ் உலகமே கொண்டாடியது.

இரண்டு வயதில் டென்னிஸ் மட்டையைக் கையில் எடுத்து, நான்கு வயதிலேயே போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கிய ஆச்சர்ய மனுஷி மார்டினா ஹிங்கிஸ்... இப்போது 37 வயதில், உறுதிபட  ஓய்வை அறிவித்துள்ளார். அத்தனை காயங்களையும் கடந்து, இவர் இதுவரை ஆடியதே பெரிய விஷயம்.  எனினும், அவ்வளவு எளிதில் டென்னிஸ் உலகிலிருந்து முற்றிலுமாக விலகிவிட மாட்டார். 2013-ம் ஆண்டில் இளம் வீராங்கனைகளுக்குப் பயிற்சியாளராக இருந்துள்ளார். எனவே, இனி அடுத்த அரிதாரம் பூசி, இவர் டென்னிஸ் அரங்கினுள் நிச்சயம் அடியெடுத்து வைப்பார். அதுதான் டென்னிஸுக்கும் நல்லது. ஏனெனில், ஒரு போராளி என்றுமே வெளிச்சத்தில் இருக்கும்போதுதான் அடுத்த தலைமுறையின் மனதில் அந்தப் போர்க்குணத்தை விதைக்க முடியும்.