Published:Updated:

``இந்த மண்ணுக்காக எங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை!’’

 ``இந்த மண்ணுக்காக எங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை!’’
பிரீமியம் ஸ்டோரி
News
``இந்த மண்ணுக்காக எங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை!’’

போராளி மனைவிவெ.நீலகண்டன் - படங்கள்: கே.குணசீலன்

“வீட்டைவிட்டு வெளியில கிளம்பினார்னா, பரப்புரைப் பயணமா, போராட்டக்களமா, சிறையான்னு எதுவும் தெரியாது. திருமணமான புதுசுல பதற்றமா இருந்துச்சு. போகப்போக இந்தப் போராட்டங்களோட நியாயம் புரிய ஆரம்பிச்சுச்சு. நாம பிறந்த மண்... தலைமுறை தலைமுறையா நமக்குச் சோறுபோட்ட மண்... நம்ம வரலாறு வேரும் விழுதுமா புதைஞ்சுகிடக்கிற மண்... இந்த மண்ணை எண்ணெய்க்காகவும் நிலக்கரிக்காகவும் மீத்தேனுக்காகவும் கூறுபோடத் துடிக்கிறாங்க. அதைத் தடுக்கிற கடமை இந்த மண்ணுல பிறந்த எல்லோருக்கும் இருக்கு. அதைத்தான் அவர் செய்கிறார். அதிகார மையங்களுக்கு எதிரா போராடும்போது, அதிகபட்சம் உயிர்போகும். இப்போ அதையும் எதிர்கொள்ளக்கூடிய பக்குவத்தை வளர்த்துக்கிட்டோம்...”

தெளிவாகவும் உறுதியாகவும் பேசுகிறார் சித்ரா. மீத்தேன் திட்டத்துக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவரும் பேராசிரியர் ஜெயராமனின் மனைவி. ஆசிரியை, அரிவையர் சங்கத்தின் முன்னணித் தலைவி என பல முகங்கள் இவருக்கு. ஜெயராமன் சிறைக்குச் சென்ற காலங்களில் போராட்டங்களை வழி நடத்திய அனுபவமும் உண்டு.

“பெரிசா அரசியல் எல்லாம் எனக்குத் தெரியாது. ரொம்பவே சாதாரண விவசாயக் குடும்பத்துல பிறந்தவ நான். அப்பா, தஞ்சாவூர்ல ஹோட்டல் வெச்சிருந்தார். ஓர் அண்ணன், அஞ்சு தம்பி,  ரெண்டு தங்கைன்னு பெரிய குடும்பம். அப்பா வீர விளையாட்டுக் கலைஞரும்கூட. குச்சி சுத்துறதுல பெயர் பெற்றவர்.

 ``இந்த மண்ணுக்காக எங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை!’’

1982-ல் ப்ளஸ் டூ முடிச்சவுடனே திருமணம் ஆகிடுச்சு. அப்போ அவர் ஏவிசி கல்லூரியில் பேராசிரியரா இருந்தார். திருமணத்துக்கு முன்னால, போராட்டத்துக்கெல்லாம் போவார்னு சொல்லக் கேள்விப்பட்டிருக்கேன். எனக்கு அதெல்லாமே புதுசா இருந்துச்சு. கல்லூரிக்குப் போவார். போராட்டத்துல கைதாகிட்டார்னு செய்தி வரும்; பதற்றமா இருக்கும்.

பேச்சு ஒரு மாதிரி, வாழ்க்கை ஒரு மாதிரி இல்லாத ஒரு கணவர் அமையறது வரம். ஒரு வார்த்தை சுடுசொல் பேச மாட்டார். முழுச் சுதந்திரம் கொடுப்பார். வரலாறு, அரசியல் அறிவியல்னு ரெண்டு எம்.ஏ பண்ணியிருக்கார். அவரோட எம்.பில் ஆராய்ச்சியே தமிழீழம் பத்தித்
தான். பிஹெச்.டி ஆய்வு, தமிழ்த் தேசியம் பத்தி.

அவர்கிட்ட ரொம்பப் பாமரத்தனமா சந்தேகங்கள் கேட்பேன். பொறுமையா விளக்குவார். பலநாள் இரவுகள்ல நேரம் போறது தெரியாம பேசியிருக்கோம். மண் பத்தி, அரசியல் பத்தி, வரலாறு பத்தியெல்லாம் ஒரு மாணவருக்குச் சொல்லிக்கொடுக்கிற மாதிரி பேசுவார். ப்ளஸ் டூ மட்டுமே முடிச்சிருந்த நான், எம்.ஏ. பி.எட் படிக்கவும் அவர்தான் காரணம். அண்ணாமலை பல்கலைக்கழகத்துல  நான் படிக்கும்போது அவர்தான் பேராசிரியரா வந்து வகுப்பெடுத்தார்.

தமிழ்த் தேசியம், மனித உரிமை, காவிரி, பேராசிரியர்கள் பிரச்னைன்னு எல்லாத்துலயும் முன்னால நிப்பார். அதேநேரம், கல்லூரிக்குள்ள நுழைஞ்சிட்டா பொறுப்பான பேராசிரியர். அவர் வரலாறு நடத்துறதைக் கேட்டுக்கிட்டே இருக்கலாம். நெப்போலியன் பத்தி பாடம்  நடத்தினா, வகுப்பறையில நெப்போலியனாவே மாறிடுவார். வீர சிவாஜி பத்தி பாடம் நடத்தினா, சிவாஜி மாதிரியே நடந்து காண்பிப்பார். அவ்வளவு சிறப்பான உடல்மொழி அவருக்கு. அதனாலதான், யாருக்குமே கிடைக்காத பெரிய பெருமை அவருக்குக் கிடைச்சுச்சு. 1979 முதல் 2012 வரை அவர்கிட்ட படிச்ச மாணவர்கள் எல்லாம் ஒருங்கிணைஞ்சு அவரோட ஓய்வுநாள் நிகழ்ச்சியை ரொம்பச் சிறப்பா நடத்தினாங்க. எல்லோரும் ஒரு பெரிய தொகையைப் போட்டு கல்லூரியில் இவர் பேர்ல ஓர் அறக்கட்டளையும் ஆரம்பிச்சாங்க. அந்த அளவுக்கு மாணவர்களோட மனதை வென்றவர் அவர்...” - சித்ராவின் கண்கள் லேசாக அரும்புகின்றன.

காவிரிப்படுகை என்பது ஆதிச்சோழர்கள் காலத்திலிருந்தே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட வேளாண் பூமி. தலைமுறை தலைமுறையாக விவசாயத்தையே வாழ்க்கையாகக்கொண்ட மக்கள். அந்த விவசாய பூமிக்குக் கீழே நிலக்கரியும் மீத்தேனும் எரிவாயுவும் இருப்பதைக் கண்டுகொண்ட கார்ப்பரேட் கம்பெனிகள் அவற்றைச் சுரண்ட முனை கின்றன. விவசாயத்துக்கு ஜீவாதாரமாக இருந்த காவிரி நீர் மறிக்கப்பட்டது. உற்பத்திக்கான மானியங்கள், ஆதார விலைகள் குறைக்கப் பட்டன. இடுபொருள், பூச்சிக்கொல்லி எனத் தமிழக வேளாண்மைக்குத் தொடர்பில்லாத செயற்கை ரசாயனங்கள் அறிமுகப் படுத்தப்பட்டன. இப்படியெல்லாம் செய்து, கிட்டத்தட்ட வேளாண்மையை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டார்கள்.  பகாசுர எந்திரங்களைக்கொண்டு நிலத்தைப் பிளந்து எண்ணெயை உறிஞ்சத் தொடங்கி விட்டார்கள். தொடர்ந்து ஹைட்ரோகார்பன், மீத்தேன் என்று அடுத்த கட்டத்துக்கு நகர்கிறார்கள். அச்சூழலில்தான் பேராசிரியர் ஜெயராமன் போன்றோர் களத்தில் இறங்கினர். அது வெற்றிகரமான மக்கள் போராட்டமாக மாறியது. 

“நம்மாழ்வார் அய்யாதான் மீத்தேன் பிரச்னையோட வீரியத்தை மக்களுக்குப் புரிய வெச்சவர்.

பேராசிரியர் தொடர்ச்சியா மண் சார்ந்த பிரச்னைகளைப் பத்தி பேசிக்கிட்டே இருந்தார்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் தொடங்கறதுக்குப் பத்து வருஷங்கள் முன்னாடியே அது பத்தி புத்தகம் எழுதினார். மீத்தேன் போராட்டத்தைப் பொறுத்தவரை நாங்க நம்மாழ்வார் அய்யா பின்னாடி நின்னோம்.  2013 டிசம்பர் 30-ம் தேதி நம்மாழ்வார் அய்யா காலமானாங்க. அதுக்கு முன்னால, 18-19 தேதிகள்ல அய்யா மயிலாடுதுறைக்கு வந்தாங்க. 19-ம் தேதி கோடங்குடி பகுதியில அய்யாவோட கூட்டம். அய்யாவுக்கு முன்னாடி பேராசிரியர் பேசினாங்க. அய்யா அதைக் கூர்ந்து கேட்டார்.  இவர் பேசி முடிச்சதும், ‘மீத்தேன் பத்தி நான் என்னவெல்லாம் பேச நினைச்சேனோ, எல்லாத்தையும் எளிமையா, தெளிவா பேராசிரியர் பேசிட்டார். இனிமே நான் பேச ஒண்ணுமில்லே’ன்னு சொல்லிட்டு இயற்கை விவசாயத்தோட முக்கியத்துவத்தைப் பத்தி பேசினார். அந்தக் கூட்டம் நடந்து 11-வது நாள் அய்யா காலமாகிட்டார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 ``இந்த மண்ணுக்காக எங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை!’’

`அய்யா போராட்டத்தை வழிநடத்துவார்'னு நம்பிக்கிட்டிருந்த எங்களுக்கெல்லாம் பெரிய இழப்பா இருந்துச்சு. ஆனா, கோடங்குடி கூட்டத்துல, ‘இனிமே நீங்கதான் போராட்டத்தை முன்னெடுக்கணும்’னு அய்யா சொல்லாம சொன்ன மாதிரி இருந்துச்சு. அய்யாவோட திருவுடலை தஞ்சாவூர் கல்லூரியில வெச்சிருந்தாங்க. அங்கேயே இவர், மீத்தேன் திட்டத்துக்கு எதிரான பிரசாரத்தை ஆரம்பிச்சுட்டார்.

ஒரு விஷயத்தைப் பத்தி பேசுறதுக்கு முன்னாடி அதை முழுமையா தெரிஞ்சுக்குவார்.  எல்லாருக்கும் புரியற மாதிரி தெளிவாவும் விரிவாவும் பேசுவார். மீத்தேன் திட்டத்தின் பாதிப்புகளை அப்படித்தான் எல்லார்கிட்டயும் கொண்டுபோய்ச் சேர்த்தார். 

மீத்தேன், ஹைட்ரோகார்பன் போராட்ட மெல்லாம் இந்த அளவுக்குப் பேசப்பட்டதற்குக் காரணம், அதை மக்கள் போராட்டமா மாத்தினதுதான். நிறைய பிரச்னைகள்... தடைகள்... எரிவாயு நிறுவனம், அங்கே வேலை செய்றவங்களை எங்களுக்கு எதிரா தூண்டி விடும். கூட்டங்கள்ல அவங்க வந்து பிரச்னை செய்வாங்க. பூந்தோட்டம்ங்கற ஊர்ல ஒரு கூட்டம். பேராசிரியர் பேசிக்கிட்டிருக்கும்போது திடீர்னு ஒருத்தர் பெரிய மீனைத் தூக்கி வீசினார். அந்தச் சூழல்லயும் ரொம்பவே நிதானமா அவரை அழைச்சு, போராட்டத்தோட நியாயத்தை விளக்கினார்.

கொஞ்சநாள் முன்னாடி, ‘உங்களால 10 லட்சம் ரூபாய்க்கும் மேல எங்க நிறுவனத்துக்கு நஷ்டம்... உடனடியா 10 லட்சம் கட்டுங்க'ன்னு எரிவாயு நிறுவனத்துலேருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பினாங்க. ‘காவிரிப்படுகையை பாழ்படுத்தினதுக்கு நீங்கதான் எங்களுக்குக் கோடிக்
கணக்குல நஷ்டஈடு தரணும்’னு சொல்லிட்டு அந்த நோட்டீஸைத் தூக்கிப் போட்டுட்டார்.

எதுக்கும் கவலைப்பட மாட்டார். ‘நம்ம மண்ணு... இங்கேதான் பிறந்தோம். இந்த மண்ணுதான் சோறு போட்டுச்சு. இதைக் கூறுபோடுறதை எப்படி அனுமதிக்க முடியும்.  உயிர் இருக்கிற வரைக்கும் போராடுவோம்.நமக்குப் பிறகு அடுத்த தலைமுறை இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துக்கிட்டுப் போகட்டும்’னு சொல்வார். ஒரு கட்டத்துல ஒரு நிழல்போல அவர் பின்னாடி நடக்க ஆரம்பிச்சுட்டேன். அவர் முன்னணியில நிப்பார். நான் பெண்களோட சேர்ந்துக்குவேன். சிறையா, வீடான்னு போராட்டத்தோட இறுதியிலதான் தெரியும்.

போராட்டம்னா, வெறும் கோஷம் போடுறது மட்டுமில்லை... அதிகாரிகளோட சரிக்குச் சமமா நின்னு பேசுவார். அவங்களுக்குப்  போராட்டத்தோட நியாயத்தைப் புரிய வைப்பார்.  பூம்புகார் பக்கத்துல திருநகரிங்கிற ஊர்ல எரிவாயு எடுக்கிறாங்க. அந்த ஊர்ல, நிலத்தடி நீரெல்லாம் மஞ்சள் நிறமா மாறிடுச்சு. போராட்டத்தை ஆரம்பிச்சோம். கலெக்டர் வந்தார். ஒரு பாட்டில்ல பைப் தண்ணியைப் பிடிச்சு கலெக்டர்கிட்டக் கொடுத்து, `கண்டிப்பா இதை நீங்க குடிச்சுப் பார்க்கணும்'னு கொடுத்தோம்.  தண்ணியோட நிறத்தைப் பார்த்த அவர், உடனே கார்ல ஏறிக் கிளம்பிட்டார். இந்த மாதிரி நிறைய...

அடியாமங்கலத்துல ஓ.என்.ஜி.சி குழாய் உடைஞ்சு கேஸ் கசிய ஆரம்பிச்சிடுச்சு. அந்தக் குழாய்லேர்ருந்து இருபதடி தூரத்துல பள்ளி...  ஆயிரம் மாணவர்கள் படிக்கிறாங்க. பக்கத்துலேயே நிறைய தொகுப்பு வீடுகள்... கேஸ் கசிவுனால மாணவர்கள், ஊர் மக்களெல் லாம் மயங்கி விழுந்துட்டாங்க. சாலை மறியல்ல உட்கார்ந்திட்டார். அவர் பின்னாடி ஆயிரக்கணக்கான மக்கள் உட்கார்ந்திருக்காங்க. பேச்சுவார்த்தை நடத்த தாசில்தார் வந்தார். அவரும் மயங்கி விழுந்துட்டார்.

காவிரிப்படுகையில நடக்குற அவலங்கள் பிற பகுதியில வசிக்கிற மக்களுக்குப் பெரிசா தெரியலே. அதைப்பத்தி யாரும் பெரிசா கவலைப்படுறதுமில்லை. இங்கே நடத்துக்கிட்டிருக்கிறது ஒட்டுமொத்தமான ஒரு கலாசாரப் பேரழிவு. ஒருகாலத்துல உலகத்துக்கே சோறுபோட்ட ஒரு சமூகம், இன்னிக்குச் சாப்பாட்டுக்காக ஊருவிட்டு ஊரு போய் பிழைக்குது. தஞ்சையில ஏற்படுற பாதிப்புகள் ஒட்டுமொத்தத் தமிழகத்தையே பாதிக்கும். அதைக் காலம் கொஞ்சம்கொஞ்சமா மத்தவங்களுக்கு உணர்த்தும். 

வெள்ளக்குடின்னு ஓர் ஊர்... அந்த வட்டாரத்துல எடுக்கப்படுற ஒட்டுமொத்த எரிவாயுவும் அந்தக் கிராமத்துக்குத்தான் போய்ச்சேருது. அந்த ஊர்ல ஐம்பது வயசுக்கு மேல ஒருத்தர்கூட கிடையாது.

25 வயசு, 30 வயசுக்காரங்களெல்லாம் காரணமே இல்லாம இறந்துபோறாங்க. அங்கே நிறைய பெண்களுக்குக் கர்ப்பப்பைப் பிரச்னை இருக்கு. சிறுநீரகப் பிரச்னைகள் அதிகமாகிட்டிருக்கு. ஒரு மனிதரைப் பார்த்தேன். வரப்பு காய்ஞ்சு போனா வெடிக்கும் பாருங்க... அந்த மாதிரி அவர் தலையில வெடிப்பு இருக்கு... இந்த மாதிரியான கொடூர நோய்கள் எல்லாம் ஏன் வருதுன்னு ஆய்வு பண்ணக்கூட ஆளில்லை.

குழந்தைகளே பாதிக்கப்பட்டிருக்காங்க. இதயநோய், நுரையீரல் பிரச்னைகள்கூடக் குழந்தைகளுக்கு ஏற்படுது. இதையெல்லாம் பார்த்துக்கிட்டு யாரால அமைதியா இருக்க முடியும்? எங்கெல்லாம் புதுசா குழாய் தோண்ட ஆரம்பிக்கிறாங்களோ, அங்கெல்லாம் மக்களைத் திரட்டிக்கிட்டுப் போய் நிப்பார் இவர். அப்படித்தான் அடியாமங்கலம், அடியாக்க மங்கலம், கடமங்குடி, கிடாரங்கொண்டான், கதிராமங்கலம் பகுதிகள்ல எரிவாயுக் குழாய் பதிக்கிற பணிகளை நிறுத்தினோம்.  இன்னொரு புதிய குழாய் காவிரிப்படுகையோட மண்ணுல வைக்கப்படக்கூடாதுங்கிறதுதான் எங்க நோக்கம்...”  - தீர்க்கமாகச் சொல்கிறார் சித்ரா.

 கதிராமங்கலம் போராட்டம் உச்சம்பெற்று பேராசிரியர் ஜெயராமன் கைது செய்யப்பட்ட தருணத்தில் போராட்டத்தை வழிநடத்தியது சித்ராதான்.

“அவர் எங்கெல்லாம் போறாரோ, அங்கெல்லாம் நானும் நடந்துக்கிட்டிருக்கேன். அவர் கைது செய்யப்பட்டது பெரிசா அதிர்ச்சியை உருவாக்கலே. முன்னல்லாம் காலையில கைது பண்ணி  ஒரு மண்டபத்துல வெச்சிருந்துட்டு சாயங்காலம் விட்டிடுவாங்க. இப்போ எதுக்கெடுத்தாலும் கைது... கொண்டுபோய் சிறையில அடைக்கிறாங்க. மாதக்கணக்குல வைக்கிறாங்க. அதனாலெல்லாம் போராட்டங்களை ஒடுக்க முடியாது. சிறைக்குப் போறவங்க, முன்னை விட வீரியமா வெளியில வர்றாங்க. இப்போ கூட இவர்மேல தேச துரோக வழக்குப் போட்டிருக்காங்க. சிறையில இருந்த காலத்துல ஒருநாள்விட்டு ஒருநாள் போய்ப் பார்ப்பேன். போராட்டம் எப்படி போய்க்கிட்டிருக்கு... அடுத்து என்ன செய்யணும்கிறதைப் பத்தி மட்டும்தான் பேசுவார்.

ஒரு முழுநேரப் போராளியோட மனைவியா எனக்கு நிறைய அனுபவங்கள் இருக்கு. இத்தனை ஆண்டுகால வாழ்க்கையில ஒருமுறை கூட அவர் கோபப்பட்டுப் பேசினதில்லை. என் கருத்தைக் கேட்காம எதையும் செஞ்சதில்லை. ரொம்பவே மனசுக்கு நெருக்கமான வாழ்க்கை. எங்களுக்கு ஒரு பையன்... ப்ளஸ் ஒன் படிக்கும்போது காலமாகிட்டான். வாழ்க்கையில நாங்க எதிர்கொண்ட பெரிய துயரம் அது. ரொம்பச் சிரமப்பட்டு அதிலேருந்து மீண்டோம். இப்போ ரெண்டு பேருமே தீர்மானமான முடிவுல இருக்கோம்... எங்க மண்ணைக் கூறு போட அனுமதிக்க மாட்டோம். அதுக்கான போராட்டத்துல எங்க உயிர் போச்சுன்னா அதுதான் எங்களுக்கான முழு நிறைவு...”

எவ்விதப் பாசாங்கும் இல்லாமல், புன்னகைத்தபடியே சொல்கிறார் சித்ரா.