Published:Updated:

“நிராகரிப்பை ஏற்றுக்கொள்கிற தைரியம் வேணும்!’’

“நிராகரிப்பை ஏற்றுக்கொள்கிற  தைரியம் வேணும்!’’
பிரீமியம் ஸ்டோரி
News
“நிராகரிப்பை ஏற்றுக்கொள்கிற தைரியம் வேணும்!’’

மாடல்... பிசினஸ் மாடல்  வி.எஸ்.சரவணன் - படங்கள்: மீ.நிவேதன்

“என்னைப் பார்க்கிற பலரும், ‘சிந்தால் சித்தி எப்படி இருக்கீங்க’ன்னுதான் கேட்கிறாங்க. ஒரு விளம்பரம் மக்களோடு என்னை இணைத்திருக்கிறது சந்தோஷமா இருக்கு” என மகிழ்ச்சியோடு சொல்கிற சஞ்சனா சாரதியை, பல விளம்பரங்களில் பார்த்திருப்போம். சினிமா, விளம்பரத்தைத் தொடர்ந்து, இப்போது புதிய துறை ஒன்றிலும் களமிறங்கியிருக்கும் அவருடன் ஓர் உரையாடல்.

“நிராகரிப்பை ஏற்றுக்கொள்கிற  தைரியம் வேணும்!’’

எங்கிருந்து வந்தார் சஞ்சனா சாரதி?

“ ‘எந்திரன்’ படத்தில் ஐஸ்வர்யா ராயின் அம்மாவா நடிச்சிருப்பாங்களே ராஜலஷ்மி, அவங்கதான் என்னோட அம்மா. சமீபத்தில் ‘பைரவா’வில்கூட நடிச்சிருக்காங்க. சின்ன வயசிலேருந்து ஷூட்டிங் பார்க்கிறதுன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏழு வயசில் நகைக்கடை விளம்பரத்தில் மாடல் வாய்ப்பு வந்தது. ஆசையோடு போனா, மேக்கப்ல ஆரம்பிச்சு ஒருநாள் முழுக்க போஸ் கொடுத்துட்டே இருக்கிறதுனு செம டென்ஷனா இருந்துச்சு. அதனால அதுக்கப்புறம் வந்த வாய்ப்புகளை வேணாம்னு சொல்லிட்டேன்.

சில வருடங்களில், ‘வழக்கு எண் 18/9’ படத்தில் ஒரு கேரக்டர் இருக்கு. நடிக்க விருப்பமா?’னு கேட்டாங்க... நடிச்சேன். ஸ்க்ரீன்ல என்னைப் பார்த்தவங்க எல்லோரும் பாராட்டினதைக் கேட்டு, ‘சரி, நல்லாதான் நடிச்சிருக்கோம்போல’னு நினைச்சுக்கிட்டேன். அதுலயிருந்து தொடர்ந்து விளம்பரம், சினிமானு ரெண்டுலேயும் நடிச்சுக்கிட்டு இருக்கேன்.”

வாய்ப்புகள் தொடர்ச்சியாக வந்தனவா?

“பிரபல போட்டோகிராபர் வெங்கட்ராம் சார், எங்க குடும்ப நண்பர். அவர் மூலமா ஒரு  போட்டோ ஷூட் செய்ய, அதைப் பார்த்து நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. ‘உனக்கு வசதிப்படும் வேலைகளை மட்டும் செய். நிறைய வாய்ப்புகள் வந்தாலும் உனக்குப் பொருத்தமானதாகத் தேர்ந்தெடுத்து நடி’னு சொல்லி, எனக்குப் பலமா இருக்காங்க எங்கம்மா.”

ஜோதிகாவோடு நடித்த விளம்பர அனுபவம் எப்படியிருந்தது?

“அவங்க பெரிய ஆர்ட்டிஸ்ட்... அதனால அவங்களோடு ரொம்பக் கவனமா பேசணும்னு ரிகர்சல் எல்லாம் பண்ணிட்டுப் போயிருந்தேன். ஆனா, ஜோ மேம் ரொம்ப நாள் பழகினவங்கபோல இயல்பா பேசினாங்க. ‘சில்லுனு ஒரு காதல்’ ஷூட்டிங்கப்போ நான் அவங்களோடு சேர்ந்து போட்டோ எடுத்துக் கிட்டதை ஞாபகம் வெச்சுக் கேட்டது ரொம்ப ஆச்சர்யமா இருந்தது!’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“நிராகரிப்பை ஏற்றுக்கொள்கிற  தைரியம் வேணும்!’’

‘துப்பாக்கி’யில் விஜய்யின் தங்கச்சி யானது எப்படி?

“நான் நடிச்சிருந்த விளம்பரத்தைப் பார்த்துட்டு ஆடிஷனுக்குக் கூப்பிட்டாங்க. செலெக்ட் ஆனதும், ‘விஜய் சாருக்குத் தங்கச்சி ரோல்’னு சொல்ல, குஷியாகிட்டேன். ஷூட்டிங் செம ஜாலியா இருந்துச்சு. விஜய் சார் அதிகம் பேச மாட்டார்னு சொல்வாங்க. ஆனா, அது உண்மையில்லை. அந்தப் படத்தில் ஃபேமிலி போட்டோ ஒண்ணு மாட்டியிருக்கும். அதுக்கான போட்டோ ஷூட் நடந்தப்போ, விஜய் சார், நான், இன்னொரு தங்கச்சியாக நடிச்சிருந்தவங்க மூணு பேரும் பைக்ல போற மாதிரி போட்டோ எடுத்தாங்க. விஜய் சார் பைக்கை ஸ்டார்ட் செய்துட்டு, ‘அம்மாவைக் கொஞ்சம் பயமுறுத்தலாமா’னு கேட்டுட்டு பைக்கை கீழே சாய்க்கிற மாதிரி நடிக்க, எங்க அம்மா ரொம்பப் பயந்துட்டாங்க. அந்தப் படம் முழுக்க மும்பையில நடந்ததால தமிழ் பேசத் தெரிஞ்சவங்க கொஞ்சம் பேர்தான். அதனால விஜய் சார்கூட நான் நிறைய நேரம் பேச வாய்ப்புக் கிடைச்சது. ‘துப்பாக்கி’ படத்துக்குப் பிறகு, அவரோட தீவிர ரசிகையாயிட்டேன்.”

‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ வில் தனுஷுடன் நடித்தது பற்றி...

“அந்தப் படத்துல தனுஷ் சாருக்கும், ஹீரோயின் மேகாவுக்கும் தோழியா நடிக்கிறேன். நான் தனுஷ் சார் முன்னாடி நின்னு பேசுற ஒரு சீன். அப்போ, `எப்படி நின்னு பேசணும், எந்த இடத்தில் நின்னா ஸ்க்ரீன்ல சரியாக இருக்கும்’னு பொறுமையா சொல்லிக்கொடுத்தார். அவர் சிம்பிள் அண்டு சூப்பர்ப்!”

பெரும்பாலான விளம்பரங்களும் திரைப் படங்களும் ஆண்களின் மனப்போக்கைப் பிரதிபலிப்பதாகவே உள்ளன. இந்தத் துறை பற்றி நெருக்கமாக உணர்ந்த நீங்கள், இதை மாற்ற முடியும்னு  நினைக்கிறீங்களா?

“உண்மைதான்... ஆண்கள்னா பலமானவங்களா, வீரமுள்ளவங்களாவும் பெண்கள்னா துணி துவைக்கிறது, கிச்சன்ல வேலை செய்யறது அல்லது கவர்ச்சி  உடைகளில் வர்றதுபோலவும்தான் காட்டுறாங்க. ஆனா, இது இப்போ கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டு வருது. நடிகை கங்கனா, பெண்களை மையமாகக்கொண்ட கதையில்தான் நடிப்பேனு சொல்றாங்க. இந்தக் குரல் எல்லா இடங்களிலும் பரவுது. எனக்கும் பெண்களை மனதளவில், உடலளவில் பலம் வாய்ந்தவங்களா சித்திரிக்கிற புராஜெக்ட்டுகள்தான் பிடிக்கும். இன்னும் சொல்லப்போனா ஆணோ, பெண்ணோ... யாரும் யார்மீதும் அதிகாரம் செலுத்தாத படைப்புகள் உருவாகணும்னு ஆசைப்படுறேன்.”

“நிராகரிப்பை ஏற்றுக்கொள்கிற  தைரியம் வேணும்!’’

விளம்பர மாடலாக விரும்புபவர்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன?

“நிராகரிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஏன்னா, ஆரம்பத்தில் வாய்ப்புகள் வராது. நிறைய இடங்களில் புறக்கணிக்கப்படுவோம். மத்தவங்க ஏதாச்சும் சொல்லிக் கவனத்தைச் சிதற வைப்பாங்க. மனதளவில் ஸ்ட்ராங்கா இருந்தா, இதையெல்லாம் ஈஸியா சமாளிச்சுடலாம்.”

புது பிசினஸ் ஆரம்பிச்சிருக்கீங்களே?

“என் அப்பா விஜய்சாரதி ஒரு பிசினஸ்மேன். அதனால ரொம்ப நாளாகவே பிசினஸ் ஆசையிருந்தது. அது இப்போதான் நிறைவேறியிருக்கு. இந்த வருஷம் chatterfox.in என்கிற ஆன்லைன் ஃபேஷன் ஸ்டோரை ஆரம்பிச்சிருக்கேன். இதில் பெண்களுக்கான ட்ரெண்டியான உடைகளை விற்பனை செய்றோம். பெரும்பாலும் வெஸ்டர்ன் ரக  உடைகள்தான் இருக்கும். நிறைய ஆர்டர் வருது. அம்மாவோட உதவியால் அதிக சிரமமில்லாம இதை நடத்த முடியுது.”

அடுத்து என்ன ப்ளான்... விளம்பரமா, சினிமாவா?


“எனக்குப் பிடிச்ச புராஜெக்ட்னா, விளம்பரம், சினிமா எதுவானாலும் `ஓகே’ தான்!”