Published:Updated:

``எப்போதும் சிரிச்சுக்கிட்டே இருக்கத்தான் பிடிக்கும்!''

``எப்போதும் சிரிச்சுக்கிட்டே இருக்கத்தான் பிடிக்கும்!''
பிரீமியம் ஸ்டோரி
News
``எப்போதும் சிரிச்சுக்கிட்டே இருக்கத்தான் பிடிக்கும்!''

துணிவே துணைசாஹா

டிக்கொருமுறை ‘அக்கா... அக்கா’ என்றழைக்கிறார். பாசமழையில் நனைக்கிறார்.

``இந்த உலகத்துல எனக்கு ரொம்பப் பிடிச்ச வார்த்தை அக்கா. அதனாலதான் வயசு வித்தியாசம் பார்க்காம எல்லாப் பெண்களையும் `அக்கா’னு ஆசைதீரக் கூப்பிடுவேன். ஆரம்பிக்கும்போதே எமோஷன்ஸ் வேண்டாம்னு பார்க்கறேன். ஸோ... அதுக்கான காரணத்தை அப்புறம் சொல்றேன்...’’ என்கிறார் சபிதா ராய். சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு இடம்பெயர்ந்திருக்கிற எனர்ஜிப் பெண்.

``அம்மா பொள்ளாச்சி பிரேமா அந்தக் காலத்து சினிமா மற்றும் மேடை நாடக நடிகை. ஏவி.எம் பேனர்லயும் எஸ்பி.முத்துராமன் சார் டைரக் ஷன்லயும் நிறைய நடிச்சிருக்காங்க. அப்பா எங்களை விட்டுட்டுப் போயிட்டார். எனக்கு ஓர் அக்கா. அவங்க படிச்சிட்டு அட்மினிஸ்ட்ரேஷன் லைன்ல போயிட்டாங்க.

``எப்போதும் சிரிச்சுக்கிட்டே இருக்கத்தான் பிடிக்கும்!''

எனக்கு அம்மாவைப் பார்த்துச் சின்ன வயசுலேயே நடிப்புல ஆர்வம் வந்திருச்சு. அவங்களோடு சேர்ந்து நிறைய மேடை நாடகங்கள், அரசாங்கத்துக்கான விழிப்பு உணர்வு நாடகங்கள்ல நடிச்சிருக்கேன்.  சைல்டு ஆர்ட்டிஸ்ட்டா சில படங்கள் பண்ணினேன். அப்புறம் டி.வி சீரியல்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். எல்லா டீன் ஏஜ் பொண்ணுங்களையும்போல எனக்கும் காலேஜ் போய்ப் படிக்கணும், அந்த வாழ்க்கையை அனுபவிக்கணும்னு ஆசைதான். குடும்பச் சூழ்நிலை அதுக்கு இடம்கொடுக்கலை. ஆண் துணையில்லாத வீடு... நடிப்பிலேருந்து ரிட்டையர்டாகிட்ட அம்மா... அக்கா  ஒருத்தியோட வருமானம்தான்... அந்த நிலைமையில குடும்பத்தோட பொருளாதாரச் சுமையைப் பகிர்ந்துக்கிற பொறுப்பு எனக்கும் இருந்தது. கரெஸ்பாண்டென்ஸ்ல எம்.ஏ. பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் படிச்சுக்கிட்டே சீரியல்ல பிசியா இருந்தேன். எல்லாமே அப்படியே போயிருந்தா, வாழ்க்கை வேற மாதிரி இருந்திருக்குமோ என்னவோ... ஆனா, கடவுள் எப்போதும் வேற கணக்கு வெச்சிருக்காரே...’’ - சபிதாவின் ஐ லைனர் கண்கள் சட்டெனக் கண்ணீரில் கரைகின்றன.

`` `இலக்கணமில்லாத ஒரு காதல்’னு ஒரு படத்துக்காக நானும் அம்மாவும் குற்றாலத்துக்கு ஷூட்டிங் போயிருந்தோம். நாங்க கிளம்பும்போதே அக்காவுக்கு லேசான காய்ச்சல். சாதாரணக் காய்ச்சல்தான்... `நான் சமாளிச்சுக்கறேன்'னு அக்கா சொன்னதால நாங்களும் கிளம்பிட்டோம். அப்புறம் அவங்களுக்குக் காய்ச்சல் அதிகமாகியிருக்கு. `டைபாயிடும் மலேரியாவும் சேர்ந்திருக்கு. அதனாலதான் காய்ச்சல் அதிகமா இருக்கு'னு டாக்டர்ஸ் சொல்லியிருக்காங்க. நாங்க வந்த பிறகும் அவங்களுக்குச் சரியாகலை. ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணின பிறகுதான் அது நிமோனியானு கண்டுபிடிச்சாங்க. நுரையீரல் முழுக்கவே சளி கோத்துக்கிட்டு, நுரையீரலையே அரிச்சிடுச்சு. அவங்களால சுவாசிக்கவே முடியாத நிலையில, 33 வயசுல அக்கா இறந்துட்டாங்க. எங்கக் குடும்பத்துக்கே தூணா இருந்தவங்க அவங்க. அப்பா எங்களை விட்டுட்டுப் போனபிறகு அவரோட இடத்துலேருந்து என்னையும் அம்மாவையும் பார்த்துக்கிட்டவங்க என் அக்கா. அப்பா இல்லாத குறையே தெரியாம என்னை வளர்த்ததும் அக்காதான். அவங்க இறந்தது எனக்கும் அம்மாவுக்கும் பெரிய இடி. வாழ்க்கை பெரிய போராட்டமா மாறினது. அப்பதான் நானும் சீரியல்ல  நடிக்க ஆரம்பிச்சேன். எல்லா சேனல்லயும் என் சீரியல்கள் வந்திருக்கு. ‘தாமரை’, ‘வாணி ராணி’னு எல்லாமே ஹிட் சீரியல்ஸ். `இந்தியா/மலேசியா', `ககபோ'னு ரெண்டு படங்கள்லயும் நடிச்சேன். அக்காவோட இழப்புலேருந்து கொஞ்சம் கொஞ்சமா மீண்டு வர ஆரம்பிச்ச நேரத்துலதான் அந்தச் சம்பவம், அடுத்த இடியா என் தலையில இறங்கினது. அநாவசிய அவதூறு... தேவையில்லாத அவமானங்கள்... அதோட என் அத்தியாயமே முடிஞ்சிரும்னு எதிர்பார்த்தவங்களுக்கெல்லாம் நான் மறுபடி எழுந்து நின்னது ஆச்சர்யம் மட்டுமில்லை... அதிர்ச்சியும்கூட...’’ - நிகழ் காலத்திலிருந்து சம்பவத் தருணத்துக்குச் செல்கிறார் சபிதா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
``எப்போதும் சிரிச்சுக்கிட்டே இருக்கத்தான் பிடிக்கும்!''

``சம்பந்தப்பட்ட புரொடக் ஷன் மேனேஜருக்கு என் அப்பா வயசு. அவர் வேலை பார்த்த கம்பெனி சீரியல்ல நடிச்சிட்டிருந்தபோது செகண்டு ஹேண்டு கார் வாங்கறதா பிளான் பண்ணியிருந்தேன். அதுக்கு என் சம்பளத்துலேருந்து அட்வான்ஸ் கொடுத்து ஹெல்ப் பண்ணினார் அவர். கொஞ்ச நாள் கழிச்சு அவருக்கு ஓர் ஆக்சிடென்ட் ஆச்சு.  ட்ரீட்மென்ட்டுக்கு அவர் நிறைய பேர்கிட்ட பணஉதவி கேட்டிருக்கார். என்கிட்டயும் கேட்டார். எனக்கு உதவி பண்ணினவராச்சேனு நானும் பணம் கொடுத்திருந்தேன். அவருக்கு  முழுக்கச் சரியான பிறகும் அந்தப் பணத்தைத் திருப்பிக்கொடுக்காம இழுத்தடிச்சிட்டே இருந்தார். அந்த அலைக்கழிப்புல பொறுமை இழந்துதான் சம்பவம் நடந்தன்னிக்கு நான் அவருக்கு முன்னாடியே போய் அவங்க வீட்டு வாசல்ல உட்கார்ந்திருந்தேன். பணத்தைத் திருப்பிக் கேட்டேன். வார்த்தைகள் தடிச்சது. கைகலப்பானது. அதுக்குள்ள போலீஸ் வந்தது. அப்புறம் அவங்க முன்னிலையில நாங்களே சமாதானமா பேசி முடிச்சிட்டோம். அதே வீட்டுல இருந்த சேனல் நபர் ஒருத்தர் இதை அரைகுறையா வீடியோ எடுத்து என் கேரக்டரையே அசிங்கமா சித்திரிச்சு, நான் அந்த இடத்துக்குப்போன நோக்கத்தையே அசிங்கப்படுத்தி, அவசரமா மீடியாவுல பரப்பிட்டார். அது தெரிஞ்சு அவர் கால்ல விழாத குறையா கெஞ்சி, ‘அண்ணா... இது என் வாழ்க்கை... தப்பாயிடும்... தப்பா எதுவும் பண்ணிடாதீங்க’னு கதறியும் பலனில்லை. நான் அங்கயிருந்து வீட்டுக்கு வர்றதுக்குள்ள அந்த நியூஸ் பரபரப்பாயிடுச்சு. வயசான என் அம்மாகிட்டருந்து அந்த நியூஸை மறைக்க நான் பட்ட பாடு கொஞ்சநஞ்சமில்லை.

நடிகர் சங்கத்துல நான் உறுப்பினர். குட்டி பத்மினியம்மாவுக்கு விஷயம் தெரிஞ்சு அவங்கதான் விஷால் அண்ணாவுக்குச் சொல்லியிருக்காங்க. உடனே விஷால் அண்ணா என்னை நேர்ல வரச்சொன்னார்.  ஆறுதல் சொன்னதோடு, எனக்காக நடவடிக்கைகள் எடுத்தார். அவரோட முயற்சியிலதான் அந்தச் செய்தி நிறுத்தப்பட்டது. இந்த நிமிஷம்வரைக்கும் என் கூடப்பிறக்காத அண்ணனா எனக்கு ஆதரவா நிற்கறதும் விஷால் அண்ணாதான்.

``எப்போதும் சிரிச்சுக்கிட்டே இருக்கத்தான் பிடிக்கும்!''

என் நிலைமை தெரிஞ்சு ‘இரும்புத்திரை’ படத்துல அவர்தான் வாய்ப்பு கொடுத்தார். அதைத் தொடர்ந்து ‘காதல் மன்னன்’ படத்துல விமல் தங்கச்சியாகவும் ரோபோ ஷங்கர் ஜோடியாகவும் காமெடி கேரக்டர்ல பண்ணிட்டிருக்கேன்...’’ - கண்ணீரைத் துடைத்துத்தொடர்பவருக்கு சினிமாவில் காமெடியனாவதே இலக்காம்.

``வாழ்க்கையில அடுக்கடுக்கான சோகங்கள் இருந்தாலும் எனக்கு எப்போதும் சிரிச்சுக்கிட்டே இருக்கத்தான் பிடிக்கும். என் சோகங்களை அடுத்தவங்களிடம் காட்டிக்க விரும்ப மாட்டேன். அதனாலோ என்னவோ எனக்கு காமெடி கேரக்டர்ஸ் பண்ணணும்னு ரொம்ப ஆசை. ஆனா, சீரியல்ல எனக்குப் பெரும்பாலும் வில்லி கேரக்டர்தான் அமைஞ்சிருக்கு. கெட்டதுலயும் ஒரு நல்லதுனு சொல்வாங்கல்ல... என்னை அவமானப்பட வெச்ச இந்தச் சம்பவம்கூட என் வாழ்க்கையில ஏதோ ஒரு நல்லதுக்கான தொடக்கம்போலனு இப்ப தோணுது. அந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் நான் சீரியல் வேணாம்னு முடிவெடுத்தேன்...'' என்கிறவருக்கு,  குதிரை வளர்க்க வேண்டுமென விசித்திரமாக ஓர் ஆசை.

``எனக்குக் குதிரைகள்னா ரொம்பப் பிடிக்கும். நான் கழுத்துல போட்டிருக்கிற பெண்டன்ட்லேருந்து, வீட்டுல உள்ள டெக்கரேஷன்ஸ் வரை சகலமும் குதிரைகளாகத் தான் இருக்கும். குதிரைன்னா வெற்றி. முன்னோக்கி ஓடிக்கிட்டே இருக்கும்னு சின்ன வயசுல கேள்விப்பட்டது மனசுல பதிஞ்சிருச்சு. அந்தப் பாதிப்புதான்னு நினைக்கிறேன். நானும் அப்படித்தான் ஒரு வெற்றிக்காக ஓடிக்கிட்டே இருக்கேன்னு வெச்சுப்போமே.’’

நம்பிக்கையோடு பேசி நம் இதயம் கவர்கிறார் சபிதா!