Published:Updated:

“நிச்சயம் ஒருநாள் நீங்க என்னைப் பார்ப்பீங்க!”

“நிச்சயம் ஒருநாள் நீங்க என்னைப் பார்ப்பீங்க!”
பிரீமியம் ஸ்டோரி
News
“நிச்சயம் ஒருநாள் நீங்க என்னைப் பார்ப்பீங்க!”

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி கு.ஆனந்தராஜ் - படங்கள்: க.தனசேகரன்

“மாற்றுத்திறனாளிகள் என்பதாலேயே முடங்கியே இருக்கணும்னு நாங்க நினைக்கலை. எவ்வளவு தூரம் பயணிக்க முடியுமோ, அதை நோக்கிப் போயிட்டிருக்கோம்” எனப் பூரிப்புடன் உஷா ராணி சொல்ல, ஆமோதித்துத் தலையசைக்கிறார் அவர் கணவர் வெங்கட்ராமன். உஷா ராணி, போலியோவால் பாதிக்கப்பட்டவர். வெங்கட்ராமன், பார்வைத்திறனை இழந்தவர். அன்பின் புள்ளியில் இணைந்து, வாழ்வில் வெற்றிப்படிகளைக் கடந்துகொண்டிருக்கிறார்கள் சேலத்தில் வசிக்கும் இந்தத் தம்பதியர்.

வெங்கட்ராமன் பிறந்து, வளர்ந்தது சேலம். ``பி.எஸ்ஸி முடிச்சுட்டு, போட்டோஷாப் வேலை பார்த்திட்டிருந்தேன். 2004-ம் வருஷம் ஏற்பட்ட கடுமையான காய்ச்சலால், என் பார்வை முழுமையா பறிபோயிடுச்சு. திடீர்னு என் உலகமே இருட்டாகிப்போனதை ஆரம்பத்தில் என்னால் ஏத்துக்கவே முடியலை. பெற்றோர் என்னைவிட்டுக் கொஞ்சம் எழுந்துபோயிட்டாகூட பயம், அழுகைனு ஆகிடுவேன். என் நிலை, என்னைவிட என் பெற்றோருக்கு அதிக வலியைக் கொடுத்தது. எனக்கு ஒரு கண்ணிலாவது பார்வை கிடைக்க, அவங்க கண்தானம் கொடுக்க முன்வந்து மருத்துவர்கள்கிட்ட கேட்டாங்க.

“நிச்சயம் ஒருநாள் நீங்க என்னைப் பார்ப்பீங்க!”

‘பிரச்னை கண்ணில் இல்லை. கண்ணுக்கும் மூளைக்கும் இடையிலான நரம்புதான் செயலிழந்துடுச்சு. மூளையை ஓப்பன் பண்ணிதான் ஆபரேஷன் செய்யணும். ஒருவேளை தோல்வியடைந்தால் உயிருக்கே ஆபத்து’னு மருத்துவர்கள் சொல்ல, நான் பார்வையில்லாமல் வாழத் தயாராகிட்டேன்” என்கிற வெங்கட்ராமன், தன்னம்பிக்கையை இழக்காமல் மேற்கொண்டு படித்து, ஆசிரியர்  வேலைக்குச் சென்றிருக்கிறார். பின்னர் குரூப் 4 தேர்வில் தேர்ச்சிபெற்று இன்று அரசுப் பணியிலிருக்கிறார்.

“என் நிழல் மாதிரியிருந்து என்னைப் பார்த்துக்கிட்ட எங்கம்மாவுக்கு என் கவலையே நோயாகிடுச்சு. ரத்த அழுத்தம் அதிகமாகி, சிறுநீரகம் செயலிழந்து 2006-ல் இறந்துட்டாங்க. அதுவரை இருட்டிலிருந்தாலும் அம்மாவோட துணையோடிருந்த நான், அதுக்கப்புறம் ரொம்ப சிரமப்பட்டேன். சவரத் தொழிலாளியான அப்பாவும் 2008-ல் மாரடைப்பால் இறந்துட்டார். என்னையும் தம்பியையும் பாட்டிதான் பார்த்துக்கிட்டாங்க. அப்பா, அம்மா ரெண்டு பேருமே தங்களோட இறுதிக்காலத்துல என்கிட்ட, ‘நீ மனசு உடைஞ்சுடாம, தொடர்ந்து வாழ்க்கையில போராடி நல்ல நிலைமைக்கு வரணும்’னு நம்பிக்கை கொடுத்துட்டுதான் போனாங்க’’ என்று சொல்லும் வெங்கட்ராமன், நண்பர்களின் உதவியுடன் சென்னையிலிருக்கும் ஓர் இன்ஸ்டிட்யூட்டில் பார்வையற்றோருக்கான அடிப்படைப் பயிற்சிகள், தற்சார்பு, பிரெய்லி, கணினி உள்ளிட்ட பயிற்சிகளைக் கற்றிருக்கிறார்.

``அங்கிருந்தபடியே ஸ்பெஷல் பி.எட் முடிச்சேன். தொண்டு நிறுவனங்களின் உதவியுடன், சேலம் கிராமப்பகுதி அரசுப் பள்ளிகளில் `எஸ்எஸ்ஏ’ கல்வித்திட்டத்தின் மூலமாக மாற்றுத்திறன் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தேன். இன்னொரு பக்கம் `டிஎன்பிஎஸ்சி’ தேர்வெழுதி,
2014-ல் குரூப் 4 எக்ஸாமில் தேர்வானேன். சேலம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஃபீல்ட் விசிட் இல்லாத டேபிள் வொர்க் பணியை எனக்குக் கொடுத்தாங்க’’ என்று தன் விடாமுயற்சியைச் சொன்னவர், ``எவ்வளவு முன்னேறி வந்திருந்தாலும் என் கல்யாணத்துக்கு அப்புறம்தான், பார்வையோடிருந்தபோது நான் கொண்டிருந்த  சந்தோஷம் என் மனதில் மீண்டும் திரும்பிவந்ததை உணர்ந்தேன்’’ என்பவரின் கைகள் உஷா ராணியைத் தேட, அவரின் கரம்பற்றி தன் அன்பைச் சொல்லி விட்டுத் தொடர்கிறார் உஷா ராணி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“நிச்சயம் ஒருநாள் நீங்க என்னைப் பார்ப்பீங்க!”

``எனக்கும் சேலம்தான் பூர்வீகம். மூணு வயசுல போலியோ பாதிப்பால ஒரு கால் பாதிக்கப்பட்டுடுச்சு. அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமப்போக, ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு கூலி வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இவர் என்னைப் பெண் பார்க்க வந்திருந்தார். அதுக்கு முன்னாடி என்னைப் பெண் பார்த்துட்டுப்போன பலர் காயங்களைத்தான் கொடுத்துட்டுப் போயிருந்தாங்க. இவர், ‘உங்களுக்கு முழு விருப்பமிருந்தா மட்டும் நாம கல்யாணம் பண்ணிக்கலாம். என்னால் முடிந்தளவு உங்களைச் சந்தோஷமா பார்த்துக்குவேன்’னு சொன்னார். எங்களுக்குக் கல்யாணமான நாள்லேருந்து இப்போவரைக்கும் ஒருத்தரை யொருத்தர் அரவணைச்சு அழகான குடும்பக் கூட்டைக் கட்டிட்டு வர்றோம். திருமணத்துக்கு முன்புவரை அலுவல்ரீதியா அவருக்கு ஓர் உதவியாளர் இருந்தார். இப்போ, அவருக்கு ஆல் இன் ஆல் நான்தான்.

நான் டூவீலர் ஓட்டக் கத்துக்கிட்டேன். நாங்க எங்க போனாலும் ஜோடியாதான் போவோம். தினமும் இவரை ஆபீஸுக்குக் கூட்டிட்டுப் போயிட்டு, கூட்டிட்டு வர்றது நான்தான். அப்படிப் போகும்போது, நாங்க மாற்றுத்திறனாளிகள் என்பதே மறந்துபோய் இனம்புரியாத ஓர் உணர்வு எங்க ரெண்டு பேர் மனசுக்குள்ளேயும் சிறகடிச்சுப் பறக்கும். எங்களுக்கு எந்தக் குறையுமில்லை. அன்பில்லாதவங்கதான் குறையுடையவங்கனு சொல்வாங்க. அப்படிப் பார்த்தா, எங்க வாழ்க்கை நிறைஞ்சிருக்கு’’ என்பவர், தன் கணவரின் பாட்டி, தம்பி குடும்பம் என்று தாங்கள் கூட்டுக் குடும்பமாக வசித்துவருவதை மகிழ்ச்சியுடன் சொல்கிறார்.

“இதுவரை உஷாகிட்டகூட சொல்லாத ஒரு விஷயத்தை இப்போ பகிர்ந்துக்கிறேன்’’ எனச் சிரித்தபடியே தொடர்கிறார் வெங்கட்ராமன். “உஷா வந்ததுக்கு அப்புறம்தான் என் வாழ்க்கைக்கு உயிர் வந்திருக்கு. `இதுவே போதும்னு இருந்துடாம, இன்னும் உயர்ந்த நிலைக்குப் போகணும்; உஷாவை நல்லாப் பார்த்துக்கணும்’னு இப்போ குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்குப் படிச்சுக்கிட்டிருக்கேன். எனக்குப் பாடங்களைப் படிச்சுக்காட்டுற என் மனைவியையும் போட்டித் தேர்வுகள் எழுதச் சொல்லி ஊக்கப்படுத்திட்டிருக்கேன். வாழ்க்கை மகிழ்ச்சியா போயிட்டிருக்கற நிலையில, இப்போ எனக்கு ஒரே ஓர் ஆசை இருக்கு. நான்... எங்கப்பா, அம்மா, பாட்டி, தம்பியையெல்லாம் பார்த்திருக்கேன். ஆனா, என் மனைவியைப் பார்க்கக் கொடுத்துவைக்கலை. எனக்கு எல்லாமாகவும் இருக்கிற உஷாவைப் பார்க்க என் கண்கள் ஏங்காத நாளில்லை. அதுக்காகவாவது எனக்குப் பார்வை கிடைக்கணும்னு ஆசைப்படுறேன். இதுவரை உஷாகிட்டகூட இதைச் சொன்னதில்லை” என வெங்கட்ராமன் வெட்கப்பட, “நிச்சயம் ஒருநாள் நீங்க என்னைப் பார்ப்பீங்க” என்று சொல்லும் உஷாவின் கண்கள் மின்னுகின்றன.

ஆச்சர்யங்கள் அனுதினமும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.