Published:Updated:

``குண்டுச் சத்தத்துக்கு ஒருநாளும் பயந்ததில்ல!’’

``குண்டுச் சத்தத்துக்கு ஒருநாளும் பயந்ததில்ல!’’
பிரீமியம் ஸ்டோரி
News
``குண்டுச் சத்தத்துக்கு ஒருநாளும் பயந்ததில்ல!’’

சிவகாமி பாட்டியின் சிலிர்க்கவைக்கும் அனுபவங்கள்நேதாஜியின் வீராங்கனைகள் - 1   யாழ் ஸ்ரீதேவி - படம்: என்.கண்பத்

‘`செல்லுவோம் செல்லுவோம்
நம் ஜென்மபூமி செல்லுவோம்
நம் விரோதி வெள்ளையனை
நாட்டைவிட்டு ஓட்டுவோம்
நாடு முழுவதும் ஒரே நீதி நடந்திட வழிகாட்டுவோம்
நேதாஜி சொன்னபடி
டெல்லிக்கே நாம் செல்லுவோம்
டெல்லிக்கே நாம் செல்லுவோம்
மூவர்ணக்கொடி நாட்டுவோம்
செல்லுவோம் செல்லுவோம்
ஜென்மபூமி செல்லுவோம்
ஜான்சிராணி லட்சியத்தை
ஜல்தியில் நிறைவேற்றுவோம்
தரணிதனிலே சமதர்மத்தை நிலைநாட்டுவோம்...’’


- குரலின் நடுக்கத்தை மீறிப் பாடுகிறார் சிவகாமி பாட்டி. இந்தியச் சுதந்திரப் போராட்டக் காலத்தில் நேதாஜி படையில் சேர்ந்து களப்பணியாற்றிய விடுதலைப்போராட்ட வீரர். இன்று தர்மபுரி மாவட்டம், அன்னசாகரத்தில்  சிறிய வாடகை வீட்டில் தனித்த வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்பவருடன் பேசினால், கொட்டுகிறது வரலாறு.

``அது சுதந்திரப் போராட்டக் காலம். ஆங்கிலே யரை நாட்டைவிட்டு வெளியேற்ற இந்தியாவில் போராட்டங்கள் வெடிக்க ஆரம்பிச்சது. காந்தியடிகள் அகிம்சையைக் கையில் எடுக்க, அதற்கு நேரெதிரா இந்தியத் தேசிய ராணுவத்தை (ஐஎன்ஏ) நிறுவினார் சுபாஷ் சந்திரபோஸ். வெளிநாடுகளில் இருந்த இந்தியர்களும் அந்தந்த நாட்டில் இருந்தபடியே தங்களோட தாய்நாட்டுக்காகப் போராடினாங்க.

எங்க குடும்பம் மலேசியாவின் கோலாலம்பூருக்குப் பஞ்சம் பிழைக்கப் போனப்போ, எனக்கு ஒன்றரை வயசு. எங்கப்பா மாரிமுத்து முதலியார், அம்மா சின்னத்தாயி ரெண்டு பேரும் என்னையும் எங்க அண்ணன் பரமானந்தத்தையும் அங்கே அரும்பாடுபட்டு வளர்த்தாங்க. எனக்கு 11 வயசும், அண்ணனுக்கு 15 வயசும் இருக்கும். சுபாஷ் சந்திரபோஸ் 1942-ல் இந்திய விடுதலைக்காக `ஐஎன்ஏ’-வை நிறுவினார். அதோட ஒரு பிரிவு, ‘பாலசேனா’ அமைப்பு. இளைஞர்களுக்கான அந்தக் குழுவுல நானும் எங்கண்ணனும் இணைந்து விடுதலைப் போராட்டத்துல கலந்துகிட்டோம்’’ - 80 வயதைத் தாண்டிவிட்ட சிவகாமி பாட்டி, தன் நினைவு அடுக்குகளில் தொலைந்துபோன சம்பவங்களையும் நிதானத்துடன் மீட்டெடுத்துத் தொடர்கிறார்...

``குண்டுச் சத்தத்துக்கு ஒருநாளும் பயந்ததில்ல!’’

`` ‘பாலசேனா’ அமைப்பின் மூலமா ஆங்கிலேய அரசை எதிர்த்துப் போராட்டங்கள், நாடகங்கள்னு களம் கண்டோம். விடுதலை உணர்வை விதைக்கிறதும் யுத்தம் நடக்குற இடத்துக்குப் போய் காயம்பட்டவங்களை மீட்குறதும் எங்களோட வேலை. சுதந்திரப் போராட்ட நாடகங்கள்ல நான் பங்காற்றினேன். ‘வீர வனிதா’ நாடகத்துல நான்தான் ஜான்சிராணி கதாபாத்திரத்தில் நடிப்பேன். அந்த வேஷம்போட்டு நடிக்கும்போது, அது நடிப்புன்னே சொல்ல முடியாத அளவுக்கு உள்ளுக்குள் சுதந்திரப் போராட்ட உணர்வு பிரவாகமெடுக்கும். சிங்கப்பூர், கோலாலம்பூர்னு பல இடங்கள்ல அந்த நாடகத்தை நடத்தினோம். அதன்மூலமா கிடைக்கிற பணத்தை விடுதலைப் போரில் பாதிக்கப்பட்டவங்களுக்குக் கொடுத்து உதவினோம்’’ என்று விவரிக்கும்போது, பரவச உணர்வு பாட்டியிடம்.

``எங்க நாடகத்தைப் பார்த்துட்டு, தங்களை இந்தியத் தேசிய ராணுவத்துலயும், ஜான்சிராணி படையிலயும் சேர்த்துக்கச் சொல்லி பலர் முன்வருவாங்க. ஒருநாள் எங்க நாடகத்தை நேர்ல பார்த்த சுபாஷ் சந்திரபோஸ், என்னோட நடிப்பைப் பாராட்டிச் சொன்னார். பர்மாவுக்கு வரச்சொல்லியும் கூப்பிட்டார். ஆனா, என்னால அது முடியாம போச்சு.  இந்த அமைப்புலேயே மூணு வருஷங்கள் இருந்தேன். அந்தக் காலகட்டத்துல அபாயச் சங்கு ஊதிட்டா, குண்டு எங்க வேணும்னாலும் விழலாம். அதனால சாக்கடைக்குப் பக்கத்துல இருந்தாலும், அப்படியே அதில் விழுந்து ஒளிஞ்சிக்கணும். ஆனா,  குண்டுச் சத்தத்துக்கு ஒருநாளும் நான் பயந்ததில்ல’’ என்பவர், அந்த நாளை பரபரப்பாக நினைவுகூர்கிறார்...

``ஒருநாள் தண்டவாளத்துக்குப் பக்கத்துல நின்னுட்டிருந்தோம். அபாயச் சங்கு ஊதினதும் ஆங்கிலேயப் படைகள் குண்டு போட்டன. பதுங்கு குழியில ஒதுங்கினவங்ககூடக் கொத்துக் கொத்தா செத்துப்போனாங்க. குண்டு சத்தம் நின்னதும் நாங்க பதுங்கு குழியைத் தேடி ஓடினோம். யாராவது உயிரோட இருக்காங்களானு சடலங்களையெல்லாம் விலக்கி விலக்கிப் பார்த்தோம். ஒரு குழந்தை யோட அழுகுரல் கேட்க, எங்க கைகள் நடுங்க ஆரம்பிச்சு வேகம் குறைஞ்சது. குண்டடி பட்டு அம்மா இறந்துபோயிருக்க, குழந்தை மட்டும் உயிர் பிழைச்சிருந்தது. அதைக் காப்பாத்தி, எங்க அமைப்புல இருந்த ஒருத்தர் தத்து எடுத்துக்கிட்டார். மறக்கமுடியாத யுத்தகாலம் அது’’ என்பவரின் கள அனுபவங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``யுத்த முடிவுல ஆங்கிலேயப்படை கோலாலம்பூர்ல இயங்கின எங்களோட சமூகநல விடுதியைக்

``குண்டுச் சத்தத்துக்கு ஒருநாளும் பயந்ததில்ல!’’

கைப்பற்றுச்சு. ஆங்கிலப் படைத்தலைவர் முன்னாடி, எங்களோட ஆங்கிலேயர் எதிர்ப்பு நாடகத்தை நடிக்கச் சொன்னாங்க. நான் மறுத்துட்டேன். அதனால அந்த முகாமைவிட்டு நான் வெளியேற  உத்தரவு போட்டாங்க. நாங்க குடும்பத்தோட சொந்த ஊருக்குத் திரும்பினோம்’’ - பெருமூச்சு விடுகிறார் சிவகாமி பாட்டி.

தர்மபுரிக்குத் திரும்பியதும், சிவகாமிக்குப் பெற்றோர் திருமணம் செய்துவைத்துள்ளனர். ஆனால், இரண்டே ஆண்டுகளில் கணவர் இறந்துவிட்டார். அன்று முதல் இன்று வரை தனி மனுஷியாக வாழ்க்கை நடத்துகிறார். பெற்றோர், அண்ணன் என அடுத்தடுத்து உறவினர்களும் இறந்துவிட, சிவகாமியின் வாழ்க்கை சுயசார்புடன் மிக அமைதியாக நகர்கிறது.

``தமிழக அரசு  சுதந்திர தின வெள்ளி விழாவை முன்னிட்டு எனக்குச் சான்றிதழும் பட்டயமும் வழங்கி கவுரவித்துள்ளது. சுதந்திர தினப் பொன் விழாவை முன்னிட்டு பாராட்டுப் பட்டயம் வழங்கிப் பெருமைப்படுத்தியது. என் இத்தனை வருஷ வாழ்க்கையில, நாடு விடுதலையான அறிவிப்பைக் கேட்டப்போ நாங்க அடைஞ்சதுபோல ஒரு சந்தோஷத்தை, அதற்கடுத்தடுத்த தலைமுறைகளோட சமூகம் அனுபவிச்சதே இல்லை. சுதந்திர இந்தியாவுல பொறந்தவங்களுக்கு, விடுதலை உணர்வோட மகிமை முழுசா புரியலைனு தோணுது. இளசுக எல்லாம் உடுத்துறதுல இருந்து உண்ணுறதுவரைக்கும் வெள்ளைக்காரன் மாதிரியே மாறுறதைப் பார்க்க ஆதங்கமா இருக்கு” என்றவாறு தன் மலேசியப் புகைப்படங்களைக் காட்டுகிறார் சிவகாமி பாட்டி.

கதைகள் நீள்கின்றன... கண்ணுக்கும் கருத்துக்கும் இதமாக!