Published:Updated:

“12 வயதில் புரட்சிப்படையில் சேர்ந்தேன்!”

“12 வயதில்  புரட்சிப்படையில் சேர்ந்தேன்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“12 வயதில் புரட்சிப்படையில் சேர்ந்தேன்!”

காந்திமதி பாட்டியின் பாலசேனை அனுபவங்கள் நேதாஜியின் வீராங்கனைகள் - 2   இரா.மோகன் - படங்கள்: உ.பாண்டி

``என் பேரப்பிள்ளைகளுடன் படிப்பவர்கள் வீட்டுக்கு வரும் போது, ‘பாட்டி, இவன் பெரிய போராளி தெரியுமா?’ என்று பேசிக்கொள்வார்கள். `எந்தப் போராட்டத்துக்குச் சென்றீர்கள்?' என்று கேட்டால், ஏதோ கம்ப்யூட்டரில் எழுதிப் போராட்டம் செய்வதாகச் சொல்வார்கள்.

கண்மணிகளே... போராட்டம் என்பது ஒரு குழு உணர்வு. வீதியில் இறங்கி கைகள் கோத்து நின்று பாருங்கள். அதன் வீரியம் அப்போதுதான் புரியும். பலனும் அப்போதுதான் கிடைக்கும் என்று சொல்லுவேன்’’ - குரல் நடுங்கினாலும் கம்பீரமாகப் பேசுகிறார் காந்திமதிபாய் பாட்டி.

“12 வயதில்  புரட்சிப்படையில் சேர்ந்தேன்!”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் புரட்சிப்படையில் பங்கெடுத்தவர் காந்திமதிபாய் பாட்டி.

90 வயதிலும் நேதாஜியின் பெயரைக் கேட்டவுடன் அடிவயிற்றிலிருந்து கிளம்பும் அவரின் குரல் நம்மைச் சிலிர்க்க வைக்கிறது.

``ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மேலபண்ணைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர், என் அப்பா முத்துராமலிங்கம். பர்மாவில் குடியேறி மீன் வியாபாரம் செய்து செல்வந்தராக வாழ்ந்தவர். எங்கள் வீட்டில் மொத்தம் ஆறு பிள்ளைகள். நான்தான் கடைசிப் பெண். எப்போதும் துறுதுறுவென்றிருப்பேன். அந்த இயல்பே இந்த காந்திமதியை, காந்திமதிபாய் ஆக்கியது’’ என்கிறவர், பொக்கைவாய்ச் சிரிப்புடன் தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார்.

“12 வயதில்  புரட்சிப்படையில் சேர்ந்தேன்!”

``பர்மாவில் நான் பள்ளிப்படிப்பு படித்துக்கொண்டிருந்த போது, இந்தியாவுக்குச் சுதந்திரம் பெறுவதற்காக நேதாஜி துடிப்புமிக்க ஆண்கள் மற்றும் பெண்களை `ஐஎன்ஏ’ படையில் சேரும்படி அழைப்புவிடுத்தார். தனது போராட்டத்துக்கான படையை உருவாக்க நன்கொடை யும் திரட்டிவந்தார். அப்போது வசதிவாய்ப்புடன் இருந்த எங்கள் வீட்டுக்கும் வந்து என் அப்பாவைச் சந்தித்தார் நேதாஜி. பணத்துடன் வீட்டிலிருந்த நகைகளையும் நேதாஜியிடம் வழங்கினார் அப்பா. அதைக் கவனித்த நான், ‘எதற்காக இதையெல்லாம் அவரிடம் கொடுக்கிறீர்கள்?’ என்று கேட்க, அப்போதுதான் நேதாஜி பற்றியும் சுதந்திரப் போராட்டம் பற்றியும் முழுமையாகத் தெரிந்துகொண்டேன்.

நானும் நேதாஜியின் படையில் சேர்கிறேன் என்று சொல்லி என் அப்பாவிடம் அனுமதி வாங்கி, பன்னிரண்டாவது வயதில் `ஐஎன்ஏ பாலசேனை’யில் சேர்ந்தேன்’’ என்கிறவர்,  அந்த அனுபவங்களையும் பகிர்கிறார்.

“12 வயதில்  புரட்சிப்படையில் சேர்ந்தேன்!”

``ஐஎன்ஏ-வில் ஜான்சி ராணியின் பெயரில் இருந்த பெண்கள் படைக்கு கேப்டன், டாக்டர் லட்சுமி. இதேபோல சிறுவர்கள் சிறுமிகளைக் கொண்ட பாலசேனையும் இருந்தது. அதில் ஆயிரக்கணக்கானவர்கள் இணைந்திருந்தோம். எங்களின் ஒரே நோக்கம், இந்தியா சுதந்திரம் அடைய வேண்டும் என்பது மட்டுமே. பல கலைநிகழ்ச்சிகள் நடத்தி, ஐஎன்ஏ-வுக்கு நிதி திரட்டி நேதாஜியின் மெய்க்காப்பாளரிடம் பாலசேனை சார்பில் வழங்கியிருக்கிறோம்.

பாலசேனையில் பிராபகண்டா பிரிவில் இணைந்த நான், இந்திய விடுதலை குறித்த பாடல்களை மக்கள் மத்தியில் பாடி தேச பக்தியை வளர்ப்பது, பயிற்சியின்போது வீரர்களுக்குத் தேவையான ஆயுதங்களை எடுத்துக்கொடுப்பது, நாடகங்கள் நடத்தி அதன்மூலம் நிதி திரட்டுவது போன்ற பணிகளில் ஈடுபட்டேன்.

போருக்கான முதன்மைப் பயிற்சி, துப்பாக்கி சுடுதல் போன்றவற்றையும் முறையாகக் கற்றுத் தேர்ந்தேன். இந்தச் சேனையில் இருந்ததன் இன்னொரு பெரிய சந்தோஷம், நேதாஜியை அடிக்கடிப் பார்க்க, பேசக் கிடைக்கும் வாய்ப்பு. என் நடவடிக்கைகளைக் கவனித்த நேதாஜி, என்னை ‘பாய்’ என்று தான் அழைப்பார். என் பெயர் ‘காந்திமதிபாய்’ என்று மாற அவரே காரணம்’’ என்றவர், இந்தியாவுக்குத் திரும்பிய காலகட்டத்தைப் பற்றிச் சொல்கிறார்.

“12 வயதில்  புரட்சிப்படையில் சேர்ந்தேன்!”

``இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்த சில காலத்துக்குப் பிறகு, பர்மாவிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டோம். என் தந்தை, பக்கத்து ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு என்னைத் திருமணம் செய்துவைக்க ஆசைப்பட்டார்.

பசும்பொன்தேவர் திருமணமே வேண்டாம் என்றிருந்ததால், அபிராமத்தை அடுத்துள்ள மேலப்பண்ணைக்குளத்தைச் சேர்ந்த ராமசாமித்தேவருக்கு என்னைத் திருமணம்செய்து கொடுத்தார். எங்களுக்கு பன்னிரண்டு குழந்தைகள்.

நேதாஜியின்மீது கொண்டிருந்த பக்தியினால் எனது கடைசி மகனுக்கு ‘நேதாஜி’ எனப் பெயர் வைத்தேன். என் கணவரின் மறைவுக்குப் பிறகு, இப்போது பிள்ளைகளுடன் வாழ்ந்துவருகிறேன்’’ என்கிற காந்திமதிபாய் பாட்டி, நம் கையிலிருந்த பத்திரிகையை வாங்கி கண்களைச் சுருக்கி வாசிக்கத் தொடங்குகிறார்.

``சுதந்திரப் போராட்ட வரலாற்றுப் புத்தகங்களையெல்லாம் இப்போதுள்ள தலைமுறையினர் படித்தால்தான், அன்றைய காலகட்டத்தில் நாங்கள் பல உயிர்களைத் தியாகம்செய்து பெற்றுக்கொடுத்திருக்கும் இந்தச் சுதந்திரத்தின் அருமை புரியும். அதற்கு ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள்...” - சருமச் சுருக்கங்களுடன் நரம்பு புடைத்துக் கொண்டிருக்கும் தன் நடுங்கும் கரங்களைக் கூப்பிச்சொல்கிறார் காந்திமதிபாய் பாட்டி!