Published:Updated:

“தோல்வி என்பது ஆப்ஷன் மட்டும்தான்!”

“தோல்வி என்பது ஆப்ஷன் மட்டும்தான்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“தோல்வி என்பது ஆப்ஷன் மட்டும்தான்!”

மனச்சிறையை உடையுங்கள்மு.பிரதீப் கிருஷ்ணா

“வாழ்க்கை எளிமையாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அது உங்களுக்கு எலுமிச்சையைத்தான் கொடுக்கும். அதைக்கொண்டு நீங்கள் லெமன் ஜூஸ்தான் போட முடியும். அதற்காக நீங்கள் வாழ்க்கையைக் குறை கூறிப் பிரயோஜனமில்லை” என்கிறார் முனிபா மசாரி.  ஓவியர், பேச்சாளர், சமூக ஆர்வலர், தொலைக்காட்சித் தொகுப்பாளர்... இவற்றையெல்லாம் தாண்டி, இவர் பாகிஸ்தான் பெண்களுக்கான ஐ.நா சபைத் தூதுவர். `வாழ்க்கையின் சுவையே போராடுவதுதான். போராடி அதை வெற்றிகொள்வதுதான் அழகு' என்று, முடங்கிக்கிடப்பவர்கள் முதுகில் தட்டிக்கொடுக்கிறார் இந்த இரும்புப் பெண்.

18 வயதில் திருமணம் செய்துகொண்டவருக்கு, தன் கணவராலேயே கார் விபத்து ஏற்பட, அவரோ தன்னை மட்டும் காப்பாற்றிக்கொண்ட நிலையில், காரோடு சாக்கடையில் கிடந்தார் முனிபா. முழங்கை, மணிக்கட்டு, கழுத்து எலும்பு, விலா எலும்பு என ஏகப்பட்ட எலும்பு முறிவுகள். முதுகுத்தண்டிலும் அடி. வாழ்நாள் முழுவதும் வீல்சேரில் இருக்க வேண்டிய நிலை. அதுகூட அவரை உடைக்கவில்லை. தான் இனி பிள்ளைப்பேறு அடைய முடியாது என்ற செய்தியை மருத்துவர்கள் சொல்லக் கேட்க இடிந்துபோனார். ‘இனி ஏன் வாழ வேண்டும். இந்தப் பிறப்புக்கான அர்த்தம்தான் என்ன?’ - இந்தக் கேள்விகளுக்கான பதில் தெரியாமல் வாடினார்.

“தோல்வி என்பது ஆப்ஷன் மட்டும்தான்!”

தன் நெஞ்சில் தேங்கிய வலிகளுக்கு ஓவியமாக உருவம் கொடுத்தார் முனிபா. உடைந்துகிடந்த அந்த வலக்கையால்தான் தன் முதல் ஓவியத்தை வரைந்தார். இந்தப் பெண்ணுக்குள் புதிதாகப் பிறந்த நம்பிக்கை, அவரது ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டியது. இன்று தன் பேச்சின் மூலமும் பலருக்கு அதே நம்பிக்கையை விதைக்க முயன்றுவருகிறார்.

“வீல்சேரில் அமர்ந்திருக்கும் பலருக்கும், ‘நம்மை இந்த உலகம் ஏற்றுக்கொள்ளாது’ என்கிற பயம். இந்த பெர்ஃபெக்ட் உலகில், நாம் பெர்ஃபெக்ட்டானவர்கள் இல்லை என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். வீல்சேரிலேயே முடங்கிக்கொள்ளாதீர்கள். எழுந்து நடங்கள். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அப்படியே உங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். இந்த உலகம் உங்களுக்கு அங்கீகாரம் கொடுக்க, நீங்கள் உங்களுக்குள்ளிருந்துதான் எழ வேண்டும்” என்று, முடங்கியிருக்கும் பலரின் மனதுக்குள்ளே ஒளிந்திருக்கும் போராளியை முடுக்கிவிடுகிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“தோல்வி என்பது ஆப்ஷன் மட்டும்தான்!”

பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமென உலகம் சொல்லும் வரையறைக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் கோடிக்கணக்கான பெண்களில் ஒருவராகத்தான் முனிபாவும் இருந்தார். `18 வயது ஆகிவிட்டது. திருமணம் செய்துகொள்கிறாயா’ என தந்தை கேட்ட கேள்விக்கு, `உங்களுக்கு மகிழ்ச்சியென்றால் செய்துகொள்கிறேன்’ என்று சொல்லித் தலையாட்டியவர். ஒரு பெண் அதைத்தானே செய்ய முடியும்? ஒரு சராசரிப் பெண்ணாக, தந்தையின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தார் முனிபா. ஆனால், அந்தத் திருமண வாழ்க்கை, அவர் நினைத்ததுபோல அமையவில்லை. அந்தச்சூழலில் ஓவியராக வேண்டும் என்கிற தன் கனவை இவரால் நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை. வாழ்க்கைக் குறித்த கேள்விகள் இவரை விடாமல் துரத்திக்கொண்டே இருந்தன.

“அவருக்கு விவாகரத்துக் கொடுத்து என்னை விடுவித்துக்கொண்டேன். யாரோ ஒருவருக்கான ‘பெர்ஃபெக்ட்’ மனைவியாக இனி நான் வாழப்போவதில்லை” என்று ஸ்டீரியோ டைப் உலகத்துக்குள்ளிருந்து தான் மீண்டுவந்த தருணத்தை ‘மகிழ்ச்சியோடு’  தெரிவிக்கிறார் முனிபா. தன் கணவரின் மறுமணத்துக்கு அன்புடன் வாழ்த்துச் சொன்னவர், தன் விவாகம் தோல்வியில் முடிந்ததைக்கண்டு கலங்கவில்லை.

“தோல்வி என்பது ஆப்ஷன் மட்டும்தான்!”

“இது என் வாழ்க்கை. இந்த நொடி எனக்கானது. என் பயங்களை விரட்டி அதை நான்தான் வாழ வேண்டும். இதோ வாழத் தொடங்குகிறேன். நான் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. ஆனால், இங்கு எண்ணற்ற குழந்தைகள் அன்புக்கும் அரவணைப்புக்கும் காத்திருக்கிறார்களே...அவர்களுள் ஒருவரைத் தத்தெடுக்க முடியுமல்லவா? அதைத்தான் நான் செய்தேன். பல அமைப்புகளில் விண்ணப்பித்திருந்தேன். பாகிஸ்தானின் ஒரு கிராமத்திலிருந்து ‘ஒரு குழந்தை இருக்கிறது’ என்று போன் வந்தது. அந்த நொடி, நானும் பிரசவ வலியை உணர்ந்தேன். நானும் தாயானேன். அன்று அவன் பிறந்து இரண்டு நாள்கள்தான் ஆகியிருந்தது. இன்று என் மகனுக்கு ஆறு வயது. எனக்கானவன் அவன்” என்று தன் செல்ல மகனை முனிபா கொஞ்சும்போது தாய்மை மிளிர்கிறது. `பெண்ணாகப் பிறந்து பிள்ளை பெறாவிடில் குற்றம்' எனச் சொல்லும் இச்சமூகத்தில் முனிபா, அப்படியெல்லாம் யோசிக்கவே இல்லை. `கையில் சுமக்கும் எந்தக் குழந்தைக்கும், தன்  பேரன்பைப் பொழிந்து ஒரு பெண்ணால் தாயாகிவிட முடியும். கருவறையில்தான் குழந்தையைச் சுமக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை’ என்கிற உண்மையைத்தான் முனிபா உணர்த்துகிறார்.

“தோல்வி என்பது ஆப்ஷன் மட்டும்தான்!”

இப்படி, தடைகளை உடைத்தெறிந்த நொடியிலேயே முனிபா நடக்கத் தொடங்கி விட்டார். தான் சமூகத்துக்குச் சொல்ல நினைப்பதையெல்லாம் ஓவியங்களாகத் தீட்டினார். தன்னைப் போன்றவர்களை இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகப் பொதுவெளியில் தலைகாட்ட முடிவெடுத்தார்.  மாடலிங் நிகழ்ச்சிகளை நடத்தினார். பாகிஸ்தானின் தேசிய சேனலில் தொகுப்பாளராக இணைந்தார். 2015-ம் ஆண்டுக்கான BBC-யின் 100 பெண்கள் பட்டியலில் இவர் பெயர் இடம்பிடித்தது. அடுத்த ஆண்டு, புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்ட 30 வயதுக்குட்பட்ட சிறந்த 30 பெண்களில் ஒருவராகவும் இவருக்கு அங்கீகாரம் கிடைக்க, முடங்கிக்கிடக்கும் பெண்களுக்கு முகமானார் முனிபா. இப்போது பாகிஸ்தான் பெண்களுக்கான ஐ.நா சபையின் முகமும் இவர்தான்.

“தோல்வி என்பது ஆப்ஷன் மட்டும்தான்!”

உடல் குறைபாடுகளோடு மட்டுமல்ல; மனதால் உடைந்து கிடப்பவர்களுக்கும் முனிபாவின் வாழ்க்கை ஒரு மாபெரும் உதாரணம். “வாழ்க்கையில் தோல்வி என்பது ஒரு ஆப்ஷனாக இருக்கட்டும். அப்போதுதான் விழும்போதெல்லாம் எழ முடியும். வாழ்க்கையிடம் சரணடைவது என்பது ஆப்ஷனாக இருக்கக் கூடாது” என்று அறிவுறுத்துகிறார் முனிபா.

உண்மைதான். உங்கள்முன் முடங்கிக்கிடக்கும் அந்த மனச்சிறையை எட்டி உதையுங்கள். ஒன்று திறக்கட்டும்; இல்லை உடையட்டும்!