Published:Updated:

“இயற்கையின் கொடையான மழையை வரவேற்கணும்!” - ரமணன் தம்பதி

“இயற்கையின் கொடையான மழையை வரவேற்கணும்!” - ரமணன் தம்பதி
பிரீமியம் ஸ்டோரி
News
“இயற்கையின் கொடையான மழையை வரவேற்கணும்!” - ரமணன் தம்பதி

சட்டென்று மாறுது வானிலைகு.ஆனந்தராஜ் - படம்: எம்.உசேன்

டகிழக்குப் பருவமழையால் சென்னை உள்பட  தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களும் கிராமங்களும் குளிர்ந்துகொண்டிருக்கின்றன. அதேநேரத்தில், நவம்பர் மாதத் தொடக்கத்தில் ஐந்து மணி நேரம் பெய்த கனமழைக்கே சென்னை நகரம் பீதியடைந்துவிட்டது. `மழை எப்போதுமே மகிழ்வுக்குரிய விஷயம்தான்’ என்கிறார் மதுமதி... சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ரமணனின் மனைவி. மழை தூறிக்கொண்டிருந்த மாலைப்பொழுதொன்றில், சென்னை, மேற்கு மாம்பலத்திலிருக்கும் அவர்களின் வீட்டில் அந்தத் தம்பதியுடன் நிகழ்ந்தது நம் சந்திப்பு.

“நான் பிறந்தது புதுக்கோட்டை, வளர்ந்த தெல்லாம் சென்னை. எம்.எஸ்ஸி இயற்பியல் முடிச்ச வேளை, என் நண்பர்களில் பலர் ஆசிரியர் வேலைக்குப் போனாங்க.  எனக்குப் புவியியலில் விருப்பமிருந்ததால, ஸ்டாஃப் செலெக்‌ஷன் கமிஷன் எக்ஸாம் எழுதி, ஆந்திர மாநிலம் கர்னூல்ல வானிலை உதவியாளரா 1980-ல் பணியைத் தொடங்கினேன். பெரிய அளவில் தொழில்நுட்பங்கள் வளராத அந்தக் காலகட்டத்தில், வானிலைத் தரவுகளைக் கணிச்சு அறிக்கை கொடுக்கிற பணி எனக்கு’’ என்கிற ரமணன், 1981-ல் சென்னை விமான நிலையத்தில் வானிலை அதிகாரியாகப் பணி மாறுதல் பெற்றிருக்கிறார்.

“இயற்கையின் கொடையான மழையை வரவேற்கணும்!” - ரமணன் தம்பதி

“செயற்கைக்கோள் படங்கள்கூட துல்லியமா இருக்காத அந்த நேரத்தில், வானிலை நிலவரம் மற்றும் விமானம் பயணிக்க வேண்டிய பாதையை சார்ட் பேப்பரில் வரைஞ்சு பகுப்பாய்வு செய்து, அதை பைலட்டுக்குக் கொடுப்போம். பேப்பர் டேப் மூலமாதான் வானிலைத் தகவல்களை டெல்லிக்கு அனுப்பி வைப்போம். திருமணத்துக்குப் பின்னர் டெல்லி, புனே எனப் பணி மாறுதல்கள் பெற்று, 1990-ல் மீண்டும் சென்னை ஏர்போர்ட்டுக்கு `மெட்ராலஜி கிரேட் 2’ அதிகாரியாகப் பணிக்கு வந்தேன். செயற்கைக்கோள் படத்தை ஆய்வுசெய்ய கணினி தொழில்நுட்பங்கள் வந்தது அந்த நேரத்தில்தான். 2002-ல் நுங்கம் பாக்கம் புயல் எச்சரிக்கை மையத்தின் (வானிலை ஆய்வு மையம்) இயக்குநராகப் பணியில் சேர்ந்தேன்’’ என்று ரமணன் சொல்ல, ``சார் டி.வி-யில் வர ஆரம்பிச்சது அப்போதான்’’ என்று சிரித்தபடியே தொடர்கிறார் மதுமதி.

``அந்த நேரத்தில்தான் தனியார் சேனல் களின் வருகை அதிகமாச்சு. அதில் வானிலை செய்திக்கும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சதால, இவர் தினமும் டி.வி-யில் தோன்ற ஆரம்பிச்சார். மழை, புயல் காலங்களில் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்தபின்னாடியும் இவருக்கு போன்கால்கள் வரும். இயற்கைச் சீற்றங்கள் பற்றி இவர் போனில் பேசிக்கிறதை வெச்சுதான் நான் அதுபற்றித் தெரிஞ்சுக்குவேன்’’ என்று சொல்கிற மதுமதி, வங்கியில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றிருப்பவர்.

``வரவிருக்கிற ஆபத்துகளைக் கணிச்சு சொல்லி,  உயிர்களைக் காக்கிற வேலை தனக்குக் கிடைச்சிருக்கிறது பாக்கியம்னு சொல்லி இவர் சந்தோஷப்படுவார். வேலைப்பளு காரணமா குடும்பத்தோட அதிகநேரம் செலவிட முடியாததை நினைச்சும் அடிக்கடி வருத்தப்படு
வார். விடுமுறை தினங்களில் என்னையும் பிள்ளைகளையும் டூருக்குக் கூட்டிட்டுப் போயிடுவார். பொண்ணு நிவேதிதாவுக்குக் கல்யாணமாகிடுச்சு. பையன் அர்விந்த் வெளியூரில் வேலை பார்க்கிறான். இப்போ நாங்க ரெண்டு பேரும் ஓய்வுக் காலத்தை நிம்மதியா கழிச்சிட்டிருக்கோம். போன வாரம்கூட ரிஷிகேஷ் போயிட்டு வந்தோம்” என்கிற மதுமதி, தன் கணவரைச்  சித்திரிக்கும் மீம்ஸ் பற்றிச் சொல்லும்போது, ரமணன் சிரிக்கிறார்.

‘`2015-ல் சென்னை பெருவெள்ளத்தின்போது, எங்க வீட்டை வெள்ளம் சூழ்ந்து வீட்டுக்குள்ளே யும் தண்ணி வந்துடுச்சு. பல நாள்களுக்கு கரன்ட் இல்லை. இவரைப் பற்றி மீம்ஸ் வர ஆரம்பிச்சது அப்போதிருந்துதான். இவர் சோஷியல் மீடியாவைப் பயன்படுத்த மாட்டார் என்பதால் நான், பிள்ளைங்க, இவரோட நண்பர்களெல்லாம் இவரைப் பற்றி வரும் மீம்ஸ்ஸை இவர்கிட்ட காட்டுவோம். ரசிச்சுச் சிரிப்பார்’’ என்று கணவரைப் பார்க்கிறார் மதுமதி.

“என் 36 வருஷ சர்வீஸ்ல, ரெண்டு இயற்கைச் சீற்றங்களை மறக்க முடியாது. `தானே' புயல், மிகப்பெரிய துயரம். அஞ்சு நாளைக்கு முன்னாடியே அதுபற்றி எச்சரிக்கை விடுத்தோம். முன்னேற்பாடுகள் செய்யப்பட்டாலும், 50-க்கும் அதிகமானோர் அந்தப் புயலுக்குப் பலியானதை நினைச்சு பல நாள்கள் என் தூக்கம் தொலைச்சேன். அடுத்து, சென்னைப் பெருவெள்ளம். இந்த ரெண்டு நிகழ்வுகளின்போதும் இரவு பகல் பார்க்காம வானிலை அதிகாரிகள் எல்லோரும் வேலை பார்த்தோம்’’ என்கிற ரமணன், இன்றும் தொலைக்காட்சிகளில் வானிலை சார்ந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார். பள்ளி, கல்லூரிகளுக்குச் சிறப்பு விருந்தினராகச் செல்கிறார்.

‘`மாணவர்களைப் பார்க்கும்போதெல்லாம், ‘உங்களை ரொம்ப மிஸ் பண்றோம் சார்’னு சொல்வாங்க. பணியில் இல்லாத சூழல்ல நான் அதிகாரபூர்வமா வானிலை பற்றிய தகவல்களைச் சொல்லக்கூடாது. தவிர, பொதுவா வடகிழக்குப் பருவமழை மக்களின் நீர்த்தேவையைப் பூர்த்திசெய்யுமே தவிர, வெள்ளப் பாதிப்புகளை அது ஏற்படுத்தாது. அதுக்கு நாம்தான் நீர்நிலைகளின் பாதைகளை ஆக்கிரமிப்பு செய்யாம இருக்கணும். அப்போதான் மழைநீர் தானாகச் சேகரமாகி, உபரிநீரும் பிரச்னையின்றி வெளியேறும். இயற்கையைச் சீண்டாம, அதனுடன் இணைந்த வாழ்க்கையை வாழ்வோம், இயற்கையின் கொடையான மழையை வரவேற்போம்’’ என்கிறார் ரமணன், மீண்டும் ஆரம்பித்திருந்த தூறலை ரசித்தபடி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ரீவைண்ட்...

“நான் ஆறாவது படிச்சுட்டிருந்தப்ப சென்னையில் பெரிய புயல் வந்துச்சு. அப்போ என் வீடு இருந்த மயிலாப்பூர் பகுதியில ஓர் ஆவின் பால் பூத்தே தண்ணியில் மிதந்து போனதைப் பார்த்தேன். அந்தக் காலத்தில் புயல் தரை தட்டுற நிகழ்வெல்லாம் பெரிய ஆச்சர்யமாயிருக்கும். இப்போவெல்லாம் 20 - 30 சென்டிமீட்டர் மழைக்கே, ‘வெள்ளம் வந்துடுச்சு, வீட்டுக்குள்ள தண்ணி வந்துடுச்சு’னு சொல்ற அளவுக்கு ஆகிடுச்சு. முன்பெல்லாம் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் பள்ளிகள், முகாம்கள்ல தங்கவைக்கப்படுவாங்க. சில நாள்கள்ல நிலைமை சரியாகிடும். ஆனா, இன்னிக்குச் சின்ன மழைக்கே மக்கள் `வீட்டை இழந்துட்டோம்; வாழ்வாதாரத்தை இழந்துட்டோம்’னு சொல்றதைக் கேட்க ரொம்பக் கஷ்டமாயிருக்கு’’ என்கிறார் ரமணன்.