Published:Updated:

“வீணைதான் என் முதல் அடையாளம்!’’ - மீரா கிருஷ்ணன்

“வீணைதான் என் முதல் அடையாளம்!’’ - மீரா கிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
“வீணைதான் என் முதல் அடையாளம்!’’ - மீரா கிருஷ்ணன்

மறுபக்கம்கு.ஆனந்தராஜ் - படம் : ப.சரவணகுமார்

“நடிகையாக, பாடகியாக என்னைப் பலருக்கும் தெரியும். ஆனா, வீணைக் கலைஞர் என்பதுதான் என் முதல் அடையாளம். நான் ரொம்ப விரும்பற அடையாளமும் இதுதான். நேரமின்மையால் வீணையை மறந்துபோன என் தவற்றை உணர்ந்து, இப்போ தினமும் அதைக் குழந்தையா மடியில வெச்சு கொஞ்சிட்டிருக்கேன்’’ - பரவசத்துடன் பேசுகிறார் மீரா கிருஷ்ணன்.

“என் அம்மா நல்லா பாடுவாங்க. அதைக் கேட்டு, நானும் பாட்டு கிளாஸ் போறேன்னு சொன்னேன். போனஸா, வீணை கிளாஸிலும் சேர்த்துவிட்டாங்க. அப்படி பத்து வயசுல கத்துக்க ஆரம்பிச்சேன். விடியற்காலை 5 மணிக்கு பிராக்டீஸ் பண்ணத் தொடங்கலைன்னா அப்பா ரொம்பவே கண்டிப்பார். நல்லா கத்துகிட்ட நிலையில, சில வருஷங்களிலேயே வெளிநிகழ்ச்சிகள் மற்றும் கோயில்கள்ல வீணை வாசிக்க ஆரம்பிச்சுட்டேன். ‘இவளை ஆல்பங்கள்ல வாசிக்க வைக்கலாமே’னு அப்பாகிட்ட அவரின் நண்பரும், பிரபல பக்திப் பாடல் பாடகரும், என் மாமனாருமான கே.வீரமணி மாமா சொன்னார். எம்.ஏ. மியூசிக் படிச்சுட்டிருந்தப்போ மாமனாரின் ஐயப்பன் ஆல்பங்களுக்கு வீணை வாசிச்சுட்டிருந்தேன்.

“வீணைதான் என் முதல் அடையாளம்!’’ - மீரா கிருஷ்ணன்

அதைத் தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. கீரவாணி, ராகவேந்திரா, ஹெச்.எம்.வி. ரகு, தேவா, தினகரன் உள்ளிட்ட நிறைய இசையமைப்பாளர்களுக்கு திரைப்படப் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கும் பக்தி பாடல் ஆல்பங்களுக்கும் பிஸியா வாசிச்சுட்டிருந்த காலம் அது’’ என்று நினைவுகூர்கிறார் மீரா. அவரின் கணவர்... பிரபல சவுண்ட் இன்ஜினீயர் மற்றும் இசைக் கலைஞரான கிருஷ்ணன். கணவரின் ஊக்கத்தால் தான் பாடகியானதைச் சொல்லும்போது, உற்சாகம் பெருகுகிறது மீராவுக்கு.

“கணவர் என்னைப் பக்திப் பாடல்கள் பாடச் சொன்னார். என்மேல அவர் அவ்வளவு நம்பிக்கைவைக்கும்போது, நானும் வைக்கணும்தானே... பாடினேன். தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வந்தன. இன்னொரு பக்கம் எங்க நிறுவனம் மூலமாகவும் பக்திப் பாடல் ஆல்பங்களை ரிலீஸ் செய்தோம். இதுவரை 250-க்கும் மேற்பட்ட பக்தி ஆல்பங்களுக்குப் பாடியிருப்பதோடு, ‘மீரா கிருஷ்ணன் மெலடீஸ்’னு என்கிற பேண்ட் பெயரில் நிறைய மேடைக் கச்சேரிகளும் பண்ணிட்டிருக்கேன். ஒண்ணு தெரியுமா... நான் நடிகையாகவும் என் கணவர்தான் காரணம்’’ எனும்போது, ‘`ஹய்யோ மீரா போதும்மா!’’ என்று கூச்சத்துடன் சிரிக்கிறார் அவர் கணவர். அதை ரசித்துக்கொண்டே தொடர்ந்தார் மீரா.

“நான் பாடின ‘அம்மா’ ஆல்பம் கேசட்ல என் போட்டோவைப் பார்த்து, 1998-ல் எனக்கு சீரியல் வாய்ப்பு வந்தது. ‘நடிப்பெல்லாம் நமக்கு வராது’னு நான் மறுத்தப்போ, ‘உன்னால முடியும்னு நம்பிதான் உனக்கு இந்த வாய்ப்பைக் கொடுக்கிறாங்க. நடிச்சுப்பாரு, சரிவரலைன்னா விட்டுடலாம்’னு கணவர் சொன்னார். அப்படித்தான் ‘குப்பத்து சாஸ்திரிகள்’ சீரியல்ல நடிச்சேன். ‘வாவ்... சின்னத்திரைக்கு ஒரு சூப்பர் நடிகை கிடைச்சுட்டாங்க’னு எனக்கு முதல் பாராட்டு வந்தது என் கணவர்கிட்டயிருந்துதான். தொடர்ந்து ‘பெண்ணின் கதை’ உள்ளிட்ட நிறைய சீரியல்கள்ல நடிச்சேன்’’ என்பவருக்கு ‘த்ரீ ரோசஸ்’ படத்தில் லைலாவின் அம்மாவாக நடிக்கும் வாய்ப்பு வர, சினிமா, சீரியல் என்று மீரா டைரி ஃபுல்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“வீணைதான் என் முதல் அடையாளம்!’’ - மீரா கிருஷ்ணன்

‘`நடிப்புக்கு இடையில் அப்பப்போ பாடறதுக்கான சூழ்நிலைகளைத் தக்க வெச்சுக்கிட்டாலும், நேரமின்மையால வீணை வாசிக்கிறதை நிறுத்திட்டேன். அந்த வருத்தம் என்னை வதைச்சுட்டேயிருந்த நிலையில், அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஒரு புது வீணை வாங்கி வாசிக்க ஆரம்பிக்க, ஃபிங்கரிங் மறக்காம அப்படியே இருந்துச்சு. ஆனா, மறுபடியும் அதைத் தொடர முடியலை. அதுக்காக அடிக்கடி வருந்திட்டிருந்த சூழ்நிலையில, ‘ஆசையா வீணையை வாங்கிட்டு, அதைச் சரியா பயன்படுத்தாமலேயே இருக்கியே’னு கணவர் கண்டிச்சார். கூடவே, பிரபல வீணைக் கலைஞர் ராஜேஷ் வைத்யாவும் ஆலோசனை கொடுத்தார். ஒரு வருஷத்துக்கு முன்தான், ‘இனி தினமும் வீணை’னு உறுதியான முடிவெடுத்து, அதுக்கு நேரம் ஒதுக்கி வாசிச்சேன். வெளிநிகழ்ச்சிகளில் வாசிச்சு 22 வருஷமான நிலையில, அண்ணன் தன் வீட்டு நிகழ்ச்சியில் என்னை வாசிக்கச் சொன்னார். நான் வாசிக்கிறதைக் கேட்ட வங்க, ‘இத்தனை வருஷம் இந்த விரல்கள் வீணையை விட்டுப் பிரிஞ்சிருந்தது அநியாயம்’னு சொன்னாங்க. பிறகு வாய்ப்புகள் கிடைச்சு, கடந்த பல மாதங்களா திருமணம், வெளிநிகழ்ச்சிகள், கோயில் நிகழ்ச்சிகள், சமீபத்தில் சின்னத்திரை நடிகர்கள் சங்க நிகழ்ச்சினு வீணைக் கலைஞர் மீரா கிருஷ்ணன் பிஸியாகிட்டா.’’ - வார்த்தைகளில் அத்தனை மகிழ்ச்சி மீராவுக்கு.

நிகழ்ச்சிகளில் தமிழ் மற்றும் இந்தி கிளாஸிக் பாடல்கள், இளையராஜா, எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவின் பாடல்களை வீணையில் வாசிக்கும் மீரா, `` ‘பாடப்பாட ராகம், மூட மூட ரோகம்’ என்கிற பழமொழியின் பெருமையை உணர்ந்து, இப்போ தினமும் மூணு மணி நேரம் வீணை பிராக்டீஸ் பண்றேன். கணவரின் ‘ஸ்ருதியாலயா’ ரெக்கார்டிங் தியேட்டர்ல வீணை ரெக்கார்டிங் செய்றேன். பிரிஞ்ச கன்றைச் சேர்ந்த தாயைப்போல, இந்த உணர்வு அவ்வளவு நெகிழ்வா இருக்கு. இனி நடிப்புக்கும் வீணை வாசிப்புக்கும்  இணையான அளவு கவனம் செலுத்தப்போறேன்’’ என்று வீணைத் தந்திகளை மீட்டுகிறார் மீரா.

இனிதே தொடரட்டும்... தினந்தோறும் இசைப்பயணம்!

``அம்மாவாக நடிப்பது மனநிறைவு தருகிறது!’’

கோடம்பாக்கத்தின் அம்மா கதாபாத்திரத் தேர்வுப் பட்டியலில் தானும் முக்கிய இடம்பெற்றிருப்பதைச் சொல்லும்போது, ‘` ‘திமிரு’ (விஷால் அம்மா), ‘படிக்காதவன்’ மற்றும் ‘நையாண்டி’ (தனுஷ் அம்மா), ‘சிறுத்தை’ (தமன்னா அம்மா), ‘வேலையில்லா பட்டதாரி’ (அமலா பால் அம்மா) உள்பட 50-க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் மலையாளப் படங்கள்ல நடிச்சுட்டேன். தொடர்ச்சியான அம்மா கதாபாத்திரங்களில் மனநிறைவா நடிச்சுட்டிருக்கேன். இப்போ ‘மன்னர் வகையறா', ‘களரி’, ‘தடம்’, தம்பி ராமையா இயக்கத்தில் ஒரு படம் உள்பட பல படங்கள்ல நடிச்சுட்டிருக்கேன். பல வெளி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிட்டிருக்கேன். என் கணவரும் ‘வேலையில்லா பட்டதாரி’, ‘குற்றம் 23’, ‘மாரி’ உள்ளிட்ட சில படங்கள்ல நடிச்சிருக்கார். பொண்ணு அக்‌ஷயா, ஆர்க்கிடெக்ட். பையன் ஆதித்யா, விஸ்காம் படிக்கிறான். மீரா வெரி ஹேப்பி!” என்று பூரிக்கிறார் மீரா!