Published:Updated:

செம்பா - நீலா

செம்பா - நீலா
பிரீமியம் ஸ்டோரி
News
செம்பா - நீலா

தெய்வ மனுஷிகள்வெ.நீலகண்டன் - படங்கள் : ஆர்.ராம்குமார் - ஓவியம்: ஸ்யாம்

ந்த அக்கா தங்கச்சியைப் பாத்து ஊரே பொறாமைப்படும். அழகுன்னா அழகு, அப்படியொரு அழகு. எப்பப் பாத்தாலும் ரெண்டு பொண்ணுகளும் ஒண்ணாதான் திரிவாளுக... ரெண்டு பேருக்குமே இடுப்புக்குக் கீழே தலைமுடி தொங்கும். நிலா மாதிரி வட்ட முகம், வாழைத்தண்டுபோல வாட்டமான உடல்னு ஊரே அந்தப் புள்ளைகளை மகாலட்சுமி கணக்கா கொண்டாடித் தீர்க்கும். 

மூத்தவ செம்பா. சின்னவ நீலா. இந்தப் புள்ளைகளோட அப்பா, கோதண்டம்  பத்மநாபபுரம் நீலகண்டேஸ்வரன் கோயில்ல குருக்களா இருந்தாரு.  பரம்பரை பரம்பரையா கோதண்டம் குடும்பம்தான் கோயிலுக்கு பூசை பண்ணும். கோதண்டம் பொண்டாட்டி பேரு மல்லிகை. கல்யாணமான அடுத்த வருஷமே செம்பா பொறந்துட்டா. அடுத்து ஆம்பளைப் புள்ள வேணுங்கிறது கோதண்டத்தோட ஆசை.

மல்லிகை முழுகாம இருந்தா. `கடவுளே... நல்லபடியா பிரசவம் ஆகணும். எனக்கு ஆம்பளைப் புள்ளையக் கொடு. உம் திருப்பேரையே அதுக்குச் சூட்டுறேன்'னு அந்த நீலகண்டர்கிட்ட வேண்டிக்கிட்டே இருந்தாரு கோதண்டம்.  பொறந்ததென்னவோ பொண்ணு. ஆனாலும், `ஆண்டவன் கொடுத்ததை மகிழ்ச்சியோடு, ஏத்துக்கணும்'னு மனசைத் தேத்திக்கிட்டாரு. வாக்கு மீறாம, ‘நீலா’ன்னே பேரு வெச்சு சீராட்டி வளர்த்தாரு.

செம்பா - நீலா

ரெண்டு புள்ளைகளையுமே நல்லவிதமா படிக்க வெச்சாரு. ஊர் வாத்தியாருங்க, இந்தப் புள்ளைகளோட அறிவைக்கண்டு வியந்துபோய், `அய்யா கோதண்டம், உமக்கு வாய்ச்சது ரெண்டும் இறைவன் பிறப்புய்யா. அந்த ஈஸ்வரன் ரெண்டையுமே அறிவால படைச்சிருக்கான்யா'ன்னு வாய் நிறைய பாராட்டினாங்க. ஊரெல்லாம் தம் பிள்ளைகளைப் பாராட்டுறப்போ கோதண்டத்துக்குப் பெருமையாயிருக்கும். மல்லிகைகிட்ட சொல்லி சந்தோஷப்படுவாரு. பாவம் மல்லிகை. அவளுக்குப் பெரிசா வெளியுலகம் தெரியாது. புருஷன்தான் உலகம். அவன் சொல்றதுதான் வேதம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

புள்ளைக வளர்ந்துச்சுங்க. பார்வைக்கு லட்சணமா, பாக்குற கண்ணு பூக்குற மாதிரி ரெண்டும் திரியும். வருமானத்துக்குத் தக்க மாதிரி நகை நட்டுன்னு வாங்கிப்போட்டு அழகு பாப்பாரு கோதண்டம். ஆனாலும், கண்டிப்பும் கட்டுக்கோப்பும் குறையலே. தன் குலம் மாறாம, கோத்திரம் குலையாம முறைப்படி ரெண்டு புள்ளைகளையும் கரை சேத்திடணும்னு கனவு கண்டாரு கோதண் டம். ஆனா, வந்த வரனெல்லாம் அக்கா தங்கச்சிகளுக்குப் பிடித்தமானதா இல்லை. 

பத்மநாபபுரம் அரண்மனையில வீரர் களுக்கு வாள்பயிற்சி கொடுக்கிறவன் பத்மநாபன். ராஜா மார்த்தாண்ட வர்மனுக்குத் தனிப்பட்ட தளபதியாகவும் இருந்தான். பெரிய வீரன்.  வாட்டசாட்டமா இருப்பான். நாட்டுக்குள்ள நல்ல மரியாதை.  புலியூர்குறிச்சியில இருந்துச்சு பத்மநாபன் வீடு.

ஒருநாளு, வீட்டுலேருந்து குதிரையில அரண்மனைக்கு வந்துகிட்டிருந்தான் பத்பநாபன்.  அப்போ, கோயிலுக்குப் போயிட்டு வீட்டுக்கு வந்துகிட்டிருந்தாங்க செம்பாவும் நீலாவும். ரெண்டு பேரையும் பாத்த பத்மநாபன், அவங்க அழகுல மயங்கிப் போனான்.  அந்தப் புள்ளைகளையே திரும்பித் திரும்பிப் பாத்துக்கிட்டுப் போனான்.

செம்பாவும் பத்மநாபனைப் பாத்தா. இந்த மாதிரி நமக்கொரு கணவன் வாய்ச்சா எப்படியிருக்கும்னு ஒருகணம் யோசிச்சா.அதுக்குள்ள செம்பா நினைச்சதை நீலா கண்டுபிடிச்சுட்டா. `என்னடி... அவரு அத்தானா வந்தா எப்படி இருக்கும்னு யோசிக்கிறியா... செமப்பொருத்தம்டி'னு அவ கிண்டல் பண்ண, செம்பாவுக்கு வெட்கம். `அடிப்போடி... அதெல்லாம் இந்த ஜென்மத்துல நடக்காது'னு யதார்த்தம் புரிஞ்சுக்கிட்டுப் பேசுனா. வாய்தான் சொன்னதேயொழிய மனசு அவனையே தேடுச்சு. அவன் முகம் அப்படியே அவ மனசுல பதிஞ்சிடுச்சு. அவளை அறியாம திரும்பிப் பாத்தா. பத்மநாபன் ஓரிடத்துல நின்னு அவளையே பாத்துக்கிட்டிருந்தான். பயமும் வெட்கமும் தொரத்த, வேகவேகமா வீட்டுக்குப் போயிருச்சுக ரெண்டு புள்ளைகளும்.

அரண்மனைக்குப் போன பத்மநாபனுக்கு இருப்புக்கொள்ளல. யாரைப் பாத்தாலும் செம்பாவைப் பாத்த மாதிரியே இருக்கு. பசிக்கலே. வித்தையில மனசு இறங்க மறுக்குது.  கண்ணை மூடுனா செம்பாதான் வந்து நிக்குறா. இன்னொரு முறை அவளைப் பாக்கணும் போலிருக்கு.

பத்மநாபனோட தவிப்பைப் பாத்த நண்பன், என்ன ஏதுன்னு விசாரிச்சான். பத்மநாபன் விஷயத்தைச் சொல்ல, `நாளைக்கே யாரு என்னன்னு விசாரிச்சு பேசி முடிச்சுப்புடுவோம்'னு தைரியம் கொடுத்து தவிப்பைப் போக்கினான். ஆனாலும், பத்மநாபனுக்கு எந்த வேலையும் ஒடலே. எதையோ இழந்தமாதிரியே இருக்கு.

செம்பா - நீலா

செம்பாவுக்கும் நிலைகொள்ளல. பத்மநாபன் முகம் கண்ணைவிட்டு அகலலே. சாப்பாடு இறங்கலே. உறக்கம் பிடிக்கலே. அக்காவோட நிலைமை தங்கச்சிக்காரிக்கு வேடிக்கையாயிருக்கு. சிரிச்சு கேலி பண்றா.

நீலகண்டேஸ்வரர் கோயில் குருக்கள் கோதண்டம் பொண்ணுதான் அதுன்னு தெரிஞ்ச உடனே, பத்மநாபனுக்கு சந்தோஷம். உடனே ஆட்களை அனுப்பிப் பேச சொன்னான்.

கோதண்டம், பூசை முடிச்சு கோயில் நடையைச் சாத்திட்டு வீட்டுக்கு வந்துகிட்டிருந்தாரு. பத்மநாபன் அனுப்பின ஆட்கள் அவரை வழிமறிச்சாக. ஆளு, அம்புன்னு சேனையே வந்து வழிமறிக்கிறதைப் பாத்து கொஞ்சம் பயந்துபோனாரு கோதண்டம். நடந்த கதையெல்லாம் சொல்லி, `பத்மநாபன் உங்க பொண்ணு மேல ஆசைப்படுறார். நீங்களே முகூர்த்தத்துக்கு நல்ல நாளா பாத்து சொல்லி அனுப்புங்க. சீக்கிரமே கல்யாணத்தை முடிச்சுப்புடலாம்'னு சொல்லிட்டு, பதிலைக்கூடக் கேட்காம திரும்பிப் போயிட்டாங்க.

கோதண்டம் மிரண்டுபோனாரு. உடம்பெல்லாம் நடுங்குது. ‘அய்யோ... நீலகண்டரே... என்ன இது சோதனை’னு கலங்கி, கண்ணீர் வடிச்சாரு. தட்டுத்தடுமாறி வீடு போய்ச் சேர்ந்து பொண்டாட்டியைக் கூப்பிட்டு நடந்த கதையைச் சொல்லி `ஓ...'னு அழுதாரு.

“அவன் குலம் என்ன, கோத்திரம் என்ன? நம்ம வீட்டுப் பொண்ணை அவனுக்கு எப்படிக் கொடுக்க முடியும்? அரசனுக்கு வேண்டிய ஆளு... இல்லேன்னு சொன்னா கொலை செய்யக்கூட அஞ்ச மாட்டானே... தர்மத்துக்குத் தகுமா? நம்ம பொண்ணுங்க இருக்கிற இருப்பு என்ன, இவன் இருக்கிற இருப்பு என்ன? இவன்கூட இவ போயி வாழமுடியுமா? நீலகண்டா, ஏன் இப்படி சோதிக்கிறே'ன்னு  கதறி அழுதாரு. மல்லிகையும் கூடவே அழுதா. அவளுக்கு  வேற என்ன தெரியும்? அன்னிக்கு ராத்திரி அந்த வீட்டுல யாருக்கும் உறக்கமில்லை.

ஒருவாரம் ஓடுச்சு. நீலகண்டேஸ்வரனுக்குக் காப்புக்கட்டித் தேரோட்டம் நடக்குது. பத்மநாபனுக்கு உறக்கம் பிடிக்கலே. ஊர் பிடிக்கலே. வேலை பிடிக்கலே. வித்தை பிடிக்கலே. செம்பா, செம்பான்னு பித்துக்கொண்டு திரிஞ்சான். எப்படியும் செம்பா தேரு பாக்க வருவா, பாத்துப் பேசலாம்னு நினைச்சான். அவன் நினைச்ச மாதிரியே செம்பாவும் நீலாவும் தேரு பாக்க கிளம்புனாங்க. மல்லிகையும் கூடப்போனா. கோயில்ல நின்னு பூசை பண்ண வேண்டிய கோதண்டம், அந்த வேலையை விட்டுட்டு வந்து இவங்களை வழிமறிச்சாரு. `யாரும் தேரு பாக்கப் போக வேணாம். புள்ளைகளுக்குத் தீட்டுக் கழிக்கணும். அப்பளம், பாயசத்தோட சமையல் செஞ்சு தானம் கொடுக்கணும்... வீட்டுக்குப் போயி ஆகவேண்டிய வேலையப் பாருங்க'னு சொல்லி  அனுப்பிட்டாரு.

செம்பாவுக்கு ஏமாற்றமா போச்சு. தேரு பாக்குற சாக்குல பத்மநாபனையும் பாக்கலாமேன்னு நினைச்சா. அப்பாவால கெட்டுப்போச்சேன்னு வருத்தப்பட்டுக் கிட்டே வீட்டுக்குப் போயி தானத்துக்குச் சமைக்க ஆரம்பிச்சாங்க. வாசனை ஊரையே கூட்டுச்சு. அப்படியொரு சமையல்.

தெருவுல திரிஞ்ச ஏழு பேரைக் கூட்டிவந்து அன்னதானம் பண்ணினார் கோதண்டம். அன்னதானம் முடிஞ்சதும், `கோட்டைக் கிணத்துல போயி கால் அலம்பி தோஷம் கழிச்சுட்டு வந்திடலாம்'னு பிள்ளைகளைக் கூப்பிட்டார். மல்லிகையும் கிளம்பினா. `இல்லேயில்லை... நீ வீட்டுலேருந்து பூசைக்கு ஏற்பாடு பண்ணு'னு சொல்லிட்டு, ரெண்டு பேரையும் அழைச்சுக்கிட்டுக் கிளம்பினாரு.

புள்ளைங்க ரெண்டுக்கும் ஒண்ணும் புரியலே. `இப்போ என்ன தோஷம் நமக்கு... தேருகூடப் பாக்கவிடாம அப்பா ஏன் கோட்டைக் கெணத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போறாருன்'னு ஒரே குழப்பம். தந்தை சொல் மீறாத புள்ளைகளாச்சே... மறுபேச்சுப் பேசாம கூடப்போகுதுக.

செம்பா, ஜரிகை பார்டர் போட்ட பச்சைக்கலர் தாவணி கட்டியிருக்கா. நீலா செவப்புல மினுமினுக்கிற தாவணி. தலைநிறைய மல்லிப்பூ... வாசனை காத்தைக் கிறங்க வைக்குது. ஜல் ஜல்லுன்னு மணிக்கொலுசுச் சத்தம் காதை வருடுது. ரெண்டு புள்ளைகளும் தேவதைங்க மாதிரி நடந்து வருதுக. கோதண்டம் இறுகின முகத்தோட நடக்கிறாரு.

இதுவரைக்கும் அடிச்சுக்கொளுத்தின வெயிலு திடீர்னு கம்மிக்கிச்சு. வானம் திரண்டு நிக்குது. காத்து உஸ் உஸ்ஸுன்னு பாம்பு கணக்கா வந்து மோதுது. கோதண்டமும் புள்ளைகளும் நடையை எட்டி எட்டிப்போட்டு நடக்கிறாங்க.

செம்பா - நீலா

கோட்டைக் கெணறு வந்திடுச்சு. கெணத்துல இருபத்துநாலு கல்லுப்படி. பிள்ளைகளை இறங்கச் சொல்றாரு கோதண்டம். முதல்ல செம்பா இறங்க, அடுத்து இறங்குறா நீலா. ஆழத்துல கெடக்கு தண்ணி... எப்பவும் மழை பெய்யலாங்கிற மாதிரி காத்து ஈரத்தை கொண்டுவந்து அப்புது.  கீழே குனிஞ்சு பாத்தாலே பயமாயிருக்கு. இருந்தாலும் அப்பன் வாக்காச்சே... சரசரன்னு இருபத்தோராவது படியில வந்து நிக்குறா செம்பா. அதுக்கு மேப்படியில நீலா. அதுக்கும் மேல கோதண்டம். கண்ணை மூடி நீலகண்டேஸ்வரன் திசையில திரும்பி வணங்கினாரு. கண்ணெல்லாம் தண்ணி. அப்பாவோட செயலை, புரியாம பாக்கு துக புள்ளைக. ஒரே தள்ளு... முதல்ல கிணத்துக்குள்ள விழுந்தது நீலா. அய்யோன்னு கத்தக்கூட அவகாசமில்லை. வலுவெல்லாம் திரட்டி செம்பாவையும் தள்ளிவிட்டாரு. ‘அய்யோ... அய்யோ’ன்னு ஆழத்துல எழுந்த குரல் மெள்ள மெள்ளத் தேயுது.

கண்ணைத் தொடச்சுக்கிட்டு படியேறி மேல வந்தாரு கோதண்டம். தேரு வலம் சுத்துது. ஆட்டம்பாட்டம்னு பத்மநாபபுரமே கொண்டாட்டத்துல மிதக்குது. நேரா வீட்டுக்குப் போனாரு. தயாரா பறிச்சு வெச்சிருந்த விஷக்காயைக் கடிச்சாரு.  அஞ்சாறு நிமிஷத்துல நுரை தள்ளிப்போச்சு.

புள்ளைகளைக் கூட்டிக்கிட்டுப் போன மனுஷன், தனியா வந்திருக்கார். அதுமட்டுமில்லாம வாயில நுரை வேற தள்ளுதேன்னு பதறித்துடிச்ச மல்லிகை தலையை மடியில வெச்சு ‘அய்யோ அம்மா’னு கத்துறா. அதுக்குள்ள கோதண்டம் கொஞ்சம் கொஞ்சமா அடங்கிப்போனாரு. ஏதோ விபரீதமாகிப்போச்சுன்னு புரிஞ்சுக்கிட்ட மல்லிகை, கோதண்டம் கடிச்சுட்டுப் பாதியாக்கிப் போட்டிருந்த விஷக்காயைத்  தானும் எடுத்துக் கடிச்சுட்டா.

தேரு நிலைக்கு வந்திருச்சு. மெள்ள மெள்ளக் கொண்டாட்டம் முடிஞ்சு மக்கள் வீடு திரும்புறாங்க. செம்பாவைத் தேடி, பாத்த கண்ணு தோத்துப்போயி சோர்ந்துபோய் கெடந்தான் பத்மநாபன். கோட்டைக் கெணத்துக்குள்ள இருந்து செம்பாவையும் நீலாவையும் தூக்கி கோதண்டம், மல்லிகை யோட சேர்த்து அடக்கம் செஞ்சாங்க. செம்பா ஞாபகத்துலேயே அன்னம் தண்ணி குடிக்காம பட்டினியா கெடந்து உடல் தேஞ்சு பத்மநாபனும் செத்துப்போனான்.

செம்பாவும் நீலாவும் செத்துப்போனதை காலம் இன்னமும் தூக்கிச் சுமந்துக்கிட்டுத் திரியுது. அந்தப் புள்ளைகளைப் பாக்கணும் போலருந்தா, கன்னியாகுமரி மாவட்டத்துல உள்ள மேலாங்கோட்டுக்கு ஓர் எட்டுப் போயிட்டு வாங்க. இப்போ அக்காகாரி செம்பாவுக்குப் பேரு செண்பகவல்லி. தங்கச்சிகாரி நீலாவுக்குப் பேரு எசக்கி. ஊரும் உலகமும் இப்போ கையெடுத்துக் கும்பிட்டு அதுங்ககிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிட்டுக் கிடக்குதுக.

செம்பா, நீலாவோட உசுரைக் குடிச்ச கெணறு இன்னமும் உசுரோடதான் இருக்கு!