Published:Updated:

சிறுமை கண்டு பொங்குவாய்! - #உடைத்துப்பேசுவேன் #SpeakUp

சிறுமை கண்டு பொங்குவாய்! - #உடைத்துப்பேசுவேன் #SpeakUp
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுமை கண்டு பொங்குவாய்! - #உடைத்துப்பேசுவேன் #SpeakUp

பொறுத்தது போதும்நெருஞ்சி - ஓவியம் : பாரதிராஜா

முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடந்த சில மாதங்களாக, பாலியல் வன்முறைகளுக்கு எதிராகப் பெண்களின் குரல்கள் உலகம் முழுக்க ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. ஹாலிவுட் உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர் ஹார்வி வின்ஸ்டன்மீது, அவரிடம் முன்னர் பணிபுரிந்த பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்தது தீயாகப் பற்றிக்கொள்ள, அது பாலியல் வன்முறை குறித்து விவாதத்தை பல நாடுகளிலும் ஆரம்பித்துவைத்தது. சமூக வலைதளங்களில் #MeToo (நானும்) என்கிற `ஹேஷ்டேக்’கின் மூலம், பல பெண்கள் ‘நாங்களும் பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருக்கிறோம்’ என்று முதன்முறையாக மௌனம் கலைக்கத் தொடங்கினார்கள்.

ஹார்வி வின்ஸ்டன் என்பது ஒரு தனி மனிதன் மட்டுமே அல்ல. நாம் ஒவ்வொரு நாளும் பல ஹார்வி வின்ஸ்டன்களைச் சந்தித்து வருகிறோம். வீடுகளில் தொடங்கி அலுவலகம்வரை எல்லா இடங்களிலும் இந்த ஹார்விக்கள் பெண்களைப் பாலியல் ரீதியாகச் சீண்டுவதை அவர்களுடைய உரிமையாக நினைக்கிறார்கள். இந்த ஹார்விக்களை எதிர்த்து சில இடங்களில் நம்மால் பேச முடிகிறது; செயல்பட முடிகிறது. சில இடங்களில் முடிவதில்லை. நம்முடைய சூழல் அல்லது அவர்களுடைய உயரிய இடம் நம்மைத் தயங்க வைக்கிறது. இன்னும் சில நேரங்களில், `எதுக்கு தேவையில்லாம சண்டை போட்டுக்கிட்டு’ என்கிற எண்ணம். ஏன்... ஹாலிவுட் ஹார்வியைப் பற்றி பேசவே அந்தப் பெண்களுக்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறதே!

சிறுமை கண்டு பொங்குவாய்! - #உடைத்துப்பேசுவேன் #SpeakUp

நம்மில் பெரும்பாலான பெண்கள், பயணங்களின்போது, குறிப்பாகப் பேருந்துப் பயணங்களின்போது இந்தப் பிரச்னையைச் சந்திக்க வேண்டிவரும். இதுபோன்ற நேரங்களில் விலகுவோம்; அல்லது அதிகபட்சமாகத் திட்டுவோம்.  ஆனால், எனக்குத் தெரிந்த பெண்ணொருத்தி வேறொன்றைச் செய்தாள். சென்னை, கோயம்பேட்டிலிருந்து வேளச்சேரி சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்தில் பயங்கர நெரிசல். அதைப் பயன்படுத்தி ஒருவன் அந்தப் பெண்ணிடம் மிக மோசமாக நடந்துகொண்டதோடு, சைகை காட்டி இருக்கிறான். இவள் பதிலுக்கு என்ன செய்தாள் தெரியுமா? தானும் சைகை காட்டினாள். தான் கிண்டியில் இறங்கும் போது, சைகை காட்டி அவனையும் இறங்கவைத்துவிட்டாள். இதற்கு நடுவே நண்பர் ஒருவருக்கு போன் செய்து வர வழைத்துவிட்டாள். அங்கு நண்பர் நிற்கவே, அவனை அருகிலிருந்த காவல் நிலையத்துக்கு இழுத்துச்சென்று புகார் கொடுத்து விட்டார்கள். இத்தனைக்கும் அந்தப் பெண் திருநெல்வேலியில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருந்து சென்னை வந்த பெண்.

இரண்டு நிமிடங்கள் தாமதமாகப் போனால், ஆபீஸில் சம்பளம் பிடித்துவிடுவார்கள் என்று பதற்றத்தில் விரையும் நமக்கு, இதற்கு நேரம் இருக்காதுதான். ஆனால், காவல்துறையிடம் செல்ல முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் கண்டக்டரிடம் சண்டையிட்டாவது, அந்த நபரை பஸ்ஸிலிருந்து இறக்கிவிடலாம். அல்லது, நம்மால் முயன்ற அளவுக்கு சில யுக்திகளைக் கையாளலாம். பின்னை எடுத்துக்குத்துவது என்பது கூட்டத்தில் சிரமமான காரியமாக இருந்தால், கை முட்டியை வைத்து இடிக்கலாம்; காலால் ஓங்கி மிதிக்கலாம்.

ஓர் அலுவலகத்தில் பணிபுரியும் 35 வயதுப் பெண் அவர். விவாகரத்தானவர். 30 வயது மதிக்கத்தக்க சக ஊழியர் ஒருவர், அந்தப் பெண் தனியாக இருக்கும் நேரங்களிலெல்லாம் அவரிடம் ஏ ஜோக்ஸ் சொல்லியிருக்கிறார். அந்தப் பெண் அதற்கு ரியாக்ட் செய்யாமலும், அங்கிருந்து எழுந்து செல்லாமலும் இருந்திருக்கிறார். ஒருமுறை அலுவலகத்தில் பலரும் குழுமியிருந்த மீட்டிங் ஒன்றில், ‘சார் நல்லா ஏ ஜோக் சொல்வாரே?’ என்று எல்லோர் முன்னிலையிலும் குத்தலாகச்  சொல்ல, அனைவரும் அதிர்ந்தது முதல் படி. அந்த நபர் வேலையைவிட்டே சென்றுவிட்டது க்ளைமாக்ஸ் எபிசோடு. ஆனால், இதைப்போல அனைவருக்கும் தைரியம் இருப்பதில்லை. எனக்குத் தெரிந்த பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், தன் வேலையைவிட்டுச் சென்றுவிட்டார். இதுதான் இன்றைக்குப் பெரும்பான்மையான இடங்களில் நிலைமை.

பணிபுரியும் பெண்களுக்கு, இதுபோன்ற பிரச்னைகளிலிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டியது சம்பந்தப்பட்ட  நிர்வாகத்தின் கடமை. நம்மில் எத்தனை பேருக்கு, ‘பணியிடங்களில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்த புகார்களை விசாரிக்க ஒவ்வோர் அலுவலகத்திலும் நிச்சயமாக ‘விஷாகா’ கமிட்டி இருக்க வேண்டும்’ என்கிற சட்ட வரையறை பற்றித் தெரியும்? அப்படி எத்தனை அலுவலகங்களில் ‘விஷாகா’ கமிட்டி செயல்படுகிறது? அதைப் பயன்படுத்திக்கொண்ட பெண்களின் சதவிகிதம் என்ன?

இருபதாண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட ‘விஷாகா’ கமிட்டியின் பரிந்துரை, 2013-ம் ஆண்டுதான் சட்டமாக நிறைவேறியது. ‘தனியார் நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களில் ‘விஷாகா’ கமிட்டியின் கீழ்ப் பதியப்படும் புகார்களின் எண்ணிக்கைகளை வெளியிட வேண்டும்’ என்று மேனகா காந்தி கேட்டபோது, ‘அதை தனியார் நிறுவனங்கள் விரும்பாது’ என்று அதே அமைச்சரவையைச் சேர்ந்த அருண் ஜேட்லியே சொல்கிறார்.

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் அலு வலகங்களில் நடக்கும் பாலியல் புகார்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருக்கின்றன. ஆனால், எந்த ஒரு நிறுவனமும் அதன் அழுக்குகளை வெளிப்படையாகக் காட்டத் தயாராக இல்லை. அரசும் அதற்கு அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. இதுதான் நம் நாட்டில் பெண் பாதுகாப்பின் லட்சணம்.

அரசே கண்டுகொள்ள விரும்பவில்லை எனும்போது, `இதற்கெல்லாம் என்னதான் தீர்வு? இதை இப்படியே எத்தனை காலத்துக்கு தான் விடமுடியும்? இன்னும் எத்தனை நாள்களுக்குத்தான் நாம் பேசாமலேயே இருக்கப்போகிறோம்? பேசாமலேயே இருந்ததால் நாம் அனுபவிக்க நேர்ந்த மன உளைச்சல் எவ்வளவு? அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசினால்தான் என்ன?’ -  இந்தக் கேள்விகள் ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் வரத்தொடங்க வேண்டும். ஏனெனில், யாரும் சூப்பர்மேனாக நமக்கு வந்து உதவப்போவதில்லை. நாமேதான் நமக்கான குரலாக இருக்க வேண்டும். இதைப் பற்றி நாம் வாயைத் திறக்காமல் இருப்பதைத்தான் சிலர் தனக்கான கடவுச்சீட்டாகப் பயன்படுத்த நினைக்கிறார்கள்.

இப்புவியில் யாருக்கும் அஞ்சாத் துணிவுடன், சிறுமை கண்டு பொங்குபவளாக, உறுதிகொண்ட நெஞ்சினளாக நாம் மாற வேண்டும். அந்தத் துணிச்சலுடன் புத்திசாலித்தனமும் சாதுர்யமும் கைகோக்க வேண்டும். எச்சரிக்கையுடன் எதிரிகளைக் கையாள வேண்டும்.

செக்ஸுவல் ஹராஸ்மென்டைப் பொறுத்தவரை, பெண்கள்  தாங்களே தங்களுக்கு வழக்கறிஞராகவும், கவுன்சலராகவும் மாறவேண்டிய தருணம் இது. பாலியல் தொல்லைகள் குறித்த சக பெண்களின் வலிமிகு அனுபவங்கள், அவற்றை வலிமையோடு எதிர்கொண்ட ஸ்மார்ட் தோழிகளின் வழிகாட்டல்கள், இந்தக் குற்றத்தில் சமூகத்தின் பங்கு, அரசின் கடமை, சட்டம் தந்திருக்கும் ‘விஷாகா கமிட்டி’... இப்படி அனைத்துக் கோணங்களிலும்...

- இனி உடைத்துப் பேசுவோம்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz