Published:Updated:

சைபர் க்ரைம் ஆபத்துகள் மார்ஃபிங் பட வக்கிரங்கள் பெண்கள் எதிர்கொள்வது எப்படி? - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி

சைபர் க்ரைம் ஆபத்துகள் மார்ஃபிங் பட வக்கிரங்கள் பெண்கள் எதிர்கொள்வது எப்படி? - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி
பிரீமியம் ஸ்டோரி
News
சைபர் க்ரைம் ஆபத்துகள் மார்ஃபிங் பட வக்கிரங்கள் பெண்கள் எதிர்கொள்வது எப்படி? - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி

சட்டம் பெண் கையில்!எழுத்து வடிவம் : யாழ் ஸ்ரீதேவி - ஓவியம் : ராமமூர்த்தி

வித்யா... தேவதையாக வலம்வந்த செல்ல மகள். அவள் வளரும்போது ஒவ்வொரு கட்டத்தையும் பார்த்துப் பார்த்து பெற்றோர் எப்படிப் பூரித்திருப்பார்கள்? கல்லூரி சென்றபோது அவளைச் சூழ்ந்த பிரச்னை ஒன்றால் அவள் தற்கொலை செய்துகொண்ட தருணத்தில்... எப்படி வெடித்துச் சிதறியிருக்கும் அவர்களின் மனம்? வித்யாவின் உயிர் குடித்த எமன்... செக்ஸுவல் சைபர் க்ரைம் (பாலியல் இணையக் குற்றம்). 

சைபர் க்ரைம் ஆபத்துகள் மார்ஃபிங் பட வக்கிரங்கள் பெண்கள் எதிர்கொள்வது எப்படி? - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி

என்ன நடந்தது வித்யாவுக்கு?

மிகவும் கலகலப்பான இளம் பெண் வித்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திடீரென ஒருநாள் அவளின் முகநூல் சுவரில் முன் பின் தெரியாத ஒரு ஃபேக் அக்கவுன்ட்டிலிருந்து போஸ்ட் செய்யப்பட்டது ஒரு படம். வித்யாவை அரை நிர்வாணமாக மார்ஃபிங் செய்யப்பட்ட படம் அது. வித்யாவின் ஃப்ரெண்டு லிஸ்ட்டில் இருந்த பலரும் அந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்துவிட, அவமானத்தால் குறுகிப்போனாள் வித்யா. அதைப்பற்றி யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாமல், கல்லூரிக்குச் செல்லும் துணிவும் இல்லாதவளாகப் பெரும் மன உளைச்சலுடன் வீட்டுக்குள் முடங்கிவிட்டாள்.

வித்யாவின் தோழிகள் மூலமாக இந்தப் பிரச்னை பற்றி அறியவந்த அவள் பெற்றோர், காவல் நிலையம் சென்றனர். தங்கள் மகளின் மார்ஃபிங் படத்தை முகநூலிலிருந்து நீக்கவும், இதைச் செய்த குற்றவாளியைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும் கோரி புகார் அளித்தனர்.

காவல் துறையினர், ‘முகநூல் நிறுவனம் வெளிநாட்டில் இயங்குகிறது. அவர்களுக்கு குறிப்பிட்ட பதிவை நீக்கச்சொல்லி மெயில் அனுப்புகிறோம். இந்த பிராசஸ் முடிய 20 நாள்கள் ஆகும்’ என்றனர். அதற்குள் வித்யாவின் அந்த மார்ஃபிங் படம் மீண்டும் முகநூலில் ஒரு ஃபேக் அக்கவுன்ட்டிலிருந்து அவரின் நட்பு வட்டம் மற்றும் இன்னும் சில பக்கங்களிலும் பகிரப்பட்டது. ‘தொடர்புக்கு’ என்று வித்யா தந்தையின் செல்போன் எண்ணையும் இம்முறை சேர்த்துப் பதிவேற்றினான் குற்றவாளி. வித்யாவின் தந்தைக்குத் தொடர்ந்து ஆபாச அழைப்புகள் வரத்தொடங்க, அவள் பெற்றோர் அலறியபடி மீண்டும் காவல் நிலையம் சென்றனர்.

அந்நிலையிலும்கூட பிரச்னையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்காத போலீஸின் மெத்தனத்துக்கு எதிர்வினையாக, வித்யா வின் குடும்பம், நண்பர்கள் என்று இணைந்த னர் மக்கள். போராட்டம் வெடிக்க ஆரம்பித்தது. அதற்குப் பிறகே பதறிய காவல் துறை, வித்யாவின் பெற்றோர் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத இரண்டு காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்தது. போலீஸ் உயரதிகாரி வித்யாவின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டார். இணையக் குற்றவாளியைப் பிடிப்பதற்கான வேலைகள் விரைவுபடுத்தப்பட்டன. குறிப்பிட்ட புகைப்படத்தைப் பதிவேற்றப் பயன்படுத்தப்பட்ட மொபைல் டேட்டா வாயிலாக அதற்குரிய அலைபேசி எண்ணை நெருங்கியபோது, அந்த எண் போலி முகவரி கொடுத்து வாங்கப்பட்டிருந்தது தெரியவந்தது. முகநூல் தலைமையகத்திலிருந்து கிடைத்த தகவல் அடிப்படையில் எந்த `ஐபி’ (IP - Internet Protocol) முகவரியிலிருந்து ஆபாசப்படம் போஸ்ட் செய்யப்பட்டது என்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். 

இதற்கிடையில், வித்யாவின் வீட்டில் கடிகார முட்கள் துளிகூட நிம்மதியில்லாத நொடிகளைத் தந்தபடி நகரத்தொடங்கின. அவமானங்களும் அச்சங்களும் ஒன்றாகச் சேர்ந்து வித்யாவை அழுத்திய ஒரு நொடியில், அவள் தற்கொலை முடிவெடுத்துவிட்டாள். தன் மகளின் மேற்படிப்பு, திருமணம் போன்றவற்றுக்கான திட்டங்கள் நோக்கி நகர்ந்துகொண்டிருந்த அந்தப் பெற்றோர், அவளது இறுதிச் சடங்கை ஆற்றாமையும் அழுகையுமாகச் செய்துமுடித்தது பெருந்துயரம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சைபர் க்ரைம் ஆபத்துகள் மார்ஃபிங் பட வக்கிரங்கள் பெண்கள் எதிர்கொள்வது எப்படி? - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி

குற்றவாளி யார்?

வித்யாவின் நெருங்கிய நண்பர்கள் ரவி மற்றும் கார்த்திக் (பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன). இதில் ரவியும் வித்யாவும் காதலிக்க ஆரம்பித்தார்கள். ஆனால், தன்னிடம் வித்யா நட்பாகப் பேசியதைக் காதல் என நினைத்த கார்த்திக்குக்கு இது அதிர்ச்சியளித்தது. வித்யா தனக்குத்தான் என்று நம்பியிருந்த அவனால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தான் வித்யாவால் ஏமாற்றப்பட்டதாக நினைத்தான். அவனுக்குள் இருந்த வக்கிரம் விழித்துக்கொண்டது. அதன் விளைவுதான் இந்த மார்ஃபிங் பழிவாங்கல். வித்யாவின் தற்கொலைக்குப் பிறகே அந்தக் குற்றவாளி கைது செய்யப்பட்டான் என்பது சோகம்.

போலீஸார் செய்த தாமதம் வித்யாவின் நம்பிக்கையைக் குலைத்து, ‘அடுத்து ஏதேனும் புகைப்படத்தை பதிவேற்றிவிடுவானோ? குற்றவாளி கைது செய்யப்படவில்லை எனில், தன் மீதான களங்கம் நிலைபெற்றதாகிவிடுமா?’ என்ற அடுக்கடுக்கான கேள்விகள் வித்யாவைத் துரத்த, அவற்றை எதிர்கொள்ள முடியாத மன அழுத்தத்தில் உலகத்தைவிட்டே சென்று விட்டாள் வித்யா.

‘என்னை யாரும் நம்பவில்லை. நானே அவனுக்கு என் நிர்வாணப்படத்தை அனுப் பியதாக நினைக்கிறார்கள். பெற்றோர் உள்பட பலருக்கும் இந்தச் சந்தேகம் இருக்கிறது. இதனால் நான் வாழ விரும்பவில்லை.’ - வித்யாவின் தற்கொலைக் கடிதத்தில் இருந்த வார்த்தைகள் இவை.
தன் பிரியத்துக்கு உரிய பெண் தனது விருப்பத்துக்கு மாறாக நடந்தால், அவளை மனம்நோகச் செய்ய ஆண்கள் எடுக்கும் ஆயுதங்களில் ஒன்றாகியிருக்கிறது சைபர் க்ரைம். வித்யாவுக்கு நடந்தது அப்படியான ஒரு பழிவாங்கல் நடவடிக்கைதான். இந்தச் சம்பவத்திலிருந்து பெண்கள் உளவியல் ரீதியாகப் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம்... அது நட்போ, உறவோ... ஓர் ஆணுக்குள் இருக்கும் வக்கிரம் எப்போது விழிக்கும் என்று தெரியாது. அதற்கு விலையாக நம் உயிரை எதற்காக நாம் பலிகொடுக்க வேண்டும்? உரிய சட்ட நடவடிக்கைகளின் மூலம் அதை எதிர்கொள்வோம். 

யாரோ ஒருத்திக்கு நடந்த துயரமா இது?

வித்யாவின் கதை எங்கோ, யாரோ ஒருத்திக்கு மட்டும் நடந்த துயரமா? இல்லை... வித்யா யாரோ ஒரு பெண் இல்லை. இப்போதும்கூட ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்றவற்றில் தெரிந்த, தெரியாத ஆண்கள் தரும் செக்ஸுவல் டார்ச்சர்களை எதிர்கொண்டுவரும் பெண்கள் அநேகம்பேர் இருப்பார்கள். இதனால் அருவருப்பு, வெறுப்பு, கோபம், பயம் எனத் தாங்கள் வதைக்கப்பட்டாலும், இதுகுறித்து சைபர் க்ரைமில் புகார் தர வேண்டும் என்ற தைரியம் அவர்களில் பலருக்கும் ஏற்படுவதில்லை. ஃபேஸ்புக்கில் அக்கவுன்ட் இல்லாதவர்களை மனிதர்கள் பட்டியலிலிருந்தே `அன்லிஸ்ட்’ செய்யும் மனோபாவம் வளர்ந்துவரும்  இன்றைய சூழ்நிலையில், அதில் பெண்களும் சுதந்திரத்துடன் உலாவுவதில் ஆட்சேபனை தேவையில்லை. சொல்லப்போனால், தொழில் முதல் வேலைவாய்ப்புவரை அனைத்தையும் அளிக்கும் விரிந்துபட்ட தளமாக இருக்கும் இணையத்தைப் பெண்கள் தங்களின் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது பரிந்துரைப் பட்டியலில் சேர்ந்துவிட்டது. அதேநேரம், அந்த இணைய வெளியில் உலவும்போது ஒரு பிரச்னை என்றால், அதைக் கையாளும் துணிவும் பெண்களுக்கு இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

வக்கிர எண்ணம்கொண்ட ஓர் ஆண், ஒரு பெண்ணை அவமானப்படுத்த எந்த ஆயுதத்தையும் பயன்படுத்துவான். ஆனால், அதற்கு எதிராகத் தன்னம்பிக்கையுடனும் சட்டத்தின் துணையுடனும் போராடத் துணியும் பெண்ணின் முன், இதுபோன்ற அற்ப ஆயுதங்கள் பொய்த்துப்போகும். அதற்கு வாழும் உதாரணங்களாக பாதிப்புக் குள்ளாகும் பெண்கள் வலிமை பெற வேண்டும்.

பாலியல் இணையக் குற்றம்...

நடவடிக்கை எடுக்கும் வழிமுறைகள் என்ன?

பாலியல் சைபர் துன்புறுத்தல்கள்...

தவிர்ப்பது, எதிர்கொள்வது எப்படி?

(அடுத்த இதழில்...)