Published:Updated:

3 பெண்கள்... 70 நாள்கள்... 24 நாடுகள்... - கோவை டு லண்டன் த்ரில் ட்ரிப்!

3 பெண்கள்... 70 நாள்கள்... 24 நாடுகள்... - கோவை டு லண்டன் த்ரில் ட்ரிப்!
பிரீமியம் ஸ்டோரி
News
3 பெண்கள்... 70 நாள்கள்... 24 நாடுகள்... - கோவை டு லண்டன் த்ரில் ட்ரிப்!

பெண் உலாஜெ.முருகன்

‘`சாகசத்தின் ருசியை அறிஞ்சவங்க அதை ஒருபோதும் விட மாட்டாங்க’’ என்று உற்சாகத்துடன் தொடங்குகிறார் பொள்ளாச்சியைச் சேர்ந்த மூகாம்பிகா ரத்தினம். இவருடன் கோவையைச் சேர்ந்த மீனாட்சி மற்றும் மும்பையைச் சேர்ந்த ப்ரியா இணைந்த கூட்டணி, பெண்கள் முன்னேற்றத்தை முன்னிறுத்தி 24 நாடுகளுக்குக் காரிலேயே பயணித்து அசத்தியிருக்கிறார்கள். நீண்ட பயணம் தந்த களைப்பால் ஓய்வெடுக்க புதுச்சேரி அருகிலுள்ள ஆரோவில் சர்வதேச நகரத்துக்கு வந்திருந்த மூகாம்பிகா, ‘கோவை டு லண்டன்’ சாகசப் பயணத்தில் தங்களின் சிறகாக மாறியிருந்த ‘டாடா ஹெக்ஸா’ காரைக் குழந்தையைக் கொஞ்சுவதுபோலத் துடைத்துக்கொண்டிருந்தார். நாம் சென்றதும், `பேசிக்கொண்டே போகலாமா?' என்று கேட்டது... ‘ஹெக்ஸா’விடம். 72 நாள்களில் 26 ஆயிரம் கிலோமீட்டரைத் தார்ச் சாலைகளில் கடந்த அந்தக் கார் நம்மைச் சுமந்துகொண்டு ஆரோவில் செம்மண் பாதைகளில் தவழ்ந்தது.

‘`பி.இ முடித்துவிட்டு வேலை, பிசினஸ் என்றிருந்தேன். 18 வயதில் நான் பைக் ஓட்டப் பழக ஆரம்பிக்கும்போதே, அம்மா எனக்கு காரும் வாங்கிக்கொடுத்துவிட்டார். ராஜஸ்தான், ஹிமாச்சல் தொடங்கி இந்தியாவின் 70 சதவிகிதப் பகுதிகளைக் காரிலேயே சுற்றிப்பார்த்து விட்டேன். எங்கள் பகுதியில் இருக்கிற குழந்தைகளை அவ்வப்போது ட்ரக்கிங் அழைத்துப்போவது, பழங்குடியின மக்களைப் பற்றி அவர்களுக்குப் புரியவைப்பது போன்ற பணிகள் என் இன்னொரு பக்கம்’’ என்று சரளமாகப் பேச ஆரம்பித்தார் மூகாம்பிகா.

3 பெண்கள்... 70 நாள்கள்... 24 நாடுகள்... - கோவை டு லண்டன் த்ரில் ட்ரிப்!

‘`கோவை டு லண்டன் ட்ரிப் எப்படி?’’

`‘இந்தோ-பிரெஞ்ச் சாலை திறந்தபோது 15 ஆண்களுடன் ஒரேயொரு பெண்ணாகத் தாய்லாந்து சென்றுவந்தவர் மீனாட்சி. அவர்தான், இந்தியா சுதந்திரம் வாங்கிய 70-வது ஆண்டை முன்னிட்டு கோவை டு லண்டன் 70 நாள் ரோடு ட்ரிப் ப்ளான் பற்றி முகநூலில் எழுதி என்னை `டேக்’ செய்திருந்தார். அந்த நிமிடமே போக முடிவு செய்துவிட்டேன். என் எட்டு வயது மகள் சர்வதாராவும் பச்சைக்கொடி காட்டிவிட்டாள்!”

‘`பாஸ்போர்ட், விசா நடைமுறைகள்?”

‘`பாஸ்போர்ட் ஏற்கெனவே இருந்தாலும், விசாவுக்கும் இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பெறவும் மிகவும் சிரமப்பட்டேன். சீனா, கிர்கிஸ்தான், மியான்மர் போன்ற நாடுகளில் எல்லாம் காருக்கான விசாவை வழங்க மட்டுமே ஒன்றரை மாதம் ஆகியது. பண மதிப்பிழப்புத் திட்டம், தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகான அரசியல் சூழல் போன்றவை பெரும் சவாலாக அமைந்தன.’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
3 பெண்கள்... 70 நாள்கள்... 24 நாடுகள்... - கோவை டு லண்டன் த்ரில் ட்ரிப்!

‘`உணவு, மொழிப் பிரச்னைகள்?”

‘`சீனாவில் ஒரு ஹோட்டலில் சாப்பிடச் சென்றபோது வெட்டுக்கிளி, ஈசல், கரப்பான் பூச்சியையெல்லாம் பெரிய பெரிய தட்டுகளில் குவித்துவைத்திருந்தார்கள். அதில் நாம் எதைச் சொல்கிறோமோ அதை உடனே ஃப்ரை செய்து தருவதாகச் சொன்னார்கள். நாங்கள் வட்ட வட்டமாக வெட்டிவைக்கப்பட்டிருந்த மீனைக் காட்டி னோம். பிறகுதான் தெரிந்தது அது பாம்பு என்று. அதோடு நாங்கள் சீனாவில் இருந்த 18 நாள்களும் ரெடிமேடு உணவுகளைத்தான் சாப்பிட்டோம். எனவே, நன்றாக இளைத்திருந் தோம். இந்தியாவைவிட்டு வெளியேறிய பின் ஆங்கிலம் கைகொடுக்கவில்லை. பர்மாவில் பர்மீஸ், தாய்லாந்தில் தாய்தான் பேசுகிறார்கள். கடைசி நாள் லண்டனில்தான் எங்களுக்கு ஆங்கிலம் பயன்பட்டது. கைடு, சைகை மொழி எனச் சமாளித்தோம்!”

‘`இந்தியாவைப் பற்றி மற்ற நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள்?’’


‘`அனைத்து நாட்டு மக்களுமே இந்தியா மீது காதல்கொண்டுள்ளனர். பாபரும் தாஜ்மஹாலைக் கட்டிய தலைமை மேஸ்திரியும் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதால், அம்மக்கள் இந்தியாவை மிகவும் நேசிக்கிறார்கள். கஜகிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் என்பதுபோல இந்தியாவை இந்துஸ்தான், இந்துமா என்றுதான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். பழைய சோவியத் ரஷ்யா மக்கள் அனைவரும் ராஜ்கபூரின் அதிதீவிர ரசிகர்கள். விசா இல்லாமல் ரஷ்யாவுக்குள் அனுமதிக்கப்பட்ட ஒரேயொருவர் ராஜ்கபூர் மட்டும்தான். இன்றும் இந்தியா என்றால் அவர்கள் ராஜ்கபூர், ஹேமமாலினி போன்றவர்களோடுதான் தொடர்புபடுத்திப் பார்க்கிறார்கள். வெளிநாட்டுப் பெண்களுக்கு நான் எடுத்துச்சென்ற ஸ்டிக்கர் பொட்டுகளை வைத்துவிட்டபோது அவ்வளவு சந்தோஷம் அவர்கள் முகத்தில். அந்தளவுக்கு அவர்கள் நம் கலாசாரத்தை விரும்புகிறார்கள்.’’

3 பெண்கள்... 70 நாள்கள்... 24 நாடுகள்... - கோவை டு லண்டன் த்ரில் ட்ரிப்!

‘`பயணச் சவால்கள்..?”

‘`ஒரு நாட்டின் எல்லையைக் கடந்து மற்றொரு நாட்டின் எல்லைக்குள் நுழையும்போது வயிற்றில் புளியைக் கரைக்கும். அனைத்து நாடுகளிலும் இமிக்ரேஷனில் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொள்வார்கள். தாய்லாந்தில், ‘விசா ஓகே. ஆனால், காருக்கான தற்காலிக அனுமதிச் சான்றிதழ் இல்லை. அதனால் காரை அனுமதிக்க முடியாது’ என்று அங்கிருந்த அதிகாரிகள் சொல்ல, கால்களுக்குக் கீழிருந்த தரை நழுவுவதுபோலிருந்தது எங்களுக்கு. ‘ப்ளீஸ் சார், கம்மிங் ஃப்ரம் இண்டியா, த்ரீ கேர்ள்ஸ், இந்தியா டு லண்டன், ரோடு ட்ரிப்’ என்று கெஞ்சி காரிலிருந்த ரூட் மேப்பையெல்லாம் காட்டினோம். ஆனால், அவர்கள் அனுமதிக்கவில்லை. பின்னர் நண்பர் ஒருவரின் மூலமாகத் தாய்லாந்து முன்னாள் பிரதமரின் உதவியுடன் தாய்லாந்து மற்றும் லாவோஸைக் கடந்து சீனாவுக்குள் சென்றோம்.

சீனச் சாலைகள் சூப்பரோ சூப்பர். எட்டு கிலோ மீட்டர்வரை மலை களைக் குடைந்து சுரங்கச் சாலைகளை உருவாக்கி, அதனுள்ளேயே கொண்டை ஊசி வளைவுகள் என அசத்தி யிருந்தார்கள். அந்நாட்டின் கோபி பாலைவனத்தைக் கடக்கும்போது காரையே கவிழ்த்துவிடும் அளவுக்கு வீசிய காற்று... திகில்!

ஆசியாவின் ஸ்விட்சர்லாந்து என்று கிர்கிஸ்தானைச் சொல்லலாம். வைப்பர்கள்கூடச் செயல்படாத அதன் கடுமையான பனிப்பொழிவில் 200 கிலோமீட்டர் தொலைவுவரை 20 கிலோமீட்டர் வேகத்திலேயே டிரைவ் செய்தது சவாலான அனுபவம். ஸ்டீரியங்கை அழுத்திப் பிடித்ததால் அன்று இரவு கைகளையும் தோள்களையும் அசைக்கமுடியாத அளவுக்கு வலி. இந்தியாவிலிருந்து கிளம்புவதற்கு முன்னரே அனைத்து நாடுகளிலிருக்கும் நம் தூதரகங்களுக்கும் ரோட்டரி தலைவர்களுக்கும் கடிதம் எழுதியிருந்ததால் பெரும்பாலான நாடுகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களைச் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்திருந்தார்கள்.

3 பெண்கள்... 70 நாள்கள்... 24 நாடுகள்... - கோவை டு லண்டன் த்ரில் ட்ரிப்!

கிர்கிஸ்தானிலிருந்து வெளியேறி உஸ்பெகிஸ் தானுக்குள் போகும்போது சிக்கல் ஏற்பட, அதிகாரிகளிடம் மீண்டும் ‘கம்மிங் ஃப்ரம் இண்டியா, த்ரீ கேர்ள்ஸ், இந்தியா டு லண்டன், ரோடு ட்ரிப், ப்ளீஸ் ஹெல்ப்’ பாடலை ஆரம்பித்துவிட்டோம். அப்போது  திடீரென அந்த அதிகாரிகள் அனைவரும் அலறிக்கொண்டே கூடாரத்தைவிட்டு வெளியேறிவிட்டார்கள். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு ‘எர்த்க்வேக்... எர்த்க்வேக்’ என்று அவர்கள் கத்தியபோதுதான் நிலநடுக்கம் என்று புரிந்துகொண்டு நாங்கள் வெளியே ஓடிவந்தோம். மறுநாள், நாங்கள் தங்கியிருந்த அப்பார்ட்மென்ட்டில் இரவு ஒரு மணிக்கு ஏதோ வித்தியாசமாக உணர்ந்ததால் ஜன்னலைத் திறந்தோம். பார்த்தால், நிலநடுக்கத்தை உணர்ந்து ஊரே நடுரோட்டில் நின்றுகொண்டிருந்தது. அந்த நாட்டிலிருந்த இரண்டு நாள்களில் நான்கு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

பீதியோடு அங்கிருந்து வெளியேறும்போது மீண்டும் சோதனை. காரில் காலுக்குக் கீழே போடுவதற்காகத் தினசரி செய்தித்தாள்களை அந்த நாட்டில் ஒரு கட்டு வாங்கி வைத்திருந்தோம். அதில் அந்நாட்டுத் தலைவரின் புகைப்படம் இருந்ததால் கடிந்துகொண்டார் ஓர் அதிகாரி. அப்புறம் அவருக்கு இந்தியன் ஸ்வீட் என்று சொல்லி, கடலை மிட்டாயைக் கொடுத்தோம். லண்டன் சென்று சேரும்வரை அனைத்து நாட்டு அதிகாரிகளுக்கும் அதைத்தான் கொடுத்தோம்” என்று சொல்லிச் சிரிக்கிறார்.

‘`அடுத்த பயணம்..?’’

``விரைவில்... புற்றுநோய் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காகக் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர்வரை செல்லத் திட்டம்...”

ஹேப்பி ரோட்ஸ்... ஹேப்பி கேர்ள்ஸ்!