Published:Updated:

``ஏமாறப் பொறந்தவங்களா ஏழைங்க?’’ - காலத்துக்காகக் காத்திருக்கும் கீதா

``ஏமாறப் பொறந்தவங்களா ஏழைங்க?’’ - காலத்துக்காகக் காத்திருக்கும் கீதா
பிரீமியம் ஸ்டோரி
News
``ஏமாறப் பொறந்தவங்களா ஏழைங்க?’’ - காலத்துக்காகக் காத்திருக்கும் கீதா

உழைக்கும் பெண்களின் உண்மைக் கதைகள்ஆர்.வைதேகி - படங்கள் : ப.சரவணகுமார்

‘‘ஏழைங்கன்னா வாழ்க்கையில எதுக்குமே ஆசைப்படக்கூடாதாக்கா? படிக்கணும்னு ஆசைப்பட்டேன். கஞ்சியோ, கூழோ குடிச்சாலும் அப்பா சம்பாத்தியத்துல சாப்பிடணும்னு நினைச்சேன். அப்பாவின் அன்புக்கும் தம்பிங்களோட பாசத்துக்கும் ஏங்கினேன். உழைச்சுத் தேஞ்சுபோன அம்மாவை நல்லா வெச்சுப் பார்க்கணும்னு நினைச்சேன். இது எல்லாத்தையும்விட வாழ்க்கையில உண்மையா, நேர்மையா இருக்கணும்னு விரும்பறேன். இதெல்லாம் ஆசைகளா, பேராசைகளா அக்கா?’’ - கீதாவின் கேள்விகள் முகத்தில் அறைகின்றன.

சென்னை, நியூ ஆவடி ரோட்டுப் பகுதியின் நெரிசலான போக்குவரத்துச் சாலைகளின் இடையில் குறுகலான சந்தில் இருக்கிறது கீதாவின் ஒண்டுக்குடித்தன வீடு. பார்க்கிற யாரிடமும் ‘அக்கா’, ‘அண்ணா’ எனப் பாசத்துடன் ஒட்டிக்கொள்வது கீதாவின் இயல்பு. எத்தனை வயது பெண்களும் அவருக்கு அக்கா மட்டுமே! தன் சொந்த அம்மாவைக்கூட அவர் அம்மா என்று அழைப்பதில்லை. அதன் பின்னணியில் உள்ள சுவாரஸ்யத்தைப் பிறகு பார்ப்போம்.

``ஏமாறப் பொறந்தவங்களா ஏழைங்க?’’ - காலத்துக்காகக் காத்திருக்கும் கீதா

‘`அம்மா, அப்பா, ரெண்டு தம்பிங்க, நான்... இதுதான் எங்க குடும்பம். அப்பா தவறிப்போய் அஞ்சு வருஷமாச்சு. அவர்  இருந்தபோதும் அப்பா பாசம்னா என்னன்னு நான் உணர்ந்ததில்லை. பொழுதன்னிக்கும் குடிச்சுட்டுப் போதையிலேயே இருப்பார். அவரா மனசு வந்து காசு கொடுத்தா அன்னிக்கு எங்களுக்கு அரைவயிறு நிறையும். அவர் வீட்டுக்குள்ள இருக்கிற நேரமெல்லாம் நரகமா இருக்கும். எப்போதும் குடி நாத்தமும் உளறலுமா வீடே சூன்யம் பிடிச்சதுபோல இருக்கும். இருந்தும் இல்லாம இருந்த அப்பா தவறினதும் வீடு சகஜநிலைக்குத் திரும்பும்னு நினைச்சா முன்னைவிட இன்னும் மோசமாச்சு. அப்பா செத்துட்டாருங்கிற கவலையில ரெண்டு தம்பிங்களும் குடிக்க ஆரம்பிச்சாங்க. அப்பாவைவிட அதிகமா குடிக்கப் பழகினாங்க.

நிறைய படிக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, வீட்டுச் சூழ்நிலை இடம்கொடுக்கலை. பேனா வாங்கக்கூடக் காசிருக்காது. அதனால படிக்கும்போதே வீட்டுவேலைக்கும் போயிருக்கேன். எட்டாவதுக்கு மேல படிக்க முடியாதுனு தெரிஞ்சிருச்சு. வீட்டுக்குப் பக்கத்துல இருந்த ஓர் அக்கா லெதர் கம்பெனியில மாசம் 350 ரூபா சம்பளத்துல வேலைக்குச் சேர்த்துவிட்டாங்க. பதினோரு வருஷம் வேலை பார்த்தேன். லெதர் கம்பெனி வேலைன்னா எவ்வளவு கஷ்டமா இருக்கும்னு சொல்லத் தேவையில்லை. வேலையை முடிச்சுட்டு வீட்டுக்கு வந்தா அடிச்சுப் போட்டாப்ல உடம்பெல்லாம் வலிக்கும். திடீர்னு அந்த கம்பெனியை மூடிட்டாங்க. அரை வயித்துக்குக் கஞ்சி ஊத்தின அந்த வேலையும் இல்லாம போச்சு...’’ - வாழ்க்கையின் வறுமை கீதாவின் வார்த்தைகளில் இல்லை... நிறைய பேசுகிறார். பிரபல சமையல்கலை நிபுணர் ‘மெனுராணி’ செல்லம் வீட்டில் வேலை பார்க்கிற கீதாவுக்கு அதுதான் தாய்வீடு.

‘`செல்லம் அம்மா வீட்டுல மேரி (மேரி என்பவர் கீதாவின் அம்மா. அம்மாவை அப்படித்தான் அழைக்கிறார் கீதா) வேலை பார்த்துக்கிட்டிருந்துச்சு. லெதர் கம்பெனியை விட்டதும் நானும் வீட்டு வேலைக்குப் போயிட்டிருந்தேன். `ஒரு வீட்டுல ரொம்ப அதிக வேலை, என்னால செய்ய முடியலை. வேலையை விடப்போறேன்'னு மேரிகிட்ட சொல்றதுக்காக செல்லம் அம்மா வீட்டுக்கு வந்தேன். ‘அம்மாவைக் கூப்பிடுங்கம்மா...’ன்னேன். ‘நான்தான் அம்மா’னு கிண்டல் பண்ணினாங்க. அன்னிக்கு அவங்க கிண்டலா சொன்னதுதான் இப்போவரைக்கும் உண்மையா இருக்கு. செல்லம் அம்மாவைத்தான் நான் அம்மானு கூப்பிடுவேன். எங்கம்மாவை மேரினு கூப்பிடப் பழகிட்டேன். வெறும் வார்த்தைக்கு மட்டுமில்லை... நிஜமாவே செல்லம் அம்மா எனக்கு அம்மா மாதிரிதான். 12 வருஷமா அவங்ககிட்டதான் வேலை பார்க்கறேன்னு சொல்றதைவிடவும் அவங்ககூடவே இருக்கேன்னு சொல்றதுதான் சரி.

இங்கே வந்தபிறகுதான் கோலம் போடறது, சமைக்கறதுன்னு அடிப்படையான வேலைகள்ல தொடங்கி, பேக்கிங், சாக்லேட் தயாரிக்கிறது, சாலட் பண்றது வரைக்கும் எல்லாத்தையும் அம்மாகிட்டதான் கத்துக்கிட்டேன். காலையில குளிக்கிறதுக்கு மட்டும்தான் எங்க வீட்டுக்குப் போவேன். மத்த நேரமெல்லாம் அம்மா வீடுதான் எனக்கு உலகம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
``ஏமாறப் பொறந்தவங்களா ஏழைங்க?’’ - காலத்துக்காகக் காத்திருக்கும் கீதா

வேலைக்காரிங்கிற பார்வை இன்னும்கூட இந்தச் சமூகத்துல மாறலை. ஆனா, செல்லம் அம்மா அப்படியில்லை. நிஜமாவே என்னை அவங்களோட மூணாவது பொண்ணு மாதிரிதான் வெச்சிருக்காங்க. அவங்க சமையல் கிளாஸ் எடுக்கும்போது நான் பக்கத்துலயே இருப்பேன். அம்மா பண்றதைக் கவனிச்சுப் பல விஷயங்கள் கத்துக்கிட்டேன். சாக்லேட் செய்யக் கத்துக் கொடுத்திருக்காங்க. அம்மாவே காசு கொடுத்து எனக்குப் பத்திக் பிரின்ட்டிங்கும் கேண்டில் செய்யவும் கத்துக்கொடுத்திருக்காங்க. துப்பட்டா, சேலையில எல்லாம் சூப்பரா பத்திக் பிரின்ட்டிங் பண்ணிட்டிருக்கேன்.

எனக்குப் பத்துக்கும் மேலான சாக்லேட் செய்யத் தெரியும். ஐஸ்க்ரீம் நிரப்பிக் கொடுக்கிற சாக்லேட் கப் என்னோட ஸ்பெஷல். இன்னிக்கு சென்னையில உள்ள பெரிய ஸ்வீட் ஸ்டால்கள்ல கிடைக்கிற எல்லா சாக்லேட்டும் எனக்குச் செய்யத் தெரியும். சுத்தமா, தரமான பொருள்களை வெச்சுதான் செய்வேன். ஆனாலும், ஜனங்களுக்கு பெரிய கடைகள்ல வாங்கறதுதான் தரமா இருக்கும்கிறது நினைப்பு. எங்களை மாதிரி ஆளுங்கக்கிட்டருந்து மொத்தமா செய்து வாங்கிட்டுப் போய், பலமடங்கு விலை வெச்சு, ஜி.எஸ்.டி-யோடு சேர்த்து விற்கறதை சந்தோஷமா வாங்கிட்டுப் போவாங்க. அதையே நேரடியா எங்ககிட்ட வாங்கணும்னா, செய்யறவங்களோட தோற்றம் அவங்களை உறுத்துது. இதை என்ன சொல்ல?

எனக்கு டெய்லரிங்கும் தெரியும். சுடிதார் மட்டும் தச்சுக்கொடுக்கறேன். ஆனா, அதுலயும் என்னை ஏமாத்தறாங்க. என் கிட்டயே தச்சுக்கிட்டு எனக்கு முன்னாடியே அதைப் போட்டுக்கிட்டுப் போறாங்க. ஆனா, தையக்கூலியைக் கேட்டா தட்டிக் கழிக்கிறாங்க... ஏழைங்க ஏமாறப் பொறந்த வங்களா அக்கா?’’ - அறம் பேசும் கீதாவின் வாழ்க்கை இன்னும் அழகாகவில்லை.

‘`தம்பிங்க ரெண்டு பேரும் குடிச்சுட்டு வந்தாங்கன்னா என்னையும் அம்மாவையும் அசிங்கமா, தகாத வார்த்தைகள் சொல்லிப் பேசுவாங்க. விடிய விடிய கத்திக்கிட்டே இருப்பாங்க. காலத்துக்கும் இந்தக் கொடுமையை மேரி எப்படித்தான் தாங்கிட்டிருக்கோ? மேரியோட கவலை யெல்லாம் எனக்கு நல்லபடியா கல்யாணம் கட்டிக்கொடுக்கிறதுதான். ஆனா, எனக்குக் கல்யாண ராசி இல்லை போல.

அஞ்சு வயசுல எனக்கு அம்மைப் போட்டது. அதுல காது வடிவம் போயிருச்சு. அதுவரை நல்லாருந்த காலும் தாங்கித் தாங்கி நடக்கிற மாதிரி மாறிடுச்சு. நிறைய இடத்துல வந்து என்னைப் பொண்ணு பார்த்துட்டுப் போயிருக்காங்க. நான் குண்டா இருக்கேனாம்... லேசா கால் தாங்கி நடக்கறேனாம். அதனால வேணாம்னு சொல்லிட்டுப் போயிடறாங்க. கல்யாணமே வேணாம்னு முடிவு பண்ற நேரம், யாராவது ஒருத்தங்க வீடு தேடி வந்து பார்க்கறாங்க. பிடிச்சிருக்குனு சொல்றாங்க. எனக்கு விடிஞ்சிருச்சுனு நினைச்சு சந்தோஷப்படுவேன். கடைசியில என் பருமனையும் ஊனத்தையும் காரணமா சொல்லி வேணாம்னுட்டுப் போயிடறாங்க. முதன்முறை பார்க்கிறபோதே அது தெரியாதாக்கா?’’ - தன் கதையில் கண்ணீர் வரவழைக்கிற கீதாவுக்கு வாழ்க்கையில் எதன் மீதும் கோபங்களோ, வருத்தங்களோ இல்லை.

‘`எல்லாத்துக்கும் கடவுள் ஒரு கணக்கு வெச்சிருப்பார் அக்கா. அவர் கணக்கு  ஒரு போதும் தப்பாது...’’ - காலத்துக்காகக் காத் திருக்கிற கீதாவிடம் இருக்கிறது நம்பிக்கையும் அதைவிட அதிகமான மனஉறுதியும்.