
பெண் உலகம்நிவேதிதா லூயிஸ்
அப்பா பொண்ணு முதல் நாப்கின் நாயகர் வரை இந்த இரண்டு வார காலத்தில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவை என்ன? அறிவோம்... ஆக்கபூர்வமாகச் செயல்படுவோம்!

`டாடி டாடி... ஓ மை டாடி!’
சமீபத்தில் பெங்களூரில் `படுகோன் - திராவிட் சென்டர் ஃபார் ஸ்போர்ட்ஸ் எக்ஸலன்ஸ்' என்ற விளையாட்டு மையத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட டென்னிஸ் வீரர் பிரகாஷ் படுகோனை பாச மழையில் நனைத்துவிட்டார் மகள் தீபிகா படுகோன்.
“மிக சாதாரணமாகவே நாங்கள் வளர்ந்தோம். உங்கள் திறமைகள் எதுவும் வீட்டில் பேசப்படவில்லை. ஒருநாள்கூட நீங்கள் ஒரு லெஜெண்ட் என்பதை நாங்கள் உணரவில்லை. `பாட்மின்டன் வேண்டாம்... மாடலிங், நடிப்புதான் என் லட்சியம்' என்று நான் சொன்னபோதுகூட, என் முடிவை ஏற்றுக்கொண்டு என் கனவை நோக்கி பயணிக்க உற்சாகப்படுத்திய உங்கள் மனது எனக்கு இன்னமும் ஆச்சர்யத்தைத் தருகிறது” என்று உரையாற்றினார் தீபிகா. கிரிக்கெட் வீரர் திராவிட்டும் பாட்மின்டன் வீரர் பிரகாஷும் இணைந்து தொடங்கியிருக்கும் இந்த உலகத் தரம் வாய்ந்த மையத்தில் மாற்றுத் திறனாளிகள் பயிற்சிபெறவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
மகள் தந்தைக்கு ஆற்றும் உதவி!

`அடேங்’கம்மா!
தானேயைச் சேர்ந்த 31 வயது தாய் ஸ்வேதா சிங். அவரின் நான்கரை வயது மகள் இஷா சிங்குக்கு இடதுகைப் பழக்கம். வகுப்பறையிலும் வீட்டிலும் இப்போது பயன்பாட்டில் இருக்கும் ஷார்ப்னர்களை உபயோகிக்க சிரமப்பட்டார் அவர். இடதுகைப் பழக்கம் உடையவர்களுக்கு என வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சிறப்பு ஷார்ப்னர்களின் விலையோ 700 ரூபாய். ஷார்ப்னர் தயாரிக்கும் நிறுவனத்துக்கு இந்தப் பிரச்னை குறித்து ஸ்வேதா கடிதம் எழுதினார்.
கடிதம் அனுப்பிய ஒரு வாரத்துக்குள், இடதுகைப் பழக்கம் உடையவர்கள் உபயோகிக்க வசதியான ஐந்து ஷார்ப்னர்களை அவருக்கு அனுப்பியது அந்த நிறுவனம்.
`இந்தியாவில் வலதுகைப் பழக்கம் உடையவர்களே அதிகம். ஸ்வேதாவின் வேண்டுகோள் வித்தியாசமாக இருந்ததால், எங்கள் வடிவமைப்புப் பிரிவு வெளி நாடுகளுக்கு அனுப்பத் தயாராக வைத்திருந்த ஐந்து ஷார்ப்னர்களைத் தருவித்துத் தந்தோம். ஒவ்வொரு வாடிக்கையாளரும் எங்களுக்கு முக்கியம். இஷாவின் பிரச்னைக்குத் தீர்வு கொடுத்துவிட்டோம். இன்னும் இதுபோன்ற இடதுகைப் பழக்கம் உடையவர்களுக்கான ஸ்டேஷனரி பொருள்களைக் கூடியவிரைவில் சந்தை விற்பனைக்குக் கொண்டுவருவோம்' என்று அந்நிறுவனத்தின் விற்பனை மேலாளர் சஞ்சய் திவாரி தெரிவித்துள்ளார்.
அம்மான்னா அம்மாதான்!

`பேட் மேன்’!
`யூ திங்கிங் ஐயாம் மேட். பட், மேட் ஒன்லி பிகமிங் ஃபேமஸ்' என்ற சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமாரின் உரையுடன் தொடங்குகிறது `பேட் மேன்’ (Pad Man) படத்தின் ட்ரெய்லர். புத்தாண்டில் வெளியாகவிருக்கும் இந்த பாலிவுட் திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு சாதனைத் தமிழனைப் பற்றியது. குறைந்த விலையில் தரமான சானிட்டரி நேப்கின்களை உற்பத்திசெய்யும் சாதனை இயந்திரத்தை உருவாக்கியிருப்பவர் அருணாசலம் முருகானந்தம். மாதவிடாய் நேரங்களில் பெண்கள் உணரும் அசௌகரியத்தைத் தானும் உணர எண்ணி மூன்று வாரங்கள் விலங்கு ரத்தம் சொட்டும் சிறிய பைப் ஒன்றை தன் உடலில் கட்டியபடி, சானிட்டரி நாப்கின் அணிந்து பார்த்திருக்கிறார்.
முருகானந்தத்தின் உண்மைக் கதையால் கவரப்பட்ட பாலிவுட் இயக்குநர் பால்கி, `பேட் மேன்’ என்ற பெயரில் அவர் கதையைப் படமாக்கி யிருக்கிறார். இந்தப் படத்துக்குப் பெரும் ஆதரவைத் திரட்டி வருகிறார் கதாநாயகன் அக்ஷய் குமாரின் மனைவியும் நடிகையுமான ட்விங்கிள் கன்னா. ``மாதவிடாய் குறித்த புரிதலுடன், `ஃபேர்னெஸ் க்ரீம் வேண்டாம். சானிட்டரி நாப்கின் பாக்கெட்தான் நமக்குத் தேவை’ என்று பெண்கள் விழிப்பு உணர்வுடன் சொன்னாலே அது படத்தின் வெற்றி” என்று அவர் கூறியிருக்கிறார்.
பெரிய மனசு பண்ணி பேடுக்கு ஜீரோ ஜி.எஸ்.டி போடலாமே நம்ம அரசு?