Published:Updated:

பொய்யா!

பொய்யா!
பிரீமியம் ஸ்டோரி
News
பொய்யா!

தெய்வ மனுஷிகள் வெ.நீலகண்டன் - ஓவியம் : ஸ்யாம் - படங்கள்: அரவிந்த்

பொய்யா இருக்காளே... அவளுக்குப் புள்ளைங்கன்னா அவ்ளோ ஆசை...  ஆனா, ஆண்டவன் வஞ்சனை வெச்சுட்டான். கல்யாணமாகி 15 வருஷமா வயித்துல ஒரு புழு, பூச்சி வைக்கலே. போகாத கோயில் இல்லே... முழுகாத குளம் இல்லை... ஒரு பயனுமில்லை. பாவம் பரிதவிச்சு நின்னா பொய்யா.

பொய்யாவுக்கு ஒரு தங்கச்சி. வதவதன்னு வருஷத்துக்கொரு புள்ளையா ஏழு புள்ளைங்களப் பெத்துட்டா. அக்காகாரிக்கு, தங்கச்சி புள்ளைங்க மேல உசுரு. வாரமானா, சட்டி நெறைய பலகாரம் சுட்டுக்கிட்டு தங்கச்சி வூட்டுக்குப் போயிருவா பொய்யா. பெரியம்மாவைக் கண்ட புள்ளைகள்லாம் ‘அம்மா, அம்மா’ன்னு அவ காலையே சுத்திக்கிட்டு கிடக்குங்க. ‘ஆண்டவன் தனக்குத் தரவேண்டிய புள்ளைகளையும் தன் தங்கச்சிக்குச் சேர்த்துக் குடுத்துருக்கான்’னு அதுங்களையே தன் புள்ளைகளா நினைச்சுக்கிட்டா பொய்யா. 

ஆனா, என்னதான் அக்காகாரியா இருந்தாலும் தம்புள்ளைக இன்னொருத்தியை ‘அம்மா அம்மா’ன்னு காலைச் சுத்திக்கிட்டுக் கிடக்கிறதுல தங்கச்சிகாரிக்கு விருப்பமில்லை. ‘புள்ளை இல்லாதவ கண்ணு பட்டா இதுகளுக்கு ஒண்ணுல்லாட்டி ஒண்ணு ஆயிருமே’ன்னு பயம் அவளுக்கு.  இலைமறைகாயா சொல்லிப்பாத்தா. ஆனா, வெகுளிப்பொண்ணான பொய்யாவுக்கு அவ வார்த்தையில இருக்கிற விஷம் புரியலே.

பொய்யா!

ஒருநாள் வழக்கம்போலவே பொய்யா, சட்டி நெறைய பணியாரம் சுட்டு எடுத்துக்கிட்டு, தங்கச்சிகாரி வீட்டுக்குப் போனா. அக்கா வர்றதைத் தூரத்துலயே பாத்துட்ட தங்கச்சி, எல்லாப் புள்ளைகளையும் கோழி அடைக்கிற கொடாப்புக்குள்ள போட்டு, ‘பூச்சாண்டி வாரான்... நான் சொல்றவரைக்கும் யாரும் வெளியில வரக்கூடாது... வந்தா புடிச்சுக்கிட்டுப் போயி கண்ணை நோண்டிருவான்’னு மிரட்டி அடைச்சுப்புட்டா.

இருந்த சாதத்தையெல்லாம் கோழிக்குக் கொட்டிப் பத்துப் பாத்திரங்களை கழுவாம போட்டுட்டா. குப்பையும் கூளமுமா வீடு கெடக்கு. தலையில மண்ணுப்பத்து போட்டுக்கிட்டு முடியாதவ மாதிரி போத்திக்கிட்டு படுத்துக்கிட்டா.  புள்ளைகளை கட்டியணைச்சு உச்சிமோந்து கொஞ்சுற ஆசையில வீட்டுக்குள்ள நுழைஞ்சா பொய்யா. புள்ளைக அரவத்தையே காணோம். தங்கச்சிகாரி உடம்புக்கு முடியாம படுத்திருக்கா. அவ கோலத்தைப் பார்த்ததும் பதறிப்போன பொய்யா, பக்கத்துல உக்காந்து தலையைப் புடிச்சு விடுறா. ‘எங்கடி போச்சுக நம்ம புள்ளைக’ன்னு கேட்க, ‘அதையேக்கா கேக்குற... விளையாட போறேன்னுட்டு போன புள்ளைக... வீடு திரும்பலே... எனக்கும் உடம்புக்கு முடியலே... போட்ட பாத்திரம் போட்டபடி கெடக்கு... காலையிலேருந்து பசியா கெடக்குறேன்'னு கண்ணீர் விட்டா தங்கச்சி.

பாவி மகளுக்கு, தங்கச்சிகாரி பித்தலாட்டம் பண்றான்னு புரியலே.  ‘அய்யோ, பசியாக் கிடக்குறாளேன்னு பரிதவிச்சு பாத்திரங்களைத் துலக்கி, கஞ்சி காச்சப்போனா பொய்யா. ‘புள்ளைக இல்லேன்ன உடனே அக்கா, ஊருக்குக் கிளம்பிருவா’ன்னு நினைச்ச தங்கச்சி, `இவளை எப்படித் துரத்தலாம்'னு யோசிக்க ஆரம்பிச்சா. அதுக்குள்ளாற, அரிசியை அலசி கழனித்தண்ணியை ஊத்த கொல்லைப்பக்கம் போன பொய்யா, கோழிக்கொடாப்புக்குள்ள ஆளரவம் கேக்குறதைக் கவனிச்சுட்டா. மெள்ள, மூடியைத் தெறந்து எட்டிப்பாத்தா. புள்ளைகள்லாம் அடைஞ்சு கெடக்குதுக.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தங்கச்சியோட தகாதவேலை புரிஞ்சு போச்சு. ‘அடிப்பாவி மகளே... ஊருதாம் ஆயிரம் பேசுதுன்னா, நீயே இப்படி வஞ்சிட்டியேடி... உம்புள்ளைகளை எம்புள்ளைகளாதானேடி நினைச்சேன். என்கிட்டயே நீ பசலித்தனத்தைக் காட்டிப்புட்டியே... அய்யோ ஆண்டவனே... எனக்குன்னு ஒரு குஞ்சைக் குடுத்திருந்தின்னா, இப்படியொரு அவமானம் வாச்சிருக்குமா? என் வயித்துல நெருப்பை வச்சிட்டியே'னு கத்தி ஒப்பாரி வைக்கிறா பொய்யா.

பொய்யா!

தங்கச்சிகாரிக்குத் தர்மசங்கடம் ஆகிப்போச்சு. ‘அக்கா என்னை மன்னிச்சிருக்கா... தெரியாம பண்ணிட் டேன்’னு அழுவுறா... ஆனா, பொய்யாவுக்கு மனசு ஆறலே. ‘அம்மா அம்மான்னு காலைச்சுத்துற புள்ளைகள் மேல கண்ணு வெக்கிற ஈன ஜென்மமாடி நானு... சின்ன வயசுல, உன்னை என் கையில புடிச்சுக் குடுத்துட்டு செத்துப்போனா நம்ம ஆத்தா... அன்னியிலேருந்து நான்தானேடி தாய்க்குத் தாயாயிருந்து உன்னை வளர்த்தேன்... என்னை வேத்து மனுஷியா நினைச்சுப் புட்டியேடி... மலடி கண்ணு புள்ளைகளை மண்ணாக்கும்னு நினைச்சுட்டியே... இனிமே உம் வீட்டுப்பக்கமே வரமாட்டேன்... உம்புள்ளைகளை திரும்பிக்கூட பாக்கமாட்டேன்’னு சொல்லிட்டு தலைவிரிகோலமா ஓடுறா பொய்யா.

‘அய்யோ... தப்பு பண்ணிட்டமே’ன்னு தங்கச்சிகாரிக்கு மனசு அடிச்சிக்குது. ‘அக்கா, அக்கா’ன்னு அலறிக்கிட்டு ஓடுறா... பொய்யா போன திசை தெரியலே. வீட்டுக்கு ஓடிவந்து கோழிக்குடாப்பைத் திறந்து பாக்குறா.புள்ளைகள்லாம் மயங்கிக் கிடக்கு. 

அக்கா வீட்டுக்கு ஓடுறா தங்கச்சிகாரி. அக்காவக் காணோம். நாலாதிசையிலும் தேடியலையுறா... தெக்காப்புல இருக்கிற சிவன் கோயில்ல தலைவிரிகோலமா உக்காந்து அழுதபடியிருக்கா பொய்யா. அவ கண்ணுல இருந்து வடியிற கண்ணீர் ஆறு மாதிரி ஓடிக்கிட்டிருக்கு. அவ கால்ல விழுந்து ‘அக்கா, என் தெய்வமே... என்னை மன்னிச்சிரு, எம்புள்ளைகளைக் காப்பாத்து’ன்னு கதறி அழுவுறா தங்கச்சி.  அவளை ஏறெடுத்தும் பாக்கலே பொய்யா.  ‘போ... இனி எம் மூஞ்சியில முழிக்காதே... என் கண்ணீரை அள்ளிக்கிட்டுப் போய் புள்ளைக மேல தெளி. எல்லாப் புள்ளைகளும் கண் விழிச்சிரும். 'அம்மா, அம்மான்னு கூப்பிட்ட பெரியம்மா செத்துப்போயிட்டா... இனிமே வரமாட்டா’ன்னு சொல்லு'ன்னு சொல்லிட்டு மயங்கி விழுந்துட்டா.

அவ்வளவுதான்... பொய்யா முடிஞ்சு போனா. தங்கச்சிக்காரி தவற்றை நினைச்சு கதறி அழுவுறா... என்ன பிரயோஜனம்? போன உசுறு திரும்பவா போகுது? ஆறா ஓடுன பொய்யாவோட கண்ணீரை அள்ளிக்கிட்டுப் போய் குழந்தைங்க மேல தெளிச்சா. அத்தனை புள்ளைகளும் வாரிச் சுருட்டிக்கிட்டு எழுந்திருச்சுக.

பொய்யா  செத்துப்போன சிவன்கோயில் பக்கம் அதுக்கப்புறம் யாருமே போகலே. குறிப்பா குழந்தைங்க போனா, காய்ச்சல், கழிச்சல்னு நோய் வருதுன்னு வதந்திகள் பரவுச்சு. ஊர்க்காரவுக எவ்வளவோ மந்திரவாதிங்களை எல்லாம் கூட்டியாந்து மந்திரிச்சாங்க. ஆவிய விரட்ட யந்திரம் அடிச்சாக. ஆனாலும், அச்சம் தீரலே.   ராத்திரி நேரத்துல `ஓ...'ன்னு ஓர் ஒப்பாரிக் குரல் கேட்கும்னு ஊர்க்காரங்க சொல்லக்கேள்வி.

பொய்யா!

அதுமட்டுமில்லே... பெறக்கிற பிள்ளைங்கல்லாம் கை ஊனம், காலு ஊனம்னு பெறந்துச்சுக. யாருக்காவது பிரசவம்னா ஊரே உசுர கையில புடிச்சுக்கிட்டுக் கெடந்துச்சு. எல்லாம் பொய்யாவோட சாபம்னு ஊரே பேசுச்சு.  ஒருநாளு, ஊரு சாமியாடி கனவுல வந்த பொய்யா, ‘என்னைக் கண்டு யாரும் பயப்பட வேணாம். இனி ஒரு பிஞ்சு உயிர்கூட இந்த மண்ணுல போவாது. நான் உசுருவிட்ட இடத்துலேர்ந்து மண்ணெடுத்து நம்ம ஊரோட கிழக்கு எல்லையில ஒரு கோயிலுக் கட்டுங்க. பிரசவவலியில துடிக்கிற பொம்பளைகளை என்கிட்ட கொண்டு வந்துவிடுங்க... நானே மருத்துவச்சியா இருந்து பிரசவம் பாக்குறேன்’னு சொன்னா.

சிவன்கோயில்ல பொய்யா உயிர்விட்ட இடத்துல மண்ணெடுத்து, ஊருக்குக் கிழக்கு எல்லையில பொய்யாவுக்கு ஒரு குடிசை கட்டிக் குடிவெச்சாங்க. பொய்யா சொன்ன சொல்லைக் காப்பாத்திட்டா. அதுக்கப்புறம் எந்தப் புள்ளையும் ஊனமாப் பெறக்கலே.  எந்த உசுருக்கும் பங்கமில்லே. பொய்யா குடியிருக்கிற குடிசைக்கு எதிர்ல ஒரு ஓலைத்தடுப்பு இருக்கும். அதுதான் அந்த ஊருக்குப் பிரசவ ஆசுபத்திரி. பிரசவ வலியெடுத்துக் கத்துற யாரும், ‘அய்யோ...அய்யோ’ன்னு கத்துறதில்லை. ‘பொய்யா... பொய்யா’ன்னுதான் கத்துவாங்க. மேலே கட்டியிருக்கிற கம்பைப் புடிச்சுக்கிட்டு எல்லாப் பொம்பளைகளும் சுய பிரசவம் செஞ்சுக்குவாங்க. அவங்க மனசுக்குள்ள இறங்கி துணைக்குத் துணையாயிருந்து அந்தப் பொய்யாவே பிரசவம் பாக்கிறா. இதுவரை எந்த ஆபத்தும் வந்ததில்லை.

இன்னிக்கும் புதுக்கோட்டை மாவட்டத்துல, ஆவுடையார்கோயில் பக்கத்துல இருக்கிற ஒக்கூருக்கு போனீங்கன்னா, பொய்யாகிட்ட பிரசவம் பாத்துக்கிட்ட நூத்துக்கணக்கான பொம்பளைங்களையும், பொய்யா தொப்புள்கொடி நறுக்கிப்போட்ட  பிள்ளைகளையும் பார்க்கலாம். இதுவரை அஞ்சாறு தலைமுறை ஆகிப்போச்சு. இப்போ கொஞ்சம் பேரு, பொய்யாவுக்கு அபராதம் கட்டிட்டு பெரியாஸ்பத்திரிக்குப் போயி பிரசவம் பாக்குறதும் நடக்குது.

கூறைக்கொட்டகை இப்போ கோபுரம் ஆயிருச்சு. பொய்யா முகத்துல அன்பு பொங்குது; கனிவு ததும்புது. ஒத்தப் புள்ளைக்கி ஆசைப்பட்ட பொய்யாளுக்கு இன்னிக்கு ஊரெல்லாம் புள்ளைக்காடாக் கெடக்கு. எல்லாப் புள்ளைகளும், ‘நான் பொய்யாளோட புள்ளை’ன்னு சொல்லிக்கிட்டுத் திரியுதுங்க!