Published:Updated:

ஆரோக்கியம் இங்கே ஆரம்பம்!

டீகிளட்டரிங்ஆர்க்கிடெட் சரோஜினி திரு - எழுத்து வடிவம்: சாஹா - ஓவியங்கள் : ரமணன்

பிரீமியம் ஸ்டோரி

ல வீடுகளிலும் காணக்கிடைக்கிற காட்சி இது. வீட்டின் வரவேற்பறை முதல் பெட்ரூம் வரை ஆடம்பர, அழகுப் பொருள்களால் அலங்காரமாக மின்னும். அவற்றின் அழகில் மயங்கிப் போவோம். அவசரத்துக்கு பாத்ரூமுக்குள் நுழைந்தால் காட்சியே மாறியிருக்கும். ஆங்காங்கே ஒட்டடை, கறைபடிந்த டைல்ஸ் மற்றும் சரியாக ஃபிளஷ் செய்யப்படாத டாய்லெட், சுத்தம் செய்யப்படாத வாஷ் பேஸின்கள், கொழகொழப்பான பக்கெட், மக் என மயக்கமே வரும்.

ஒதுக்குப்புறமாக இருக்கவேண்டிய அறைகள்தான் குளியலறையும் கழிவறையும். ஆனாலும், ஒதுக்கப்படவேண்டிய அறைகள் அல்ல என்பது பலருக்கும் தெரிவதில்லை. உங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தாரின் ஆரோக்கியமும் அந்த இரண்டு அறைகளில் இருந்தே ஆரம்பிக்கிறது என்பதை உணர்வீர்களா? அவற்றின் சுத்தம், சுகாதாரம் பற்றிக் கொஞ்சம் யோசிப்போமா?

`கடவுள் உங்கள் வீட்டுக் கழிவறையில் இருக்கிறார்.' - இப்படிச் சொன்னால் உங்களில் பலருக்கும் கோபம் தலைக்கேறும். ஆனால், ஜப்பானியர்கள் இதைத்தான் நம்புகிறார்கள். ஒரு குடும்பத்தின் ஆரோக்கியத்தில் அந்த வீட்டின் சமையலறையைவிடவும் அதிகப் பங்கு வகிப்பது கழிவறை.

ஆரோக்கியம் இங்கே ஆரம்பம்!

கழிவறை என்றால் வீட்டின் ஒதுக்குப்புறத்தில் ஓர் ஓரத்தில் இருக்க வேண்டும் என்கிற நிலை இன்றைய கலாசாரத்துக்குப் பொருந்தாது. கடவுள் கழிவறையில் வசிக்கிறார் என்கிற ஜப்பானிய மக்களின் நம்பிக்கையை நாமும் கொஞ்சம் பரிசீலிப்போம். அவர்கள் அப்படி நம்புவதால்தான் கழிவறைச் சுகாதாரத்தில் அதிக அக்கறை காட்டுகிறார்கள். ஜப்பானியர்களுக்குக் கழிவறை என்பது புனிதமான இடம். தினமும் அதைச் சுத்தப்படுத்துகிறார்கள்; பூக்களால் அலங்கரிக்கிறார்கள்; ஊதுவத்தியும் வாசனை மெழுகுவத்தியும் ஏற்றி வைத்து ரம்மியமாக வைத்திருக்கிறார்கள்.

நான்கு பேர்கொண்ட ஒரு குடும்பத்துக் கான கழிவறையில் என்னவெல்லாம் இருக்கும்?

ஆளுக்கொன்று என நான்கு சோப்புகள், விதம் விதமான ஷாம்புக்கள், தவிர பேஸ்ட், பிரஷ், இத்யாதி... இத்யாதி என பாத்ரூமில் வைக்கப்படுகிற அனைத்துமே அவசியமானவைதானா என யோசியுங்கள்.

கடைகளில் கிடைக்கிற காஸ்மெட்டிக்ஸ், கண்டிஷனர்ஸ், ஃபேஸ் வாஷ் எனக் கண்டதையும் வாங்கிவந்து, குளியலறையிலும் கழிவறையிலும் அடுக்குவார்கள் சிலர். ஆனால், ஆறு மாதங்களாகியும் அவற்றில் பல அயிட்டங்களின் சீல்கூடப் பிரிக்கப்படாமல் அப்படியே இருக்கும். ஆறு மாதங்கள் உபயோகிக்காத ஒரு பொருளை அதன் பிறகும் நீங்கள் நிச்சயம் பயன்படுத்தப் போவதில்லை. எனவே, யோசிக்காமல் அவற்றைத் தூக்கிப் போடுங்கள்.

குளியலறையிலும் கழிவறையிலும் சேர்த்து வைத்திருக்கிற அத்தனை பொருள்களையும் முதலில் எடுத்து வெளியே போடுங்கள். ஒவ்வொன்றாக ஆராய்ந்து பாருங்கள். எக்ஸ்பைரி தேதி ஆகியிருந்தாலோ, உடைந்திருந்தாலோ, உபயோகித்துப் பல காலம் ஆகியிருந்தாலோ அவை உங்களுக்குத் தேவையற்றவை என அர்த்தம். தூக்கிப் போடத் தகுதியானவையே.

இப்படிச் செய்யும்போது அதுவரை உங்கள் பாத்ரூமை ஆக்கிரமித்திருந்த பல பொருள்களும் அநாவசியமானவையே என்பதை உணர்வீர்கள். மிச்சமுள்ள அவசியமான பொருள்களைச் சுத்தப்படுத்தித் துடைத்து அவற்றுக்கென ஓரிடம் ஒதுக்கி அங்கே வைத்துவிடுங்கள். உங்கள் வீட்டின் பாத்ரூமில் கண்டிப்பாகக் குப்பைத் தொட்டி ஒன்றை வையுங்கள். மூடி போட்ட குப்பைத் தொட்டி என்றால் சிறப்பு. அன்றாடம் சேர்கிற தலைமுடி, ஷாம்பு பாக்கெட், சோப்பின் அட்டை போன்றவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்த வசதியாக இருக்கும். அந்தக் குப்பைத் தொட்டி நிரம்பி வழியாதபடி அதையும் அடிக்கடி சுத்தப்படுத்துங்கள்.

நாம் உடுத்துகிற உடைகள், உபயோகிக்கிற பாத்திரங்கள் போன்றவற்றைத் தினமும் துவைத்தும் கழுவியும் சுத்தப்படுத்துகிறோம். கழிவறையைத் தினமும் சுத்தப்படுத்துகிறோமா? க்ளோசெட்டையும் வாஷ் பேஸினையும் தினமும் கழுவிச் சுத்தப்படுத்த வேண்டும். கழிவறையின் சுவர்களை மாதம் ஒருமுறை கழுவுவது அவசியம்.

கழிவறைகளைச் சுத்தப்படுத்த பிரபலமான நிறுவனத் தயாரிப்புகளைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று அவசியமில்லை. ஆப்பசோடாவை வெள்ளை வினிகருடன் கலந்து உபயோகித்தாலே பிராண்டட் டாய்லெட் கிளீனர் உபயோகித்த அதே பலன் கிடைக்கும். கழிவறை பளிச்சென மாறுவதுடன் உங்கள் கைகளும் பத்திரமாக இருக்கும்.

பாத்ரூம் மற்றும் கழிவறைகளைச் சுத்தப்படுத்த துடைப்பம், பிரஷ், கிருமி நாசினி போன்றவற்றை உங்கள் வீட்டிலுள்ள அனைத்துக் கழிவறை மற்றும் பாத்ரூம்களிலும் வைக்க வேண்டும் என அவசியமில்லை. ஒரு பாத்ரூமுக்குப் பயன்படுத்துவதையே இன்னொன்றுக்கும் பயன்படுத்தலாம். ஆனால், அவை தேய்ந்து பயன்படுத்த முடியாத நிலைக்குப் போன பிறகும் தூக்கிப்போட மனசில்லாமல் உபயோகிக்காதீர்கள். குறிப்பிட்ட இடைவெளிகளில் மாற்றுங்கள்.

சுத்தம் செய்வதற்கு முன்பும் பிறகும் உங்கள் பாத்ரூமையும் கழிவறையையும் போட்டோ எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அநாவசியப் பொருள்கள் அகற்றப்பட்ட அந்த அறைகள், நட்சத்திர ஹோட்டல் டாய்லெட்டுகளை மிஞ்சும்.

`சந்தோஷமான வாழ்க்கைக்கு ஆடம்பரமான பொருள்கள் அவசியமில்லை, அத்தியாவசியமான பொருள்கள் மட்டுமே போதும்' என்பதுதான் டீகிளட்டரிங் கற்றுத்தரும் பாடம். தேவையற்ற பொருள்களைத் தூக்கிப் போடுவதால் நீங்கள் எதையோ இழப்பதாக நினைக்காதீர்கள். விசாலமான வசிப்பிடம், சுத்தமான, ஆரோக்கியமான வாழ்நிலை, பாசிட்டிவ் எனர்ஜி என நீங்கள் பெறப் போகிறவை அதிகம்.

குப்பைகள் அகற்றிப் பேசுவோம்!

ஆரோக்கியம் இங்கே ஆரம்பம்!

டீகிளட்டரிங் டிப்ஸ்

* ஸ்டார் ஹோட்டலில் தங்கும்போது கொடுக்கப்படும் சாம்பிள் சோப், ஷாம்பு, சீப்பு, ஷவர் கவர் போன்றவற்றை எல்லாம் ஆசைப்பட்டு வீட்டுக்குக் கொண்டுவந்து உங்கள் வீட்டு பாத்ரூமில் அடைக்காதீர்கள். அப்படியே எடுத்து வந்தாலும் தேவையிருக்கும் எளியவர்களுக்குக் கொடுத்து உதவுங்கள்.

* வெளிநாட்டிலிருந்து யாரேனும் கொண்டுவந்து அன்பளிக்கிற சோப், சென்ட் போன்றவற்றை உங்களுக்குத் தேவையே இல்லை என்றாலும் வாங்கி அடுக்காதீர்கள். தயவுபார்க்காமல் அவை உங்களுக்குப் பயன்படாதவை என்று சொல்லித் தவிர்த்துவிடுங்கள்.

* உபயோகித்த பொட்டு, உள்ளாடைகளின் ஸ்டிக்கர் போன்றவற்றை பாத்ரூம் சுவர்களில் ஒட்டிவைக்கிற பழக்கத்தைத் தவிருங்கள்.

* உபயோகித்த துணிகளை பாத்ரூம் ஹேங்கரிலேயே தொங்கவிடுவது வேண்டாம்.

* பாத்ரூம் மற்றும் கழிவறை வாசலில் போடப்படுகிற மிதியடிகளை இரண்டு நாள்களுக்கொரு முறையாவது துவைத்துப் பயன்படுத்துங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு