பிரீமியம் ஸ்டோரி

கின்னஸ் உலக சாதனை, லிம்கா சாதனை மற்றும் பல சாதனைப் புத்தகங்களில் இடம்பிடித்தவர் நிதி பன்சால்.

27 வயதாகும் இவர், லட்சக்கணக்கில் ஸ்டிக்கர்கள் சேகரிப்பது, விநாடிகளில் காகிதத்தில் உருவங்கள் செய்வது எனச் சாதனைக்காக எடுத்துக்கொண்ட களங்கள் சுவாரஸ்யமானவை. பஞ்சாப் மாநிலம் பஸ்ஸிபதானா எனும்  ஊரில் வசிப்பவரிடம் பேசினோம்.

நிதி பன்சால்

``சிறு வயதில் கலைநயத்துடன் காகிதத்தில் பொம்மைகள் செய்வேன். 2007-ம் ஆண்டு ஒருநாள் டி.வி-யில் கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சியைக் குடும்பத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். நிகழ்ச்சி முடிந்தபோது என் அப்பா என்னிடம், ‘இதுபோன்ற உலக சாதனையை உன்னாலும் செய்ய முடியும்’ என்றார். பல நாள்கள் யோசித்து, ஸ்டிக்கர் சேகரிப்பில் உலக சாதனைபுரிய முடிவெடுத்தேன். தினமும் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய பின் இரண்டு மணி நேரத்துக்கும் மேல் செலவிட்டு ஸ்டிக்கர்களைச் சேகரிக்கத் தொடங்கினேன். நான் நேரத்தை வீணாக்குவதாக நண்பர்களும் உறவினர்களும் கேலி செய்தாலும், என் பெற்றோரும் சகோதரரும் என்னை ஊக்கப்படுத்தினார்கள்.

நிதி பன்சால்

ஐந்தாண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஸ்டிக்கர்களைச் சேகரித்தேன். 2013-ம் ஆண்டு, கின்னஸ் உலக சாதனை புத்தகம் என் ஸ்டிக்கர் சேகரிப்பை அங்கீகரித்துச் சான்றிதழ் வழங்கியது. 2015-ம் ஆண்டு லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தேன். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து, ஒரு நிமிடத்துக்குள் காகிதத்தில் மிகச்சிறிய அளவில் வாத்து, மலர்கள், குடை, வண்ணத்துப்பூச்சி என உருவாக்கினேன். இந்தச் சாதனைக்காக தேசிய, சர்வதேச அளவில் பல பரிசுகளைப் பெற்றேன். மத்திய, மாநில அரசுகளும் என் முயற்சிகளை ஊக்குவித்து பல வெகுமதிகளை அளித்தன’’ என்று சொல்லும் நிதி பன்சால், தன் கைவேலைப்பாடு படைப்புகளுக்காக ‘சித்தனாத் கிராஃப்ட் - கிரியேஷன்ஸ் சொசைட்டி’ என்ற அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

நிதி பன்சால்

‘`மூன்று கலைஞர்கள் என்னிடம் பணிபுரிகிறார்கள். முகநூல், பிளாக் மற்றும் யூடியூப் சேனல்களைப் பார்த்துப் பலரும் என் படைப்புகளை வாங்குகிறார்கள். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய, நல்ல வருமானம் வருகிறது. கைத்திறன் படைப்புகள் மேம்பாட்டுக்காகத் தொடர்ந்து முயற்சிகள் எடுப்பேன்’’ என்கிறார் நிதி பன்சால்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு