Published:Updated:

ரசியா சுல்தான் - இந்தியாவின் முதல் இஸ்லாமிய அரசி

ரசியா சுல்தான் - இந்தியாவின் முதல் இஸ்லாமிய அரசி
பிரீமியம் ஸ்டோரி
News
ரசியா சுல்தான் - இந்தியாவின் முதல் இஸ்லாமிய அரசி

முதல் பெண்கள்ஹம்சத்வனி - ஓவியம் : கார்த்திகேயன் மேடி

'வலிமையான அமைப்போடு, ஆண்மகனைப்போல குதிரையேறி, முகத்தை பர்தாவினால் மூடாமல், கைகளில் வில்லும் அம்பும் ஏந்திய அவளைக் கண்டேன்' என்கிறார் பயணி இபின் பதூதா.

அவள்... கி.பி 1236-ல் டெல்லி அரியணை ஏறிய முதலும் இறுதியுமான பெண்...
மலிகா ஹிந்துஸ்தான்-ரசியா பின் இல்துமிஷ்.

டிமையாக இருந்து, தன் வீரத்தாலும், புத்தி சாதுர்யத்தாலும் டெல்லி சுல்தான் ஆன குத்புதின் ஐபக்கின் மகன் இல்துமிஷின் மகளான ரசியா சுல்தான், அரியணை ஏறியதே ஒரு சுவாரஸ்யமான கதைதான். `இல்து மிஷின் வழித்தோன்றல்களில் சிறந்தவர் ரசியா. அவர் இருபது மகன்களுக்குச் சமம் என்று எண்ணினார் இல்துமிஷ்’ என்கிறார் பாரசீக வரலாற்றாளர் ஃபிரிஷ்தா. தந்தை இல்துமிஷின் மரணத்துக்குப் பின் ரசியாவின் சிற்றன்னை மகனான ஃபிரூஸ் தன் அன்னையின் உதவியுடன் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தான். சுல்தானின் ஆசை அவர் மகளை ஆட்சியில் அமர்த்துவதே என்பதை அறிந்தும், ஃபிரூஸுக்குத் தங்கள் ஆதரவை அளித்தனர் அமீர்கள். காரணம், ரசியா ஒரு பெண் என்பது மட்டுமே!

புத்திசாலியான ரசியா, முறையிடுவதற்காக மக்கள் அணியும் சிவப்புநிற அங்கியை அணிந்துகொண்டு, நேராக மக்களிடமே சென்றாள். படைகளிடமும் மக்களிடமும் வீர உரை ஒன்றை நிகழ்த்தினாள். அவளது பேச்சினால் வசீகரிக்கப்பட்ட டெல்லி படைகள், அரண்மனையை முற்றுகையிட்டு, ஃபிரூஸைத் தோற்கடித்து, அவனையும் அவன் தாயையும் கொன்றன. கம்பீரமாக, அதே சிவப்பு உடையோடு அரியணை ஏறினாள் ரசியா. `பர்தா முறையைப் பின்பற்றி, முகத்தை யாருக்கும் காட்டாமல் ஆட்சி செய்வார், நாம் குள்ளநரித்தனமாக ஆட்சியைப் பிடித்துக்கொள்ளலாம்' என்று எண்ணிய அமீர்களுக்குக் கடும் அதிர்ச்சி தந்தார் ரசியா. பர்தா முறையைப் பின்பற்றாமல், ஆண்களுடன் அரசவையில் வாதம்செய்து, ஆணைகள் பிறப்பித்து, சிங்கம்போல வலம் வந்தாள். படைகளை வழிநடத்தினாள். நஸ்ரியா பல்கலைக்கழகத்தில் கலை, அறிவியல், வானியல், கணிதம் என பல பிரிவுகளை நிறுவினாள். `வல்லமைமிக்க சுல்தான்’ என்று அச்சிடப்பட்ட செப்பு மற்றும் வெள்ளி நாணயங்களை வெளியிட்டாள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ரசியா சுல்தான் - இந்தியாவின் முதல் இஸ்லாமிய அரசி

ஓர் அடிமையின் வம்சத்தினள், அதிலும் பெண், தங்களை ஆள்வதா என்று பொருமிய அமைச்சர்களும், தளபதிகளும், மதவாதிகளும், பதிந்தாவின் ஆளுநரும் ரசியாவின் சிறுவயது நண்பனுமான மாலிக் அல் துனியாவுக்கு, `அரசிக்கும் அவளது குதிரைகளைப் பராமரித்துவந்த அடிமையான யாக்கூத்துக்கும் இடையே காதல்’ என்றொரு கதையைச் சொல்லியனுப்பினர். அவள்மீது காதல்கொண்டிருந்த அல் துனியா, கலகம் செய்தான். கலகத்தை அடக்க சிறுபடையுடன் ரசியா, பதிந்தாவை நோக்கிக் கிளம்பியதும், யாக்கூத் கொல்லப்பட்டான். துரதிர்ஷ்டவசமாக, அல் துனியாவிடம் தோற்று, அவனால் கிலா முபாரக் கோட்டையில் சிறை வைக்கப்பட்டாள் ரசியா. டெல்லி, அவளது சிற்றன்னை மகன் பஹ்ரம் வசம் வந்தது.

அல் துனியாவிட மிருந்து தப்பிக்க வேறு வழி இல்லாததால், அவனை மணக்கச் சம்மதித்தாள் ரசியா. இருவரும் 1240-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு, டெல்லியைக் கைப்பற்ற படை நடத்திச்சென்றனர். வழியில், கொள்ளை யருக்கு அஞ்சி படைகள் சிதறியதால், கைத்தல் என்ற இடத்தில், இருவரும் கொள்ளையரிடம் சிக்கி மரணம் அடைந் தனர். ரசியாவுக்கு அப்போது வயது 35.  ரசியா பேகத்தின் கல்லறைகள் கைத்தல், டோங்க் மற்றும் பழைய டெல்லியின் புல்புலிகானா என மூன்று இடங்களில் உள்ளன (உடல் அடிக்கடி மாற்றப்பட்டிருக்க வேண்டும்).

நான்கே ஆண்டுகள் ஆட்சி புரிந்தாலும், `டெல்லியின் தலை சிறந்த பெண் ஆட்சி யாளர்' என்று தன்னை நிரூபித்துச்சென்றார் ரசியா. பெண் வெற்றி பெற மதமோ, உடையோ தடை இல்லை என்பதை 800 ஆண்டுகளுக்கு முன்பே நமக்கு வழிகாட்டிச் சென் றிருக்கிறார் இந்த முதல் பேகம்.