Published:Updated:

தீபா ராதாகிருஷ்ணன் - ஆஹா... அந்த சுதந்திர உணர்வு!

தீபா ராதாகிருஷ்ணன் - ஆஹா... அந்த சுதந்திர உணர்வு!
பிரீமியம் ஸ்டோரி
News
தீபா ராதாகிருஷ்ணன் - ஆஹா... அந்த சுதந்திர உணர்வு!

வித்தியாசம்ஆர்.வைதேகி

''ஹாய், நான் தீபா... ஆர்வங்களின் காதலி. யெஸ்... புதுசு புதுசா விஷயங்களைக் கத்துக்கிறதுல எனக்கு ஆர்வம் அதிகம். சைக்காலஜி முடிச்சது, பிரெஞ்சு கத்துக்கிட்டது, பைலட் கோர்ஸ் பண்ணினது வரை எல்லாத்துக்கும் காரணம் ஆர்வம்தான்...'' - அசத்தல் அறிமுகம் கொடுக்கிறார்
தீபா ராதாகிருஷ்ணன்.

தீபா ராதாகிருஷ்ணன் - ஆஹா... அந்த சுதந்திர உணர்வு!

ஹைதராபாத்தில் வசிக்கிற தீபாவுக்கு இவற்றையெல்லாம் மிஞ்சிய இன்னோர் ஆர்வம் உண்டு. அது, விதம் விதமான பைக்குகள் ஓட்டுவது. 12 ரைடிங் கிளப்புகளை உள்ளடக்கிய 'ஹைதராபாத் யுனைடெட் பைக்கர்ஸ்' குழுவின் எக்ஸிக்யூட்டிவ் உறுப்பினரான தீபா, கியர்வைத்த வண்டிகளை ஓட்ட விரும்பும் பெண்களுக்குப் பயிற்சிகள் கொடுக்கும் அமைப்பின் நிறுவனரும்கூட.

``எப்படா பெரிசா வளருவோம்... பெரிய பைக்கை ஓட்டுவோம்னு பசங்க கனவுகளோடு காத்திட்டிருக்கிற மாதிரிதான் நானும் இருந்திருக்கேன். எனக்கு 18 வயசாகும்போது என் அண்ணனையும் அவன் ஃப்ரெண்ட்ஸையும் போல பைக் ஓட்டணும்னு காத்திட்டிருந்தேன். பெரிய பைக் ஓட்டறது பசங்களுக்கு மட்டுமேயான ஃபன் என்று நான் என்னிக்குமே நினைச்சதில்லை. விளம்பரங்கள்ல வரும் பைக்குகளை எல்லாம் பார்த்து இன்ஸ்பையர் ஆகியிருக்கேன்...'' - மெகா பைக்குகளின் மீது மோகம்கொண்ட கதையுடன் தொடர்கிறார் தீபா.

``விடுமுறைக்காக கேரளா போயிருந்தபோது என் அங்கிள் முதன்முதல்ல எனக்கு ஹேண்ட் கியர் வெச்ச வண்டி ஓட்டக் கத்துக்கொடுத்தார். அப்புறம் என் 17 வயசுல யமஹா ஆர்.எக்ஸ் 100 ஓட்டக் கத்துக்கிட்டேன். வெறும் அரைமணி நேரத்துல கத்துக்கிட்டுத் தெருக்கள்ல ஓட்ட ஆரம்பிச்சுட்டேன். அவ்வளவு சிரிப்போடும் சந்தோஷத்தோடும் என் முதல் நாள் ரைடை என்ஜாய் பண்ணினது இப்பவும் ஞாபகத்துல இருக்கு.

பொண்ணு பைக் ஓட்டினா வீட்டுலயும் வெளியிலயும் என்ன சொல்வாங்களோங்கிற தயக்கம் எனக்கும் இருந்தது. பைக் ஓட்டப் பழகினபோது அது தெரிஞ்சா அம்மா, அப்பா விரும்ப மாட்டாங்கனு நினைச்சேன். வீட்டுக்குத் தெரியாம பைக் பழகி, ஒருநாள் என் ஃப்ரெண்ட் பைக்கை ஓட்டிக்கிட்டுப் போகும்போது அம்மா பார்த்துட்டாங்க. என்ன நடக்கப்போகுதோனு பயந்து பயந்து வீட்டுக்குப் போனேன். `எப்போ பைக் ஓட்டக் கத்துக்கிட்டே... அது யாருடைய பைக்'னு விசாரிச்சாங்க. அடுத்தவங்க பொருளைக் கடன் வாங்கறது தப்புனு அட்வைஸ் பண்ணினாங்க. அவ்வளவுதான்.

பசங்களும் பொண்ணுங் களுமா ஃப்ரெண்ட்ஸ் பலருக்கும் என் பைக்ல பில்லியன்ல உட்கார்ந்துகிட்டு வர்றதுன்னா அவ்வளவு பிடிக்கும். எப்போதும் ஜீன்ஸ் போட்டுக்கிட்டு பைக் ஓட்டுவேன். என் பின்னாடி உட்கார்ந்து வர்ற பொண்ணுங்க வீட்டுல அவங்க ஏதோ பையன் பின்னாடி பைக்ல உட்கார்ந்துட்டுப் போறதா தப்பா புரிஞ்சுப்பாங்க. வண்டியை ஓட்டறது பொண்ணுனு புரியவைக்க அவங்க படற பாடு செம காமெடியா இருக்கும்...'' - கம்பீரப் பேச்சில் கவர்கிறார் தீபா.

``பைக் ஓட்டப் பழகின நாள்லேருந்தே எனக்கு லாங் ரைடு போகணும்னு ஆசை. ஒருநாள் அந்தக் கனவு நனவானது. ஒரு வார இறுதியில மும்பையில உள்ள மாத்தேரான் போக பிளான். அந்த ஏரியாவை ஒட்டியிருந்த மரங்களைச் சுத்தி பைக் ஓட்டிக்கிட்டே இயற்கை அழகுல மூழ்கிப்போன அனுபவம் சிலிர்ப்பானது. அந்த ரைடுல ஓர் இடத்துல டீ குடிக்க வண்டியை நிறுத்தினேன். ஒரு போலீஸ்காரர் என்கிட்ட பேசிக்கிட்டிருந்தார். என்னைப் போல வாழ ஆசைப்படறதா அவர் சொன்னபோது சந்தோஷமா இருந்தது. தனியா பைக் ஓட்டறதுல உள்ள பயம், சிக்கல்கள் பத்தி அட்வைஸ் பண்ணினவர், அந்த ரைடுல ஏதாவது பிரச்னைகள் வந்தா தன்னைக் கூப்பிடச் சொல்ற அளவுக்கு அன்பாகிட்டார். இப்படியான யதேச்சையான சந்திப்புகள், நல்ல மனிதர்களுடைய நட்பு, அவங்க செய்யற உதவிகள், புது ஊர், புதிய கலாசாரம், வித்தியாசமான உணவுகள்... என் பைக் ரைடை நாளுக்கு நாள் என்ஜாய் பண்ண வைக்க இப்படி ஏராளமான விஷயங்கள்...'' - சிலிர்த்து சிலாகிப்பவர், இப்போது  ராயல் என்ஃபீல்டு ஸ்டாண்டர்டு 500 ஓட்டுகிறார்.

``வண்டியோட வெயிட் 194 கிலோ. எவ்வளவு ஸ்பீடுல போனாலும் பேலன்ஸ் மிஸ் ஆகாது. கியர் இல்லாத வண்டிகள்ல எனக்கு அந்த ஃபீல் கிடைக்கிறதில்லை...'' - தீபாவின் விவரிப்பே அந்த ஃபீலை உணர்த்துகிறது.

`மகளிர் மட்டும்' படத்துக்காக ஜோதிகாவுக்கு சூர்யா பைக் ஓட்டக் கற்றுக்கொடுத்த காட்சி அப்போதே வைரலானது. பெரிய பைக் ஓட்ட விரும்புகிற எல்லா பெண்களுக்கும் அவர்களின் குடும்பத்து ஆண்களின் உதவியோ, ஊக்கமோ கிடைத்துவிடுவதில்லை. அந்தக் குறையைப் போக்குவதுதான் தீபாவின் லட்சியம். அதற்காகவே `கியர் ஸ்பாட்' என்கிற அமைப்பைத் தொடங்கியிருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தீபா ராதாகிருஷ்ணன் - ஆஹா... அந்த சுதந்திர உணர்வு!

``ஆயிரம் ஆண் ரைடர்ஸ் இருந்தாங்கன்னா, விரல்விட்டு எண்ணிடக்கூடிய அளவுலதான் பெண் ரைடர்ஸ் இருப்பாங்க. அந்த இடைவெளியை நிரப்பறதுக்காகவும் சாலைகளில் பைக் ஓட்டற பெண்களுடைய எண்ணிக்கையை அதிகரிக்கிறதுக்காகவும் ஆரம்பிக்கப்பட்டதுதான் `கியர் ஸ்பாட்'.

பைக்குகளுக்குப் பாலின பேதம் கிடை யாது. கியர் பைக் ஓட்டறதொண்ணும் ராக் கெட் சயின்ஸ் இல்லை. யார் வேணாலும் ஓட்டலாம். `வெயிட் அதிகம், ஓட்டறதுக்குச் சிரமமானது, ஆம்பிளை மாதிரி தெரியும்...' - இப்படி ஏதேதோ காரணங்களைச் சொல்லி, பெண்களைப் பெரிய பைக் ஓட்டவிடாம வெச்சிருக்கு இந்தச் சமூகம். அந்தத் தடைகளை உடைச்சு, பெண்களை கியர் வெச்ச பைக் ஓட்ட வைக்கிறதுதான் என் நோக்கம். இதை மெள்ள கிராமப்புறங்களுக்கும் அறிமுகப்படுத்தற ஐடியா இருக்கு.

ஃபேஸ்புக்லதான் முதல்ல இதற்கான அறிவிப்பை வெளியிட்டேன். 16 முதல் 64 வயதுப் பெண்கள் வரைக்கும் ஆர்வம் தெரிவிச்சிருந்ததைப் பார்த்தபோது ஆச்சர்யமா இருந்தது. வெளியூர், வெளிநாடுகள் லேருந்தும் பல பெண்கள் பைக் கத்துக்கிறதுல தங்களுக்கிருந்த ஆர்வத்தை வெளிப் படுத்தியிருந்தாங்க. நேர்ல சந்திக்கிறபோது அவங்களோட எக்சைட்மென்ட்டைப் பார்க்கணுமே... பைக் ஓட்டறது தன்னுடைய சிறுவயதுக் கனவுன்னும், அது நிறைவேறும்னே நினைக்கலைன்னும், ஓர் ஆண்தான் இதைக் கத்துக்கொடுக்கணும்னு காத்திருக்க வேண்டிய தேவை இனி இல்லைன்னும் சொல்லிக் குழந்தையைப் போல சந்தோஷப்படுவாங்க. பைக் ஓட்டப் பழகினதும் அவங்களுடைய தன்னம்பிக்கை லெவல் எங்கேயோ போயிருக்கும்...'' - பைக் ரைடிங்கின் பின்னணியில் உள்ள உளவியலைப் புரியவைக்கிறார் தீபா.

``பொண்ணுங்க பெரிய பைக் ஓட்டறதை இன்னும்கூட சில ஆண்களால சகிச்சுக்க முடியறதில்லை. வேணும்னே நம்ம வண்டியை ஓவர்டேக் பண்ணி வழிமறிப்பாங்க. நான் கோபப்படவே மாட்டேன். வண்டியை ஸ்லோ பண்ணுவேன் அல்லது நிறுத்தி அவங்களுக்கு வழிவிடுவேன். என் வீட்டுல உள்ள ஆண்களும் சரி, என் இனிஷியேட்டிவைச் சேர்ந்த ஆண் ரைடர்ஸும் சரி... பெண்கள் பைக் ஓட்டறதை என்கரேஜ் பண்றவங்க. இன்னும் சொல்லப்போனா நான் என் முதல் ஸ்டூடன்ட்டுடன் இந்த இனிஷியேட்டிவை ஆரம்பிச்சபோது கேக் வெட்டிக் கொண்டாடினதும் ஆண்கள்தான்...'' - பெருமையாகச் சொல்பவரிடம், எந்த வயதுப் பெண்களும் கியர் வைத்த வண்டி ஓட்டப் பழகலாம்.

``ஆர்வம்தான் முக்கியம். அவங்ககிட்ட பைக் இருக்கா, இல்லையாங்கிறது பிரச்னையில்லை.  யமஹா ஆர்.எக்ஸ் 100, ஹோண்டா யுனிகார்ன், ராயல் என்ஃபீல்டு ஸ்டாண்டர்டு 500னு என்கிட்ட இருக்கிற வண்டிகள்லயே சொல்லித் தருவேன். இந்தப் பயிற்சியில கியர் வெச்ச வண்டிகளை எப்படிக் கையாள்றதுங்கிறதை முக்கியமா அவங்க கத்துப்பாங்க.

பைக் ஓட்டறபோது, அதுலயும் பெரிய பெரிய பைக் ஓட்டறபோது பெண்கள் அதிக சுதந்திரமா உணர்வாங்க.  நினைச்ச இடத்துக்குப் பறக்கற சுதந்திரம் கிடைக்கும். பாலின பேதப் பார்வையிலேருந்து விடுதலை அடையறாங்க. எல்லாத்தையும்தாண்டி அவங்களுடைய தன்னம்பிக்கை உச்சம் தொடும். அதைச் சொன்னா புரியாது. ஃபீல் பண்ணணும்...'' - ஃபீல் பண்ணிப் பார்க்கத் தூண்டுகின்றன தீபாவின் பேச்சும் முயற்சியும்.