Published:Updated:

அருணா சாய்ராம் - என் அண்ணி இந்திரா நூயி!

அருணா சாய்ராம் - என் அண்ணி இந்திரா நூயி!
பிரீமியம் ஸ்டோரி
News
அருணா சாய்ராம் - என் அண்ணி இந்திரா நூயி!

இசைக் கோலம்சுஜிதா சென் - படம் : பா.காளிமுத்து

'தீர்த்த விட்டல... க்ஷேத்ர விட்டல' கீர்த்தனையை இவர் பாடியவுடன் காந்தம் - இரும்பு போலவே, கேட்போர் அந்தக் குரலுடன் ஒன்றிவிடுவர். அப்படியோர் ஈர்ப்பு இவரின் குரலுக்கு.

வர் வீட்டில் உள்ள லிஃப்ட்டில் செல்லும்போதுகூட சங்கீதம் உடன்வருவதை உணர முடிகிறது. ஆம்... ஓர் அதிகாலை வேளையில் இசைக்கருவிகள்சூழ் அறையில் கர்னாடக இசைப் பாடகி அருணா சாய்ராமைச் சந்தித்து உரையாடினோம்.

அருணா சாய்ராம் - என் அண்ணி இந்திரா நூயி!

முதன்முதலாக எப்போது பாடினீர்கள்?

என் சிறுவயது பொழுதுகளை மும்பையில் கழித்தேன். மும்பை என்றவுடன் உங்களுக்கு மெட்ரோபாலிட்டன் முகம் மனதில் தோன்றலாம். ஆனால், நான் வசித்த தெரு, தமிழ்நாட்டுக் கிராமங்களைப் போன்றது. தெருவின் இருபுறங்களிலும் மரங்கள் சூழ்ந்திருக்கும். அங்கே தெருமுனையில் உள்ள கோயிலில் `பஜனை சமாஜ்’ ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெறும். அந்தக் கோயில் பிராகாரத்தில்தான் முதன்முதலில் பாடினேன். அப்போது எனக்கு 12 வயது. முறையாகச் சங்கீதம் தெரியாத அந்நாளில், நான் பாடியதைக் கேட்டுக்கொண்டிருந்தார் பிருந்தாம்மா. அவர், சங்கீத வித்துவான்களுக்கெல்லாம் பாடம் நடத்துபவர். முதன்முறையாக நான் பாடிய பாடலைக் கேட்டபோது, `நீ வேணும்னா என்கிட்ட பாட்டு கத்துக்கிறியா?’ என்று கேட்டார். இப்போதுவரை இச்சம்பவத்தை  நினைக்கும்போது பிரமிப்பாகவே இருக்கிறது.

கர்னாடக சங்கீதம் தவிர, வேறு நவீன இசைகளை நீங்கள் அப்டேட் செய்கிறீர்களா?


1995-ம் ஆண்டு, `டோமினிக் வில்லார்ட்’ என்ற இசைக்கலைஞருடன் பாட ஆரம்பித்தேன். என்னுடைய முதல் இண்டோ-வெஸ்டர்ன் கச்சேரி அதுதான். 12 முதல் 17-வது நூற்றாண்டு வரையிலான ஐரோப்பிய பாணி இசைகளைப் பாடுவதில் டோமினிக் கைதேர்ந்தவர். ஒருமுறை  இருவரும் சேர்ந்து ஐரோப்பிய இசையையும் இந்திய இசையையும் ஒருசேர மேடையில் பாடினோம். இதுவரை நான் பாடிய கச்சேரிகளிலேயே இதற்குத்தான் அதிக பாராட்டுகளையும் கைத்தட்டல்களையும் வாங்கினேன். மறுபடியும் 22 வருடங்கள் கழித்து, டோமினிக்கும் நானும், வரும் பிப்ரவரி மாதம் சென்னையில் கச்சேரி நடத்தவிருக்கிறோம். நீங்களே சொல்லுங்கள், நான் அப்டேட் செய்கிறேனா இல்லையா?!

சென்னையை இசை நகரங்களின் பட்டிய லில் இணைத்துள்ளதே யுனெஸ்கோ, அதுபற்றி..?

பாரம்பர்ய இசை நகரங்களின் பட்டியலில் சென்னையையும் இணைக்கக் கோரி, மத்திய கலாசார அமைச்சகம் சார்பில் சில மாதங்களுக்கு முன்பு டெல்லி சங்கீத் அகாடமிக்குப் பிரகடனம் வந்தது. இதற்கு முன்பாக யுனெஸ்கோ படைப்பாக்க நகரங்களின் பட்டியலில், இந்திய நகரங்களான ஜெய்ப்பூர், வாரணாசி ஆகிய நகரங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. ஒவ்வோர் ஆண்டும் சென்னையில் கிட்டத்தட்ட மூவாயிரம் இசைக் கச்சேரிகள் நடைபெறுகின்றன. `திருவல்லிக்கேணி’, `கபாலி கோயில்’, `சோழ மண்டலம்’, `கலாக்ஷேத்ரா’, `மாமல்லபுரம்’ போன்ற எல்லா இடங்களும் சென்னையின் பாரம்பர்ய அழகியலை எடுத்துரைக்கின்றன. இசையில் `பாரம்பர்யம்’ எனச் சொல்லப்படுவது, நமது பெருமை மட்டுமன்று; நமது உரிமையும்கூட.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அருணா சாய்ராம் - என் அண்ணி இந்திரா நூயி!

நீங்கள் நடத்துகிற `நாதயோகம் டிரஸ்ட்'டின் பணிகள் குறித்துச் சொல்லுங்கள்...

இசையைக் கற்றுக்கொள்ளும் முதல் தலை முறையினருக்கு இசைக்கருவிகள் வழங்குவது, வாய்ப்பாட்டு சொல்லிக்கொடுப்பது போன்ற செயல்களைச் செய்துவருகிறோம். கச்சேரி நடத்துவதற்கான நிதி உதவிகளையும் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களுக்கான நிதி உதவிகளையும் இந்த அமைப்பின் மூலம் வழங்கிவருகிறோம்.

20 வருடங்களுக்கு முன்பு மார்கழி மகா உற்சவம் நடந்துகொண்டிருந்த வேளையில், எனது குழுவில் துரை சுவாமிநாதன் என்கிற வயலின் இசைக்கலைஞர் ஒருவர் இருந்தார். ஒருநாள் இரவு, கச்சேரி முடித்து அவர் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த நேரத்தில் விபத்து ஏற்பட்டது. தலையில் பலத்த காயங்களுடன் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். இரண்டு நாள்கள் மருத்துவமனையிலேயே முகாமிட்டபடி இருந்தோம். சிகிச்சை பலனின்றி, என் குழுவினருடன் இத்தனை வருடங்களாக இருந்த ஓர் இசைக்கலைஞனின் உயிர் பிரிந்த அந்தத் துயர சம்பவத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவரின் குடும்பத்தினருக்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. கடனில் இருந்த அவரது வீட்டை மீட்டெடுத்தோம். அன்றிலிருந்து ஒவ்வோர் இசைக்கலைஞரின் மறைவுக்குப் பிறகும், அவர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதை இந்த அமைப்பு ஒரு பொறுப்பாக எடுத்துச் செய்துவருகிறது.

`Where Word Fails, Music Speaks' என்பதை எப்போது உணர்ந்தீர்கள்?


என் கச்சேரி முடிந்ததுமே அந்த  இடத்தை விட்டுச் செல்ல மாட்டேன். கச்சேரிக்கு வந்த அனைவரையும் வழியனுப்பிவைத்த பிறகு தான் நான் வீட்டுக்குக் கிளம்புவேன். அப்படி ஒருநாள் பாரதிய வித்யா பவனில் கச்சேரி முடிந்தவுடன் ஒரு பெண்மணியைச் சந்திக்க நேர்ந்தது. மிகவும் நைந்துபோன காட்டன் புடைவையை உடுத்தியபடி, கையில் ஒரு கோணிப்பையுடன் நின்றுகொண்டிருந்தார். அவரிடம் சென்று, `சொல்லுங்கம்மா, என்கிட்ட பேசணுமா?’ என்று கேட்டேன். அதுக்கு அவர், `அம்மா... இந்தக் குடும்பம், சமையல், புருஷன், குழந்தைங்க இப்படியே வீட்டுல என்னோட காலம் ஓடிப்போயிடுச்சு. எங்கேயாவது வெளியே கொஞ்ச நேரம் தனியா வரணும்னு நினைச்சுதான் இங்கே வந்தேன். எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. உங்ககூடவே ஊர் ஊரா கச்சேரிக்கு வந்துட்டா நல்லா இருக்கும்னு தோணுது’ என்று அழுதுகொண்டே என்னிடம் கூறினார். அவர் ரசனையின் அடுத்த கட்டத்துக்குச் சென்றுவிட்டார் எனத் தோன்றியது. அவரை என்னுடன் அழைத்துக்கொண்டு போக முடியவில்லை என்றாலும், அவரது நினைவுகள் எப்போதும் என்னிடமிருந்து நீங்காது. இவரின் அழுகுரலிலிருந்து ஒலித்ததுதான் `Where Word Fails, Music Speaks’ என்கிற மேற்கோள்.

அருணா சாய்ராம் - என் அண்ணி இந்திரா நூயி!

திரைப்பாடல்கள் கேட்கும் பழக்கம் உண்டா?

அப்போது முதல் இப்போது வரை சினிமா பாடல்களைக் கேட்பதையும் பாடுவதையும் வழக்கமாகக்கொண்டிருக்கிறேன். இப்போது வெளிவரும் சினிமாப் பாடல்கள் எல்லாமே, ஏதோ புரியாத வரிகள் போன்றுதான் இருக்கின்றன. சாஹித்யத்தைப் பெரிதாக எண்ணுவதேயில்லை. சாஹித்யம் என்பது பாடல் வரிகள், இசையின் வீச்சைச் சரியாக வெளிக்கொணர்வது. அதைத் திறம்பட எழுப்பாவிடில், பாடல் சரிவர அமையாது. அதை கொஞ்சம் சரிசெய்தால், பாடல்கள் ரசிக்கும்படி அமையும்.

பிரதமர் நரேந்திர மோடியிடம் என்ன பேசினீர்கள்?

சங்கீத நாடக அகாடமியின் துணைத் தலைவர் என்ற முறையில், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தேன். `அனைத்து அரசாங்கப் பள்ளிகளிலும் ஐந்தாம் வகுப்பு வரை சங்கீதம், நாடகம், நாட்டியம் ஆகியவற்றை  அவசியம் கற்றுத்தர வேண்டும். மொத்தம் ஐந்து பாடல்கள் மற்றும் மூன்று குறு நாடகங்கள் கொண்ட பாடத்திட்டத்தை அமைக்க வேண்டும். அந்தப் பாடல்களுள் ஒன்று தாய்மொழியிலும், மற்ற நான்கு பாடல்கள் வேறு மாநிலங்களைச் சேர்ந்த மொழிகளிலும் அமைந்திருக்க வேண்டும். இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றையும் ஒருசேர பள்ளியில் கற்றுத்தர வேண்டும்’ என்கிற இந்த அகாடமியின் கனவைப் பிரதமரிடம் கூறியபோது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. `விரைவில் இவற்றை நிறைவேற்றுவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளலாம்’ என்று கூறினார்.

அருணா சாய்ராம் - என் அண்ணி இந்திரா நூயி!

பக்தி இருந்தால்தான் கலை சாத்தியமா?

பக்தி என்பது நம்பிக்கைதான். அந்த நம்பிக்கை கடவுள்மீது மட்டுமே இருக்க வேண்டும் என்று எந்தவொரு நிபந்தனையும் இல்லை. கடவுளின் சக்தியைவிட, இயற்கை யின் சக்தியையே கடவுளாக பாவிப்பவர்களும் இங்கு இருக்கின்றனர். அசைக்க முடியாத நம்பிக்கை எங்கு இருந்தாலும், அங்கு கடவுளைக் காணலாம். தெய்வங்கள் மாறலாம். ஆனால், பக்தி ஒன்றுதான். இறைவழிபாட்டையும் கலையையும் நான் ஒருபோதும் தொடர்புபடுத்த விரும்பவில்லை. சங்கீதமே தெரியாத ஒருவர் சங்கீத ஞானம் வேண்டிவந்தால், சங்கீதத்தையே கேட்கச் சொல்வேன். கடவுளை நாடச் சொல்ல மாட்டேன்.

இந்திரா நூயி உங்களின் உறவினராமே?

எனக்கு 18 வயதில் திருமணம் நடந்தது. இந்திரா, என் அண்ணி. என் இளமைக் காலங்களை அவருடன்தான் கழித்தேன். அண்ணி என்பதைத் தாண்டி, இந்திரா எனக்குத் தோழி. படிக்கும் காலத்திலிருந்தே தனது கனவை அடைவதற்கு மிகக் கடினமாக உழைப்பவர். `நம்மை நாமே எப்படி வளர்த்துக்கொள்ளலாம்’ என்பது பற்றி இவரிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன். ஒவ்வொரு வருடமும் என் கச்சேரிகளைக் கேட்க மார்கழி மாதம் இங்கு வருவார். இவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும்கூட   வாழ்வியல் நெறிமுறைகளை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டார். `மற்றவர்கள் வளர வளரத்தான் நம்முடைய வளர்ச்சியும் நன்றாக இருக்கும்’ என்பதை உறுதியாக நம்பும், தளும்பாத நிறைகுடம், இந்திரா.